லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

எமோஷனல் அப்யூஸ் #HowToHandle

எமோஷனல் அப்யூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
எமோஷனல் அப்யூஸ்

பெரும்பாலும் காதல், திருமண வாழ்க்கையிலிருக்கும் பெண்களுக்கு ஆண்களால் இது ஏற்படுகிறது.

“ஒரு தோசையக்கூட ஒழுங்கா சுடத் தெரியல... நீயெல்லாம் என்னத்தைப் படிச்சியோ...” பல வீடுகளில் சர்வசாதாரணமாகப் பெண்களின் காதுகளில் இதுபோன்ற வார்த்தைகள் விழலாம். அதுவே தொடர்கதையாகி, பெண் அதைச் சகித்துக்கொண்டே மனதுக்குள் வெதும்பித் தவித்தால்... அது ‘எமோஷனல் அப்யூஸ்’ (Emotional Abuse) என்கிறது உளவியல்.

 அர்ஷியா தாஜ்
அர்ஷியா தாஜ்

லாக்டௌன், வொர்க் ஃப்ரம் ஹோம் போன்ற விஷயங்களால் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று பல தரவுகள் தெளிவாக்குகின்றன. ‘`எமோஷனல் அப்யூஸ் என்பது குடும்ப வன்முறையின் ஆரம்ப புள்ளி. அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குத் தீர்வைக் கண்டறியாவிட்டால் தீவிர மனநலப் பிரச்னையாக மாறவும் வாய்ப்புள்ளது'' என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அர்ஷியா தாஜ். எமோஷனல் அப்யூஸ் குறித்து மருத்துவர் அளித்த தகவல்கள், ஆலோசனைகள் இதழில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

எமோஷனல் அப்யூஸ் #HowToHandle

எமோஷனல் அப்யூஸ் என்பது என்ன?

விமர்சித்தல், குற்றம் சுமத்துதல், அவமானப் படுத்துதல், கேலி செய்தல், பொதுவெளியில் சங்கடமாக உணரச்செய்தல் போன்ற உணர்வு ரீதியான செயல் களால் ஒருவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப் பதே ‘எமோஷனல் அப்யூஸ்’.

ஓர் உறவுமுறைக்குள் பேசத்தகாத வார்த்தைகளைத் தொடர்ச்சியாகப் பிரயோகித்தல், உணர்வுரீதியாகக் கொடுமைப்படுத்துதல் போன்ற செயல்களால் ஒருவரின் சுயமரியாதைக்குப் பங்கம் வரும் வகையில் நடந்துகொள்வதும் இதில் அடங்கும். உணர்வுரீதியான துன்புறுத்தல் அடுத்தடுத்த கட்டத்துக்குச் சென்று உடல் ரீதியான துன்புறுத்தலாக மாறும்.

பெரும்பாலும் காதல், திருமண வாழ்க்கையிலிருக்கும் பெண்களுக்கு ஆண்களால் இது ஏற்படுகிறது. மாமியார், நாத்தனார், சித்தி போன்ற நெருங்கிய உறவினர்களாலும் இது ஏற்படலாம். சராசரியாக 5-10 சதவிகிதப் பெண்கள் ‘எமோஷனல் அப்யூஸு’க்கு ஆளாகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.

எமோஷனல் அப்யூஸ் #HowToHandle

எதெல்லாம் ‘எமோஷனல் அப்யூஸ்’ பட்டியலில் வரும்?

புண்படுத்தும் பட்டப்பெயர்களை வைத்துக் கூப்பிடுவது, பிறருடன் ஒப்பிட்டுப் பேசுவது, தோற்றத்தைக் கேலி செய்வது, பொதுவெளியில் சங்கடப்பட வைப்பது, அடிப்பது, திட்டுவது, எங்கு போகிறார்கள், யாரிடம் பேசுகிறார்கள் என்பதை யெல்லாம் தெரிந்தே கண்காணிப்பது, பொருளாதார ரீதியான கட்டுப்பாடு, தன்னிச்சையாக முடிவெடுக்க விடாதது எல்லாம் ‘எமோஷனல் அப்யூஸ்’தான்.

வேறு யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை அந்தப் பெண் பகிர்ந்துகொண்டிருந்தால், ‘இதை எல்லார் கிட்டயும் சொல்லி உன்னை அசிங்கப்படுத்திடுவேன்’ என்று மிரட்டுவது, உத்தரவு போடுவது, ‘எல்லாரும் உன்னை இப்படித்தான் சொல்றாங்க’ என்பது போல தன்னம்பிக்கையைக் குறைக்கும் வகையில் பேசுவது, உறவினர், தோழி என நெருக்கமாக இருக்கும் உறவுகளைத் தவிர்க்க வைப்பது போன்ற செயல்கள் அனைத்தும் இதில் அடங்கும்.

அவர்கள் செய்யும் ஒரு செயல் அல்லது வார்த்தை அந்தப் பெண்ணை எரிச்சலூட்டுகிறது அல்லது புண்படுத்துகிறது என்று தெரிந்துவிட்டால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைச் செய்வார்கள்.

தான் உடல் ரீதியாகத் துன்புறுத்தப் படுகிறோம் என்பதை ஒருவரால் உணர முடியும். ஆனால், உணர்வு ரீதியான இந்த வன்முறையை எதிர்கொள்கிறோம் என்பதை ஒருவரால் எளிதில் பிரித்தறிய முடியாது என்பதால் இது மிகவும் ஆபத்தானது. இதைப்பற்றி பேசினால் கணவர் பிரிந்து விடுவாரோ, சமூகம் தவறாகப் பேசு மோ என்று சகித்துக் கொள்வார்கள்.

இதையெல்லாம் பார்த்தால் ‘கணவனும் மனைவியும் பேசினா கூட ‘அப்யூஸ்’னு அர்த்தமாகி விடுமோ’ என்று தோன்றலாம். என்றோ ஒருநாள் கணவரோ, காதலரோ, நண்பரோ மாறுபட்டு நடந்து கொள்வதால் பிரச்னை இல்லை. ஆனால், தொடர்ச்சியாக நடக்கும்போது, அது பாதிக்கப் பட்டவரின் உணர்வுகளைக் குலைக்கும்போது, அதில் உடன்பாடு இல்லை ஆனாலும், சகித்துக் கொள்வது எனும்போதுதான் அது ‘அப்யூஸ்’ என்ற கட்டத்தை அடைகிறது.|

எமோஷனல் அப்யூஸ் #HowToHandle

பிரித்தறிவது எப்படி?

சுயத்தை இழந்ததுபோன்று தோன்றுவது, இந்த உறவில் ஏற்கெனவே இருந்த சுதந்திரம், மகிழ்ச்சி இப்போது இல்லை எனும்போது, ஒரு காரியத்தைச் செய்யும்போது (உதாரணத்துக்கு ஓர் ஆண் நண்பரிடம் பேசினால், தனக்காக 100 ரூபாய் செலவழித்து லிப்ஸ்டிக் வாங்கினால்கூட) பயம் வருவது, துன்புறுத்தியவரை நேருக்கு நேர் சந்திக்க நேரும்போது பயப்படுவது ஆகியவை ஒரு பெண் ‘எமோஷனல் அப்யூஸ்’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம்.

பெரும்பாலும் இதுபோன்று துன்புறுத்துபவருக்கு அடிப்படையில் அவர்களுடைய ஆளுமையில் (Personality) ஏதாவது பிரச்னை இருக்கும். மனநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படும் Borderline Personality Disorder போன்ற பிரச்னைகள் இருக்கலாம். இவர்கள் அடுத்தவர்களைத் துன்புறுத்தி இன்பம் காண்பார்கள். துன்புறுத்தும் நபர் தன்னைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள். இவர்களுக்கு உளவியல் நிபுணர்களின் கவனம் தேவைப்படும்.

லாக்டௌன், வொர்க் ஃப்ரம் ஹோம் போன்றவற்றால் இது போன்ற துன்புறுத்தல்கள் அதிகரித்திருக்கின்றன. குழந்தை யின்மை பிரச்னையும் ‘எமோஷனல் அப்யூஸ்’ நிகழ்வுகளை அதிகரித்திருக் கிறது.

துன்புறுத்தப்படும் நபர் ஒருகட்டத்தில் தீவிர மன அழுத்தம், மனப்பதற்றம், விரக்தியால் தற்கொலை எண்ணம், பேனிக் அட்டாக் உள்ளிட்டப் பிரச்னை களுக்குத் தள்ளப்படுவார்கள். போதை, மது போன்ற பழக்கங் களுக்கும் ஆளாக நேரிடுகிறது.

சிலர், துன்புறுத்தும் நபரிடமிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று சட்டென்று வேறொரு ரிலேஷன் ஷிப்பில் சென்று விழுந்துவிடுவார்கள்.

அதிக தூக்கம், தூக்கமின்மை, அதிகம் சாப்பிடுவது, சாப்பிடத் தோன்றாமல் இருப்பது, தற்கொலை எண்ணம், தனிமையில் நீண்ட நேரம் அழுவது, தனிமையில் இருப்பது, தாம்பத்தியத்தி்ல் ஈடுபாடு இல்லாமை, படபடப்பு ஆகியவை நிலைமை தீவிரமாகிவிட்டதற்கான அறிகுறிகள். இவை தென்படும் பட்சத்தில் உடனடியாக மனநல மருத்துவர் அல்லது உளவியல் ஆலோசகர்களை அணுக வேண்டும்.

எமோஷனல் அப்யூஸ் #HowToHandle

குழந்தை வளர்ப்பில் இதையும் சொல்லிக்கொடுங்கள்!

‘அந்தப் பொண்ணு எப்படிப் பண்ணுது பாரு...நீயெல்லாம் இதுக்கு லாயக்கே இல்ல’, ‘சோம்பேறி’, ‘தூங்குமூஞ்சி’, ‘அவ குரல் நல்லாயிருக்கு... உன் குரலுக் கெல்லாம் பாட்டு கிளாஸ் எதுக்கு...’ குழந்தைகளிடம் இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்லும் பெற்றோரா நீங்கள்?

உங்களின் சிறிய வார்த்தை, குழந்தையின் உணர்வை வெகுவாக பாதிக்கும். வளரும் குழந்தைகள் உணர்வு களை வெளிப்படையாகச் சொல்லாமல் உள்ளுக் குள்ளேயே மறைத்துவைத்து வளர்வார்கள்.

இது அவர்களின் தன்னம்பிக்கையை மட்டுப்படுத்தும் என்பதால் வளரும்போது எளிதாக எமோஷனல் அப்யூஸுக்கு ஆளாகிவிடுவார்கள். வீட்டில் இதுபோன்று அழுத்தத்துடன் இருக்கும் குழந்தைகள், தான் விரும்பும் அன்பை, பாசத்தை வெளியில் தேடத்தொடங்குவார்கள்.

உதாரணத்துக்கு, பள்ளியில் ஒரு குழந்தை இந்தக் குழந்தையை வீட்டுப்பாடம் எழுதுவதற்கோ, தின்பண்டம் வாங்குவதற்கோ பயன்படுத்திக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது புரிந்தாலுமே அந்த நட்பைத் தக்கவைக்க எந்த எல்லைவரையும் அந்தக் குழந்தை செல்லும்.

அதே குழந்தை வளரும்போது லைஃப் பார்ட்னரைத் தேர்வு செய்வதிலும் இதே தவற்றைச் செய்யும். இவர்கள் உணர்வுரீதியாக பலவீனமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்பவர்கள் அவர்களைத் தவறாகப் பயன்படுத்து வதற்கும் வாய்ப்புள்ளது. இளம் பெண்கள் டேட்டிங், காதல், நட்பு போன்ற உறவில் துன்புறுத்தப்பட்டு, உளவியல் ஆலோசனைகளுக்காக வருவதும் அதிகரித்துள்ளது.

திருமண வாழ்க்கையில் இது போன்று நடந்தாலும், இதுதான் வாழ்க்கை என்று அதை சகித்துக் கொண்டே வாழப் பழகிவிடுவார்கள். அந்த உறவு முறையின் நேர்மறைப் பக்கம் என்ன என்பதை உணராமலே இருந்துவிடுவார்கள். உணர்வு ரீதியாகத் துன்புறுத்தப்பட்டாலும் அந்த நபரை இழந்துவிடக் கூடாது என்று எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்வார்கள்.

பெற்றோரே... உங்கள் குழந்தை களிடம் பாசிட்டிவ் வார்த்தைகளைப் பேசுங்கள். தன்னம்பிக்கை உடையவர் களாகவும், தன் உரிமைக்காக உரத்த குரல் எழுப்பவும் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுங்கள்.

எமோஷனல் அப்யூஸ் #HowToHandle

தீர்வு என்ன?

ஒரு பெண் தன் உடல்நலம், மனநலம் என அனைத்திலும் தனக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எந்த உறவுமுறையாக இருந்தாலும் அதில் குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். தனக்கு மட்டுமே அறிந்த சில பர்சனல் விஷயங்களைப் பத்திரமாகவே வைத்திருப்பதும் அவசியம். தன்னைப் பற்றிய முழுமையும் ஒருவர் அறிந்துகொள்ளும்போது நிச்சயம் அதைப் பயன்படுத்தி ‘அட்வான்டேஜ்’ எடுத்துக்கொள்வார்கள்.

குடும்பத்துக்கும் அலுவலகத்துக்கும் மட்டுமே தன்னுடைய நேரத்தைச் செலவழிக்காமல் ‘மீ டைம்’ என்ற ஒன்றைக் கட்டாயம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் அவர்களுக்குப் பிடித்த ஷாப்பிங், டிராவல், கிராஃப்ட் என எதிலும் ஈடுபடலாம். அது மனதை இலகுவாக்குவதுடன் தன்னம்பிக்கையையும் நேர்மறை எண்ணத்தையும் வளர்க்கும்.

தன் நம்பிக்கைக்குரிய தோழி யிடமோ, குடும்ப உறுப்பினரிடமோ என்னென்ன விஷயங்கள்

தன்னைச் சுற்றி நடக்கின்றன என்பதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற துன்புறுத் தலுக்கு ஆட்படும்போது தன்னிடம் தான் ஏதோ பிரச்னை இருக்கிறது, தன்னைத்தான் மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் குற்ற உணர்வு கொள்ளக் கூடாது.

உணர்வுரீதியான துன்புறுத்தல் என்பது நீண்ட நாள்கள் தொடரும் போது அது இயல்பானதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக, பிரச்னை களுக்கு ‘Exit Plan’ என்பதை வைத்திருப்பது நல்லது. அது விவாகரத்தாகவோ உறவை முறித்துக் கொள்வதாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை.

குடும்பத்தினரிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி பிரச்னையைத் தீர்க்க முடியுமா, மனநல மருத்து வரிடம் சிகிச்சை, ஆலோசனை பெற்று பிரச்னையைத் தீர்க்க முடியுமா என்பது போன்ற வழி களைப் பார்க்க வேண்டும்.

இதுபோன்ற முன்னெடுப்புகள் கைகொடுக்காத பட்சத்தில் பிரிவதைப் பற்றிய முடிவுக்குச் செல்லலாம். பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தாமல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும்.