Published:Updated:

முதலீட்டுப் பயணத்தை பெண்கள் எப்படித் தொடங்கலாம்?

முதலீடு

முதலீடு

முதலீட்டுப் பயணத்தை பெண்கள் எப்படித் தொடங்கலாம்?

முதலீடு

Published:Updated:
முதலீடு
முதலீட்டுப் பயணத்தை பெண்கள் எப்படித் தொடங்கலாம்?

சதீஷ் பிரபு, தலைவர் – கன்டன்ட் டெவலப்மென்ட் - இந்தியா, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்

பணமதிப்பு நீக்க (Demonetization) நடவடிக்கையின்போது என் அத்தைகளில் ஒருவர் என்னை அழைத்து, “மாமா வீட்டுச் செலவுக்கு கொடுத்த தொகையை பல ஆண்டுகளாக மிச்சப்படுத்தி சேமித்து வைத்திருக்கிறேன். அதை எப்படி புதிய ரூபாய் நோட்டாக மாற்றுவது என்று தெரியவில்லை. இதை நான் உன் மாமாவிடம் சொல்ல முடியாது. எனவே, அவருக்குத் தெரியாமல் பழைய ரூபாய் நோட்டை மாற்ற நீதான் உதவ வேண்டும்” என்றார்.

சதீஷ் பிரபு 
தலைவர் – கன்டன்ட் டெவலப்மென்ட் - இந்தியா, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்
சதீஷ் பிரபு தலைவர் – கன்டன்ட் டெவலப்மென்ட் - இந்தியா, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்

கடந்த 2020 ஏப்ரல் மாதம் கோவிட் சமயத்தில் என்னை போனில் அழைத்த மற்றொரு உறவினர், ``தன் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், வங்கியில் பணம் எடுப்பது, அவர்களின் மருத்துவ பாலிசியைப் பயன்படுத்துவது எப்படி என்று அவருக்குத் தெரியாது. அவரின் கணவருக்கு மட்டுமே அந்த விவரங்கள் தெரியும்’’ என்றார்.

மூன்றாவது ஒரு சம்பவம். 50 வயதில் தொழிலை நடத்தி வந்த தன் கணவர், தற்போது டிமென்ஷியா நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவரின் மனைவி ஓர் இல்லத்தரசி. குழந்தைகள் இருவருமே சிறியவர்கள் என்பதால், தொழிலை மேற்கொண்டு எப்படி நடத்துவது என்று தெரியாமல் தவிக்கிறார்.

இந்த மூன்று நிகழ்வுகளுமே பணத்தை நிர்வகிக்கும் மேலாண்மைத் திறன் பெண்களுக்குக் கட்டாயம் வேண்டும் என்பதையே தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

பண நிர்வாகம்

குடும்பம் மற்றும் வீடுகளை நிர்வகிப்பது முதல் முன்னணி நிறுவனங்கள் மற்றும் நாடுகளைத் திறமையாக நிர்வகிக்கும் பல பெண்களை நம்மால் உதாரணம் காட்ட முடியும் என்கிறபோதிலும், பணத்தை நிர்வகிப்பதிலிருந்து அவர்கள் விலகியே நிற்கிறார்கள் அல்லது விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

உதாரணமாக, இன்றும் பல குடும்பங்களில் நிதி மற்றும் முதலீட்டு முடிவுகளில் ஆண்களே முன்னணியில் இருக்கிறார்கள். மனைவியும் மகளும் கைநிறைய சம்பாதித்தாலும், அவர்களுக்கு முதலீட்டு முடிவுகளை ஒரு ஆண்தான் எடுக்கிறார். நிதி தொடர்பான விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாததால், விண்ணப்பப் படிவங்களில் காட்டிய இடங்களில் கையெழுத்துப்போடும் சாதாரண நபர்களாகவே இருக்கிறார்கள்.

சிறந்த முதலீட்டாளர்கள்

பெண்களைவிட ஆண்கள் சிறந்த முதலீட் டாளர்கள் என்று பெண்கள் உட்பட பலரும் நினைக்கிறார்கள். இதில் கொஞ்சம்கூட உண்மை இல்லை. இதற்காக, ஆண்கள் கோபப் படத் தேவையில்லை. ஒழுங்கு, பொறுமை, மீள்தன்மை, கவனம் மற்றும் விடாமுயற்சி (Discipline, Patience, Resilience, Focus, and Diligence) போன்ற பல நடத்தை பண்புகள் இருந்தால், யாரும் வெற்றிகரமான முதலீட்டாளராக இருக்க முடியும். பெரும்பாலான பெண்கள் இந்தப் பண்புகளை இயற்கையாகவே பெற்றிருக்கிறார்கள் அல்லது எளிதில் வளர்த்துக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே, முதலீடு செய்யும்போது தங்களை ‘சிறந்த பாதி’ என்று நிரூபிக்கும் திறன் அவர்களுக்கு நிச்சயம் உள்ளது.

இந்த மகளிர் தினத்தைத் தொடர்ந்து பெண்கள் என்னென்ன விஷயங்களை அவசியம் செய்ய வேண்டும்?

முதலீட்டுப் பயணத்தை பெண்கள் எப்படித் தொடங்கலாம்?

நீண்ட ஆயுள்

கணவர், மனைவியுடன் இணைந்து கூட்டுப் பெயர்களில் முதலீடுகள் / வீட்டுக் கடன்கள் போன்றவை வாங்குவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், பெண்கள் பண விஷயங் களில் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியமாகும். பொதுவாக, ஆண்களைவிட பெண்கள் அதிக ஆண்டுகள் வாழ்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் ஓய்வுக்குப் பின் போதுமான அளவு செல்வம் (Wealth) வைத்திருக்க வேண்டும்.

குடும்ப வருமானம் மற்றும் செலவுகளுக்கான பட்ஜெட் போடுவதை உடனே தொடங்குங்கள். தேவைகள் (அவசியம் வேண்டும்) மற்றும் விருப்பங்கள் (இருப்பது நல்லது) ஆகியவற்றுக்கு இடையே செலவுகளைப் பிரிக்கவும். குடும்பத் தேவைகளைக் குறைத்தால், அதிகமாக முதலீடு செய்யலாம். வங்கிகளில் காசோலைகள் / பணம் டெபாசிட் செய்ய, பாஸ் புத்தகத்தில் பணப் பரிமாற்றத்தைப் பதிவு செய்ய அல்லது லாக்கரில் பொருள்களைப் பராமரிக்க கணவருடன் அல்லது தனியாகச் சென்று வர அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்.

வங்கி / முதலீட்டுக் கணக்குகளில் கூட்டுக் கணக்கு வைத்திருப்பவராக (Joint holder) / நாமினியாக (Nominee) இருங்கள் மற்றும் பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் பரிவர்த்தனை செய்ய பழகி வைத்திருக்கவும். அப்போது தான் ஓர் அவசர சூழ்நிலையில் பணம் அனுப்ப முடியும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளதா அதுவும் போதுமான அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

நிதி ஆலோசகர்

உங்கள் முதலீடுகளுக்கு உங்கள் ‘குடும்ப மருத்துவர்’ போன்ற உங்கள் நிதி ஆலோச கரைக் கலந்தாலோசித்து முக்கிய முதலீட்டு முடிவுகளை எடுங்கள். நிதி ஆலோசகருடன் உங்கள் கணவர் ஆலோசனை செய்யும் போது உடன் இருங்கள் அப்போதுதான் அவர் எதில் எல்லாம் முதலீடு செய்திருக்கிறார் என்கிற விவரம் உங்களுக்கும் தெரியவரும். அதற்கான நேரம் கிடைக்கவில்லை எனில், கணவர் ஓய்வாக இருக்கும் போது அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

நம் பெண்களில் பலரும் சேமிப்பில் கில்லாடிகளாகத் தான் இருக்கிறார்கள். ஆனால், சேமிப்போடு நின்றுவிடுவது மகா தவறு. ஏனெனில், பணவீக்க மானது பணத்தின் மதிப்பைக் குறைத்துவிடுகிறது. பணத்தின் மதிப்பை இழக்காமல் இருக்கவும், தங்கள் வாங்கும் திறனை தொடர்ந்து உயர்த்திக் கொள்ள வும் பணவீக்க விகிதத்தைத் தாண்டி அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம்.

முதலீட்டு வாய்ப்புகள்

பெண்கள் முன்னால் இருக்கக் கூடிய முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன என்று பார்ப்போம்.

வங்கிகள் / அஞ்சலகங்களின் பாரம்பர்ய உத்தரவாத வருமான முதலீட்டுத் திட்டங்கள் குறைந்த இடர்ப்பாட்டைக் (Risk) கொண்டுள்ளன. அதே நேரத்தில், அவை குறைந்த வருமானத்தை அளிப்பவை யாக இருக்கின்றன. அதிக வருமானம் பெற, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் பிரபலமான முதலீட்டு வழிகள் ஆகும். ஆனால், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய அதிக தொகை தேவை; தவிர, அதை எளிதில் விற்றுப் பணமாக்குவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதெல்லாம் அதில் இருக்கும் முக்கியமான குறைபாடுகள் ஆகும்.

மியூச்சுவல் ஃபண்டுகள்

எளிதில் பணமாக்கக்கூடிய மற்றும் குறைந்த முதலீட்டுத் தொகை கொண்ட வேறு திட்டங்கள் உள்ளதா என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது. அதுதான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள். பல வகையான ரிஸ்க்குகளுடன், பலவகையான வருமான வாய்ப்புள்ள திட்டங்களைக் கொண்ட ஒரு சூப்பர் மார்க்கெட்தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள். இவற்றில் சுலபமாக முதலீடு செய்யலாம்; குறைந்த முதலீட்டுத் தொகையை இதில் முதலீடு செய்யலாம். இது தொழில் முறை நிபுணத்துவம் கொண்ட நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. மேலும், நன்கு நெறிமுறைப்படுத்தப்பட்டதாகவும் மற்றும் எளிதில் பணமாக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

இவை தவிர, பல்வேறு வகையான திட்டங்கள், பல வசதிகள், முதலீட்டுப் பரவலாக்கம், வெளிப்படைத் தன்மை மற்றும் குறைவான வருமான வரி ஆகியவற்றை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் வழங்குகின்றன. முறையான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan - SIP) என்பது நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்க மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய் வதற்கான மிகவும் பிரபலமான வழிமுறையாகும்.மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ‘சிறு துளி, பெரு வெள்ளம்’ என்ற பழமொழியைப் பின்பற்றுவதன் மூலம் முதலீட்டு ஒழுங்கையும் வழக்கமான சேமிப்பையும் எளிதாக்குகிறது.

பல்வேறு திட்டங்களில் ஈக்விட்டி ஃபண்டுகள், கடன் ஃபண்டுகள் மற்றும் கலப்பினத் திட்டங்கள் (முக்கியமாக, ஈக்விட்டி மற்றும் கடன் திட்டங்களின் கலவை) ஆகியவை அடங்கும். ஈக்விட்டி ஃபண்டுகள் அதிக ரிஸ்க் மற்றும் அளிக்கும் ரிட்டர்ன் திறனைக் கொண்டுள்ளன. அடுத்த இடங்களில் ஹைபிரிட் ஃபண்டுகள் மற்றும் கடன் ஃபண்டுகள் உள்ளன. ஈக்விட்டி ஃபண்டுகள் நீண்ட கால இலக்கு / முதலீட்டுக்கானவை. கடன் ஃபண்டுகள் குறுகிய கால இலக்கு / முதலீட்டுக்கானவை. இலக்கு, முதலீட்டுக் காலம் மற்றும் ஒருவரின் இடர்ப்பாட்டைச் சந்திக்கும் திறனைப் பொறுத்து ஒருவர் சில நாள்கள் முதல் சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டு கள் வரை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்யலாம்.

நிதிச் சுதந்திரம் வேண்டும்

பெண்கள் விண்வெளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். நாட்டின் எல்லையில் எதிரிகளை எதிர்த்துப் போரிடுகிறார்கள். அவர்களால் தங்கள் நிதிச் சுதந்திரத்துக்காக நிச்சயமாக உழைக்க முடியும். நம் வாழ்வை வண்ண மயமாக்கும் பெண்களை (மனைவி, தாய், சகோதரி, மகள்) இந்த மகளிர் தினத்தில் மட்டுமல்ல, நிதி ரீதியாக ஒவ்வொரு நாளும் அவர்களை மேம்படுத்துவதன் மூலமே அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை நம்மால் உருவாக்கித் தர முடியும்!