Published:Updated:

“வீட்டுக்கு வீடு... ரோட்டுக்கு ரோடு... தோட்டம் பாரு!” - அசத்தும் ‘இயற்கை’ ஹேமலதா

ஹேமலதா
பிரீமியம் ஸ்டோரி
ஹேமலதா

பசுமைப் பெண்

“வீட்டுக்கு வீடு... ரோட்டுக்கு ரோடு... தோட்டம் பாரு!” - அசத்தும் ‘இயற்கை’ ஹேமலதா

பசுமைப் பெண்

Published:Updated:
ஹேமலதா
பிரீமியம் ஸ்டோரி
ஹேமலதா

“புயல், வெள்ளம்னு இயற்கை தன்னோட எச்சரிக்கைகளை மனிதர்களுக்குக் கொடுத்துக்கிட்டே இருக்கு. ஆனா, பலருக்கும் இயற்கையின் அந்த மொழி புரிவதே இல்லை. இனியும் நாம இயற்கை உணவுக்கும் மரக்கன்றுகள் நடும் முன்னெடுப்புகளுக்கும் மாறலைன்னா, விளைவுகள் விபரீதமா இருக்கும். அதை நான் உணர்ந்ததாலேயே, எங்க குளித்தலைப் பகுதிப் பெண்களை, இயற்கையோடு இயைந்து வாழ மாற்றிக்கிட்டு இருக்கேன். பள்ளி மாணவர்களை மரக்கன்றுகள் நட ஊக்கப்படுத்துறேன்’’ என்று இயற்கை மீதான தன் காதலைச் சொல்லி ஆரம்பிக்கிறார் கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த ஹேமலதா. ‘இயற்கை’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் குளித்தலையில் 15 பெண்களை, இயற்கை முறையில் காய்கறித்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க வைத்திருக்கிறார்.

“எங்க பூர்வீகம் சிவகாசின்னாலும் ஒடிசாவுல செட்டிலான குடும்பம்.

“வீட்டுக்கு வீடு... ரோட்டுக்கு ரோடு... தோட்டம் பாரு!” - அசத்தும் ‘இயற்கை’ ஹேமலதா

2006-ம் வருஷம், குளித்தலையைச் சேர்ந்த சிவக்குமாருக்குக் கட்டி வெச்சாங்க. மகன் யுவவர்மன் பிறந்தான். கணவர் தினமும் வேலைக்குப் போனதுக்கு அப்புறம், வீட்டைச் சுற்றி சிறிய அளவுல காய்கறித்தோட்டம் அமைச்சேன். தோட்டத்தில் நேரம் செலவிடுவது புத்துணர்வா இருந்தது. ஆரோக்கியமும் ருசியும் நிறைந்த, இயற்கை முறையில் விளைவிச்ச காய்கறிகளாலான சமையலை சாப்பிட்டப்போ, இது மத்தவங்களுக்கும் கிடைக்கணும்னு தோணுச்சு. சமூக சேவகரும் நண்பருமான பிரேம் ஆனந்திடம் கலந்தாலோசிச்சு, ஐந்து மாதங்களுக்கு முன்பு, ‘இயற்கை’ என்ற அமைப்பை ஆரம்பிச்சோம். 77 பேர் உறுப்பினர்களா இணைந்தாங்க” என்றவர், ‘இயற்கையின் செயல்பாடுகள் பற்றிச் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வீட்டுக்கு வீடு... ரோட்டுக்கு ரோடு... தோட்டம் பாரு!” - அசத்தும் ‘இயற்கை’ ஹேமலதா

“முதல்கட்டமா, 15 வீடுகளில் வீட்டுத் தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பது என்று முடிவுபண்ணினோம். ஒவ்வொருத்தர்கிட்டயும் 800 ரூபாய் வசூல் செய்து, ஒவ்வொருவருக்கும் ஐந்து குரோபேக்குகள்ல, இரண்டில் காய்கறி விதைகளையும், மூன்றில் கீரை விதைகளையும் விதைச்சுக் கொடுத்தோம். குரோபேக்குகள்ல தகுந்த மண், நுண்ணியிர் ஊக்கிகள் கலந்திருந்தோம். தவிர, மண்புழு உரம், அசோஸ் பயிரில்லம், பஞ்சகவ்யா, மூலிகை பூச்சிவிரட்டி, வளராத செடிகளுக்குக் கொடுக்கப் பயிர் ஊக்கினு சேர்த்துக் கொடுத்தோம். எல்லாமே நாட்டுக்காய்கறி விதைகள்தான். வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சு, தங்களோட செடி வளர்ச்சியை போட்டோவோடு பகிரும் பெண்கள், செடிகள் குறித்த பிரச்னைகளையும் அனுப்புவாங்க. உடனே நிபுணர்களிடம் ஆலோசனையைக் கேட்டு அவங்களுக்கு அனுப்புவோம். தேவைப்பட்டால், நேரடியாகச் சென்று ஆலோசனை வழங்கறோம். இதுக்காக ஐந்து பெண்களை நியமிச்சிருக்கோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘எங்களை இயற்கை விவசாயிகளா மாற்றினதுக்கு நன்றி ஹேமா’னு ஒவ்வொரு பெண்ணும் சொல்றப்போ, சரியான ஒரு விஷயத்தைச் செய்றோம் என்ற நிறைவு கிடைக்குது. தஞ்சாவூர், திருச்சி, பெங்களூரு, ஓசூர்னு பல ஊர்களில் இருந்தும், எங்க அமைப்பில் பெண்கள் உறுப்பினராகி, தங்கள் இல்லங்களில் மாடித்தோட்டம் அமைச்சிருக்காங்க. அடுத்த பேட்ஜில் மாடித்தோட்டம், சமையலறைத் தோட்டம் அமைக்க 10 பெண்கள் முன்வந்திருக்காங்க” என்றவர், பள்ளி மாணவர்கள் மூலம் மரக்கன்றுகள் நட்டுவரும் தன் முயற்சிகள் பற்றித் தொடர்ந்தார்.

“வீட்டுக்கு வீடு... ரோட்டுக்கு ரோடு... தோட்டம் பாரு!” - அசத்தும் ‘இயற்கை’ ஹேமலதா

“ ‘கிரீன் பிளான்ட்’ என்ற அமைப்பைத் தொடங்கி கடந்த இரண்டு மாதங்களா பள்ளி மாணவர்கள் மூலம், குளித்தலையைச் சுற்றி மரக்கன்றுகள் நடுறோம். 6 முதல் 10-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் கொடுத்து, அவங்களுக்கு ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சோம். மரக்கன்றுகளுக்கு மாணவர்கள் பெயர் வைத்து செல்லமா வளர்த்து, தினமும் அதோடு அவங்க செலவிடும் பணிகளை போட்டோ, வீடியோவாக்கி அந்த குரூப்பில் அனுப்புவாங்க. நாங்களும் வாரத்துக்கு ரெண்டு முறை போன் செய்து விசாரிப்போம், நேரிலும் போவோம். ஒரு வருடம் கழித்து, மரக்கன்றுகளை நல்லா வளர்த்திருக்கிற மாணவர்களுக்குப் பள்ளிக்கு ஒருவர்னு பரிசு கொடுக்கவிருக்கோம். எல்லா மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசும், சான்றிதழும் உண்டு. இதுவரை, குளித்தலையைச் சுற்றியுள்ள 300 மாணவர்களை மரக்கன்றுகள் நடவெச்சிருக்கோம். இந்த வருஷம் 1,000 மாணவர்கள்னு இலக்கு வெச்சிருக்கோம்” என்றவர்,

“இன்னிக்கு மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்குக் காரணம், நஞ்சான உணவை உண்பதுதான். அதேபோல், பூமியில் ஏற்படும் பல இடர்களுக்குக் காரணம், நாம இயற்கையை பலவகையிலும் சின்னாபின்னமாக்கியதுதான். ரெண்டையும் சரிபண்ண நான் மாறிட்டேன். அப்ப நீங்க?”

- ஹேமலதாவின் கேள்வியில் அக்கறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மைதாவுக்கு மாற்றாக வாழைக்காய் பவுடர்!

ஹேமலதா, குளித்தலைப் பகுதிப் பெண்களை பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க வலியுறுத்தி, அவர்களுக்கு மழைநீர் சேகரிப்பைப் பழக்குகிறார். புழுதேரியில் உள்ள வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் திரவியம், தொழில்நுட்ப வல்லுநர் தமிழ்ச்செல்வி, பயிற்சியாளர் மாலதி என்று பலரையும் அழைத்து வந்து, வாழைக்காயிலிருந்து பவுடர், வாழைப்பழத்திலிருந்து இனிப்பு எனப் பெண்களுக்கு வாழையில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி கொடுக்க வைத்திருக்கிறார்.

“வீட்டுக்கு வீடு... ரோட்டுக்கு ரோடு... தோட்டம் பாரு!” - அசத்தும் ‘இயற்கை’ ஹேமலதா

``வாழைக்காய் பவுடரை மைதாவுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். மேலும் பரோட்டா செய்ய 80% மைதா, 20% வாழைக்காய் பவுடர் எனப் பயன்படுத்தலாம், சப்பாத்தி மாவிலும் வாழைக்காய் பவுடரைப் பயன்படுத்தலாம்'' என்ற கரூர் வேளாண் அறிவியல் மைய, மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் மாலதியிடம் அதன் விவரங்கள் கேட்டோம்.

``நன்கு முற்றிய வாழைக்காய்களை ஆவியில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வைக்கவும். அவற்றை எடுத்து, தோல் சீவி வேண்டிய தடிமனில் நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய துண்டுகளை வெயிலில் காயவைத்து, படக்கென்று உடையும் பதத்தில் எடுக்கவும். அவற்றை மிக்ஸி/அரவை மில்லில் மாவாக அரைக்கவும். இந்த மாவை அரிசி, கோதுமைக்கு மாற்றாகவும், உடலுக்கு ஊறு என்று சொல்லப்படும் மைதாவுக்கு மாற்றாகவும் கலந்து பயன்படுத்தலாம்.

அதேபோல, 'வாழைப்பழ அத்தியும்கூட செய்யலாம்.

நடுத்தரமான பதம்கொண்ட வாழைப்பழங்களை ஆவியில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வேகவைத்து எடுத்து தோல் நீக்கவும். தேவையான அளவு சர்க்கரை/வெல்லத்தைப் பாகாக்கி, வேகவைத்து வாழைப்பழங்களை அதில் சேர்த்து, நான்கு நாள்கள்வரை ஊறவைக்கவும். பிறகு, பாகுடன் கலந்துவிட்ட அந்த வாழைப்பழங்களை, வெயிலில் உலர்த்தி எடுக்க, சுவையான வாழைப்பழ அத்தி ரெடி. குழந்தைகளுக்கு சாக்லேட்டுக்கு மாற்றாக இதைக் கொடுக்கலாம்'' என்றார்.

“வீட்டுக்கு வீடு... ரோட்டுக்கு ரோடு... தோட்டம் பாரு!” - அசத்தும் ‘இயற்கை’ ஹேமலதா

“சுவையில சொக்கிப்போயிட்டோம்!”

ஹேமலதா முயற்சியில் மாடித்தோட்டம் அமைத்திருக்கும் குளித்தலையைச் சேர்ந்த மஞ்சு கணேஷிடம் பேசினோம். “மாடித்தோட்டம்னதும் ஆரம்பத்துல, ‘இருக்கிற வேலைப் பளுவுல இது வேறயா?’னு தோணுச்சு. ஆனா, போகப்போக ஆர்வம் அதிகமாயிட்டு. இந்தக் கீரைகளோட சுவையில என் கணவரும் பசங்களும் சொக்கிப் போயிட்டாங்க. உடனடியா என் கணவர் மாடித்தோட்டத்தை விரிவுபடுத்த இரும்பில் ஷெட், நெட் எல்லாம் அமைச்சுட்டார்” என்றார் உற்சாகமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism