லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

எந்த பயமும் எனக்கில்லை! - புவனேஸ்வரி

புவனேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
புவனேஸ்வரி

புனிதம்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை. ஆம்புலன்ஸில் இருந்து இறங்கிய புவனேஸ்வரி, அதிலிருந்த ஆதரவற்ற இரண்டு சடலங்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டுவந்தார்.

``சாப்பிடாம மயானத்துக்கு வரக்கூடாது; சாப்பிட்டீங்களா?” என வாஞ்சையுடன் கேட்டவர், ஒரு மரத்தடியில் அமர்ந்தவாறு, ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்யும் சமூக சேவைப் பணிகள் குறித்துப் பேசத் தொடங்கினார்.

``பூர்வீகம் சென்னை. அம்மா தனியாளாக என்னையும் தம்பியையும் வளர்த்தார். எட்டாவது படிக்கும்போதிலிருந்து என் மதிய உணவை ஸ்கூல் வாசலில் இருக்கும் பிச்சைக்காரங்களுக்கும் பகிர்ந்துகொடுப்பேன். அப்போ ஒரு தாத்தாவுக்கு ரெகுலரா சாப்பாடு கொடுப்பேன். அவர் தூங்கிட்டு இருக்கார்னு நினைச்சு ரெண்டு நாளா அவர் பக்கத்துல சாப்பாடு வெச்சேன். மூணாவது நாள்தான் அவர் இறந்துட்டார்னு தெரிஞ்சது. உடனே எல்லோர்கிட்டயும் சொன்னேன். யாரும் கண்டுக்கலை. அஞ்சாவது நாள் நானே போலீஸுக்குத் தகவல் சொன்னேன். ஒரு குப்பை வண்டியில அந்தத் தாத்தாவின் உடலை எடுத்துட்டுப் போனாங்க. அந்த நிகழ்ச்சி என்னை ரொம்பவே பாதிச்சது.

எந்த பயமும் எனக்கில்லை! - புவனேஸ்வரி

அப்போதிலிருந்து சாலையில் இறந்தோ அடிபட்டோ கிடக்கிறவங்களைப் பார்த்தா உடனே போலீஸுக்குத் தகவல் சொல்வேன்; ஆம்புலன்ஸ்ல ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் சிகிச்சையளிக்க உதவுவேன். இதுபோன்ற சமூக சேவையை டாக்டராகி முழுமையாக செய்யணும்னு ஆசைப்பட்டேன். வீட்டில் அனுமதிக்கலை. போராடி, பிசியோதெரபி கோர்ஸ் படிச்சேன்” என்கிறவர், தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணியில் பிசியோதெரபிஸ்டாக ஓராண்டுப் பணியாற்றியிருக்கிறார். இப்போது மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அமைப்பு ஒன்றில் பிசியோதெரபிஸ்டாக வேலை செய்கிறார்.

``மூணு வருஷத்துக்கு முன்பு தொடங்கப் பட்ட `உறவுகள்’ என்ற அமைப்பில் உறுப்பினரா இணைஞ்சு, சில மாதத்துலயே அமைப்பின் செயலாளரானேன். இந்த அமைப்பின் மூலம் தினமும் சாயந்திரம், விடுமுறை தினங்கள், என் வேலையில லீவ் எடுத்துக்கிட்டு தொடர்ந்து ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடறேன். இதற்கான செலவுகளுக்கு எப்போதும் சிரமம்தான். இப்போ பிறரிடமிருந்து கிடைக்கும் பண உதவிகளால் குழுவாக எங்க சமூகப் பணிகளைத் தொய்வின்றி செய்துட்டிருக்கோம். ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டுச் சிதைந்த நிலையிலுள்ள சடலங்களைக் கூச்சம் பார்க்காம எடுத்து அடக்கம் செய்வோம்.

ஆதரவற்ற சடலங்கள் குறித்துத் தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறையினர் எங்களுக்குத் தகவல் கொடுப்பாங்க. தவிர, ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், எங்களை அணுகி அவர்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யச் சொல்வார்கள். இப்படி ஆதரவற்றோர், ஏழைகளின் உடல்களை இலவசமாகவே அடக்கம் செய்கிறோம். இப்படி 800 சடலங்களுக்கும்மேல் அடக்கம் செய்திருக்கோம். இந்த ஒவ்வொரு நல்லடக்கத்தின் பின்னணியிலும் நிறைய நெகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு” என்கிறவரை இடை மறித்து, பிரேதப் பரிசோதனை முடிந்த தகவலை அவரின் நண்பர்கள் தெரிவித்தனர்.

அடுத்து பழைய வண்ணாரப்பேட்டை மயானத்தில் நல்லடக்கப் பணிகளை முடித்துவிட்டுப் பேசிய புவனேஸ்வரி, ``நல்லடக்கப் பணிகளுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வெச்சிருக்கிறோம். புற்றுநோய் பாதித்தோருக்கு உதவ புது ஆம்புலன்ஸ் வாங்கியிருக்கிறோம். ஏதாவது சட்டச் சிக்கல் ஏற்பட்டால் பிரேதப் பரிசோதனை செய்யணும் என்பதற்காக, ஆதவற்ற சடலங்களைப் புதைக்க மட்டுமே செய்வோம்.

இந்தச் சமூகப் பணிக்கு என் வீட்டில் பெரிசா ஆதரவு இல்லை. `எப்போ பார்த்தாலும் மார்ச்சுவரி, சுடுகாடுன்னு சுத்திக்கிட்டு இருக்கியே. உனக்குக் கல்யாணம் செய்றது சிக்கலாகிடும்னு குடும்பத்தினர் திட்டிட்டே இருப்பாங்க. அதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். எந்த பயமும் இல்லாம, புனிதமான வேலையா நினைச்சுத்தான் நல்லடக்கப் பணிகளைச் செய்றேன். நோய்த் தொற்று ஏற்படக்கூடாதுனு, மூணு மாதத்துக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்குவேன். இந்தப் பணிகளால் எனக்கு எந்தப் பிரச்னையும் ஏற் பட்டதில்லை” என்கிறார் புன்னகையுடன்.