22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பாக்கியம் செய்ய வேண்டும்!

முருகேஷ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
முருகேஷ்வரி

பிதாமகள்

``செத்துட்டா தெய்வமாகிட்டாங்கன்னு சொல்வாங்க. அந்தத் தெய்வத்தைத் தொட்டுத் தூக்கி காரியம் பண்றதை பாக்கியமா நினைக்கிறேன்'' என்கிறார் தனியொரு பெண்ணாக, மயானத்தில் பிணம் எரிக்கும் பணியைச் செய்துவரும் முருகேஷ்வரி.

தேனி மாவட்டம், போடி நகராட்சி எரிவாயு தகன மேடையில் பிணம் எரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் முருகேஷ்வரி.

“சொந்த ஊர் மதுரை மாவட்டம், ஆனையூர். என் சின்ன வயசிலேயே அப்பா இறந்துட்டார். அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. போடியில கட்டிக்கொடுத்தாங்க. இங்கே, போடி சுடுகாட்டுக்குப் பக்கத்துல ஆத்தங்கரைல குடிசை போட்டு வாழ்ந்து கிட்டிருந்தோம். சலவை தொழில்தான் பண்ணி கிட்டிருந்தோம். வாஷிங் மெஷின் வந்த பிறகு வருமானம் குறைஞ்சிடுச்சு.

முருகேஷ்வரி
முருகேஷ்வரி

இரண்டு மகன்களை வெச்சுக்கிட்டு என்ன செய்யறதுன்னு, வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற சுடுகாட்டுக்கு என் கணவர் வேலைக்குப் போக ஆரம்பிச்சாரு. குழிவெட்ட, புதைக்கன்னு வேலை பார்த்து எங்களுக்கு சோறு போட்டாரு.

2012-ல் இங்கே எரிவாயு தகனமேடை அமைச் சாங்க. அப்போ என் கணவருக்கு வேலை கிடைச்சது. 6,000 ரூபாய் சம்பளம். பசங்க படிப்புக்குத்தானே அது சரியா இருக்கும்?

குடும்பத்தை நடத்த பணம் இல்லாததால நானும் அவரோட சுடுகாட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அவர் முதல்ல வேண்டாம்னுதான் சொன்னார். அப்புறம் ஒப்புக்கிட்டார். எல்லா வேலையும் சீக்கிரமா கத்துகிட்டேன். அந்த நேரத்துல அவருக்குப் பார்வை குறைஞ்சிடுச்சு. ஆபீஸ்ல வேற ஆள் போடலாம்னு பேசினப்ப, `நானே பார்த்துக்குறேங்க’னு போய் நின்னேன்” என்கிறவரிடம், மயான வேலை அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.

“ஆரம்பத்துல ராத்திரில தூக்கமே வராது. சாப்பாடு இறங்காது. இப்போ பழகிடுச்சு. ஒருபக்கம் பிணம் எரிஞ்சுக்கிட்டிருக்கும், இன்னொரு பக்கம் நாங்க சாப்பிட அடுப்பு எரிஞ்சுக்கிட்டிருக்கும். விதவிதமான உடல்களை தகனம் பண்ண கொண்டு வருவாங்க. ஆனா, குழந்தைகள், இளவயசு பசங்க உடல் வந்தா என்னால தாங்கிக்க முடியாம அழுதுடுவேன்” என்றார் நெகிழ்ச்சியாக.

எத்தனையோ பேரின் உடல்களை நல்லபடியாக வழியனுப்பி வைக்கும் முருகேஷ்வரி குடும்பத்தினர் மயானத்தில் உள்ள நாய்கள் கருத்தடை செய்யும் பழைய கட்டடத்தில்தான் வசித்துவருகிறார்கள். சரியான முகவரி இல்லாததால் இவர்களால் ஆதார் கார்டுகூட பெற முடியவில்லை. இதனால் ரேஷன் கார்டும் கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை!