தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

விளம்பர ரகசியங்கள் பகிரும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதா

சஞ்ஜீதா
பிரீமியம் ஸ்டோரி
News
சஞ்ஜீதா

உருகாத ஐஸ்கட்டி... உணவில் பறக்கும் ஆவி... உருமாறும் உருளைக்கிழங்கு...

பார்த்தாலே பசி தீர்கிறது... சென்னையைச் சேர்ந்த ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதாவின் கைவண்ணத்தில் சாதாரண உணவும் சூப்பராகத் தெரிகிறது. விளம்பரங்கள், ரெஸ்டாரன்ட்டுகளுக்கு அவர்களின் தயாரிப்புகளையும் உணவுகளையும் ஸ்டைல் செய்து கொடுக்கும் சஞ்ஜீதா, பிசினஸ் வுமனும்கூட. ரசனையோடு செய்கிற ஒரு விஷயம், புகழ் வெளிச்சம் கூட்டும் என்பதற்கு சாட்சியாக நிற்கிறார் சஞ்ஜீதா.

‘`ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர்ல பிறந்து வளர்ந்தேன். எம்.ஏ, எகனாமிக்ஸும், எம்.பி.ஏவும் முடிச்சிட்டு கார்ப்பரேட் கம்பெனியில வேலை பார்த்திட்டிருந்தேன். அங்கே என் கணவர் கிருஷ்ணகுமாரை சந்திச்சேன். அவர் தமிழர். நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு சென்னையில செட்டிலானோம். பத்து வருஷங்கள் ஹோம் மேக்கரா பிள்ளைங்களைப் பார்த்துக் கிட்டிருந்தேன். எனக்கு சின்ன வயசுலேருந்தே சமையல் பிடிக்கும். ஜெயின் சாப்பாடு, புகுந்த வீட்டு தமிழ் சாப்பாடுனு நிறைய ரெசிப்பீஸ் கலெக்ட் பண்ணிட்டே இருப்பேன். அப்போ ஒரு பிளாக் தொடங்கி, நான் சமைக்கிற உணவுகளின் ரெசிப்பீஸோடு போட்டோஸும் போட்டுக்கிட்டிருந்தேன். நல்லா சமைக்கிறது மட்டுமல்லாம சமைச்ச உணவை அழகா ப்ரெசென்ட் பண்றதுலயும் எனக்கு ஆர்வம் அதிகம்.

விளம்பர ரகசியங்கள் பகிரும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதா

வீட்டுல பரிமாறும் உணவாகட்டும், குழந்தைகளுக்கும் கணவருக்கும் கொடுத்து அனுப்புற லஞ்ச் ஆகட்டும், அதை சாப்பிடத் தூண்டற அளவுக்கு டெகரேட் பண்ணி அனுப்புவேன். என் போட்டோஸ்லயும் அது பிரதிபலிக்கும். அப்படி நான் போட்ட படங்களைப் பார்த்துட்டு தீபா வாஸ்வானிங்கிற போட்டோகிராபர், அவங்களுடைய புராஜெக்ட்டுக்கு ஃபுட் ஸ்டைலிங் பண்ணித் தர முடியுமானு கேட்டாங்க. அப்போ ஃபுட் ஸ்டைலிங்னு ஒரு புரொஃபஷன் இருக்குறதே எனக்குத் தெரியாது. சென்னையில எனக்குத் தெரிஞ்சு ஃபுட் ஸ்டைலிஸ்ட் யாரும் அப்போ இல்லை. சாதாரணமா வீட்டுல சமைக்கிறதை அழகுப்படுத்துறதுக்கும் அதையே கமர்ஷியலா செய்யறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கூகுள்ல நிறைய விஷயங்களைத் தேடித் தெரிஞ்சுகிட்டும், நிறைய விளம்பரங் களை கவனிச்சும் பல நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். முதல் முதல்ல ஒரு ரெஸ்டா ரன்ட்டுக்கும், பப்பட் ஜமால் கடைக்கும் ஸ்டைலிங் பண்ணினேன். அப்பல்லாம் ஸ்டைலிங் பண்றதுக்கான பொருள்கள்கூட என்கிட்ட இல்லை. அக்கம்பக்கத்துல இரவல் வாங்கி தான் சமாளிச்சேன்...’’ தடுமாறும் தமிழில் அறிமுகம் சொல்பவரிடம் இன்று வீடு கொள்ளாமல் ஸ்டைலிங் பொருள்களின் கலெக்‌ஷன்கள் இருக்கின்றன.

‘`சாப்பாட்டை அழகுப்படுத்துற வேலை தானே... அது அவ்வளவு பெரிய விஷயமானு தோணலாம். சாதாரண சாம்பாரா இருக்கும். அடுத்தடுத்த விளம்பரங்கள்ல அதே சாம்பாரை ஸ்டைல் பண்ண வேண்டி வரும்போது வித்தியாசம் காட்டித்தான் ஆகணும். அதுதான் இதுல உள்ள சவாலே...இப்படி ஒவ்வொரு புராஜெக்ட்டுக்கும் என்னை அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

விளம்பர ரகசியங்கள் பகிரும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதா

போட்டோ மற்றும் வீடியோ ஷூட்டுக்காக ஸ்டைலிங் பண்ணும்போது ருசியை விடவும் அழகு முக்கியம். அதுக்கு நாங்க சில வித்தைகளைப் பண்ண வேண்டி யிருக்கும். உதாரணத்துக்கு நிஜ ஐஸ்கட்டிகளை உபயோகிச்சு ஷூட் பண்ணினா உருகிடும். அதனால அக்ரிலிக் ஐஸ் கட்டிகளைப் பயன் படுத்துவோம். சாப்பாட்டுல ஆவி பறக்குற ஃபீலை கொண்டுவர, புகை வரும்படி ஊதுவத்தியை மறைவா ஏத்திவைப்போம். ஐஸ்க்ரீம் விளம்பரம்னா வேகவெச்ச உருளைக் கிழங்குல கலர் சேர்த்துச் சமாளிப்போம். இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்...’’ சுவாரஸ்யம் கூட்டுபவரின் ஸ்டைலிங்கிற்கு விஐபி ரசிகர்கள் பலர் உண்டு.

‘`அமலா அகினேனி, மாதவன், ரம்யா கிருஷ்ணன்னு நிறைய பிரபலங்களுடன் விளம்பரங்கள்ல வொர்க் பண்ணியிருக்கேன். எல்லாருமே ஷூட் முடிஞ்சதும் என் ஃபுட் ஸ்டைலிங்கை பார்த்துட்டு என்னைக் கூப்பிட்டனுப்பி பாராட்டி, போட்டோ எடுத்திருக் காங்க’’ என்கிற சஞ்ஜீதாவின் பெருமைப் பட்டியலில் லேட்டஸ்ட், இசையமைப்பாளர் அனிருத். ஸொமேட்டோ விளம்பரத்துக்காக ஃபுட் ஸ்டைலிங் செய்தபோது அந்த மேஜிக் நிகழ்ந்திருக்கிறது. தவிர கடந்த சீசன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்கு வைக்கப்பட்ட சமையல் போட்டிகளிலும் திரைக் குப் பின்னால் ஃபுட் ஸ்டைலிஸ்ட்டாக வேலை செய்திருக்கிறார்.

அமலாவுடன்
அமலாவுடன்
விளம்பர ரகசியங்கள் பகிரும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதா

‘`சென்னையில் ஃபுட் ஸ்டை லிஸ்ட்டுகள் அதிகம் பேர் இல்லை. அதிலும் பெண்கள் ரொம்ப கம்மி. நல்லா சமைக்கிற, சமைச்சதை அழகாக்குற, போட்டோஸும் எடுக்கத் தெரிஞ்ச எத்தனையோ பெண்களுக்கு இப்படியொரு துறை இருக்குறதே தெரியறதில்லை. அவங்க தங்களுடைய போட் டோஸை வெச்சு போர்ட்ஃபோலியோ ரெடி பண்ணி, சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணலாம். அது மூலமா அவங்களுக்கு வாய்ப்பு வரக்கூடும்...’’ வாய்ப்பு வாசலுக்கு வழிகாட்டுபவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு பிசினஸ் வுமன் அவதாரமும் எடுத்திருக்கிறார்.

‘`ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி ‘ஆக்மோ ஃபுட்ஸ்’னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சேன். சிறு தானியங்களைக் கொண்டு உணவுப் பொருள்கள் தயாரிக்கிற பிசினஸ் இது. சமையலை எளிதாக்குற மாதிரி இன்ஸ்டன்ட்டாகவோ, எளிமையா சமைச்சோ சாப்பிடலாம். ப்ரிசர் வேட்டிவ்ஸ் இல்லாதவை. ஒரே தயாரிப்பைவெச்சு 20-க்கும் மேலான உணவுகளா மாத்தலாம்.

விளம்பர ரகசியங்கள் பகிரும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதா
விளம்பர ரகசியங்கள் பகிரும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதா
விளம்பர ரகசியங்கள் பகிரும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதா

மக்களை ஆரோக்கியமான உணவின் பக்கம் திருப்பணும், சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு உதவணும், கிராமத்துப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கணும்னு மூணு காரணங்களுக்காக ஆரம்பிச்ச பிசினஸ் இது. மதுராந்தகம் பக்கத்துல செய்யூர்ல ஃபேக்டரியும், ஃபார்மும் இருக்கு. 30 பெண்கள் வேலை பார்க்குறாங்க. இந்த பிசினஸை இன்னும் விரிவுபடுத்தணும். இன்னும் நிறைய பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கணும். ஃபுட் ஸ்டைலிங்ல பயிற்சி கொடுக்க சின்னதா ஒரு இன்ஸ்டிட்யூட் தொடங்கணும்’’

- நேற்று, இன்று, நாளைய கனவு களுடன் முடிக்கிறார் சஞ்ஜீதா.