22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

களத்தில் இறங்கி போராட வேண்டும்!

வசந்தகுமாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வசந்தகுமாரி

பெண் குரல்

நீலகிரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் எந்த திசையில் நடந்தாலும் முதல் நபராகக் குரல் கொடுப்பவர் வசந்தகுமாரி. எந்தப் பெண்ணுக்குப் பிரச்னை என்றாலும் உடனே இவரைத்தான் அழைக்கிறார்கள்.

“சொந்த ஊர் நாகர்கோவில். எனது இளமைப் பருவம் முழுவதும் சேவையால் ஆனது. 10 ஆண்டுகளுக்கு மேல் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சேவை. அதன் தாக்கத்தால் தம்பி உதவியுடன் 1999-ல் சுவாமி விவேகானந்தா, ராமகிருஷ்ணா, சாரதாதேவிமீது உள்ள பற்றால் `சரஸ்' என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்தோம்.

அன்று முதல் சமூக அவலங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் குரல்கொடுக்க ஆரம்பித்தோம். வெறும் குரல் மட்டுமே போதாது... அவர்களுக்குத் துணை நின்று களமிறங்கி போராடவேண்டிய அவசியமும் இருந்தது. அதற்கும் தயாரானோம். அப்போது சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் உதவியும் கிடைத்தது. இதன்மூலம் சுமார் 1,500 பெண்களை மீட்டுள்ளோம்.

Vasanthakumari
Vasanthakumari

`என்னை மது அருந்த வற்புறுத்தி மாமியாரும் கணவரும் நாள்தோறும் தொந்தரவு செய்கிறார்கள்' என ஒரு பெண் வந்து நின்றாள். `இரவு குடிக்க பணம் கேட்டார்... தராததால் வீட்டின் கூரையையே கழற்றி விற்று அந்தப் பணத்தில் குடித்தார்' என ஒரு பெண். ஆண்களால் துரோகத்தை சந்தித்த, தற்கொலையின் கடைசி விளம்பில், சமூக விரோதிகளால் சீரழிக்கப்பட்ட, கணவனாலும் பெற்றோராலும் கைவிடப்பட்ட, கர்ப்பத்துடனும் கண்ணீருடனும் சொல்லொணாத் துயருடனும் வந்து நின்ற பெண்கள்... இப்படி பல நூறு பேர்.

ஒவ்வொரு பெண்ணின் பிரச்னையையும் முதலில் காதுகொடுத்து கேட்போம். பின்னர் அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்வோம். தொடர்ந்து அவர்களைக் கண்காணிப்போம்'' என்று சொல்லும் வசந்தகுமாரி, பாதிக்கப்பட்ட சில பெண்களுக்காக விடுதி ஒன்றை உருவாக்கி உணவும் உறைவிடமும் தொழில்வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்து பாதுகாப்பளிக்கிறார்.

``இங்கு தங்கவைக்கப்படும் பெண்களுக்கு ஆலோசனையும் தொழிற்பயிற்சியும் வழங்கு கிறோம். இப்போதும் எங்கள் முகாமில் 15 பெண்கள் உள்ளனர். ரணப்பட்ட பெண்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கள் வீட்டு கதவைத் தட்டக்கூடும். அதனால் அவர்களுக்காக எப்போதும் என்னைத் தயாராகவே வைத்துக்கொள்வேன்.

இப்போது எனக்கு 62 வயது. வாழ்வின் மீதான விரக்தியில் இருக்கும் இவர்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவ வேண்டும். அதன்பின் அவர்கள் மறுபிறப்பு கிடைத்ததுபோல மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் பார்ப்பதே எனக்குப் பேரானந்தம். அதைவிட என் வாழ்வில் பெரிய மகிழ்ச்சி ஏதுமில்லை!” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் வசந்தகுமாரி.