22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

குழந்தைகளை மகிழ்விக்க வேண்டும்!

மோகன வாணி
பிரீமியம் ஸ்டோரி
News
மோகன வாணி

கற்பனையும் கலைத்திறனும்

``ஸ்கூலுக்குப் போய்ட்டு வர்ற வழியில இருக்கிற காய்ந்த இலைகள், சின்னச் சின்னக் கற்களை பையில் போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்து ஏதாவது செய்வேன். `ஸ்கூல் பையை இப்படியா குப்பையா வெச்சுக்கறது’ன்னு அம்மா திட்டுவாங்க. ஒருமுறை சூடும் வெச்சிருக்காங்க’’ என்று சிரிக்கிறார் மோகன வாணி.

கோயம்புத்தூரைச் சேர்ந்த மோகன வாணி, பள்ளிகள் மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சிகளில் பனை ஓலையில் பொம்மைகள் செய்யக் கற்றுக்கொடுக்கிறார். நிகழ்ச்சிகளுக்குப் பனை ஓலை பொம்மைகள் செய்துதருகிறார். இவருக்கு தீபக் என்ற கணவரும் கிருத்திக் என்ற மகனும் இருக்கிறார்கள்.

“ஒரு தனியார் பள்ளியிலும் ஒரு டியூசன் சென்டரிலும் கொஞ்ச நாள் வேலை செஞ்சேன். படிப்பு என்கிற பெயரில் சின்னக் குழந்தைகளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துறாங்க... அதை உணர்ந்த நிமிஷம் வெறுத்துப்போச்சு. விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கு எப்படி கற்பிக்கலாம்னு தேடினப்ப செளபாஷினி என்ற தோழியின் வழியாக, `பனை ஏறிகள்’ அமைப்பின் தொடர்பு கிடைச்சது'' என்கிறவர், அங்குதான் `கொட்டான்’ என்கிற கருப்பட்டி போடும் பனை ஒலைப் பெட்டி செய்ய கற்றுக்கொண்டிருக்கிறார்.

மோகன வாணி
மோகன வாணி

`` `பனை ஏறிகள்’ அமைப்பில் பொருள்கள் செய்யக் கத்துக்கிட்டு வந்தபிறகு, பொருளாக இல்லாமல் பொம்மைகளைத்தான் அதிகம் செஞ்சேன். `குக்கூ காட்டுப் பள்ளி’ நண்பர்களின் தொடர்பும் கிடைச்சது. அதன்பிறகு, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பனை ஓலைப் பொம்மைகள் செய்றேன். பெரும்பாலும் நானாக செஞ்சு பார்த்து புதுசு புதுசா உருவாக்கியவைதான். பனை ஓலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம். தென்காசி பக்கத்திலிருந்து வாங்கறோம்’’ என்கிறார் மோகன வாணி. தன் நிறுவனத்துக்கு ‘தயை’ என்று பெயர் வைத்திருக்கிறார். கிளி, மான், மயில், எறும்பு எனப் பல வகை பனை ஓலைப் பொம்மைகளைச் செய்கிறார்.

``இதில் லாபம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான். அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாகவே செய்யறேன். தனியார் பள்ளிகள் மற்றும் பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கேட்கிறவர்களுக்கு எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம்.

தென்னை ஓலையைவிட பனை ஓலையில் பொம்மைகள், பொருள்கள் செய்வது சவாலான விஷயம். கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்தாலும் கைகளை அறுத்துவிடும். ஆனால், அதன் ஆயுள் அதிகம். பல வருடங்களுக்கு அப்படியே வைத்திருக்கலாம்’’ என்கிற மோகன வாணி, ``இதையே விற்பனைக்காக கடைகளுக்குக் கொடுக்கிறவங்க, வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக, பனை ஓலைப் பொருள்களின்மீது விதவிதமான சாயம் பூசி அழகுபடுத்தறாங்க. எனக்கு அப்படிச் செய்றதுல விருப்பமில்லை. ஆர்டரோ, அழகோ முக்கியமில்லை. இதன்மூலம் பனையின் பெருமைகளை எல்லோரிடமும் கொண்டுசேர்க்கணும். எல்லாவற்றையும்விட குழந்தைகளை நெருங்கி, அவர்களின் மகிழ்ச்சியில் பங்கேற்கக் கிடைக்கும் ஒரு வரமாகவே இதைச் செய்யறேன்’’ எனப் புன்னகைக்கிறார்.