Published:Updated:

கருணை கொஞ்சும் காக்கி நெஞ்சம்! - இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

காவல் நண்பர்

கருணை கொஞ்சும் காக்கி நெஞ்சம்! - இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

காவல் நண்பர்

Published:Updated:
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
“காவல்துறை பணியை வேலையா மட்டும் பார்க்கல. என்னோட அடையாளமாகவும் மக்களுக்காகப் பணி செய்ய கிடைச்ச வாய்ப்பாகவும் பார்க்கிறேன்.

வேலைக்குச் சேர்ந்து 30 வருஷங்கள் ஆச்சு. ஒவ்வொரு நாள் யூனிஃபார்மை உடுத்தும்போதும், முதல் நாள் இருந்த அதே ஆர்ப்பரிப்பு மனசுக்குள்ள வந்து போகுது” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் ராஜேஸ்வரி.

கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலகக் காலனியில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவர், தன்னுடைய சக பணியாளர்களுடன் இணைந்து கொரோனா நேரத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இதுவும் ஒரு வகையான கடமைதான். யூனிஃபார்ம் போட்டுட்டு மக்களுக்குச் செய்யும் எந்த நல்ல விஷயமும் என்னைப் பொறுத்தவரை கடமைதான். எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேனோ அதே அளவுக்கு மனிதநேயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேன். `காவல் துறை உங்கள் நண்பன்’னு வார்த்தையில் மட்டுமில்ல; செயலிலும் இருக்கணும்னு நினைக்கிறேன். கொரோனா வுக்கு முன்னாடியும் சின்ன சின்ன உதவிகளை மக்களுக்குச் செஞ்சுட்டு இருந்தேன். ஒருத்தரை ஒருத்தர் தொடகூட பயப்படும் இந்தச் சூழலிலும் உதவிகள் செய்வதால் நிறைய மக்களால் பேசப்படுது. மக்கள் எங்களைப் பாரட்டணும்னு நான் நினைக்கல. எங்களோட பணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் போதும்.

எனக்கு சொந்த ஊரு தேனி மாவட்டம், பெரியகுளம். சின்ன வயசுலேயே குடும்பத்தோட சென்னையில் செட்டில் ஆகிட்டோம். சென்னை கிறிஸ்டியன் காலேஜ்ல எம்.ஏ வரலாறு படிச்சேன். அப்பா காவல்துறையில வேலை பார்த்து ஒய்வுபெற்றவங்க. அதனால் சின்ன வயசுலேருந்தே ரொம்ப தைரியமா வளர்த்தாங்க. பேன்ட் - சர்ட், பாய் கட் இதுதான் அப்பல்லாம் என்னோட அடையாளம்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

அப்பாவை மிடுக்கான தோற்றத்தில் பார்த்தே வளர்ந்ததால, போலீஸ் வேலை எனக்கும் கனவா மாறிருச்சு. 1991 காவல் துறையில் சேர்ந்தேன். முதன்முதலா வேலைக்குப் போகும்போது, ‘நீ போட்டிருக்கும் உடுப்புக்கு எப்பவும் நேர்மையா இரு. எந்த சூழ்நிலையிலும் மனிதாபிமானத்தை மீறி நடந்துக்காதே’ன்னு அப்பா சொன்னாங்க. உசுரு இருக்கறவரை இதைக் கண்டிப்பா கடைப்பிடிப்பேன். உண்மையைச் சொல்ல ணும்னா எங்களோட இந்த போலீஸ் உடைக்கு ஆண் பெண் என எந்த வித்தியாசமும் கிடையாது. பாலினம் கடந்த வீரத்தை இந்த யூனிஃபார்ம்தான் கொடுக்குது. யூனிஃபார்மை அணியும் அடுத்த நிமிஷமே நான் ஒரு பொண்ணுங்கிறதை மறந்து தெம்பும் வந்துரும்” என்றவர், மக்களுக்குச் செய்யும் உதவிகள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நான் சந்திக்கும் மக்களுக்கு என்ன உதவிகள் தேவையோ அதை மனத்திருப்திக்காக பண்ணிட்டிருந் தேன். என்னைப் பார்த்து என் ஸ்டேஷன்ல பணிபுரியும் மற்ற நண்பர்களும் உதவ ஆரம்பிச்சாங்க.

ஒருத்தருக்கு உதவி பண்றதுங்கிறது அந்த நேரப் பிரச்னைக்கு தீர்வா இல்லாம, அந்தப் பிரச்னையில் இருந்து அவங்களை முழுமையா வெளியே கொண்டு வர்றதா இருக்கணும்னு நாங்க நினைச்சோம்.

உதாரணமா தீக்குளிச்ச ஒரு பெண்ணோட வழக்கு எங்க ஸ்டேஷனுக்கு வந்தது. அவங்களை காப்பாத்தி, செலவுக்குப் பணம் கொடுத்து தொடர்ந்து அவங்களுக்கு கவுன்சலிங் கொடுத்து, குடும்பத்தோட சேர்த்து வெச்சோம். அவங்களோட தன்னம்பிக்கையை அதிகரிக்க ஒரு வேலைவாய்ப்பையும் உருவாக்கிக்கொடுத்தோம். மக்களின் நலனுக்காக இதுபோன்று சின்ன சின்ன விஷயங்களை பண்ணிட்டு இருக்கோம்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

கொரோனா சூழலில் இன்னும் அதிகமான மக்களுக்கு உதவிகள் தேவைப்படுது. கொரோனா மக்களோட வாழ்க்கையை முற்றிலுமா முடக்கிருச்சு. தினமும் எத்தனையே பேர் சாப்பாட்டுக்காக அல்லாடுறாங்க. பசியில இருக்கும் எல்லாருக்கும் உதவ முடியலைனாலும், சந்திக்கிறவங்களுக்கு உதவிட்டு இருக்கோம். நான் பணிபுரியும் ஸ்டேஷன்ல 37 காவல்துறை நண்பர்கள் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் தன்னால் முடிஞ்ச உதவிகளை செய்றாங்க. சில வாரங்களுக்கு முன்ன ஓட்டேரியில் வயசான அம்மா இறந்துட்டாங்க. அங்கே இருந்த மக்கள், இறந்தவங்க பக்கத்தில் போக பயந்தாங்க. நாங்க தான் இறுதிச் சடங்குகள் செஞ்சு அடக்கம் செஞ்சோம்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

கொரோனா குறித்த பயம் இருந்தாலும், முழுமையான பாதுகாப்போடு, கர்ப்பிணிகளை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போறது, தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்த ஆதரவற்றவர்களை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சுத்தம் செஞ்சு காப்பகங்களில் சேர்ப்பது, தேவைப்படுபவர்களுக்கு அரிசி, உணவுப்பொட்டலங்கள் வழங்குறது, மாஸ்க், சானிட்டைசர் வழங்கி கொரோனா விழிப்புணர்வு கொடுக்கிறதுன்னு, நாலு மாசமா நேரம் காலம் பார்க்காம எங்க டீம் வேலை பார்க்குது. எங்க துறையிலிருந்து முழு ஆதரவு இருக்கிறதாலதான் இது சாத்தியமாகுது. நாங்க பண்ற ஒவ்வொரு செயலுக்கும் மேல் அதிகாரிகள்கிட்ட இருந்து பாராட்டு கிடைக்கறதால இன்னும் அதிக ஊக்கத்தோட வேலையை சிறப்பா பண்ண முடியுது'' என்று சொன்ன ராஜேஸ்வரி, நிறைவாக சொன்னது அரசுப் பணியிலிருப்பவர்கள் அனைவருமே நெஞ்சில் ஏற்றிக்கொள்ள வேண்டிய ஒன்று... சமுதாயத்தில் நம்மால் ஒரு சின்ன மாற்றம் நிகழ்ந்தாலும் அது சந்தோஷம்தானே. இந்த உடை உடுத்தினது மக்களுக்காக, மக்களின் நலன் காக்கும் இந்தப்பணி தொடரும்!”

உங்கள் சேவைக்கு சல்யூட் ராஜேஸ்வரி!