Published:Updated:

பட்டுப் புடவையும் மல்லிகைப் பூவும்... எனக்கு அடையாளம் மட்டுமல்ல பாதுகாப்பும்கூட! - உஷா உதுப்

உஷா உதுப்
பிரீமியம் ஸ்டோரி
உஷா உதுப்

எவர்கிரீன் பாடகி

பட்டுப் புடவையும் மல்லிகைப் பூவும்... எனக்கு அடையாளம் மட்டுமல்ல பாதுகாப்பும்கூட! - உஷா உதுப்

எவர்கிரீன் பாடகி

Published:Updated:
உஷா உதுப்
பிரீமியம் ஸ்டோரி
உஷா உதுப்

‘பத்மஸ்ரீ’ உஷா உதுப்... நாடறிந்த இசை பிரபலம். ‘நைட் கிளப்’ பாடகியாக இசைப் பயணத்தைத் தொடங்கி, கடந்த 50 ஆண்டுகளில் 17 இந்திய மொழிகள், 8 சர்வதேச மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி சாதனைப் படைத்தவர். ஆனால், இவரின் நினைவுகளோ சென்னை, தமிழ் மக்கள்மீதுதான் எப்போதும் அலைபாய்கிறது. அதற்கான காரணம் முதல் தனது பர்சனல் பக்கங்கள் வரை எல்லாம் பகிர்கிறார் தனக்கே உரிய கணீர் குரலில்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“என் அம்மாவின் பூர்வீகம் மெட்ராஸ். அவரின் பெற்றோர், உடன் பிறந்த உறவுகள் எல்லாம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் வசிச்சாங்க. ஒவ்வொரு வருஷமும் சம்மர் லீவ்ல பாட்டி வீட்டுக்கு வந்திடுவேன். சுண்டல், மாங்காய் வாங்கி சாப்பிட்டு பீச்சில் ஆட்டம் போட்டது, மூர் மார்க்கெட் ஷாப்பிங், சிட்டியைச் சுத்திப் பார்த்ததெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். வீட்டுலயே பாட்டி கமர்கட்டு பண்ணுவாங்க. அதை, அப்போ நாங்க வசிச்ச மும்பை வீட்டுக்குக் கொண்டுவந்து பலநாள் வெச்சிருந்து சாப்பிடுவேன். இப்ப மெட்ராஸ் வரும்போதெல்லாம் கமர்கட்டு வாங்காம, ஃபில்டர் காபி குடிக்காம வர மாட்டேன்.

சவேரா ஹோட்டல், மியூசிக் அகாடமி உட்பட மெட்ராஸ்ல நான் பல இடங்களில் கச்சேரி பண்ணியிருக்கிறேன். தவிர, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம்னு நிறைய ஊர்கள்ல பாடியிருக்கேன். எல்லா ஊர்களுமே தனித்துவமானவை. தமிழ்ப் பெண்கள் கிச்சன், பூஜை அறையை நிர்வகிக்கும் நேர்த்திதான் எனக்கு முதலில் பிடிக்கும். இந்த இரண்டும்தான் ஒரு வீட்டின் தூய்மையை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடியவை.

 அமிதாப்புடன்... -  இந்திராவுடன்...
அமிதாப்புடன்... - இந்திராவுடன்...

தமிழ் மக்களைப்போலவே நானும் என் வீட்டை நிர்வகிக்கிறேன். சொன்னா ஆச்சர்யப்படுவீங்க! கடந்த 40 வருஷமா கொல்கத்தாவில் வசிக்கிறேன். இங்கே கிடைக்காத பொருள்களா... ஆனா, இத்தனை வருஷமா நான் பயன்படுத்தும் புடவைகள், பூஜைப் பொருள்களையெல்லாம் சென்னைக்கு நானே நேரடியா வந்துதான் வாங்குவேன்.

நான் சுத்த சைவம். தயிர் சாதம், ரசம் சாதம், உருளைக்கிழங்குக் கறி, பருப்புக் குழம்பு, ஊறுகாய்... இதைவிட உலகில் சிறந்த உணவு எதுவுமில்லை. எங்க போனாலும் இவைதாம் என் ரெகுலர் மெனு. இந்த உணவுப் பழக்கமும் பாட்டிகிட்ட கத்துக்கிட்டதுதான்.

என் வாழ்க்கை, வெற்றி, சந்தோஷம் எல்லாவற்றிலும் தமிழ் மக்களின் பங்கு நிறைந்திருக்கு. ஐ லவ் மெட்ராஸ். அங்கே பிறந்து வளரலையேனு எனக்கு ஆதங்கம் உண்டு. உங்களுக்கெல்லாம் சென்னையா இருந்தாலும், எனக்கு எப்போதும் ‘மெட்ராஸ்’தான். கொரோனா சூழலால் சென்னைக்கு என்னால வரமுடியலை. அதனால சின்ன வருத்தம். தமிழ்நாடு பத்தி பேசினாலே என் கண்கள் கலங்குது...” – நெகிழ்ச்சியாகக் கூறும் உஷாவின் குரல் தழுதழுக்கிறது.

பெரிய பொட்டு, அதில் ஓர் எழுத்து, பட்டுப் புடவை, தலை நிறைய மல்லிகைப் பூ... டிரெடிஷனலான உங்க உடையலங்காரமும், நீங்க பாடும் வெஸ்டர்ன் பாடல் காமினேஷனும் எப்படிச் சங்கமிச்சது?

(சிரிக்கிறார்) காட்டன், காஞ்சிபுரம் பட்டுப் புடவை தவிர என் பாட்டி வேறு எந்த உடையும் அணிய மாட்டாங்க. தவறாம தினமும் மல்லிகைப் பூ வெப்பாங்க. அவங்கதான் தமிழ்க் கலாசாரத்தின் அருமையை எனக்குச் சின்ன வயசுலயே புரியவெச்சாங்க. அதையே இன்றுவரை கடைப்பிடிக்கறேன்.

நைட் கிளப் சிங்கரா என் இசைப் பயணத்தைத் தொடங்கியதைப் பெருமையாகவே சொல்வேன். மேலைநாடுகள்லயும் நம்ம நாட்டிலும் இன்னிக்கு மாறிவிட்ட நைட் கிளப் கலாசாரம்போல அப்போதைய 1960-களில் நான் பாடலை. மேற்கத்திய பாடல்களுடன், நம்மூர் சினிமா பாடல்களையும் என்னோட வெஸ்டர்ன் ஸ்டைலில் பாடுவேன். பட்டுப் புடவை, மல்லிகைப் பூ உடையலங்காரம் தனி அடையாளத்தைக் கொடுத்ததுடன், ஆண்கள் சூழ்ந்த கிளப் சூழலில் எனக்குப் பாதுகாப்பு அரணாகவும் இருந்துச்சு. மேலும், எந்த ஊர்ல பாடுறேனோ, அந்த மொழியின் முக்கியமான ஓர் எழுத்து என் பொட்டில் இருக்கும். என் பொட்டை நானே டிசைன் பண்ணி, மும்பையில் ஆர்டர் பண்ணி வாங்குவேன். இதன் மூலம் மக்களை எளிதாகக் கவர முடியும்.

 நெல்சன் மண்டேலாவுடன்... -  அன்னை தெரசாவுடன்...
நெல்சன் மண்டேலாவுடன்... - அன்னை தெரசாவுடன்...

பல மணிநேர நிகழ்ச்சியா இருந்தாலும், இறுதிவரை ரசிகர்களை கைதட்டி ஆரவாரம் செய்ய வைக்கிறீங்க. ஷாரூக் கான் முதல் தனுஷ் வரை எல்லா உட்ச நட்சத்திரங்களையும் உங்களோடு மேடையில் டான்ஸ் ஆட வைக்கும் எனர்ஜி லெவல் இந்த வயதிலும் எப்படிச் சாத்தியமாகுது?

மியூசிக்... எனக்கு பிசினஸ் இல்லை; மொழிகளைக் கடந்து மக்களை இணைக்கும் கம்யூனிகேஷனுக்கான கருவி. அதைச் சரியா செய்றேன். என் குரலும் இசையும், ரசிகர்கள் தவிர பிரபலங்களுக்கும் ஆத்மார்த்தமா பிடிக்குது. எல்லோரும் சுலபமா என்னோடு கனெக்ட் ஆகிடுவாங்க. இசைக் கலைஞர்கள், நடிகர்கள் எல்லோருக்கும் மக்களை மகிழ்விப்பதுதான் ஒரே நோக்கம். அந்த எண்ணத்துலதான் எல்லாப் பிரபலங்களும் என்னோடு மேடையில் பாடுறாங்க, டான்ஸ் ஆடுறாங்க. மக்களை மகிழ்விக்க வயசு முக்கியமில்லை. மனசும் எனர்ஜியும்தான் முக்கியம். அது என்கிட்ட நிறையவே இருக்கு!

ஆரம்பக்கால புறக்கணிப்புகள் உங்களைப் பெரிசா பாதிச்சிருக்கா...

பலரின் வெற்றிக்குப் பின்னாலும் அவமானங்கள் நிச்சயம் இருக்கும். அதுபோல என் இளமைக்காலத்துலயும் நடந்திருக்கு. பி.சுசீலா அம்மா மாதிரி என்னோட குரல் மென்மையானது இல்லை. அடர்த்தியா கணீர்னு இருக்கும். ‘உன்னோட ஹெவி வாய்ஸுக்கு மியூசிக் செட் ஆகாது’ன்னு சின்ன வயசுல இசை வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டேன். இப்படிப் பல நிகழ்வுகள் நடந்திருக்கு. ஆனா, நான் வருத்தப்படலை. என் குரல் மற்றும் இசை ஆர்வத்தின்மேல எனக்கு முழு நம்பிக்கை இருந்துச்சு. உலகில் எல்லோருக்கும் ஓர் இடமும் அடையாளமும் உண்டுன்னாலும், அதை நாமதான் உருவாக்கிக்கணும். அதுபோல, என் குரலுக்கு வெஸ்டர்ன் மியூசிக் சரியா இருக்கும்னு முடிவெடுத்தேன். நைட் கிளப் பாடகியா இந்தியா முழுக்கப் பாடினேன். ‘லவ் இஸ் எ பியூட்டிஃபுல்’ (மேல்நாட்டு மருமகள்), ‘வேகம் வேகம்' (அஞ்சலி)னு நிறைய தமிழ்ப் பாடல்களுக்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தாங்க. வெற்றிவசமானது. அந்த ஓட்டம் 50 வருஷத்தைக் கடந்து இன்னும் நிக்கலை.

அன்னை தெரசாவுடன் பழகிய நினைவுகள் பற்றி...

மெல்லிய தேகத்தில், வானளாவிய அன்பும் கருணையும் கொண்ட அவரைப்போல ஒரு மனிதரை உலகில் எங்குமே நான் பார்த்ததில்லை. அவருடன் நீண்டகாலம் நெருங்கிய நட்பில் இருந்தேன். சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அவர்கிட்ட மனம்விட்டுப் பகிர்வேன். நள்ளிரவில் அவரைப் பார்க்கப் போனாலும் மகிழ்ச்சித் ததும்ப பேசுவார். அன்னையுடன் சேர்ந்து பல இடங்களுக்குப் பயணம் செஞ்சிருக்கேன். மனம்விட்டு என்னிடம் பேசுவார். ஆனா, அவர் எண்ணம், ஆசை எல்லாமே எளிய மக்கள், குழந்தைகள் நலனுக்கானதாகவே இருக்கும். ‘விருந்தினர்கள் வர்றாங்க. நாளைக்கு வந்து பாடணும்’னு அன்புக் கட்டளை விடுப்பார். நானும் மகிழ்ச்சியுடன் பாடுவேன். இந்தப் பிறவியில் கடவுள் எனக்குக் கொடுத்த மிகப்பெரிய வரம் அன்னை தெரசாவின் அன்பையும் நட்பையும் பெற்றதுதான்!

உஷா உதுப்
உஷா உதுப்

உங்க பர்சனல் உலகம் எப்படியானது...

சிம்பிள் பர்சன் நான். வீட்டில் இருக்கும்போது பக்கா இல்லத்தரசி. வீடு சுத்தமா இருக்கணும். தினமும் அதிகாலை எழுந்து, காலை விடியலுக்குள் பூஜை முடிச்சுடுவேன். நல்லா சமைப்பேன். என் உடல்நலம் தவிர, குடும்பத்தாரின் உடல்நலனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். எல்லோர் வாழ்க்கையிலும் சந்தோஷம் மட்டுமே சாத்தியமில்லை. என் குடும்பத்திலும் சில கஷ்டங்கள், கண்ணீர் பக்கங்கள் இருக்கு. மகிழ்ச்சிக்கு இணையா அவற்றையும் ஏத்துக்கிட்டு, கடந்து வர்றேன். அவையெல்லாம் வீட்டைத் தாண்டும்வரைதான். என் வெளியுலகம், மக்களை மகிழ்விக்கும் உற்சாகமான இசைப் பயணத்துக்கானது மட்டுமே!