பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம் சம்பவத்தில் துணிந்து காவல்நிலையத்தில் நடந்த உண்மைகளைச் சொன்ன ரேவதிக்குப் பாராட்டுகள் குவிந்தது போல, குஜராத்திலும் ஒரு பெண் காவலர் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

குஜராத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி நண்பர்களுடன் காரில் சுற்றிய அமைச்சரின் மகனை தடுத்து நிறுத்திய அந்தப் பெண் காவலர், ‘லேடி சிங்கம்’ என்று நாடு முழுவதும் பிரபலமாகியிருக்கிறார். அமைச்சரின் மகன் என்று தெரிந்த பிறகும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உணர்வுடன் துணிந்து செயல்பட்ட அவருக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. அதேநேரம், சட்டத்தை நிலைநாட்டியதற்காகப் பற்பல பிரச்னைகளைத் தற்போது அவர் எதிர்கொண்டு வருவதுதான் சோகம்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களைத் தவிர, மற்றவர்கள் வாகனங்களில் செல்ல வேண்டுமென்றால் உரிய அனுமதியைப் பெற வேண்டும். இந்த நிலையில், குஜராத் மாநிலம், வர்ச்சா காவல் நிலையத்தில் பணியாற்றும் சுனிதா, ஜூலை 8-ம் தேதி நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தொகுதி எம்.எல்.ஏ-வும், குஜராத் சுகாதாரத்துறை அமைச்சருமான குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானி, தன் நண்பர்களுடன் காரில் சுற்றிக்கொண்டிருந்தார். முகக்கவசம் ஏதுமின்றி இருந்த பிரகாஷ் உள்ளிட்டோரை சுனிதா மறித்தார்.

`லேடி சிங்கம்' சுனிதா!

‘நான் சுகாதாரத்துறை அமைச்சரின் மகன்’ என்று மிரட்டலாகக் கூறிய பிரகாஷிடம், ‘எல்லோருக்கும் சட்டம் ஒன்றுதான். ஊரடங்கை மீறுவது சட்டப்படிக் குற்றம்' என்று கறார் காட்டினார் சுனிதா. உடனே, தன் தந்தையை அலைபேசி மூலம் அழைத்து, சுனிதாவிடம் பேச வைத்தார் பிரகாஷ். அப்போதும் சளைக்காத சுனிதா, ‘உங்கள் மகன் செய்தது சட்ட மீறல். இப்போது நான் என்ன செய்யட்டும்?’ என்று அமைச்சர் குமார் கனானியிடமே தைரியமாகக் கேட்டார். அமைச்சர் என்பதற்காக துளியும் வளையவும் இல்லை, நெளியவும் இல்லை சுனிதா.

சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ, நாடு முழுவதும் வைரலானது. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அதுபற்றிய விவாதங்கள் தெறிக்க... வழக்கம்போல அரசியல்வாதிகள் உஷ்ணமாகிவிட்டனர். சுனிதா உடனடியாகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன், தொலைபேசி வாயிலாகவும் கடுமையாக மிரட்டப்பட்டார். இதையடுத்து, சூரத் மாநகரக் காவல் ஆணையரிடம் சுனிதா புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, அவருடைய வீட்டுக்கு ஆயுதம் தாங்கிய இரண்டு போலீஸார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். என்றாலும், பணியை ராஜினாமா செய்வதென்று முடிவெடுத்துவிட்டார் சுனிதா.

 ஜி.திலகவதி
ஜி.திலகவதி

‘அதிகாரம் என்பது காக்கிச் சீருடையில் இருக்கிறது என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், நாம் எந்தப் பதவியில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் எனக்கு உணர்த்திவிட்டது’ என்று அனுபவபூர்வமாகக் கூறும் சுனிதா, `நான் ஐ.பி.எஸ் அதிகாரி ஆகப்போகிறோன். அதற்கான பயிற்சிகளைத் தொடங்க இருக்கிறேன்' என்றும் அறிவித்து, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

இந்நிலையில், ‘இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் சுனிதாவின் ராஜினாமாவை ஏற்க முடியாது’ என்று காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதேநேரம், `ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, நடந்த சம்பவங்கள் முழுவதையும் ஊடகங்களிடம் தெரிவிப்பேன்’ என்று சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் சுனிதா. இது ஒருபுறமிருக்க, ஊரே தன்னை ‘லேடி சிங்கம்’ என்று அழைப்பதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ``இப்படி `லேடி சிங்கம்' என்றெல்லாம் குறிப்பிடுவது தவறானது. என் கடமையைத்தான் நான் செய்தேன்'' என்று சிம்பிளாக அதைக் கடக்கிறார் சுனிதா.

சுனிதா போன்று துணிச்சலும் நேர்மையும் கொண்ட அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் எல்லா இடங்களில் இருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் எல்லா இடங்களிலும் நிகழ்வதும் உண்டு. ஆனால், அதெல்லாம் மிகமிக அரிதாக இருப்பதுதான், சாதாரணமாகக் கடக்க வேண்டியவற்றைக்கூட பலரும் வியந்து பார்க்கும் நிலையை ஏற்படுத்திவிடுகிறது.

தமிழ்நாட்டில் தாங்கள் பார்த்த இதுபோன்ற சம்பவங்களைக் கூறுமாறு ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான ஜி.திலகவதியிடம் கேட்டோம். “சுனிதாவின் நடவடிக்கை நேர்மையானது, சட்டப்படியானது. அதிகார பலம் கொண்டவர்கள்மீது எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்போது அதற்கான எதிர்வினைகளை நேர்மையான அரசு ஊழியர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. அது மிகவும் வருந்தத்தக்கது.

சுனிதா, ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆகப் போவதாகக் கூறியிருக்கிறார். வாழ்த்துகள். அதேநேரத்தில், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் நான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி. அந்த சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது நிகழ்ந்தது. தி.நகர், பனகல் பூங்கா அருகே ‘நோ பார்க்கிங்’ பகுதியில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் முத்திரை இருந்தது. போக்குவரத்துக் காவல் பிரிவில் துணைஆணையராக இருந்த என்.பாலச்சந்திரன் ஐ.பி.எஸ், அந்தக் காரை ‘டோ’ செய்துகொண்டு போய்விட்டார். அந்தக் கார், முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என்.ஜானகி அம்மாளுடையது.

முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு விஷயம்போக, பாலச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டார். ‘சட்டப்படித்தானே நடவடிக்கை எடுத்தேன். அதற்குப் பரிசு இடமாற்றமா?’ என்ற கோபத்தில் பதவியை பாலச்சந்திரன் ராஜினாமா செய்துவிட்டார். அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவருடைய செயல்பாட்டை மதித்தல்ல... அவர் வாங்கியிருந்த வீட்டுக்கடனை அடைக்கவில்லை என்பதுதான். அதை அடைத்தால்தான் ராஜினாமா ஏற்கப்படும் என்று சொல்லிவிட்டது அரசு. அதேநேரம், பணிமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் போய் பணியை ஏற்றுக்கொள்ளவில்லை பாலச்சந்திரன். அந்தக் காரணத்தால், அவருக்கான சம்பளம் விதிமுறைகளின்படி நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் மிகவும் சிரமப்பட்ட அவர், ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி கிடைத்த வருமானத்தில் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில், மத்திய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்த தன் உறவினர் ஒருவர் மூலமாக டெல்லியிலிருந்து எம்.ஜி.ஆருக்கு அழுத்தம் கொடுத்தார் பாலச்சந்திரன். அதையடுத்து மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனாலும், வீராப்பைவிடாமல், முன்பு வகித்த போக்குவரத்துத் துணை ஆணையர் பதவியையே கேட்டுப் பெற்றார். பிறகு, டெல்லிக்கு மாற்றலாகிச் சென்றவர், மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து மதுரை மாநகரக் காவல் ஆணையராகக்கூட இருந்தார். அரசியல் செல்வாக்குமிக்கவர்களுக்கு வளைந்துகொடுக்காமல், சட்டப்படி செயல்படும் அதிகாரிகள் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்” என்று பெருமை பொங்கச் சொன்னார் திலகவதி.

வீராப்பு மிக்க சுனிதாவின் தற்போதைய கனவு, ஐ.பி.எஸ் பணி. 'அது கிடைக்காவிட்டால், பத்திரிகையாளர் ஆவேன்' என்கிறார்.

சுனிதாவுக்கு ராயல் சல்யூட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு