22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

வாழ்வில் நம்பிக்கை வேண்டும்!

கோகிலா
பிரீமியம் ஸ்டோரி
News
கோகிலா

உழைப்பு

மனநலம் பாதித்த தந்தை, துரத்தும் கல்விக்கடன், சிதைந்துபோன ஆசிரியர் கனவு... கோகிலா என்கிற இந்த முதுகலை பட்டதாரி இன்று நடைபாதை வியாபாரி...

குன்னூரைச் சேர்ந்தவர் கோகிலா. வறுமை நிறைந்த வீட்டில் பிறந்தவர். ஓர் அக்கா, இரு தம்பிகள், ஒரு தங்கை எனப் பெரிய குடும்பம். சிறுவயதிலிருந்தே படிப்பில் ஆர்வமாக இருந்தவர். ஆசிரியராக வேண்டும் என்ற கனவோடு காரமடையில் பள்ளிப்படிப்பை முடித்து, ஊட்டி அரசு கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை, கோவையில் கல்வியியல் பட்டம், ஊட்டியில் முதுகலைப் பட்டத்தை முடித்திருக்கிறார். படிப்பை முடித்தவர் குன்னூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணிக்கு சேர்ந்தார்.

அந்த நேரத்தில்தான் கோகிலாவின் அப்பா முருகேசன் திடீரென மனநோயால் பாதிக்கப்பட்டார். மொத்த குடும்பமும் நிலைகுலைந்துபோனது. குடும்ப பாரம் மொத்தமும் கோகிலாவிடம் வந்தது. வறுமை, கல்விக்கடன், குடும்பச் செலவு என கோகிலாவுக்கான பொறுப்புகள் அதிகரித்தன. தனியார் பள்ளி தந்த 5,000 ரூபாய் சம்பளத்தில் என்ன செய்துவிட முடியும்? ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். வேலை தேடி அலைந்தார். பொருத்தமான வேலை எதுவும் கிடைக்கவில்லை. பணத்தேவைகள் அதிகரித்துக்கொண்டிருக்க... திடீரென ஒருநாள் முடிவெடுத்து பழக்கூடையுடன் அம்மாவுக்குத் துணையாக நடைபாதையோரம் வியாபாரத்தில் அமர்ந்திருக்கிறார் கோகிலா. கூடவே 5,000 ரூபாய் வட்டிக்கு வாங்கி ஸ்வெட்டர், குல்லாக்களை விற்க, பேருந்து நிலையத்துக்கு அருகில் நடைபாதையோரம் கடை போட்டிருக்கிறார்.

இன்று இந்த வருவாயில்தான் குடும்பச் செலவுகளையும் பார்த்துக்கொண்டு, தந்தையின் மருத்துவச் செலவுகளையும் கவனித்துக்கொள்கிறார் கோகிலா.

வாழ்வில் நம்பிக்கை வேண்டும்!

“படிக்கிற காலத்துல இந்த வழியா நடந்து போகும்போது நடைபாதை வியாபாரிகளைப் பார்த்து பரிதாபப்பட்டிருக்கிறேன். நானே இதே நிலைமைக்கு வருவேன்னு நினைக்கல. இதுல கிடைக்கிற கொஞ்ச வருமானத்துலதான் இப்போ குடும்பத்தைக் கவனிச்சிக்கிறேன். கல்விக்கடனை அடைக்கிறேன்.

நடைபாதையோரம் வியாபாரம் பண்றது சாதாரண விஷயம் இல்ல. நிறைய அவமானங்களைத் தாங்கணும். போலீஸ்காரங்க, நகராட்சி ஆளுங்க வருவாங்க. ஸ்வெட்டர் குல்லா என நிறைய பொருள்களை எடுத்துக்கிட்டு பணம் தராமல் போய்டுவாங்க. கேட்டா, ரொம்ப மோசமா பேசுவாங்க. எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு வேற வழி இல்லாம இந்த வேலையைச் செய்றேன். குளிர் நடுக்கத்துல சில பேர் ஸ்வெட்டர் கேட்பாங்க. கஷ்டப்படுறவங்களா இருந்தா, காசே வாங்காம கொடுத்துருவேன். சீக்கிரமே வாழ்க்கை நான் நினைச்சபடி மாறும்னு நம்பிக்கை இருக்கு. உழைப்பு கைவிடாது” - நம்பிக்கையுடன் பேசுகிறார் கோகிலா.