Published:Updated:

"கையெல்லாம் காப்புக் காச்சி கிடக்கு. ஆனா, நான் சொந்தக்கால்ல நிக்குறேன்!" உழைக்கும் பெண்களின் கதைகள்

"என் கணவர் செவப்பா கமல்ஹாசன் மாதிரி ரொம்ப அழகா இருப்பார். ஆனா, நான் அவருக்கு அப்படியே எதிரா இருப்பேன். இதுவே எங்க ரெண்டு பேருக்குள்ள ஏகப்பட்ட பிரச்னைகளை உருவாக்குனுச்சு."

நியாயமான வேலை நேரம், நியாயமான ஊதியம், வாக்களிக்கும் உரிமை கோரி ஆயிரக்கணக்கான உழைக்கும் பெண்கள், நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு போராட்டத்தை நடத்தினர். இதன் எதிரொலியாக 1911-ம் ஆண்டு முதல் மார்ச் 8-ம் தேதி ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அது உலகமெங்கும் பரவியது.

Women'sDay
Women'sDay
pixabay
மேரிகோம், ஹீமா தாஸ், ரேஷ்மா... இந்தியாவின் `முதல்' பெண்கள்! #VikatanPhotoCards

அந்த வகையில் இது 109-வது சர்வதேச பெண்கள் தினம். மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், உழைக்கும் மகளிர் தினம். இது தங்களுக்கான தினம் என்பதுகூடத் தெரியாமல் ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் நம்மிடையே ஏராளம் ஏராளம். தங்கள் உடலுழைப்பை முதலீடாக வைத்து வாழ்ந்துகொண்டிருக்கிற சில பெண்களிடம் பேசினோம்.

சுபலட்சுமி, வீட்டுவேலை செய்பவர்

தூக்கி முடிந்த கொண்டை, கையில் ஓர் ஒயர் கூடை, அதில் இரண்டு டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில், முகத்தில் எப்போதும் புன்னகை. இதுதான் சுபலட்சுமி. வடபழநியில் அவர் வேலை பார்க்கிற வீடுகளில் 'லட்சுமியம்மா.' 'மகளிர் தின வாழ்த்துகள்மா' என்றபடி அவரை அணைத்துக்கொள்ள, ''அது என்னம்மா பெண்கள் தினம், இன்னிக்கு என்ன பண்ணனும்?" என்று கேள்வி கேட்கிறார். அவரிடம் அவருடைய வாழ்க்கையைப் பற்றிக் கேட்க, "என்னோட போட்டோ போட்றாதீங்கம்மா" என்ற நிபந்தனையோடு பேச ஆரம்பித்தார்.

Women'sDay
Women'sDay
pixabay

"என் கணவர் செவப்பா கமல்ஹாசன் மாதிரி ரொம்ப அழகா இருப்பார். ஆனா, நான் அவருக்கு அப்படியே எதிரா இருப்பேன். இதுவே எங்க ரெண்டு பேருக்குள்ள ஏகப்பட்ட பிரச்னைகளை உருவாக்குனுச்சு. எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. என்ன காரணமோ, என் வீட்டுக்காரரு திடுதிடுப்புன்னு தற்கொலை பண்ணிக்கிட்டாரு. நான் அழகா இல்லாததாலதான் தற்கொலை செஞ்சுக்கிட்டாரோன்னுகூட சில சமயம் நெனைச்சுப்பேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளைக் காப்பாத்த வேற வழி தெரியலை. எனக்குத் தெரிஞ்சது வீட்டு வேலைதான். அதையே செய்ய ஆரம்பிச்சேன். பொம்பளைங்களுக்கு வேலை ரொம்ப அவசியம் கண்ணு. சாப்பாட்டுக்காக யார் கையையும் நம்பி வாழக்கூடாது. கடந்த 10 வருஷத்துல இதுவரைக்கும் நூத்துக்கணக்கான வீடுகள்ல வேலை செஞ்சிருக்கேன்.

Women's Day
Women's Day
pixabay | For Representation Only

நான் உண்டு என் வேலை உண்டுன்னுதான் இருப்பேன். ஒரு வீட்டைப்பத்தி இன்னொரு வீட்ல சொல்றதெல்லாம் செய்யவே மாட்டேன். பாத்திரம் தேய்ச்சி, துணி துவைச்சு என் கையெல்லாம் பாரு எப்படிக் காப்பு காச்சி கிடக்கு. ஆனா, நான் சொந்தக்கால்ல நிக்குறேன் கண்ணு. தோலு நிறம், அழகைவிட உழைப்புதான்டா என் குடும்பத்தைக் காப்பாத்திட்டிருக்கு." - சுபலட்சுமியின் வார்த்தைகளில் மகளிர் தினத்துக்கான உண்மையான அர்த்தம் ஒலிக்கிறது.

செல்வி, ஹாஸ்டலில் சமையலராக இருப்பவர்

"திருவள்ளூர்ல ஒரு கிராமத்துல பொறந்தேன். எங்க குடும்பத்துல அம்மா, அப்பா, அக்கா, தம்பி, நான்னு மொத்தம் அஞ்சு பேரு. தம்பிக்கு உடம்பு முடியாம இறந்து போயிட்டான். நான் பத்தாவது வரைக்கும் படிச்சேன். அப்புறம் பள்ளிக்கூடம் போகல. வீட்டுல நெசவுத்தொழில் செஞ்சிட்டு இருந்த அப்பாவுக்குத் துணையா நானும் அக்காவும் தறி ஓட்ட ஆரம்பிச்சோம். அப்பவெல்லாம் வாழ்க்கை நல்லாதான் போச்சு. எனக்கு 20 வயசுல கல்யாணம் பண்ணி வச்சாங்க. கல்யாணமாகி ரெண்டு வருஷம் குழந்தை இல்லை.

செல்வி
செல்வி

எனக்கு குழந்தை இல்லாததை எல்லாரும் குத்திக்காட்டி பேசறப்போ மனசு அவ்ளோ வலிக்கும். ரெண்டு வருஷம் கழிச்சி கர்ப்பமானேன். என் மவன் பொறந்தான். குழந்தை பொறந்து மூணு மாசம் அம்மா வீட்டுலதான் இருந்தேன். என் புருஷன் வீட்ல இருந்து யாரும் என்னைப் பார்க்க வரல. மூணு மாசம் கழிச்சி அவங்க வீட்டுக்குக் குழந்தையோட போனப்போ அவரு புள்ளையோட முகத்தைக்கூடப் பார்க்கல. என்னாச்சு, ஏன் இதுமாதிரி நடந்துக்குறாருன்னு எனக்கு புரியவேயில்லை.

வீட்டுக்கு வருவாரு, என்கூட பேச மாட்டாரு, நான் சமைச்ச சாப்பாட்ட சாப்பிட மாட்டாரு. சாப்பாட்டுக்கும் காசு தரமாட்டாரு. வேற யாரும் உதவி செய்யவும் இல்ல. நூலுக்குப் பாவு சுத்தி நான் சம்பாதிக்கிற பணத்துலதான் நானும் குழந்தையும் சாப்பிட்டோம்.

ஒருநாள் 'எனக்கு குடும்ப வாழ்க்கைல விரும்பம் இல்ல. நீ உன்னோட அம்மா வீட்டுக்குப் போய்டு'ன்னு சொன்னாரு. எனக்குத் தலையில இடி விழுந்த மாதிரி இருந்துச்சு. அவரு எனக்கு காசு, பணம் தராட்டியும் பரவாயில்ல. கூட இருக்காருங்குற ஆறுதலாவது இருந்துச்சு.

Women'sDay
Women'sDay
pixabay

அவரு என்ன வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்லி சண்டை போட்டதுக்கு அப்புறம் எனக்கு அங்க இருக்க புடிக்கல. புள்ளையத் தூக்கிகிட்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டேன்.

இந்தப் பிரச்னையால எங்க அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாரு. வீட்டுல ரெண்டு தறி இருந்ததால, தறி சுத்தி சம்பாதிச்சி அம்மாவையும் புள்ளையையும் காப்பாத்திகிட்டு வந்தேன். தறி சுத்துறதுல போதுமான அளவு வருமானம் வரல. அதனால மெட்ராஸ்க்கு வந்து ராயப்பேட்டையில இருக்கிற ஒரு ஹாஸ்டல்ல சமையல் வேலைபார்க்க ஆரம்பிச்சேன். என் மவன் ஊருல ஆறாவது படிச்சுகிட்டிருக்கான்.

Women's Day
Women's Day
pixabay
முதலீட்டில் பெண்கள் எப்படி?

அவனை பிரிஞ்சி இருக்கிறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அவன நல்லா படிக்க வெச்சு ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வரணும். என் புருஷன் என்னை நல்லபடியா நடத்தியிருந்தா அவர் வாழ்க்கையில முன்னேற நான் கண்டிப்பா துணையா இருந்திருப்பேன். நம்மளை மதிக்காத இடத்துல நமக்கென்ன வேலை'' என்கிற செல்வியின் குரலில் மலையளவு தன்னம்பிக்கை.

மோகனா (வீட்டு வேலை செய்பவர்)

மோகனாவைப் பார்க்க வேண்டுமென்றால் அதிகாலை நான்கு மணிக்கு நாம் எழுந்தால்தான் முடியும். அந்த இருட்டு நேரத்தில் இடுப்பில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் நிறைய பால் பாக்கெட்டுகளுடன் வில்லிவாக்கம் மாட வீதிகளில் இருக்கிற அப்பார்ட்மென்ட்களின் படிக்கட்டுகளில் பரபரவென ஏறிக்கொண்டிருப்பார். 5.30 வரைக்கும் பால் பாக்கெட் விநியோகம் செய்பவர், அதன் பிறகு ஐந்து வீடுகளில் வீட்டு வேலை செய்யக் கிளம்புகிறார்.

மோகனா
மோகனா

வேலை செய்வதற்காக ஒரு வீட்டுக்குள் செல்ல முயன்ற மோகனாவுக்கு மகளிர் தின வாழ்த்துகள் சொல்லிவிட்டுப் பேசினோம். ''மேல் வீட்டுல பாத்திரம் நெறைய கெடக்கும்க்கா'' என்ற பதற்றத்துடனே பேச ஆரம்பித்தார்.

''எங்கம்மா 20 வருஷமா வீட்டு வேலை செய்றாங்கக்கா. உழைப்பு அதிகம்கிறதால அம்மா அடிக்கடி சோர்ந்துபோயிடுவாங்க. எனக்கும் பெருசா படிப்பு வரலை. அம்மாவுக்கு உதவியா இருக்கலாம்னு நானும் வீட்டு வேலைக்கு வந்துட்டேன். காலையில 4 மணிக்கு டாண்ணு முழிப்பு வந்துடும். பக்கெட்டைத் தூக்கிட்டு பால் பூத் போயிடுவேன். விடிகாலை வெளுப்பு வர்றதுக்குள்ள எல்லா வீட்லயும் பால் பாக்கெட் போட்டுட்டு, நான் வாடிக்கையா வேலைபார்க்கிற வீடுகள்ல பாத்திரம் தேய்க்கிறது, வீடு கூட்டிப் பெருக்குறது, துடைக்கிறதுன்னு செய்ய ஆரம்பிச்சிடுவேன்.

Women'sDay
Women'sDay
pixabay

பத்து, பதினோரு மணி வரைக்கும் இந்த வேலையே டைட்டா இருக்கும்க்கா. பல நாள் காலை டிபன் சாப்பிடறதுக்குக்கூட நேரமிருக்காது. இதுக்கப்புறம் ஆஃபீஸ்ல வேலைபார்க்காம வீட்ல இருக்கிறவங்க வீடுங்களுக்குப் போவேன். அங்கெல்லாம் வேலை முடிஞ்சு என் வீட்டுக்குப் போறதுக்கு மூணு, மூணரை ஆயிடும். மதியம் சாப்பாட்டை முடிச்சிட்டு மறுபடியும் 4 மணிக்கு பக்கெட்டைத் தூக்கிகிட்டு பால் வாங்கக் கிளம்பிடுவேன். எங்க வாழ்க்கை இப்படித்தான்க்கா'' என்கிற மோகனாவின் குரலில் கடும் உழைப்பின் அசதி அப்பட்டமாகத் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு