Published:Updated:

பெண்களே ஆமை வேகத்தில் நகருங்கள்! - சுதா மூர்த்தி

பெண்களே ஆமை வேகத்தில் நகருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பெண்களே ஆமை வேகத்தில் நகருங்கள்

ஒரு பெண் என்பவள் மகள், பேத்தி, சகோதரி, மனைவி, அம்மா, நாத்தனார், மாமியார், பாட்டி எனப் பல்வேறு பாத்திரங்களாக மாற வேண்டும்.

பெண்களே ஆமை வேகத்தில் நகருங்கள்! - சுதா மூர்த்தி

ஒரு பெண் என்பவள் மகள், பேத்தி, சகோதரி, மனைவி, அம்மா, நாத்தனார், மாமியார், பாட்டி எனப் பல்வேறு பாத்திரங்களாக மாற வேண்டும்.

Published:Updated:
பெண்களே ஆமை வேகத்தில் நகருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பெண்களே ஆமை வேகத்தில் நகருங்கள்

“ஒவ்வொரு மலரும் எப்படி அழகானதோ அதே போல ஒவ்வொரு குடும்பமும் அழகானது. அதன் அழகைத் தேடிக் கண்டுபிடியுங்கள்” என்கிறார் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி.

 சுதா மூர்த்தி
சுதா மூர்த்தி

அன்னையர் தினத்தை முன்னிட்டு `அவள் விகடன்' மற்றும் `பெல்லா சானிட்டரி நாப்கின்' இணைந்து சிறப்பு வெபினார் ஒன்றை ஏற்பாடு செய்தது. நிகழ்ச்சியை இணைந்து வழங்கியது `பிரித்வி' உள்ளாடைகள் நிறுவனம். அன்னையர் தின சிறப்புரையை வழங்கியவர் சுதா மூர்த்தி. இந்தியாவில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸை ஆரம்பகாலம் தொட்டு வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர்.

அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு சுதா மூர்த்தி அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இதோ...

வேலையையும் குடும்பத்தையும் எப்படி பேலன்ஸ் செய்கிறீர்கள்?

ஒரு பெண் என்பவள் மகள், பேத்தி, சகோதரி, மனைவி, அம்மா, நாத்தனார், மாமியார், பாட்டி எனப் பல்வேறு பாத்திரங்களாக மாற வேண்டும். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான அட்ஜஸ்ட்மென்ட் தேவைப்படும். அனைத்துப் பாத்திரங்களும் மனித உறவுகளைப் பிணைக்க வேண்டும் என்ற நுட்பமான வரையறையைக் கொண்டவை. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பாத்திரமாக மாறிச் செயல்படுவதால் வாழ்க்கை ஓட்டத்தின் ஒரு கட்டத்தில் பெண் மிகச்சிறந்த நிர்வாகியாக மாறுகிறார்.

என்னுடைய வாழ்க்கையிலும் சூழலுக்கேற்ப சில அட்ஜஸ்ட்மென்டுகளைச் செய்துகொண்டேன். என் குழந்தைகள் சிறியவர்களாக இருந்தபோது ஒருநாளைக்கு மூன்று மணி நேரம் செலவிடும் வேலையைச் செய்தேன். அந்தச் சமயத்தில் பணத் தேவையும் எங்களுக்கு அதிகமிருந்தது. குறைவான நேரம் பணியாற்றியதால் கணிசமான தொகையையும் இழக்க வேண்டி வந்தது. மாதம் ரூ.3,000 தான் என்னுடைய சம்பளம். ஆனாலும் குழந்தை வளர்ப்புக்குத்தான் முன்னுரிமை கொடுத்தேன்.

குழந்தைகள் சற்று வளர்ந்தபோது ஐந்து மணி நேரம் வேலை பார்த்தேன். அவர்கள் வளர்ந்து, வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றபோது வழக்கமான நேரத்தைத் தாண்டி ஓவர்டைமிலும் வேலை பார்த்தேன். ‘நான் அதிகம் படித்திருக்கிறேன். என்னுடன் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அதிகம் சம்பாதிக்கின்றனரே’ என்று நினைக்கக் கூடாது. எந்தச் சமயத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து, நேரத்தை அதற்கேற்றாற்போல் அட்ஜஸ்ட் செய்தால்தான் குடும்பம், வேலை இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியும். எல்லா நேரங்களிலும் வெற்றிபெற நினைத்தால் அது முடியாது. சில நேரங்களில் சமரசம் செய்ய வேண்டும், சில நேரம் விட்டுக்கொடுக்க வேண்டும், சில நேரம் போராட வேண்டும்.

குழந்தைகளை தனித்தவர்களாக (Independent) வளர்க்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளை உங்களுடன் சேர்ந்து வீட்டு வேலைகளைச் செய்யப் பழக்குங்கள். நிறைய பெற்றோர் குழந்தைகளை வீட்டு வேலைகளைச் செய்ய வைக்காமல் செல்லமாக வளர்க்க விரும்புகின்றனர். அது தவறு. சமையலறையில் சிறிய உதவிகள், துணி துவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது என உங்களுக்கு உதவி செய்யச் சொல்லுங்கள். சிறிய அளவில் சமையல் கற்றுக்கொடுங்கள். அவர்கள் வளர்ந்து வரும்போது இதுபோன்ற அனுபவங்கள் அவர்களைத் தனித்து இயங்கச் செய்யும்.

பெண்களே ஆமை வேகத்தில் நகருங்கள்! - சுதா மூர்த்தி

பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு எப்படிப் புரிய வைப்பது?

என் மகன் பள்ளியில் படித்தபோது ஒருமுறை வந்து, ‘அம்மா என்னுடைய நண்பன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் அவனுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறான். என்னுடைய பிறந்தநாளை அதுபோல் கொண்டாடலாமா?’ என்றான். அவனிடம் அதற்கு எவ்வளவு செலவாகும் என்றேன். ‘ரூ.8,000 வரை செலவாகும்’ என்றான். பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு நீ ராமனோ, புத்தரோ, இயேசுவோ அல்ல. எல்லாரைப் போலவும் சாதாரண மனிதன்தான். இந்தச் செலவுக்கான பணத்தை உன் பள்ளி வாட்ச்மேனின் குழந்தைகளுக்கோ, வீட்டு வேலை செய்யும் அம்மாவின் குழந்தைக்கோ கொடுக்கலாம். உனக்கு அந்தப் பணம் ஒருவேளைக்கான கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால், அந்தக் குழந்தைகளுக்கு அது ஓராண்டுக்கான பள்ளிக்கட்டணம். பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற சந்தோஷம் அதிகபட்சம் ஓரிரு நாள்கள் நீடிக்கும். நீ கொடுக்கும் பணத்தால் ஒரு குழந்தை படித்தது என்கிற மனநிறைவும் சந்தோஷமும் உன் ஆயுளுக்கும் கூட வரும் என்றேன். பணம் தொடர்பான விஷயங்களைக் குழந்தைகளிடம் அமர்ந்து வெளிப்படையாகப் பேசுங்கள். வீட்டில் என்ன கஷ்டம், கடன் இருக்கிறது என்பதைப் புரிய வையுங்கள்.

மனைவியின் முன்னேற்றத்தைத் தடுக்க நினைக்கும் கணவன்... இதுபோன்ற சூழலில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கணவரை விட்டுப் பிரிய வேண்டுமா?

சிறிய வயதில் அப்பா கட்டுப்பாடுகளை விதிப்பார். திருமணமாகிவிட்டால் கணவர் கட்டுப்பாடுகளை விதிப்பார். வயதாகும்போது மகன் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பெரும்பாலும் பெண்கள் தன் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத வகையில் ஏதாவது ஒரு வகையில் கட்டுப்பாடுகள் இருந்துகொண்டேதான் இருக்கும். என்னைப் பொறுத்தவரையில், ‘வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் அவரைப் புரிந்துகொள்ளும்

ஓர் ஆண் இருப்பார்.’ அது தந்தையாகவோ, கணவராகவோ, மகனாகவோ இருக்கலாம்.

ஆணோ, பெண்ணோ அவர்களின் வெற்றிக்கு குடும்பத்தின் ஆதரவு வேண்டும். கணவர் வேறு சூழலில் வளர்ந்திருப்பார். மனைவி வேறு சூழலில் வளர்ந்திருப்பார். அதனால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதற்கு ஒரே தீர்வு இருவரும் உட்கார்ந்து பேசுவதுதான். சண்டையிட்டுக்கொள்வது தேவையற்ற விவாதங்களை எழுப்பி உறவைச் சிதைத்துவிடும். இதுபோன்ற பிரச்னை களுக்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்காது. பொறுமையாகக் கணவரிடம் அனைத்தையும் எடுத்துச் சொல்லி மெள்ள மெள்ள விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். ஆமையைப் போல ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அடுத்த குடும்பத்தையோ நபரையோ ஒப்பிட்டு, நம் குடும்பம் இப்படி இல்லையே என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரு மலரும் எப்படி அழகானதோ அதே போல ஒவ்வொரு குடும்பமும் அழகானது. அதன் அழகைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.

சுதா மூர்த்தியின் சிறப்புரையை முழுமையாக வீடியோவில் பார்க்க...