Election bannerElection banner
Published:Updated:

பெண் குழந்தைகளைக் கொண்டாடும் சிறுவீட்டுப் பொங்கல்... எப்படி கொண்டாடப்படுகிறது?

சிறுவீட்டுப் பொங்கல்
சிறுவீட்டுப் பொங்கல்

தென் மாவட்டங்களில் தைப்பொங்கலையொட்டி கொண்டாடப்படும் `சிறுவீட்டுப் பொங்கல்' தமிழர்கள் பெண் குழந்தைகளைக் கொண்டாடும் விதத்தை கண் முன்னே விவரிக்கிறது.

`பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்' என இன்று எத்தனையோ பழக்க வழக்கங்களையும் ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டு வருகிறோம். ஆனால் தமிழர்கள் சங்க காலத்தில் இருந்தே பெண் குழந்தைகளைப் பெருமைப்படுத்தி, கொண்டாடியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாக தமிழில் பல இலக்கியங்கள் இருந்தாலும் தென் மாவட்டங்களில் தைப்பொங்கலையொட்டி கொண்டாடப்படும் `சிறுவீட்டுப் பொங்கல்' தமிழர்கள் பெண் குழந்தைகளைக் கொண்டாடும் விதத்தை கண் முன்னே விவரிக்கிறது.

சிறுவீட்டுப் பொங்கல்
சிறுவீட்டுப் பொங்கல்

பெண் குழந்தைகள் அழகுப் பதுமைகளாக குட்டி, குட்டி சொப்புச் சாமான்களில் கற்பனையேற்றி சமைப்பதை எண்ணிப்பார்க்காமல் அவர்களின் குழந்தைப் பருவத்தை நம்மால் கடக்க இயலாது. அப்படியான அவர்களின் வழக்கத்தை விழாவாக மாற்றியிருக்கிறது தமிழ் சமுகம். தனக்கென களிமண் வீடுகட்டி, அந்த வீட்டில் பெண் குழந்தைகள் பொங்கல் இடும் அந்த வழக்கம் எப்படி உருவானது, எப்படி மருவியிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

தென் மாவட்டங்களில் பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கொண்டாடப்படும் சிறு வீட்டுப் பொங்கல், அந்தக் காலத்தில் ஆண்டாளின் மார்கழி நீராடலை அடிப்படையாகக் கொண்டு, விரதம் முடிக்கும் தைப் பூசம் அன்று கொண்டாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, ``மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்" - மார்கழி மாதம் பெளர்ணமி அன்று தொடங்கி, தை மாதம் பெளர்ணமி அன்றுதான் ஆண்டாளின் நோன்பு முடிவடைகிறது. தைப்பூச தினமான அந்த நாளில் பொங்கல் இட்டு , தனக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைய பெண் குழந்தைகள் இறைவனை வழிபட்டிருக்கிறார்கள்.

சிற்றில் சிதைத்தல்
சிற்றில் சிதைத்தல்
பெண் குழந்தைகளைக் கொண்டாடும் தென் மாவட்ட சிறுவீட்டுப் பொங்கல்! (சிறப்பு படங்கள்)

அதன் பின் அதில் மாற்றங்கள் நிகழ்ந்து தற்போது சிறுவீட்டுப் பொங்கலாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதே போன்று பெண் குழந்தைகள் மணலில் கட்டி விளையாடும் வீட்டை ஆண் குழந்தைகள் உடைத்துவிடுவார்கள். இதை `சிற்றில் சிதைத்தல்' என சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இப்படி பெண் குழந்தைகள் வீடு கட்டி விளையாடிய நிகழ்வே நாளடைவில் பொங்கலுடன் இணைந்து சிறு வீட்டுப் பொங்கலாகக் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் தற்போதும் சிறு வீட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தற்போது சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடும் நடைமுறைகளை விவரிக்கிறார் செங்கோட்டையைச் சேர்ந்த பாக்கியம் பாட்டி.

``எங்க வீட்டில் மூன்று தலைமுறைகளாக சிறு வீட்டுப் பொங்கல் வைக்கிறோம். ஒரு வீட்டில் முதலில் பிறக்கும் பெண் குழந்தைக்கு அந்தக் குழந்தையின் அம்மா வழி பாட்டி வெண்கலப் பானையை, அந்தக் குழந்தையின் முதல் பொங்கலன்று புத்தாடையுடன் சேர்த்து சீதனமாக கொடுப்பார்கள். ஒரு வயதிலிருந்து அந்தக் பெண் குழந்தைக்குத் திருமணம் ஆகுற வரை ஒவ்வொரு வருஷமும் தை மாதம் களிமண் வீடுகட்டி சிறு வீட்டுப் பொங்கல் வைப்பார்கள்.

களிமண் வீடு
களிமண் வீடு

ஒரே வீட்டில் ரெண்டு, மூணு பெண் குழந்தைகள் இருந்தால், வீட்டில் அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தக் குழந்தைகளுடைய பெற்றோர்களே, பானைகளை வாங்கிக் கொடுப்பார்கள். வீட்டிலிருக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையும் தனித்தனி பானைகளில் பொங்கல் இடுவது வழக்கம்.

மார்கழி மாதம் முழுவதும் பெண் பிள்ளைகள் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து கோலத்தின் நடுவில் சாண உருண்டைகளை வைத்து அதில் செம்பருத்தி, பூசணி, எருக்கை, இதில் ஏதேனும் ஒரு பூவை நட்டு வைப்பார்கள். அந்த உருண்டைகளை தினமும் மாலை சேகரித்து, அதை பூவுடன் சேர்த்து வறட்டியாக தட்டி வீட்டின் முற்றத்தில் காயவைப்பார்கள்.

முளைக்கட்டிய நவதானியங்கள்
முளைக்கட்டிய நவதானியங்கள்

மார்கழி மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமையன்று நவதானியங்களைத் தண்ணீரில் ஊறவைத்து ஒரு துணியில் கட்டி பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள்.

தை மூன்றாம் நாள், வீட்டு முற்றத்தில் ஐந்துக்கு ஐந்தடி அளவில் களிமண்ணால் சிறிய வீட்டை, பெண் குழந்தைகள் கட்டுவார்கள். அந்த வீட்டில் வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, அவருக்கு பூ, தேங்காய், பழம் படைப்பார்கள். களிமண் வீட்டில் சிறிய அடுப்பு, பாத்திரம் ஒன்றை வைத்து அதில் பால் காய்ச்சி அந்த வீட்டை தனதாக்கிக் கொள்வார்கள். பால் பொங்கி வழிந்ததும், கிழக்கே பார்த்து, வெண்கலப் பானையில் சர்க்கரைப் பொங்கல் இடுவார்கள்.

கும்மி
கும்மி

முறத்தில் வாழை இலை விரித்து அந்த இலையில் மஞ்சளால் ஆன பிள்ளையார், முளைகட்ட வைத்த நவதானியங்கள், மாதம் முழுவதும் சேகரித்த சாணக் குப்பிகள், தேங்காய், பழம், வைத்து விளக்கேற்றி, ஒரு வீதியில் இருக்கும் சிறுமிகள் ஒன்றாக இணைந்து, ``வாடாமல், வதங்காமல் வளர்த்தேனடி குப்பி, நீ பரணி ஆத்து தண்ணியில போறியேடி குப்பி" என்று கும்மியடித்து வழிபடுவார்கள்.

பிறகு ஊரில் உள்ள ஆற்றங்கரைக்குச் சென்று சாணக் குப்பிகளை முதலில் தண்ணீரில் கரைத்து விடுவார்கள். அதன் பின் இலையை அப்படியே தண்ணீரல் விட்டு இறைவனுக்கு நன்றி சொல்லித் திரும்புவார்கள். இப்போது ஆற்றங்கரையில் தண்ணீர் இல்லாததால் குளம், ஏரிக்கரை என நீர் உள்ள பகுதிகளில் கரைக்கிறார்கள்.

வழிபாடு
வழிபாடு

இப்படி ஒவ்வொரு வருடமும் செய்தால் அந்தப் பெண் குழந்தையின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது ஐதிகம்" என்கிறார் பாக்கியம்மாள். இப்படியான சாஸ்திர சம்பிரதாயங்களின் பின்னணியில் பெண் குழந்தைகள் கொண்டாடப்படுகிறார்கள் என்பதே நாம் அறிய வேண்டிய ஒன்று.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு