தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

எங்கள் வீட்டின் மாத பட்ஜெட் ரூ.2000 தான்! - மீரா - சாய்முரளி

மீரா - சாய்முரளி
News
மீரா - சாய்முரளி

இயற்கை வாழ்தல் இனிது

கோயம்புத்தூரை அடுத்த பூலுவப்பட்டியில், வீட்டைச் சுற்றி ஒன்றே கால் ஏக்கரில் 500-க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகிறார்கள் மீரா - சாய்முரளி தம்பதி. மின்சாரத்துக்கு சோலார், குடிநீருக்கு மழைநீர் சேமிப்பு, உணவுக்குத் தோட்டத்தில் விளையும் காய்கறி, பழங்கள் என 95 சதவிகிதம் இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்க்கையை வாழ்ந்துவரும் இவர்களின் மாதச் செலவே 2,000 ரூபாய்தானாம். ஆச்சர்யத்தோடு மீராவிடம் பேசினோம்.

 மீராவின் தோட்டம்...
மீராவின் தோட்டம்...

“கணவர் சாய்முரளி, கோயம்புத்தூர்ல தனியார் நிறுவனத்துல வேலை செய்தார். நான் நபார்டு வங்கி உதவி மேலாளரா மும்பை உட்பட பல மாநிலத் தலைநகரங்கள்ல வேலை செஞ்சேன். அப்பவே வீட்டுத்தோட்டம் வெச்சிருந்தோம்; பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருந்தோம். எங்க ரெண்டு பேருக்குமே இயற்கை வாழ்வியல் மீதான ஆர்வம் இருந்தது. கணவரைத் தொடர்ந்து, சில ஆண்டுகள் கழித்து நானும் விருப்ப ஓய்வு வாங்கிட்டேன். பிறகு, கரூர்ல அஞ்சு வருஷம் இயற்கை வாழ்வியலை முடிந்தவரை கடைப்பிடிச்சோம். கூடவே, விளிம்புநிலை மக்களின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறது, தூய்மைப் பணி உட்பட சில சேவைகளையும் செய்தோம். தினமும் புதுப்புது விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டோம்.

பத்து வருஷத்துக்கு முன்னாடி இப்ப வசிக்கிற இந்த நிலத்தை வாங்கினோம். சில வேலையாட்களுடன், எங்க உடலுழைப்பை அதிகம் பயன்படுத்தி இந்த வீட்டைக் கட்டி குடியேறினோம். மானாவாரி பூமியா இருந்த இந்த இடத்துல, சோதனை முறையில பல மரங்களை நட்டோம். ரசாயன உரங்களைப் பயன்படுத்தாம, கோமியத்தைத் தண்ணீரில் கலந்து பயிர்களுக்குத் தெளிச்சோம். மரங்கள் எல்லாம் அடர்த்தியா வளர்ந்து இந்த இடமே இப்போ தோப்பு மாதிரி ஆகிடுச்சு” என்கிறார் மீரா, மூன்று வளர்ப்பு நாய்களைக் கொஞ்சியபடி.

மீரா - சாய்முரளி
மீரா - சாய்முரளி

இவர்களின் தோட்டத்தில் வாட்டர் ஆப்பிள், பிரெட் ஃப்ரூட், செர்ரி எனப் பலவகைப் பழ மரங்களும் தென்னை, தேக்கு, குமிழ், சவுக்கு என நூற்றுக்கணக்கான மரங்களும் பூச்செடிகளும் செழிப்பாக வளர்ந்துள்ளன.

 திருவோட்டுக்காய் தோட்டத்தில்...
திருவோட்டுக்காய் தோட்டத்தில்...

தங்களின் எளிமையான, வித்தியாசமான உணவு முறை குறித்துக் கூறும் சாய்முரளி, ``தேங்காய்ப்பால் மற்றும் கறிவேப்பிலைச் சாற்றுடன், தென்னங்கருப்பட்டி (அ) வாழைப்பழம் சேர்த்து ஜூஸ் செய்து, ஆளுக்கு ஒரு லிட்டர் குடிப்போம். இதுதான் எங்க காலை உணவு. மதியத்துக்கு தோட்டத்தில் விளையும் சீசன் பழங்களை மட்டுமே சாப்பிடுவோம்.. நாங்க விரும்புற சில காய்கறிகளையும், நிறைய கீரை வகைகளையும், `ஓபோஸ் (One Pot One Shot)’ முறையில் சமைத்து இரவில் சாப்பிடுறோம். தினமும் இரு வேளை மூலிகை டீ தயாரிச்சுக் குடிப்போம். இதுதான் எங்க பல வருட உணவு முறை. வீட்டுக்கு விருந்தினர்கள் வர்றப்பவும் பயணத்தின்போதும் மட்டுமே சாதம் சமைக்கிறோம். வாரத்துல ஒருசில வேளைகள்ல சாப்பிடாம `ஃபுட் ரெஸ்ட்’ எடுப்போம்.

மைதா, சர்க்கரை உட்பட உடல்நலனுக்குக் கெடுதலான வெள்ளை நிறத்திலுள்ள உணவுப் பொருள்களை நாங்க பயன்படுத்த மாட்டோம். நம்ம உடல்ல தேவையற்ற கழிவுகள் இருந்தா, அதை வெளியேற்ற உடல் வெளிப்படுத்தும் அறிகுறிதான் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள். அப்படியான நேரங்கள்ல ரெண்டு நாள் சாப்பிடாம ஓய்வில் இருந்தாலே கழிவுகள் வெளியேறி, உடல் சரியாகிடும். இதைக் கடைப்பிடிக்கிறதுனாலேயே சளி, காய்ச்சல்கூட எங்களுக்கு வருவதில்லை. ஒருவேளை ஏதாவது உடல்நலப் பிரச்னை வந்தால், வெறும் தண்ணீரைக்கொண்டே சரிப்படுத்திக்குவோம். வெறும் தண்ணீரில் ஒரு துணியை நனைச்சு, நல்லா பிழிஞ்சு தலையில பற்றுப் போட்டா, சில மணி நேரத்துல தலைவலி சரியாகிடும். தண்ணீரே பெரிய மருந்துதான்” என்கிறவர், மீராவைப் பார்த்துச் சிரிக்கிறார்.

 திருவோட்டுக்காயில் கலைநயப் பொருள்கள்...
திருவோட்டுக்காயில் கலைநயப் பொருள்கள்...

``இயற்கையே நமக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கொடுக்குது. அதை நாங்க சரியா பயன்படுத்திக்கிறோம். தோட்டப் பராமரிப்புக்கு வேலையாட்களை வெச்சுகிறதில்லை. அடிக்கடி சுற்றுலா போவோம். இதற்காக மாதந்தோறும் தனியா 1,000 ரூபாய் செலவழிக்கிறோம். மத்தபடி வேறெந்தச் செலவுகளும் இல்லை. நீர்நிலைகளைக் கண்டால், குழந்தைகள்போல குளித்து மகிழ்வோம். மகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துட்டோம். வாழக்கூடிய காலத்தை ரொம்பவே மகிழ்ச்சியோடு கழிப்பதுடன், எங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களை ஆர்வமுள்ளவங்களுக்குக் கத்துக்கொடுக்கிறோம். `பாட்டியின் கிராமம்’ என்ற பெயர்ல இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம் மற்றும் புத்துணர்வு மையம் ஒன்றை அமைக்கப்போறோம்” என்கிற மீரா, கணவரின் கரங்களைப் பற்றியபடி புன்னகைக்கிறார்.

`ஓபோஸ்’ முறை என்றால் என்ன?

``பிரத்யேக குக்கர் அல்லது நார்மல் குக்கர்ல சமைக்கலாம். நறுக்கிய காய்கறிகளுடன் குறைவான அளவில் உப்பு, காரம் சேர்த்து வதக்கி மூடிவைத்து வேகவிடணும். விருப்பப்பட்டா ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்துக்கலாம். ரெண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, உடனே ஆவியை வெளியேறவிடணும். பின்னர், காய்கறியுடன் தேங்காய்த்துருவல் சேர்த்துச் சாப்பிடலாம்.

இது உதாரணமான செய்முறைதான். ஆவி அதுவாகவே வெளி யேறுவதற்குள் காய்கறிகள் அடிப்பிடிச்சுக்கும். சில நிமிடங்கள்ல தயாரிக்கிற இந்த முறையால் எரிபொருள் செலவு, நேரம், உடல் உழைப்பு குறைவு. இந்த முறையில் இனிப்பு வகைகள், எண்ணெய்ப் பதார்த்தங்கள் உட்பட பலவகை சமையல்களையும் முறையான பயிற்சியுடன் நம் விருப்பப்படி செய்யலாம்” என்கிறார் மீரா.

திருவோட்டுக்காயில் கலைநயம்!

``எங்க தோட்டத்துலயே திருவோட்டுக்காய் மரத்தை வெச்சிருக்கோம். வருஷம் முழுக்க திருவோட்டுக்காய் காய்க்கும். `திருவோட்டுக்காயில் செய்த பாத்திரத்தில் வைத்த உணவுப் பொருள்கள் நீண்ட நேரத்துக்குக் கெடாது'ன்னு சொல்வாங்க. நாங்க அப்போதைய தேவைக்கான உணவுகளை மட்டுமே தயார் செய்யறதால, இதுல இன்னும் உணவுப்பொருள்களைப் பத்திரப்படுத்தி வெச்சதில்லை. அதே நேரம் சாப்பிடுற தட்டு, உணவு தயாரிக்கிற பாத்திரங்கள் உட்பட எங்க வீட்டுல பெரும்பாலான பாத்திரங்களைத் திருவோட்டுக்காய்லதான் செஞ்சிருக்கோம். இந்தக் காயை வீணாக்கக் கூடாதுன்னு, இதுல கைவினை மற்றும் அலங்காரப் பொருள்

களாகச் செய்து வீட்டுல வெச்சிருக்கோம்; பலருக்கும் பரிசாகக் கொடுக்கிறோம். இந்தக் காயை, பச்சையாக இருக்கும்போது அறுவடை செஞ்சா சுத்தம் செய்யறது சுலபம்” என்கிறார் மீரா.

இரவில் காய்கறி, கீரைகள் சாப்பிடுவது ஏன்?

``செரிமானம் ஆவதற்குக் கூடுதல் நேரமாகும் என்பதால்தான் இரவில் கீரைகளைச் சேர்க்க வேண்டாம்னு சொல்வாங்க. நாங்க, இரவு ஏழு மணிக்கே சாப்பிட்டு முடிச்சிடுவோம். பிறகு இரண்டரை மணி நேரம் கழிச்சுதான் தூங்குவோம். அதற்குள் சாப்பிட்ட உணவு செரிமானமாகிடும். கீரைகள், காய்கறிகளைச் சரியான முறையில் உணவாக எடுத்துக்கிறதால எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுறதில்லை. குறிப்பாக, பழங்களைப் பகல் நேரத்துல சாப்பிட்டாதான் அதனால் கிடைக்கும் பலன்கள் முழுமையா உடலுக்குக் கிடைக்கும். எனவே, இரவு நேரத்துல நாங்க எந்தப் பழமும் சாப்பிட மாட்டோம். கீரைகள் உடலுக்கு நல்லதுன்னாலும், தினமும் ஒரே வகைக் கீரையைச் சாப்பிடக் கூடாது. இது எங்களுடைய பழக்கம் மட்டுமே” என்கிறார் சாய்முரளி.