தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

புத்துயிர்ப்பு: என் பாடல் உன்னை வீழ்த்தும்

 இக்பால் பானோ
பிரீமியம் ஸ்டோரி
News
இக்பால் பானோ

இக்பால் பானோ

ந்த நாடு உயர்வான விருதுகளெல்லாம் அளித்து அவர் குரலைப் பெருமைப்படுத்தியதோ, அதே நாடு கடும் சீற்றத்தோடு அவர்மீது தடைகளையும் விதித்தது. ‘இனி அவர் பாடக் கூடாது. அவர் குரல் வானொலியில் ஒலிக்கக் கூடாது. அவர் இனி தொலைக்காட்சியில் தோன்றக் கூடாது. அரசு நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளக் கூடாது!’

இக்பால் பானோ செய்த தவறு ஒன்றுதான். பாகிஸ்தானின் புதிய சர்வாதிகாரி ஜியா உல் ஹக் தடை செய்த ஃபயஸ் அகமது ஃபயஸின் கவிதையை மேடையேறிப் பாடினார் அவர். `ஒரு பெண்ணாக இருந்துகொண்டு தேசமே அஞ்சும் ஒரு சர்வாதிகாரியை இப்படிப் பகைத்துக்கொண்டிருக்கிறாயே... உனக்கு அச்சமாக இல்லையா பானோ' என்று கேட்டபோது `இல்லை' என்று தலையசைத்தார். `அந்தப் பாடலைப் பாடுவதற்குத்தான் நான் பிறந்தேன். அந்தப் பாடல்தான் என் அடையாளம். அதுதான் நான். அதைப் பாடாமல் நான் எப்படி உயிர்வாழ்வது? எதற்கு உயிர் வாழ்வது?'

பாகிஸ்தான் தூக்கி எறிந்த அந்தப் பாடலை லட்சக்கணக்கான மக்கள் பாய்ந்து பற்றித் தங்கள் நெஞ்சில் ஏந்திக்கொண்டார்கள். தேச எல்லைகள் கடந்து, மொழி கடந்து, மதம் கடந்து, இனம் கடந்து மேலும் மேலும் பல புதிய இதயங்களைத் தொடர்ந்து வென்றெடுத்துக்கொண்டே இருக்கிறது அந்தப் பாடல். ஒடுக்குமுறையின் நிழல் எங்கு தோன்றினாலும் பானோவின் குரல் மக்களின் குரலாக மாறி ஒலிக்க ஆரம்பித்துவிடுகிறது. ‘ஹம் தேகேங்கே!’

இந்தப் பாடலுக்கான சொற்களை வழங்கியவர் உலகப் புகழ்பெற்ற உருது கவிஞரான ஃபயஸ் அகமது ஃபயஸ் (1911-1984). ஒவ்வொரு சொல்லுக் கும் உயிரூட்டியவர் இக்பால் பானோ (1935-2009). பஞ்சாபில் பிறந்து, பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானியராக மாறியவர் ஃபயஸ். புது டெல்லியில் பிறந்து 17 வயதில் திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தவர் பானோ. இருவருமே இந்தியர்... இருவருமே பாகிஸ்தானியர்... மக்களுக்கான கலைஞர்கள் என்பதால் இருவருமே தேச அடையாளங்களைக் கடந்தவர்கள்.

ஒரு பாடகராகத்தான் பாகிஸ்தானில் காலடி எடுத்துவைத்தார் பானோ. அவருடைய அசாதாரணமான குரல்வளத்தைச் சிறு வயதிலேயே அவர் அப்பா அடையாளம் கண்டுவிட்டார். இந்தக் குரல் வெறுமனே இனிமையானதாக மட்டும் இல்லை. அதையும் கடந்த ஏதோ ஒன்று அந்தக் குரலின் ஆன்மாவை இயக்குகிறது என்று அவருக்குத் தோன்றியது. கடவுள் என்று அவர் அதை அழைத்தார். புகழ்பெற்ற டெல்லி உஸ்தாத் ஒருவரிடம் தன் மகளைச் சேர்த்துவிட்டார். ‘கிரானா’ இசை மரபில் தேர்ச்சிபெற்றிருந்த அந்த உஸ்தாத், பானோவுக்கு தும்ரி, தாத்ரா போன்ற இந்துஸ்தானி செவ்விலக்கிய இசை வடிவங்களை முறைப்படி அறிமுகப்படுத்தினார். பானோ கற்றுக்கொண்ட வேகம், கற்றுக்கொண்டதைத் தன்னுணர்வோடு வெளிப்படுத்திய பாங்கு இரண்டும் ஆசிரியரைக் கவர்ந்தது.

பானோவின் ஆற்றலை டெல்லியும் வெகு விரைவில் உணர்ந்துகொண்டது. அனைத்திந்திய வானொலி நிலையத்திலிருந்து அடுத்தடுத்து அழைப்புகள் தேடி வந்தன. இந்த நிலையில் திருமணம் நிச்சயமானது.

`இந்தியாவில் பாடியதைப் போல பாகிஸ்தானில் பாட முடியுமா? இந்தியர்களைப் போல பாகிஸ்தானியர்களுக்கும் என் குரல் பிடிக்குமா?'

`இதென்ன கேள்வி... ஓர் எளிய திரையிசைப் பாடலைக்கூட வேறொரு தரத்துக்கு உயர்த்தி எடுத்துச்செல்லும் உன் குரல் பிடிக்காமல் போகுமா பானோ...' என்று மிகுந்த அன்போடு அரவணைத்துக்கொண்டது பாகிஸ்தான். ஒரு பாடகராக பானோ தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்த நேரம் பார்த்து தேசமே ஒரு பெரும் சரிவைச் சந்தித்தது.

 இக்பால் பானோ
இக்பால் பானோ

1978-ம் ஆண்டு, ஒரு ராணுவக் கலகத்தின்மூலம் ஜுல்ஃபிகர் அலி பூட்டோவின் ஆட்சியைக் கவிழ்த்து பாகிஸ்தானின் அதிபராகத் தன்னை நியமித்துக்கொண்டார் ஜெனரல் ஜியா உல் ஹக். `ஜனநாயகம் காலாவதியான கோட்பாடு. பாகிஸ்தான் இனி ஓர் இஸ்லாமிய நாடாகத் திகழ வேண்டும். ஒரு நாடு. ஒரு மதம். ஒரு மொழி. ஒரு பண்பாடு. ஒருமுகப்படுத்தப்பட்ட மக்கள் திரள். இதுதான் என் கனவு. இதுதான் இனி பாகிஸ்தானின் கனவும்' என்றார் ஜியா.

`மக்களே, செவிமெடுக்காதீர்கள். இது ஒரு கொடுங்கனவு' என்றார் ஃபயஸ். `ஜியா முன்வைப்பது மதமல்ல, அப்படித் தோற்றமளிக்கும் அடிப்படைவாதம். ஜனநாயகமற்ற நிலம் பாழ்நிலமாகவே மாறும்' என்று எச்சரித்தார் அவர். ஒரு சர்வாதிகாரிக்கு எதிராக ஓர் எளிய கவிஞரால் எப்படித் துணிச்சலோடு குரல் கொடுக்க முடிகிறது என்று வியப்போடு அவர் எழுத்துகளை ஆழ்ந்து வாசிக்கத் தொடங்கினார் பானோ. அந்த எழுத்துகள் அவருக்குள் இறங்க ஆரம்பித்தன. `ஃபயஸின் சொற்களுக்குள் நான் தொலைந்துபோய்விட்டேனா அல்லது இதுவரை தொலைந்துபோயிருந்த என்னை அவர் சொற்கள் கண்டெத்துக்கொடுத்திருக்கின்றனவா?'

ஃபயஸ் சொன்னதுபோலவே கைது, தடை, தாக்குதல், தணிக்கை, சிறை, ரத்தம் என்று பாகிஸ்தான் ஒரு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உயர்ந்து நிற்பதை பானோ காண நேர்ந்தது. 1979-ம் ஆண்டு பூட்டோ தூக்கிலிடப்பட்டார். பூட்டோவுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட ஃபயஸின் மீதும் ஜியாவின் பார்வை திரும்பியது. அவர் ஒரு கவிஞராக இருந்ததும் அவர் கவிதைகள் உணர்வுபூர்வமானவையாக இருந்ததும் நிலைமையை மேலும் மோசமாக்கியது.

ஃபயஸ் செல்லுமிடமெல்லாம் உளவு அதிகாரிகள் பின்தொடர்ந்தனர். அவர் எழுதும் ஒவ்வொரு சொல்லும் கண்காணிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் வெறுத்துப்போன ஃபயஸ் பாகிஸ்தானைவிட்டு வெளியேறி னார். லெபனானில் சிறிது காலம் இருந்து விட்டு, மனம் கேட்காமல் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பியபோது அவர் உடல்நிலை மோசமடைந்திருந்தது. நோபல் இலக்கிய விருதுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப் பட்டிருந்ததைக் கேள்விப்படாமலே, 1984-ம் ஆண்டு லாகூரில் அவர் இறந்துபோனார்.

அடுத்து என்ன? தீர்மானமாக ஒரு முடிவெடுக்கவேண்டிய நிலைக்கு பானோ தள்ளப்பட்டார். என் முன்னால் இரண்டு வழித்தடங்கள் விரிந்து செல்கின்றன. ஒன்று ஜியாவின் பாகிஸ்தான். இன்னொன்று ஃபயஸின் பாகிஸ்தான்.

எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நான்? எதில் பயணம் செய்ய வேண்டும்? எதை என் இலக்காக வரித்துக்கொள்ள வேண்டும்? என் முன்னால் இரண்டு பாடல்கள் இருக்கின்றன. ஒன்று ஜியாவின் பாடல். மற்றொன்று ஃபயஸின் பாடல். எதைப் பாட வேண்டும் நான்? அதிகார வர்க்கத்தின் பாடலையா? கலகப் பாடலையா? என் குரலைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் நான்? மக்களின் இதயத்தை வருடிக்கொடுத்து உறக்கத்தில் ஆழ்த்த வேண்டுமா அல்லது உறங்கிக் கொண்டிருப்பவர்களைப் பிடித்து உலுக்கி விழித்தெழச் செய்ய வேண்டுமா?

நீ ஒரு கலைஞன். உனக்கெதற்குத் தேவையற்ற அரசியல் என்று நீங்கள் கேட்கலாம். நானா அரசியலைத் தேர்ந்தெடுத்தேன்? நானுண்டு, என் இசையுண்டு என்று ஒதுங்கிக்கிடந்த என்னை இரண்டிலொரு பாதையைத் தேர்ந் தெடுத்துக்கொள் என்று அரசியலல்லவா கழுத்தைப் பிடித்து நெரிக்கிறது? ஒரு கவியாக இருந்த ஃபயஸை இந்த அரசியல் அல்லவா ஒரு கலகக்காரராக மாற்றியது?

வெறுப்பையும் துயரை யும் அச்சத்தையும் தவிர வேறெதுவும் இல்லை ஜியாவிடம். ஃபயஸோ துணிச்சலையும் நம்பிக்கை யையும் மானுட நேசத்தையும் வாரி வழங்குகிறார். மலை போல உயர்ந்து நிற்கும் அதிகாரத்தின் குரலை நான் கேட்க வேண்டுமா அல்லது `போராடு, நீ போராடினால் அந்த மலை விரைவில் பனிபோல் கரைந்துசெல்லும்' என்னும் ஃபயஸின் குரலைக் கேட்க வேண்டுமா?

இருளின் பாடலா, ஒளியின் பாடலா? எதைப் பாட வேண்டும் நான்? எனக்குக் குழப்பமில்லை. என் மக்களின் கழுத்தை முட்செடிகள் பற்றிக்கொண்டிருக்கும்போது, என் தேசத்தின் இதயத்தை சர்வாதிகாரம் பிளந்துகொண்டிருக்கும்போது, வெறுப்பு அரசியல் எங்கள் தொண்டைக்குள் இறக்கப்படும்போது என்னால் வசந்தகால கீதங்களைப் பாடிக்கொண்டிருக்க முடியாது. என்னால் ஜியாவைப் பாட முடியாது. நான் ஃபயஸையே பாடுவேன்.

ஃபயஸுக்காகப் பாடுவேன். ஃபயஸைப் பாடுவேன். ஃபயஸின் சொற்களை என் குரலில் தாங்கி உலகம் முழுக்கக் கொண்டுபோவேன். நான் இஸ்லாத்தையும் பாடுவேன். என் இஸ்லாம் ஃபயஸின் இஸ்லாமாக இருக்கும்.

எல்லா மதங்களையும், எல்லா நம்பிக்கை களையும், எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் மார்க்கமாக அது இருக்கும்.

நான் பாகிஸ்தானைப் பாடுவேன். அது சுருங்கிக்கிடக்கும் ஜியாவின் பாகிஸ்தான் அல்ல. வானம்போல விரிந்திருக்கும் ஃபயஸின் பாகிஸ்தான். நான் விடுதலையைப் பாடுவேன். வேற்றுமைகளைப் பாடுவேன். சகோதரத்துவத்தைப் பாடுவேன். சமத்துவத்தைப் பாடுவேன். ஜனநாயகத்தைப் பாடுவேன். என் மக்களைப் பாடுவேன். மக்களோடு நின்று பாடுவேன்.

ஃபயஸின் முதலாண்டு நினைவு நிகழ்ச்சி 1985-ம் ஆண்டு லாகூரில் தொடங்கியபோது ஜியாவின் சர்வாதிகாரம் உச்சத்தில் இருந்தது. கவிதையும் பாடலும் மட்டுமல்ல; சேலையும்கூட தடை செய்யப்பட்டிருந்தது. சேலை இந்தியாவின் உடை. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நாடு. எனவே, சேலை அணிவது தேசத் துரோகச் செயல். பானோ சிரித்துக்கொண்டார். ஃபயஸ் சொன்னதைப் போல் நீங்கள் உருவாக்கிய பாழ்நிலத்திலேயே நீங்கள் புதையுண்டு போவீர்கள். உங்கள் வெறுப்பே உங்களைப் புசிக்கும். உங்கள் அதிகாரமே உங்களை விழுங்கும். அதை நாங்கள் பார்ப்போம்!

உன் ஒவ்வொரு சொல்லும் ஒரு பறவை என்றால் என் குரல் காற்று போல அந்த ஒவ்வொன்றையும் சுமந்துசெல்லும். காற்று இருக்கும்வரை பறவை இருக்கும். நம் பாடலும் இருக்கும்.

இறந்துபோன ஒரு கவிஞரை நினைகூரும் விழாவுக்கு அதிகம் பேர் வரமாட்டார்கள் என்று நினைத்தது அரசு. 50,000 பேர் திரண்டு வந்தார்கள். சில வார்த்தைகள் பேசிவிட்டு கலைந்துசெல்வார்கள் என்று நினைத்தது அரசு. அடுத்து இக்பால் பானோ பாடுவார் என்கிற அறிவிப்பு வந்தது. எப்படியும் ஃபயஸின் பாடல்கள் தடை செய்யப்பட்டுவிட்டன. அவர் வேறு ஏதேனும் இனிமையாகப் பாடி விட்டுப் போவார் என்று எதிர்பார்த்தது அரசு. ஆனால், இக்பால் பானோ தன் பாதையை ஏற்கெனவே தேர்ந்தெடுத்திருந்தார்.

அவர் தோன்றியதும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். ஜியா தடை செய்திருந்த சேலையை அவர் தன் உடலுக்கு அளித்திருந்தார். பாகிஸ்தானின் துயரைப் போல, ஜனநாயகத்தின் சடலத்தைப் போல, பாழ்நிலத்தைப் போல, பெரும் பாவத்தைப் போல, இருளைப் போல கறுத்திருந்தது அந்தச் சேலை.

இக்பால் பானோ பாட ஆரம்பித்தார். ஃபயஸ் அகமது ஃபயஸின், ‘ஹம் தேகேங்கே!’ கணக்கற்ற பாடல்களைப் பாடிமுடித்த அவரால் அந்தப் பாடலை அன்று தொடர்ச்சியாகப் பாட முடியவில்லை. அனுமதிக்கவில்லை மக்களின் ஆரவாரம்.

ஓர் அலை, அது ஓய்ந்ததும் அடுத்த அலை, கூடவே இன்னொன்று என்று உற்சாகமும் நம்பிக்கையும் அழுகையும் உத்வேகமும் புது வேகத்தோடு அடுத்தடுத்து புறப்பட்டு வந்துகொண்டே இருந்தன. இந்த அலைகள் யாவும் ஒன்றிணைந்தபோது, ‘இன்குலாப் ஜிந்தாபாத்!' என்னும் முழக்கம் வெடித்துக் கிளம்பியது. பானோ பாடப் பாட, இந்த முழக்கமும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. பாடுவதை அவ்வப்போது நிறுத்திக்கொண்டு கூட்டத்தின் ஆர்ப்பரிப்பையும் முழக்கத்தையும் அவர் அனுமதிக்க வேண்டியிருந்தது. அப்போது அவர் கூட்டத்தைப் பார்த்தபடி அமைதியாக வீற்றிருந்தார். அப்போது அவர் கண்களிலிருந்தும் நீர் வழிந்திருக்க வேண்டும். ஃபயஸுக்காக, பாகிஸ்தானின் விடுதலைக்காக, மானுட குலத்தின் மீட்சிக்காக வழிந்த நீர் அது. ஃபயஸ், உன் ஒவ்வொரு சொல்லும் ஒரு பறவை என்றால் என் குரல் காற்று போல அந்த ஒவ்வொன்றையும் சுமந்துசெல்லும். காற்று இருக்கும்வரை பறவை இருக்கும். நம் பாடலும் இருக்கும்.

பானோ பாடி முடித்ததும், ‘தயவுசெய்து இன்னொருமுறை’ என்று கூட்டத்தினர் மன்றாடினர். அது பாகிஸ்தானின் மன்றாடலாக இருந்தது. பானோ இன்னொருமுறை பாடினார். அந்தப் பாடலை ரகசியமாகப் பதிவுசெய்து வெளியில் எடுத்து வந்து பரப்பினர் பாகிஸ்தானியர். அதிகாரத்தில் இருந்தவரை ஜியா ஒவ்வொரு பாடலையும் தடுத்து நிறுத்திவிட முயன்றுகொண்டே இருந்தார். ஒரு பாடலை எப்படிச் சிறையில் தள்ளுவது என்பதை இறுதிவரை அவரால் கண்டறிய முடியவில்லை. ஒரு நாள் அவர் மறைந்துபோனார். பானோவின் பாடல் இன்னமும் ஒலிக்கிறது.

உங்கள் மகுடங்கள் வீழ்த்தப்படும்

உங்கள் சிம்மாசனங்கள் சிதறிவிழும்

இது கடவுளின் நிலம்

எங்கள் இதயம் அப்பழுக்கற்றது

எங்கள் நம்பிக்கை உறுதியானது

தடைகள் தகர்த்து அதிகாரத்தை மீட்போம்

பார்ப்போமே, நாம் பார்ப்போமே.