Published:Updated:

புவியைக் காக்க புயலாக ஒரு பெண்!

Greta Thunberg
பிரீமியம் ஸ்டோரி
Greta Thunberg

உறுதி கொண்ட நெஞ்சினாய்....

புவியைக் காக்க புயலாக ஒரு பெண்!

உறுதி கொண்ட நெஞ்சினாய்....

Published:Updated:
Greta Thunberg
பிரீமியம் ஸ்டோரி
Greta Thunberg

லகமே இன்று உச்சரிக்கும் பெயர் கிரேட்டா தன்பர்க். ஸ்வீடனை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி. உலகத் தலைவர்களைப் பார்த்து, `என்ன தைரியம் உங்களுக்கு?' என்று கோபப்படுகிறார்.அவர் கோபப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. உலகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் தலையாய பிரச்னை பருவநிலை மாற்றங்கள்தாம். யாராலும் கணிக்க முடியாது பெரு வெள்ளம், கடும் வறட்சி என இயற்கை நம்மை மாற்றி மாற்றி வதைத்துக்கொண்டிருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம் என வளர்ந்தபோதிலும் இயற்கையின் இந்தச் சீற்றத்தின் முன்னால் வல்லரசுகளே மண்டியிட வேண்டியிருக்கிறது. இந்த நிலைக்கு ஆளாக்கியது அரசியல் தலைவர்களின் தவறான சூழலியல் கொள்கை என்பதே கிரேட்டாவின் குற்றச்சாட்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பருவநிலை நெருக்கடிக்கு எதிராக அரசுகள் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றம் முன்பு வாரம்தோறும் போராட்டம் நடத்திய கிரேட்டா, தன்னைப் போன்ற மாணவர்களுக்குப் `பள்ளிக்குப் போகாதீர்கள்; தங்களுக்காகவும் வருங்கால தலைமுறையினருக்காகவும் வெள்ளிக்கிழமைதோறும் வீதிக்கு வாருங்கள்' என்று அழைப்பு விடுத்தார். இதன் விளைவாக ஸ்வீடன் மட்டுமல்ல... அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பல மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முன்வந்துள்ளனர். செப்டம்பர் 15 அன்று 82 நாடுகளில் பருவநிலை நெருக்கடிக்கு எதிராக இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட பிரமாண்ட பேரணி நடைபெற்றிருக்கிறது. இதற்கு ஒற்றைப் பெண்ணாக கிரேட்டா மட்டுமே காரணம். இவரது போராட்ட முறை உலகெங்கிலும் பரவி ‘எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ எனும் இயக்கம் தோன்ற வழிவகுத்திருக்கிறது. பல பள்ளி மாணவர்கள் பருவநிலைப் போராளிகளாக மாறுவதற்குத் தூண்டுகோலாக அவர் ஏற்படுத்திய தாக்கத்தை, `கிரேட்டா தன்பர்க் விளைவு' என்று கூறுகின்றனர்.

புவியைக் காக்க புயலாக ஒரு பெண்!

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு ஒற்றை ஆளாக பருவநிலை நெருக்கடிக்கு எதிராக பதாகையை தாங்கிக்கொண்டு நின்றிருந்தபோது உலகம் அவரை கண்டு கொள்ளவில்லை. இன்று உலகமே அவர் பேசுவதை உற்றுக்கேட்கிறது. 2019 மார்ச் 15 அன்று, 112 நாடுகளைச் சேர்ந்த 14 லட்சம் பள்ளி மாணவர்கள் பருவநிலை நெருக்கடியைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து அடையாளப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பெர்லினில் பிரான்டென்போர்க் வாயிலின் அருகே கூடியிருந்த 25,000 பேருக்கு முன், `எதிர்காலம் அழிக்கப்படுவதை எதிர்ப்பதற்காகக் குழந்தைகள் தம் படிப்பையே தியாகம் செய்யவேண்டிய ஒரு வித்தியாசமான உலகில் வாழ்கிறோம்' என்று ஆழமிக்க உரையை ஆற்றினார் கிரேட்டா.

அதே தொனியில்தான் ஐ.நா சபையிலும் பேசினார் கிரேட்டா. சாதனை படைத்த உலகத் தலைவர்கள் ஐ.நா-வில் போய் பேசுவதை கெளரவமாக வும், மரியாதையாகவும், புகழாகவும் பார்க்கும்நேரத்தில், `நான் இங்கு வந்திருக்க வேண்டியதே இல்லை. இந்நேரம் கடல் கடந்து காணப்படும் என் பள்ளியில் அமர்ந்து பாடம் படித்துக்கொண்டிருக்க வேண்டியவள் நான்' என்று ஐ.நா-வில் நடந்த உலக பருவநிலை நெருக்கடி மாநாட்டில் இத்தகைய உரையை ஆற்றினார்.

‘உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள். என்ன தைரியம் உங்களுக்கு? பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து எங்களை ஏமாற்றிவிட்டு இங்குவந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்?’ என்று உலகத் தலைவர்களை ஐ.நா-வில் வைத்து விளாசுகிறார் கிரேட்டா. அந்தக் கோபத்தை `இயற்கை நம்மீது கோபத்தை காட்டப்போகிறது அதற்குள் விழித்துக்கொள்ளுங்கள்' என்கிற எச்சரிக்கையாகவே உலக நாடுகள் பார்க்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`மக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள். ஒட்டுமொத்த சூழலியலும் உருக்குலைந்துவிட்டது. ஆனால், உலகத் தலைவர்கள் பணம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்று கதை பேசிக்கொண்டிருக்கிறார்கள்' என்று கிரேட்டா சொல்வதில் பல உண்மைகள் நிறைந்துள்ளன.

கிரேட்டா தன்பர்க்
கிரேட்டா தன்பர்க்

2003-ல் பிறந்த கிரேட்டா, 2019-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். இந்தப் பட்டியலில் இருப்பதைப் பெருமையாகவும் மரியாதையாகவும் எண்ணுவதாக ட்விட் செய்திருக்கிறார். 2018-ல் `டைம்' இதழ் தேர்ந்தெடுத்த உலகின் மிகச்சிறந்த 25 இளைஞர்களில் ஒருவரான கிரேட்டா, அதே ஆண்டு டிசம்பரில் `டைம்' இதழின் முகப்பு அட்டையில் `அடுத்த தலைமுறை தலைவர்களில் ஒருவர்' என இடம்பிடித்தார். பிரிட்டனிலிருந்து வெளிவரும் `வோக்’ இதழின் செப்டம்பர் இதழ் முகப்பு அட்டையில் `மாற்றத்துக்கான சக்திகள்’ என்ற தலைப்பில் இடம்பெறும் 15 நபர்களில் ஒருவர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டார். இப்படி, பருவநிலை நெருக்கடிக்காகத் தொடர்ந்து குரல்கொடுப்பதன் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறார் கிரேட்டா தன்பர்க்.

2019 ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மனியில் உள்ள ஹம்பாச் காடுகளுக்குப் பயணித்த இவர், நிலக்கரிச் சுரங்கத்துக்காக மரங்கள் வெட்டப்பட்டு அந்த வனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரலெழுப்பினார். விமானங்கள் வெளிப்படுத்தும் பசுமைக் குடில் வாயு தாக்கத்தின் ஆபத்தை வெளிப்படுத்தும்விதமாக, ஏற்கெனவே ஸ்வீடனில் ‘பறப்பது அவமானம்’ என்கிற அமைப்பு இயங்கிவருகிறது. அதை உலகளவில் கொண்டுசெல்லும் விதமாக ஐ.நா-வில் பேசுவதற்காக ஸ்வீடனில் இருந்து படகிலேயே அமெரிக்கா வந்தடைந்தார் கிரேட்டா. இயற்கைக்காகப் போராடுவதோடு இயற்கையோடு இயைந்து வாழ்தலின் அவசியத்தையும் உணர்த்துகிறார் இவர்.

ஐ.நா-வில் எதிர்பாராதவிதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்தார் கிரேட்டா. அப்போது இவர் முகத்தில் எழுந்த கோபமான முறைப்புப் பார்வை இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது. கோபமும் ஆவேசமும் அழுகையுமாக கிரேட்டா ஐ.நா-வில் பேசியதைப் பார்த்து `மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படும் இந்தச் சிறுமி, ஒளிமயமான அற்புதமான எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளார். பார்க்க நன்றாக இருக்கிறது' என்று கிண்டலாகப் பதிவிட்டார் ட்ரம்ப். இப்படி சிறுமியை கிண்டல்செய்த அமெரிக்க அதிபரை ட்விட்டரில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் கிரேட்டா என்று அவரது ட்விட்டர் பதிவை ட்ரம்ப் பதிவிட்ட நொடியில் இருந்து கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக்கொண்டிருந்தன சர்வதேச ஊடகங்கள். ஆனால், எந்தக் கருத்தையும் பதிவிடாமல் தனது ட்விட்டர் முகப்புப்பக்கத்தின் ஸ்டேட்டஸாக ட்ரம்பின் பதிவை மாற்றி ட்ரம்புக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார். ஒருபக்கம், `ஸ்வீடன் வளர்ப்பு முறை சரியில்லை. கிரேட்டாவுக்குப் பின்னால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. கிரேட்டாவை உலகத் தலைவர்களுக்கு எதிராக மரியாதையின்றி பேசும்படி அவருடைய பெற்றோர் வளர்த்திருக்கிறார்கள்' என்று வசைபாடுவதும் நடைபெறுகிறது. இன்னொருபக்கம் கிரேட்டாவுக்கு இருக்கும் அஸ்பெர்கர் சின்ட்ரோமை வைத்து கேலி பேசுகின்றன அமெரிக்க ஊடகங்கள். கூடவே, `அவர் மனவளர்ச்சியற்ற குழந்தை' என்றெல்லாம் விவாதிக்கின்றனர். இதற்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் கிரேட்டா. `அஸ்பெர்கர் சின்ட்ரோம் எனக்கு குறைபாடு அல்ல; அதுதான் என்னை சூப்பர் பவர் ஆக்கியது' என்று ஊடகத்துக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

இக்குறைபாடு உள்ளோர் மற்றவர்களைப் புரிந்துகொள்வதிலும் மற்றவர்களுடன் பேசுவதிலும் எதிர்வினையாற்றுவதிலும் சவாலுக்குள்ளாவர் என்றும், அதே நேரத்தில் தங்கள் செயல்களில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருப்பர் என்றும், இது ஓர் வளர்ச்சிக்குறைபாடேயின்றி நோயல்ல என்றும் கிரேட்டாவின் தாயார் குறிப்பிட்டிருந்தார். இந்தக் குறைபாடு உள்ளவர்களால் நிறமற்றதையும், காற்றில் வெளிப்படுத்தப்படுகின்ற கண்ணுக்குப் புலனாகாத வாயுவைக்கூட கண்களால் காணும் அரிய சக்தி இவருக்குள்ளதாகவும், கார்பன் டை ஆக்ஸைடு சுற்றுச்சூழலை மாசடையச் செய்வதை இவர்களால் பார்க்க முடிவதாகவும், அதனால்தான் இவர் பருவநிலை மாற்றத்துக்குப் பங்களிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ட்ரம்புக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை கிரேட்டா மீதி திணிக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில்தான் `கிரேட்டாவுடன் ஸ்வீடனும் இருக்கிறது' என்பதை உணர்த்தும்விதமாக ஸ்வீடனின் மிக உயரிய Right Livelihood விருதுக்கு கிரேட்டாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறது அந்நாட்டு அரசு. ஸ்வீடனில் இந்த விருதினை நோபல் பரிசுக்கு ஈடானது என்று மதிப்பிடுவது உண்டு.

`எதிர்காலத் தலைமுறையினரின் விழிகள் உலக தலைவர்கள்மீதுதான் உள்ளன. எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால், நான் இப்போது சொல்கிறேன், நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்' என்கிறார் கிரேட்டா. ஏன் இவ்வளவு கோபப்படுகிறார் இவர்? ‘அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்' என்பதுதான் உண்மையான பதில். ஒவ்வொரு மாற்றத்துக்கும் ஏதோ ஒரு நெருக்கடி தருணம் உந்துசக்தியாக அமையும். அப்படியோர் உலக நெருக்கடி நிலையின் உந்துசக்தியாக இருக்கிறார் கிரேட்டா தன்பர்க்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism