Published:Updated:

வலியைக் கொடுத்தவங்களுக்கும் அன்பைக் கொடுப்போம்! - ஃபுட் இவான்ஜலிஸ்ட் யோகிதா உச்சில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஃபுட் இவான்ஜலிஸ்ட் யோகிதா உச்சில்
ஃபுட் இவான்ஜலிஸ்ட் யோகிதா உச்சில்

வாழ்க்கை

பிரீமியம் ஸ்டோரி
‘`ஹாய்... ஐம் எ பிசினஸ் வுமன், யூடியூபர், வெல்னஸ் புரோகிராம் டிரெய்னர், ஃபுட் இவான்ஜலிஸ்ட்...’’ - இப்படித்தான் அறிமுகப்படுத்திக்கொள்கிறார் யோகிதா உச்சில்.

ஃபுட் இவான்ஜலிஸ்ட்... அப்படின்னா?

‘`இன்னிக்கு நிறைய பேருக்கு ஆரோக்கியமான உணவுகள் மீதான ஆர்வமும் தேடலும் அதிகமாகியிருக்கு. அதுக்காக கீன்வா, ஆலிவ் ஆயில் மாதிரி வெளிநாட்டு உணவுகளை எல்லாம் தேடிப்போறாங்க. ஆனா, ஆரோக்கியமான உணவுகள் நமக்குப் பக்கத்துலயே கிடைக்கும் என்கிறது பலருக்குத் தெரியறதில்லை. சிறுதானியங்கள், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்னு எத்தனையோ பொருள்கள்ல ஆரோக்கியம் நிறைஞ்சிருக்கிறதைக் கவனிக்கத் தவறிட்டோம். அப்படிப்பட்ட உணவுகளைத் தேடி, அதெல்லாம் எங்கிருந்து வருதுன்னு ஆராய்ந்து, கேள்வி கேட்டு, அடுத்த தலைமுறைக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தறவங்கதான் ஃபுட் இவான்ஜலிஸ்ட்’’ என்று தெளிவான விளக்கம் தரும் யோகிதா, தன்னுடைய வெல்னஸ் நிகழ்ச்சிகளையும் இதன் அடிப்படையில் நடத்தி வருகிறார்.

`‘உலகப் புகழ்பெற்ற செஃப் அரினுடன் சேர்ந்து ‘நான்கு வார வெல்னஸ் புரோகிராம் பண்றேன். இதில் பங்கேற்பாளர்களை வேறொரு வாழ்க்கைமுறைக்குத் தயார்படுத்துவோம். `மைண்ட்ஃபுல் ஈட்டிங்’ என்ற கான்செப்ட்டுக்கு பழக்குவோம். வசிப்பிடத்துக்கு அருகில் கிடைக்கிற ஃப்ரெஷ்ஷான, ஆரோக்கியமான உணவுளைத் தேர்வு செய்து சாப்பிடக் கற்றுத் தருவோம். எவ்வளவு சாப்பிடணும், எப்படிச் சாப்பிடணும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஏன் தவிர்க்கணும்னு சொல்வோம். உணவு பாக்கெட்டுகளில் உள்ள லேபிள்களைப் புரிஞ்சு தேர்வு செய்யவும், அப்படிப் புரியாம தேர்வு செய்து சாப்பிடறதால என்னவெல்லாம் பிரச்னைகள் வரும்னு விளக்குவோம். ஆரோக்கியமான உணவுமுறைக்கான வழிகாட்டல் இது. இதைப் பின்பற்றுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதும், எடை குறைவதும் தானா நடக்கும் போனஸ் விஷயங்கள்’’ என்று ஆர்வம் கூட்டும் யோகிதா, எட்டு மொழிகளில் பேசத் தெரிந்தவர். உள்ளூர் உணவுகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக இதுவரை 18 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்.

ஃபுட் இவான்ஜலிஸ்ட் யோகிதா உச்சில்
ஃபுட் இவான்ஜலிஸ்ட் யோகிதா உச்சில்

சென்டிமென்ட், எமோஷன், சோகம், ஏற்றம் என எல்லாம் கலந்த மெகா சீரியலை மிஞ்சுகிறது யோகிதாவின் வாழ்க்கை.

``கோவாவில் பிறந்து வளர்ந்தேன். ஆண் வாரிசை பெருமையா நினைச்ச அந்தக் காலத்துல மூணு பெண் குழந்தைகளுக்கு அடுத்து நாலாவதா பிறந்த பெண் குழந்தை நான். அம்மா, அப்பா ரெண்டு பேரும் எந்தவித பாகுபாடும் காட்டாமதான் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வளர்த்தாங்க. ஆனா... வெளியுலகம் வேற மாதிரிதானே... `நாலு பொம்பளைப் பிள்ளைங்க உள்ள வீடு’ன்னு மரியாதைக் குறைவா நடத்தினாங்க.

சின்ன வயசுல ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமா இருந்தேன். பாஸ்கெட்பால் பிளேயர். நேஷனல் லெவல் டோர்னமென்ட்டுல செலக்ட் ஆனேன். என்னை வெளியூருக்கு அனுப்ப அம்மாவுக்கு விருப்பமில்லைங்கிறதால அதை விட்டுட்டேன். அம்மா அப்படிச் சொன்னதுக்கு ஏதோ காரணம் இருக்கும்னு நம்பினேன்.

பத்தாவது படிச்சு முடிச்சதும் மும்பைக்கு இடம்பெயர்ந்தோம். காரணம் சொன்னா சிரிப்பீங்க... ‘நாலும் பொம்பளைப் பிள்ளைங்க. கோவாவில் இருந்தா பொண்ணுங்களுக்குக் கல்யாணம் பண்ண முடியாது. மும்பைக்குப் போனாதான் நடக்கும்‘னு எங்கப்பாவுக்கு யாரோ சொல்லியிருக்காங்க. அவருக்கு யோசிக்கவெல்லாம் தோணல... முடிவெடுத்துட்டார்.

ஃபுட் இவான்ஜலிஸ்ட் யோகிதா உச்சில்
ஃபுட் இவான்ஜலிஸ்ட் யோகிதா உச்சில்

இந்தியாவில் மெட்டல் ஸிப் தயாரிக்கிற ஃபேக்டரியை முதன்முதல்ல நிறுவினவர் எங்கப்பா. மும்பைக்குப் போறதுன்னு முடிவெடுத்ததும், அப்பாவின் நண்பர் ஒருத்தர், மொத்த ஃபேக்டரியையும் கோவாவிலிருந்து மும்பைக்கு ஷிஃப்ட் பண்ணச் சொன்னார். கோவா மாதிரி அமைதியான, அழகான ஊரிலிருந்து பரபரப்பான மும்பைக்கு இடம் மாறினோம்.

அடுத்து என்ன படிக்கப் போறேன், என்னவாகப் போறேன்னு எந்த ஐடியாவும் இல்லை. காலையில காலேஜ், மதியம் பார்ட் டைம் வேலைனு 18 வயசுலயே என் லைஃப் ஸ்பீடு எடுக்க ஆரம்பிச்சது. 21 வயசுல எங்க குடும்பத்துலயே முதல் தொழில்முனைவோரா என்னுடைய கன்சல்ட்டிங் கம்பெனியை ஆரம்பிச்சேன்’’ எனும் யோகிதாவுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியான முதல் ஏற்ற நிகழ்வு. ஆனாலும் அதைக் கொண்டாட விதி விடவில்லை.

``எந்த நண்பரை நம்பி கோவாவிலிருந்து மும்பைக்கு வந்தாரோ, அந்த நண்பர் அப்பாவை பிசினஸ்ல ஏமாத்திட்டார். அப்பாவை ஏமாற்றி, கையெழுத்து வாங்கி ஃபோர்ஜரி பண்ணி, எல்லா மெஷின்களையும் பிடுங்கிக்கிட்டார். அந்த அதிர்ச்சியை அப்பாவால தாங்க முடியலை. சகலத்தையும் இழந்து நின்ன அந்த நிலைமையை அவரால ஏத்துக்க முடியலை. அக்காக்களும் நானும் சம்பாதிச்சாலும் வீட்டு ஆம்பளை... தனக்கு வேலையில்லை, சம்பாத்திய மில்லைங்கிற மன உளைச்சலை அவரால தாங்க முடியலை. பணமில்லாதவங்களை இந்தச் சமூகம் ஒரே நிமிஷத்துல மறந்துடும். மரியாதை கொடுக்காதுன்னு புரிஞ்சது.

எங்க தாத்தாவுக்குச் (அம்மாவின் தந்தை) சொந்தமான வீட்டுலதான் குடியிருந்தோம். ரெண்டு அக்காக்களுக்குக் கல்யாணம் முடிஞ்சிருந்த சூழலல, திடீர்னு எங்களை காலி பண்ணச் சொன்னாங்க. அப்பாவுக்கு வேலையில்லை, அம்மா ஹவுஸ்வொயிஃப். கல்யாண வயசுல இன்னும் ரெண்டு பொண்ணுங்க. இப்படிப்பட்ட சூழல்ல... ஹார்ட் அட்டாக் வந்து அப்பா இறந்துட்டார். அப்ப அவருக்கு 59 வயசு. அந்த நிலையிலும் வீட்டை காலி பண்ண வேண்டிய கட்டாயம். அம்மாவையும் இழந்துடக்கூடாதேங்கிற பயம். குடும்ப பாரத்தை நான் சுமக்கத் தயாரானேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பார்க்கிறதுக்கு குட்டியா, சின்ன உருவத்துல இருப்பேன். பிசினஸ் சம்பந்தமா தாமஸ்குக், கோத்ரெஜ் மாதிரியான பெரிய கம்பெனிகளை அணுக வேண்டியிருக்கும். உருவத்தைப் பார்த்து ரொம்ப சின்னப் பொண்ணுன்னு நினைச்சுடுவாங்களோ, பிசினஸ் வாய்ப்பு கொடுக்காமப் போயிடுவாங்களோன்னு புடவை உடுத்திட்டு, ஹீல்ஸ் போட்டுக்கிட்டு பெரிய மனுஷி மாதிரி போவேன். கடவுள் ஒரு கதவை அடைச்சார்னா, பத்து வாசல்களைத் திறந்து வைப்பார்னு சொல்வாங்க. பலரும் கதவுகளைத் தட்டறதில்லை. நான் ஒவ்வொரு கதவையும் தட்டினேன். பிசினஸ்ல முன்னேற கடுமையா உழைச்சேன். உயர்ந்தேன்’’ எனும் யோகிதா, திருமணம் முடித்து சென்னையில் குடியேறிய பிறகு, வாழ்க்கையில் வேகமெடுத்திருக்கிறார்.

  குடும்பத்தினருடன் யோகிதா
குடும்பத்தினருடன் யோகிதா

``என்னைப் புரிஞ்சுகிட்ட கணவர் அமைஞ்சார். பிறந்த வீட்டுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளைப் புரிஞ்சுக்கிட்டார். நமக்கு என்ன வருதோ, அதுல ஒரு பகுதியை அடுத்தவங்களுக்குக் கொடுத்து உதவணும்னு உறுதியெடுத்துக்கிட்டோம். இதுவரை பத்து குழந்தைங்களைப் படிக்கவெச்சிருக்கோம், ஆறு பேருக்குக் கல்யாணம் பண்ணிவெச்சிருக்கோம். மனநலம் சரியில்லாதவங்களுடனும் குடும்ப வன்முறையை சந்திச்சவங்களுடனும் வொர்க் பண்றேன். எங்களை இந்தச் சமூகம் நடத்தின மாதிரி நான் யாரையும் நடத்திடக்கூடாதுன்னு உறுதியா இருக்கேன். என்னை மோசமா நடத்தினவங்களுக்கும் நான் அன்பையும் மரியாதையையும் மட்டுமே திருப்பிக் கொடுக்கறேன்...’’

- நெடுங்கதை பகிரும் யோகிதா, வெற்றிபெறத் துடிக்கும் பெண்களுக்கு அவசிய ஆலோசனைகள் சொல்கிறார்.

‘`உங்களுக்கு என்ன திறமை இருக்குன்னு கண்டுபிடிங்க. ஆணா, பெண்ணான்னு யோசிக்காதீங்க. எனக்கு இது பிடிச்சிருக்கு, என்னால செய்ய முடியுமா... அப்படிச் செய்தால் வெற்றி கிடைக்குமா, அதுக்கு நான் என்ன செய்யணும்னு மட்டும் யோசிங்க. தயக்கத்தைத் தூக்கி எறிங்க. மத்தவங்ககிட்ட கேள்விகள், ஆலோசனைகள், உதவிகளைக் கேட்கத் தயங்காதீங்க.

படிப்பு, வேலை, கல்யாணத்துக்கு முன் சொந்தக்கால்களில் நிற்கப் பழகுங்க, எந்தக் காரணத்துக்காகவும் வேலையை விடாதீங்க. அப்படியே விட்டாலும் பொருளாதார சுதந்திரத்தோடு இருக்கப் பழகுங்க. வாழ்க்கை எப்போ, எப்படி திசை மாறும்னு சொல்ல முடியாது. உங்ககிட்ட பணமில்லைனா இந்தச் சமூகம் உங்களை மதிக்காது. சம்பாத்தியத்தின் மூலம் வரும் தன்னம்பிக்கை ரொம்ப பெருசு’’ என்று நிறுத்திய யோகிதா, ``கடைசியா ஒரு விஷயம்...’’ என்று சொன்னது -

``நமக்கு வலியைக் கொடுத்தவங்களுக்கும் அன்பைத் திருப்பிக் கொடுத்துப் பழகுங்க. அதுதான் வாழ்க்கைக்கான முழு அர்த்தம்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு