லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

இந்தியாவின் முதல் இஸ்லாமியப் பெண் மருத்துவர் - டாக்டர் அபுஷா பீபி மரைக்காயர்

டாக்டர் அபுஷா பீபி மரைக்காயர்
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் அபுஷா பீபி மரைக்காயர்

ஹம்சத்வனி

நாட்டின் முதல் பெண் மருத்துவ வாரிய இயக்குநர்; மதராஸ் மாகாண மருத்துவப் பணிகளின் முதல் பெண் இயக்குநர்; தமிழக உடல்நல மற்றும் குடும்பநலத்துறையின் முதல் இஸ்லாமியப் பெண் இயக்குநர்; சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்ற முதல் இஸ்லாமியப் பெண் மருத்துவர்

“எனக்கு அவரைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், அவரை ஒருமுறை நேரில் கண்டிருக்கிறேன். 1957 டிசம்பர் 23 அன்று என் நண்பன் ஒருவனைக் காண சென்னை அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த இடம் சட்டென அமைதியானது. நாம் அன்றாடம் காணும் சராசரிப் பெண் ஒருவர் வராந்தாவில் கடந்து செல்ல, சுற்றி இருந்தவர்களின் பார்வைகளில் தானாகவே மரியாதை ஒட்டிக்கொண்டது. அவரைப் பற்றி தங்களுக்குள் பெரும் அன்புடனும் மதிப்புடனும் பேசிக்கொண்டார்கள். அபுஷா பீபியின் மேன்மையை அப்போது தெரிந்துகொண்டேன்” என்று சொல்கிறார் முன்னாள் ரயில்வே அதிகாரியான கனகசபாபதி.

அபுஷா பீபி மரைக்காயரின் அழகிய இளம் வயது புகைப்படம், 1934-ம் ஆண்டின் இந்தியன் லேடீஸ் மேகஸின் இதழில் பதிவாகியுள்ளது. கூடவே சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் இஸ்லாமியப் பெண் எம்.பி&சி.எம் (மருத்துவப் பட்டத்தின் அன்றைய பெயர்) என்கிற சிறு குறிப்பும் எழுதியிருக்கிறார் இதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான கமலா சத்தியனாதன். 1912 ஜனவரி 23 அன்று கேரள மாநிலம் பீர்மேட்டில் ஹெச்.ஓ.எல்.மரைக்காயர் - மரியம் பீபி தம்பதியின் மூத்த மகளாக அபுஷா பீபி பிறந்தார்.

ஆறு உடன்பிறப்புகளுடன் குதூகலமாகக் கழிந்தது அவரது இளமைக்காலம். கேரளாவின் பிரசித்தி பெற்ற மரைக்காயர் மோட்டார்ஸ், மரைக்காயர் டிராவல்ஸ், மரைக்காயர் டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகிய பெரு நிறுவனக் குழுமத்தின் நிறுவனர் - தலைவரான மரைக்காயர், தன் குழந்தைகள் அனைவருக்கும் சிறந்த கல்வியைத் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். இலங்கையின் கண்டி பகுதியைச் சேர்ந்த டி.சி.ஹெச்.மரைக்காயரின் மகனான ஹெச்.ஓ.எல்.மரைக்காயர், கடும் உழைப்பாளி. தமிழகத்தின் பெரியகுளத்தில் படித்தவர். தாயை இழந்தபின் கோட்டயத்தில் மாற்றாந்தாயிடம் வளர நேர்ந்தது. கல்வியின் அருமையை அப்போது அவர் அறிந்துகொண்டார்.

படிப்பை முடித்தவர், மூணார் ரயில்வேயில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டார். பெரியகுளத்திலிருந்து தன் மனைவி மற்றும் குழந்தைகளை திருவனந்தபுரத்தில் கல்விக்காகக் குடியமர்த்தினார். சரியான கல்வியோ, சாலை வசதிகளோ இல்லாத மூணாரில் தன் குழந்தைகளை வைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. 1924-ம் ஆண்டு, மூணாரை அடித்துச் சென்ற பெருவெள்ளத்துக்குப் பின் அதை மறுகட்டமைப்பு செய்யும் பெரும்பணியை மரைக்காயர் எடுத்துச் செய்தார். அன்றைய திருவிதாங்கூர் திவான் சர் சி.பி.ராமசாமியின் பெருமதிப்பைப் பெற்றார். 1933-ம் ஆண்டு, ஃபோர்டு கார்களின் விற்பனை உரிமத்தையும் மரைக்காயர் பெற்றிருந்தார். வெறும் கையுடன் பெரியகுளத்திலிருந்து பீர்மேடு சென்ற மரைக்காயர், ஒரு பெரும் வணிக சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியானார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் மரைக்காயர் இருந்தார்.

திருவனந்தபுரம் மகாராஜா பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்த அபுஷாவை, இன்டர்மீடியேட் பயில, சென்னைக்கு அனுப்பினார் மரைக்காயர். மதராஸ் ராணி மேரி கல்லூரியில் இன்டர்மீடியேட் முடித்த அபுஷா, அறிவியலில் டிஸ்டிங்க்‌ஷன் பெற்றார். கல்வியில் சிறந்திருந்தவர் விளையாட்டையும் விட்டுவைக்கவில்லை. டென்னீஸ் விளையாட்டில் பரிசு பெற்றார். 1929-ம் ஆண்டு, தென்னிந்திய கல்விக்கழகம் அவரைப் பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கியது. மருத்துவம் பயில விரும்பிய அபுஷா, மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

`அக்காவுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற பெரும் ஆசை இருந்தது' என்று எழுதியிருக்கிறார் அவரது இளைய சகோதரியான ஆயிஷா ராசி முகமது. 1930-ம் ஆண்டு, மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் அபுஷா. மருத்துவக் கல்லூரி முஸ்லிம் அசோசியேஷனின் செயலாளராகவும் அவர் இயங்கிவந்தார்.

மருத்துவம் படிக்கும் அபுஷாவின் முடிவால், குடும்பம் நிலைகுலைய நேர்ந்தது என்று ஆயிஷா குறிப்பிடுகிறார். `இஸ்லாமியப் பெண்கள் படிப்பது அம்மதத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அப்போதைய பெரும்பான்மை இஸ்லாமியர்கள் நினைத்தனர். அதனால் முஸ்லிம் சமுதாயத்தில் அக்கா மருத்துவம் பயில பெரும் எதிர்ப்பு கிளம்பியது. கடும் உடலியல் மற்றும் உளவியல் மிரட்டலை இதனால் அப்பா சந்திக்க நேர்ந்தது. ஆனால், அக்கா எம்.டி, டி.ஜி.ஓ என்று படித்து முடித்தது எங்கள் பெற்றோருக்கு அளவில்லாத ஆனந்தமும் பெருமையும் அளித்தது' என்று ஆயிஷா எழுதியிருக்கிறார்.

தீவிர காந்தியவாதியான தந்தையின் வழிகாட்டலில் அபுஷா மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே சுதேசிப் போராட்டத்தில் கலந்துகொண்டார். சென்னையில் நடைபெற்ற முக்கிய காங்கிரஸ் கட்சியின் விடுதலைப் போராட்டக் கூட்டங்களில் மரைக்காயரும் தன் மகளுடன் ஆஜராகத் தவறியதேயில்லை. சூரி, ஹபீப், ஷம்சு என்று மரைக்காயரின் மக்கள் வரிசையாக சென்னையில் படிக்கத் தொடங்கினார்கள்.

1937-ம் ஆண்டு, பொது மருத்துவப்படிப்பை முடித்த அபுஷா 1938-ம் ஆண்டு, மகப்பேறு மருத்துவ மேற்படிப்பை முடித்தார். 1939-ம் ஆண்டு, மகளிர் மருத்துவப் பணிகளின் பயிற்சி மருத்துவராகச் சேர்ந்தவர், நாட்டின் பல்வேறு ‘டஃபரின் மருத்துவமனைகள்’ என்று வழங்கப்பட்ட மகளிர் நல மருத்துவ மனைகளில் பணியாற்றினார். ஜபல்பூர் எல்ஜின் மருத்துவமனை, டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவமனை, லாகூர் லேடி அட்சின்சன் மருத்துவமனை என இந்தியா முழுக்க இவரது காலடித் தடங்கள் பதியாத மகளிர் மருத்துவமனைகளே இல்லை எனலாம்.

1942-1943-ம் ஆண்டு விடுப்பு எடுத்தவர், மதராஸ் மருத்துவக் கல்லூரியில் முது கல்வி பட்டப்படிப்பில் சேர்ந்தார். அதில் முதலிடம் பெற்றவர், சென்னை பல்கலைக்கழகத்தின் லாசரஸ் தங்கப்பதக்கம் பெற்றார். படிப்பு முடித்ததும் 1943-ம் ஆண்டு, உயர்நிலை மருத்துவ அலுவலராக கொல்கத்தா டஃபரின் மருத்துவமனையில் பணியாற்ற அனுப்பப்பட்டார். அங்கிருந்து விசாகப்பட்டினம் விக்டோரியா மகளிர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

1948-ம் ஆண்டு, மகளிர் மருத்துவப் பணிகள் துறை நீக்கப்பட்ட பிறகு, அடுத்த ஆண்டே மதராஸ் மருத்துவப்பணிகளின் சிவில் சர்ஜன் பதவியில் அமர்த்தப்பட்டார். கூடுதலாக விசாகப்பட்டினம் ஆந்திரா மருத்துவக் கல்லூரி யில் விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்தார்.

மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநில எல்லை மறுவரைவு செய்யப்பட்ட பின், 1954-ம் ஆண்டு, திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அங்கு சிறப்பாகப் பணியாற்றி வந்தார். 1994-ம் ஆண்டு, சென்னை பொது மருத்துவமனை வெளியிட்ட 150-வது ஆண்டு சிறப்பு மலரில் தன் பணி குறித்து எழுதியிருக்கிறார் அபுஷா.

`60 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட, ரெசிடென்ட் மருத்துவர்களாகப் பெரும்பாலும் ஆண்களே பணியாற்றி வந்தார்கள். போதிய படிப்பறிவின்மை, சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் ரத்த சோகை, காசநோய், எலும்புருக்கி, வயிற்றுப்போக்கு என்று நோய்கள் ஏற்பட்டு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இழக்க நேர்ந்தது.

குழந்தைப் பேற்றில் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை போதிய கல்வியறிவற்ற மருத்துவச்சிகளால் அதிகமாகவே இருந்தது. ‘தாய்கள்’ மற்றும் மருத்துவச்சிகள் அவர்களது ‘மருந்து'களை இந்த அப்பாவிப் பெண்களைக் கொண்டு பரீட்சித்துக்கொண்டிருந்தார்கள். வைத்தியர்களும் ஹக்கீம்களும் இந்தப் பெண்களின் கணவர்கள் மூலம் தேவையற்ற ஆதிக்கம் செலுத்திவந்தார்கள். 1872-ம் ஆண்டுக்குப் பின்தான் இதில் மாற்றம் வரக் காரணம், கிறிஸ்துவ மிஷன்களைச் சேர்ந்த பெண் மருத்துவர்கள் கடல்கடந்து வந்து செய்த மருத்துவ சேவைதான்.

இவர்களில் 1875-ம் ஆண்டு, மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்த முதல் நான்கு பெண் மருத்துவர்களில் ஒருவரான மேரி ஸ்கார்லீபின் பணி வெகு முக்கியமானது. அவரே பின்னாளில் விக்டோரியா சாதிப் பெண்கள் மற்றும் கோஷா பெண்கள் மருத்துவமனையைத் தோற்றுவித்தவர். இந்த கஸ்தூரிபா மருத்துவமனையில்தான் பெரும்பாலான பெண் மருத்துவர்கள், பிரான்ஃபுட் என்ற மருத்துவரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டார்கள். மகப்பேறு வார்டுகள் முழுக்க 12-வது அல்லது 15-வது குழந்தையைப் பெற்றெடுத்துக் கொண்டிருந்த பெண்கள் நிறைந்திருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கர்ப்பப்பைக் கட்டிகள் தொடங்கி அது சார்ந்த நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகியிருந்தார்கள். அதற்குக் காரணம் ரகசியக் கருக்கலைப்புகள். இவர்களில் பலர் இளம்பெண்கள் மற்றும் விதவைகள்' என்று எழுதியிருக்கிறார் அபுஷா.

அந்தச் சூழலில் பெண்களுக்கான மருத்துவ உதவியை ஆண் மருத்துவர்களே செய்துகொண்டிருந்ததும், இந்த அரைகுறை மருத்துவச்சிகள் பெருக்கத்துக்கும் மகப்பேறு மரணங்களுக்கும் காரணம் என்று தெளிவாக உணர்ந்து அபுஷா பணியாற்றி வந்திருக்கிறார்.

1960-ம் ஆண்டு, அரசுப் பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். சென்னை மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1961-ம் ஆண்டு, மருத்துவப் பணித்துறையின் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். 1968-ம் ஆண்டு, தமிழக அரசு இந்தப் பதவியை உடல்நல மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் என்று மாற்றி அமைத்தது. அதன் மூலம் இந்தப் பதவியில் அமர்ந்த முதல் பெண் என்ற பெருமையும் பெற்றார்.

அபுஷாவுடன் பணியாற்றியவர்கள் இன்றும் அவரை மதிப்புடனும் அன்புடனும் நினைவுகூர்கிறார்கள். எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் பேரார்வம் கொண்டிருந்தார் அபுஷா. துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முறைகளை உடனுக்குடன் கற்றுத்தேர்ந்து இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் முனைப்பு கொண்டிருந்தார்.

1958-ம் ஆண்டு, இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச மருத்துவ மகளிரின் கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டார். கிடைத்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள தேசிய மருத்துவப் பணிகளின் செயல்பாட்டையும் ஆராய்ந்தார். 1964-ம் ஆண்டு ‘ஃபோர்டு ஃபவுண்டேஷன்’ நிதியுதவியுடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்குப் பயணமானவர், அங்குள்ள மகளிர்நல மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளின் சமீபத்திய முன்னேற்றங்களை ஆராய்ந்து திரும்பினார்.

அதுபோலவே ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் பயிற்சிக்கென பயணமானார். 1965-ம் ஆண்டு, மாநில சுகாதாரத்துறை அமைச்சருடன் யுகோஸ்லாவியா சுற்றுப்பயணம் செய்தவர், இந்தியா சார்பில் 18-வது உலக சுகாதாரக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். இந்த வெளி நாட்டுப் பயணங்கள் அவரது மேற்பார்வை மற்றும் திட்டமிடும் திறமையைக் கூராக்கிச் சீர்படுத்தின. தமிழகத்தின் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையின் பொற்காலம் என அபுஷாவின் காலத்தைச் சொல்பவர்கள் உண்டு.

பல துறை சார்ந்த அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும் அபுஷா எழுதியுள்ளார். மதுரை எர்ஸ்கைன் மருத்துவமனையில் குழந்தைகள் அறுவைசிகிச்சைப் பிரிவு அபுஷாவின் திட்டமிடலால் ஏற்படுத்தப்பட்டது. ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மகளிர் மற்றும் குழந்தைகள் காப்பகங்களுடன் தொடர்ந்து இயங்கிவந்தார் அபுஷா. பணி ஓய்வுக்குப்பின் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டியின் வாழ்நாள் தலைவராகவும் இயங்கினார். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு முயற்சிகளை அவரால் எடுக்க முடிந்தது.

டாக்டர் அபுஷா பீபி மரைக்காயர்
டாக்டர் அபுஷா பீபி மரைக்காயர்

மதுவிலக்கு கவுன்சிலிலும் உறுப்பின ராகப் பணியாற்றினார். மத்திய வக்ஃபு போர்டின் உறுப்பினராகவும் 1992-ம் ஆண்டுவரை பணியாற்றினார். இந்திய மருத்துவ மகளிர் சங்கத்தின் உறுப்பினராகவும் செயலாற்றினார். தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் தலைவராகவும் சில காலம் இயங்கினார்.

1980-ம் ஆண்டு, சௌந்தரம் ராமச்சந்திரன் மற்றும் ராமச்சந்திரன் தம்பதி ஏற்படுத்திய காந்திகிராமம் கிராமப்புற உடல்நல மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவன மற்றும் நிர்வாகக் குழுவிலும் அபுஷா பணியாற்றினார். குன்னூரின் பாஸ்டர் இன்ஸ்டிட்யூட், பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேஷனின் சென்னைக் கிளை, மதராஸ் மாநில ஆய்வுக் கமிட்டி என்று அபுஷா சிறப்பு உறுப்பினராகப் பணியாற்றாத மருத்துவ அமைப்புகளே இல்லை எனலாம். இந்தியா முழுக்க சுற்றிச் சுழன்று பணியாற்றினாலும், தன் மாநிலத்தின் பெண்கள்மீது அதிக அக்கறை கொண்டிருந்தார்.

`ஒரு காலத்தில் அறுவைசிகிச்சை மூலம் மகப்பேறு என்றால் அது எந்நேரம் ஆனாலும் சரி, மணியடித்து பயிற்சி மருத்துவர்களை அழைத்து உடன் இருக்கச் செய்து எங்கள் சீனியர் மருத்துவர்கள் செய்வதுண்டு. ஆனால், இனிவரும் காலங்களில் ‘நார்மல் டெலிவரி'க்குத் தான் மணியடித்து பயிற்சி மருத்துவர்களுக்குக் காட்ட வேண்டும்போல. அந்த அளவுக்கு அவை அருகிவிட்டன' என்று 1994-ம் ஆண்டு, மருத்துவக் கல்லூரி சிறப்பு மலரில் குறிப்பிட்டுள்ளார் அபுஷா.

சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையிலுள்ள ‘சிராக்’ என்ற பங்களாவில் வசித்துவந்தார் அபுஷா. அவரை சிறுவயதில் கண்டு பேசி மகிழ்ந்த அவர் தம்பியின் பேரன் டாக்டர் ஹரூன் மரைக்காயர், “அவரது சென்னை வீட்டில் சில காலம் தங்கியிருக்கிறேன். அவர் மிகவும் `ஸ்ட்ரிக்ட்' என்றே பலரும் சொல்வதுண்டு. வீட்டில் கண்டிப்புடன், சட்டத்திட்டங்களுடன்தான் இருப்பார். அதேநேரம் உறவினரான எங்கள் அனைவர் மீதும் அதீத பாசம் கொண்டவராக இருந்தார்.

பெரும்பாவூரிலுள்ள எங்கள் வீட்டுக்கு அவ்வப்போது வந்துசெல்வார். நான் நன்றாகப் படிப்பவன் என்று தெரிந்து கொண்டவர், எனக்கு ஒருமுறை பேனா பரிசளித்து ஊக்கமளித்தார். யாரோடும் நெருக்கமாகப் பழகும் வழக்கம் அவருக்கு இல்லை. ஆனால், எல்லோரிடமும் உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார். அவரைப் பார்ப்பவர்களுக்கு தானாகவே அவர் மேல் மதிப்பு வந்துவிடும். மென்மை யானவர்; அன்பானவர்; அதே நேரம் அவரது நடத்தையால் பிறரது அன்பையும் மரியாதையையும் சம்பாதித்து வைத்திருந்தவர்.

மிக இளம் வயதில் திருமணமாகியிருந்த என் தாயார் சென்னைக்குச் சென்றால், அவரை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்வார். குடும்பத்தின் இளம் வயது பெண் உறுப்பினர்கள்மீது அளவு கடந்த அக்கறை கொண்டிருந்தார். என்ன காரணத்தாலோ அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. அவருடன் பீபி ஆன்ட்டி என்ற உறவுக்காரப் பெண்மணி மட்டும் இறுதிவரை உடனிருந்தார்” என்று சொல்கிறார் டாக்டர் ஹரூன்.

“1937-ம் ஆண்டு, அப்பா முதன் முதலில் எங்களை அழைத்துக்கொண்டு அவர் பிறந்து வளர்ந்த இலங்கைக்குச் சென்றார். இலங்கையின் இளம் பெண்கள் முஸ்லிம் அசோசியேஷனின் தலைவியான திருமதி எம்.ஏ.சி.முகமதின் அழைப்பின் பேரில் நாங்கள் கண்டிக்குப் பயணமானோம். இந்தியாவில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் இஸ்லாமியப் பெண்ணான அக்கா அபுஷாவைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார்.

மண்ணின் மைந்தரான ஹெச்.ஓ.எல்.மரைக்காயரின் மகளான அபுஷாவின் சிறப்பை அங்குள்ள இஸ்லாமியர் தெரிந்துகொண்டு, எங்களுக்குச் சிறப்பான வரவேற்பைத் தந்தார்கள். 45 ஆண்டுகளுக்குப் பின் தாய்நாட்டுக் குச் சென்ற அப்பா, மனமுருகிப் போனார்” என்று பதிவு செய்கிறார் அபுஷாவின் தங்கை ஆயிஷா.

1996 ஆகஸ்ட் 8 அன்று தன் 84-வது வயதில் டாக்டர் அபுஷா பீபி மரைக்காயர் காலமானார். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த இந்தத் தமிழ்ப் பெண்மணி, கிட்டத்தட்ட 60 ஆண்டுக் காலம் தன் முழு உழைப்பையும் சிந்தையையும் தமிழகத்துக்காகச் செலவிட்டுள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் நாம் போற்றித் தொழும் நம் மாநில மருத்துவக் கட்டமைப்பைக் கட்டியெழுப்பிய தலைமைச் சிற்பிகளில் ஒருவர் அபுஷா பீபி மரைக்காயர். இன்று இந்தப் பெருமாட்டியை நினைவு கொள்வாருமில்லை; அவர் குறித்த தகவல் அறிந்தாரும் அதிகம் இல்லை.

காலமெனும் சிக்குக்கோலத்தில் சிக்கிவிட்ட புள்ளிகள் இந்த முதல் பெண்கள்.