லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

முதல் பெண்களில் முக்கியமானவர்... - ஞானம் கிருஷ்ணன்

 கணவர் எல்.எம்.கிருஷ்ணனுடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
கணவர் எல்.எம்.கிருஷ்ணனுடன்...

- பொள்ளாச்சி கீதா பரமசிவம்

இப்போது சி.ஏ மற்றும் காஸ்ட் அக்கவுன்ட் டன்சி உள்ளிட்ட படிப்புகளுக்கு மரியாதை கூடிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, பெண்கள் பலரும் தேடித் தேடி சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக இவை மாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், பெண்கள் படிக்கவே கூடாது என்கிற கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்த அந்தக் காலத்திலேயே காஸ்ட் அக்கவுன்ட்டன்சி படிப்பை முடித்து, இந்தியாவின் முதல் `காஸ்ட் அக்கவுன்ட்டன்ட்' என்ற பெயரெடுத்த பெண், நம் தமிழகத்தைச் சேர்ந்த ஞானம் கிருஷ்ணன் என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்!

ஞானம் கிருஷ்ணன்
ஞானம் கிருஷ்ணன்

இந்தியாவின் முதல் காஸ்ட் அக்கவுன்ட் டன்ட் என்ற பெருமைக்குரிய ஞானம் 1924-ம் வருடம் பிறந்தார். பெண்களை அதிகம் படிக்க அனுமதிக்காத அந்தக் காலத்திலேயே முற்போக்குச் சிந்தனையுள்ள வழக்கறிஞர் சிவராம கிருஷ்ண அய்யர் தன் மகள் ஞானத்தை சென்னை குயின் மேரிஸ் காலேஜில் இன்டர் மீடியட் வரை படிக்க வைத்தார். ஞானத்துக்கு 16 வயது ஆனபோது அவரைவிட பத்து வயது மூத்தவரான எல்.எம்.கிருஷ்ணனுடன் திருமணம் முடிந்தது. திருமணத்துக்குப் பிறகு, சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எஸ்ஸி சேர்ந்தார். இதற் கிடையில் கர்ப்பமாகிவிட்டதால் படிப்பைத் தொடர முடியவில்லை.

ஞானத்துக்கு ஆண் இரண்டும் பெண் இரண்டுமாக நான்கு குழந்தைகள். அதன் பிறகு, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ முடித்தார். அடுத்து சார்ட்டர்டு அக்கவுன்ட்ன்சி எனப்படும் சி.ஏ படிக்க முடிவு செய்தார். பிரபல ஆடிட்டர் நிறுவனமான ஃப்ரேஸர் அண்டு ராஸில் (Fraser&Ross) அப்ரென்ட்டீஸாகச் சேர்ந்தார். அந்த நேரம் காஸ்ட் அக்கவுன்ட்டன்சி எனப்படும் ஐசிடபிள்யூஏ படிப்பில் ஒரு பெண்கூட இல்லாதது உணர்ந்து அதையும் படிக்க முடிவு செய்தார்.

காஸ்ட் அக்கவுன்ட்டன்சி என்பது மிகவும் கடினமான படிப்பு. கோச்சிங் சென்டர்களும் இல்லாத நிலையில் கடினமான அந்தப் படிப்பை முடித்து இந்தியாவிலேயே சி.ஏ மற்றும் காஸ்ட் அக்கவுன்டன்ஸி என்ற இரு தொழில் படிப்புகளை முடித்த முதல் பெண்மணி எனப் பெயர் பெற்றார்.

சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட்டாக பிராக்டிஸைத் தொடங்கி பிறகு, காஸ்ட் அக்கவுன்டன்ட்டாக மாறினார் ஞானம். சட்டப்படி ஒருவர் சி.ஏ அல்லது காஸ்ட் அக்கவுன்டன்ட் என ஏதாவது ஒரு துறையில் தான் பணியாற்ற முடியும். எனவே ஞானம், கடினமான காஸ்ட் அக்கவுன்டன்சி துறையைத் தேர்ந்தெடுத்தார். இத்துறையில் புகழ் பெற்றவராக இந்தியாவின் பல பகுதிகளிலும் 40 ஆண்டுகள் ஆலோசகராக, தணிக்கையாளராகப் பணியாற்றி னார்.

கரியரோடு தன் நான்கு குழந்தை களையும் மிகச் சிறப்பாக படிக்க வைத்து ஆளாக்கினார். 1940-களில் பெண்களுக்கு அரிதான கார் டிரைவிங் பழகினார், கூடவே கடலில் படகு ஓட்டவும் பழகினார்.

 கணவர் எல்.எம்.கிருஷ்ணனுடன்...
கணவர் எல்.எம்.கிருஷ்ணனுடன்...

தொழில்துறையை பாதிக்கும் வரி தொடர்பான விஷயங்களைப் பற்றி இந்திய அரசாங்கத்தின் பரிந்துரையை அரசு வழங்க நிபுணர் குழு ஒன்றை இந்திய அரசு 1970-ல் அமைத்தது. அந்தக் குழுவில் ஞானமும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தன்னைப் போலவே நிறைய பெண்களை காஸ்ட் அக்கவுன்ட்டன்சி படிக்க பலருக்கும் பாதை அமைத்துக் கொடுத்து ஊக்கமாக இருந்த ஞானம், 1997-ம் வருடம் இறந்தார்.

காலத்துக்கும் கவனிக்க வைக்கிற முதல் பெண்களின் வரிசையில் ஞானத்தின் பெயரும் நிலைத்து நிற்கும்.

ஞானத்தின் வாரிசுகள்

* மகன்கள்... ராமச்சந்திரன் (அமெரிக்காவில் வசித்த இவர் இப்போது உயிருடன் இல்லை), வசந்த், குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.

* மகள் சுகன்யா சந்திரமௌலி, இவரும்

இரண்டு மகன்களுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.

* மகள் சித்ரா விஜி, இவர் டி.வி.எஸ் குழுமத்தின் எம்.டி விஜி சந்தானத்தின் மனைவி. சென்னையில் வசிக்கிறார்.

முதல் பெண்களில் முக்கியமானவர்... - ஞானம் கிருஷ்ணன்

முன்னுதாரண மனுஷி!

ஞானத்தின் திறமை குறித்துப் பேசும் அவரின் நீண்டகால நண்பரான ஆடிட்டர் ராமச்சந்திரன்,

“50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட் படிப்பை வசதி படைத்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அந்தப் படிப்புக்குப் பிறகு, இந்தியாவில் பிரபலமான காஸ்ட் அக்கவுன்ட்டன்ட் படிப்பில் நடுத்தர மக்களும்கூட அதிகளவில் சேர்ந்தனர். அப்போதெல்லாம் இந்த இரண்டு படிப்புகளுக்கும் பயிற்சி மையங்கள் இருக்கவில்லை. 1960-களில் காஸ்ட் அக்கவுன்ட்டன்ட் படிப்புக்காக சென்னையில் நான் தேர்வெழுதிய மையங்களில் ஒரு பெண்கூட இந்தத் துறையில் தேர்வெழுதியதைப் பார்த்ததில்லை. 1969-ல் நான் தேர்ச்சி பெற்றேன். அதற்கு முன்பாகவே சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார் ஞானம், காஸ்ட் அக்கவுன்ட்டன்சி படிப்பையும் முடித்தார். மேலும், காஸ்ட் அக்கவுன்ட்டன்சி படிப்பில் இந்தியாவிலேயே முதலாவதாகத் தேர்ச்சி பெற்ற பெண் என்றும் அவரைப் பலரும் அப்போது பெருமிதத்துடன் பேசினர். புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களில் பணியாற்றியதுடன், அந்தக் காலகட்டத்தில் சென்னையில் பிரபலமான காஸ்ட் அக்கவுன்ட்டன்ட் கணக்காளராகவும் திகழ்ந்தார். தேர்ந்த பணித்திறன் கொண்டவர், அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். பழகுவதற்கும் இனிமையானவர். காஸ்ட் அக்கவுன்ட்டன்ட் துறையில் பலருக்கும் முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஞானத்தைப் பின்தொடர்ந்து பலரும் இந்தத் துறைக்கு வந்தனர்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

காஸ்ட் அக்கவுன்ட்டன்ட் என்பவர் யார்?

ஒரு நிறுவனத்தின் உற்பத்திச் செலவினங்களைக் கணக்கிடும் பணியே காஸ்ட் அக்கவுன்ட்டன்சி எனப்படும். அந்த நிறுவனத்தில் ஒவ்வொரு துறை சார்ந்த பணி களுக்குமான செலவினங்களைத் துல்லியமாகக் கணக்கிடுவதுடன், அந்தப் பணிகளுக்கான செலவினங் களைக் குறைப்பதற்கான ஆலோ சனைகளையும் வழங்குவதே ‘காஸ்ட் அக்கவுன்ட்டன்சி’ படித்த கணக் காளர்களின் வேலை.