22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

குழந்தைகளின் நலனுக்கு உதவ வேண்டும்!

ஸ்வாதி ஸ்ரீஅரவிந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வாதி ஸ்ரீஅரவிந்த்

பிசினஸ் பெண்மணி

எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில், குழந்தைகளுக்கான பிரத்யேக டயப்பர் மற்றும் உடைகளைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீஅரவிந்த். தொழில் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டி, பிசினஸில் வேகமாக வளர்ந்து வருகிறார்.

``இன்ஜினீயரிங் முடிச்சதுமே எனக்குக் கல்யாணமாகிடுச்சு. பிறகு, என் இளமைக்கால பிசினஸ் ஆர்வம் இன்னும் அதிகமாச்சு. ஒருமுறை என் கணவரின் சகோதரி மூலம், சீனாவில் தயாராகும் பிரத்யேகமான டயப்பர் பத்தி தெரிஞ்சுகிட்டேன். இன்றைய காலத்துல குழந்தைகளுக்கான டயப்பர் பயன்பாடு அதிகமா இருந்தாலும், அதுல ரசாயனம் இருக்குமோங்கிற அச்சம் நிறைய தாய்மார்களுக்கு இருக்கு. அதனால், ஸ்பெஷல் டயப்பர்களை வாங்கி விற்பனை செய்ய முடிவெடுத்தேன். சீனா நிறுவனத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டேன். அதோடு, ஒரு வருஷம் ஆராய்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தினேன். ரெண்டு வருஷத்துக்கு முன்பு நம்பிக்கையுடன் விற்பனையைத் தொடங்கினேன். சீன நிறுவனத்தின் டயப்பர்கள் இந்திய குழந்தைகளுக்குத் தளர்வாக இருப்பது உட்பட சில குறைபாடுகள் பத்தி மக்களிடமிருந்து ஃபீட்பேக் கிடைச்சுது” என்கிறவர், அதன்பிறகு திருப்பூரில் `A Toddler thing' என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.

``நாங்க தயாரிக்கிற டயப்பரில் ரசாயனம், பிளாஸ்டிக் எதுவும் இருக்காது. அதில், ஈரப்பதத்தை உறிஞ்சு தக்கவெச்சுக்க பல அடுக்குகளில் காட்டன் துணிகள் மட்டுமே இருக்கும். சாதாரண துணிபோல, டயப்பரை 200 முறை வரை துவைக்கலாம்.

குழந்தைகளின் நலனுக்கு உதவ வேண்டும்!

கடந்த ஆண்டு பிறந்த என் குழந்தையின் நலனுக்கான விஷயங்களுக்கு ரொம்பவே மெனக்கெட்டேன். அப்போதுதான் சக தாய்மார்களின் எதிர்பார்ப்பு, தேவை, சிரமங்கள் எனக்குப் புரிஞ்சது. அதனால், டயப்பர் தவிர, குழந்தைப் பிறந்ததும் பயன்படுத்துற மென்மையான துணிகள் (muslin cloths), டவல், டிரஸ் வகைகள் உட்பட ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான எல்லா துணிகளையும் தயாரிச்சு விற்பனை செய்ய தொடங்கினேன். குழந்தைகளுக்கான பரிசுப் பொருள்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேக ஷூக்களையும் (pre-walker shoes) விற்பனை செய்றோம்” என்கிற ஸ்வாதி, 18 ஊழியர்களுக்கு முதலாளி!

``எங்க தயாரிப்பு பொருள்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நல்ல வரவேற்பு பெற்று விற்பனையாகுது. பிரசவம் முடிந்த நேரத்தில் அம்மாக்களால் நேரடியா ஷாப்பிங் போக முடியாது என்பதால், ஆன்லைன் விற்பனையில்தான் அதிக கவனம் செலுத்தறோம். எங்க தயாரிப்புப் பொருள்களை என் குழந்தைக்குப் பயன்படுத்தி நம்பிக்கை வந்த பிறகுதான், விற்பனை செய்வேன். என் மூத்த குழந்தையைப்போல நான் கவனிச்சுக்கிற என்னுடைய நிறுவனம், ஏராளமான குழந்தைகளின் நலனுக்கு உதவுறதுல அளவற்ற மகிழ்ச்சி” - தன் தயாரிப்புப் பொருள்களைக் காட்டி, பூரிப்புடன் சிரிக்கிறார் ஸ்வாதி!