தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அன்பு அதிசயங்களைக் காணச் செய்யும்! - ராதிகா ராஜலோகநாதன்

ராதிகா ராஜலோகநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராதிகா ராஜலோகநாதன்

எதையும் தாண்டி வாழ்தல் இனிது!

மெடிக்கல் மிராக்கிள்... இந்த வார்த்தைக்கு அகராதி சொல்லும் அர்த்தம் எதுவாகவும் இருக்கட்டும். மெடிக்கல் மிராக்கிளுக்கு அர்த்தமாக மட்டுமல்ல, அடையாள மாகவும் நாம் ஒருவரைக் குறிப்பிடலாம். அவர்... ராதிகா ராஜலோகநாதன். லண்டன் வாழ் தமிழ்ப்பெண்ணான இவரைப் பலருக்கும் தெரிந்திருக்கும்.

யெஸ்... சன் டி.வி-யின் முதல் பேட்ச் தொகுப்பாளர்களில் ராதிகா பிரபல மானவர். பிறகு விஜய் டி.வி-யில் முன்னணித் தொகுப்பாளராக இருந்தவர் இப்போது லண்டன்வாசி.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியான நாட்டியாஞ்சலியில் நடனமாட தன் குழுவினருடன் இந்தியா வந்திருந்தார் ராதிகா. இவரின் பாசிட்டிவ் பக்கங்களை நமக்குக் காட்டுவதற்கு முன் அவரின் பாஸ்ட் பக்கங்களுடன் பேச ஆரம்பித்தார்.

“93-ம் வருஷம், சன் டி.வி-யில் தொகுப்பாளரா என்னுடைய மீடியா அறிமுகம் ஆரம்பமானது. `பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சி எனக்கு மிகப்பெரிய பெயரையும் அங்கீகாரத்தையும் வாங்கித் தந்தது. மலேசியா வாசுதேவனும் மால்குடி சுபாவும் இணைந்து நடத்திய அந்த நிகழ்ச்சிக்கு முதல்ல உதவியாளராகத்தான் இருந்தேன். எனக்குப் பாடத் தெரியும் என்ற விஷயம் அவங்களுக்குத் தெரிஞ்சதும், அந்த நிகழ்ச்சிக்கு என்னைத் தொகுப்பாளராக்கிட்டாங்க.

பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை 274 எபி சோட்ஸ் லைவ் ஷோவா பண்ணியிருக்கேன். 275 எபிசோடு பண்ணிடணும்னு நினைச்சிட்டிருந் தேன். அதுக்குள்ள வாழ்க்கையில் ஏதேதோ சம்பவங்கள்... மாற்றங்கள்...” - நிறுத்தும் ராதிகாவிடம் நீண்ட நிசப்தம். அதில் ஆயிரம் எண்ணங்கள்...

 ராதிகா ராஜலோகநாதன்
ராதிகா ராஜலோகநாதன்

“2001-ம் வருஷம், லண்டனின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸின் நாட்டிய நாடகத் தயாரிப்புக்கு கன்சல்டன்ட்டா கூப்பிட்டாங்க. அடிப்படையில் நான் ஒரு டான்ஸர். அதனால் வந்த அழைப்பு அது. ஆறு மாச புராஜெக்ட்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. அப்போ நான் பிஸியான ஆங்க்கரா இருந்த நேரம். அதோடு, நிறைய அட்வர்டைஸ்மென்ட் ஃபிலிம்ஸ், கார்ப்பரேட் ஃபிலிம்ஸ், சொந்த நிகழ்ச்சிகள்னு பரபரப்பா ஓடிட்டிருந்தேன். ஆனந்த விகடனில் வந்திட்டிருந்த ‘அனு அக்கா ஆன்ட்டி’ பகுதியை அடிப்படையா வெச்சு விஜய் டி.வி-க்காக ஒரு ஷோ பண்ணினேன். வெறும் மூணு எபிசோடு மட்டுமே எடுத்திருந்த நிலைமையிலதான் லண்டன் அழைப்பு வந்தது. `ஆறு மாசம்தானே... மறுபடியும் வந்து தொடரலாம்' என்ற எண்ணத்தில் லண்டன் கிளம்பினேன். அதுதான் மீடியாவுக்கு நான் சொல்ற கடைசி குட்பைனு அப்போ எதிர்பார்க்கலை” - 19 வருட இடைவெளிக்குப் பிறகும் மீடியாவுடனான பந்தத்தை நினைவு கூரும்போது குரல் நெகிழ்கிறது ராதிகாவுக்கு.

“லண்டன்ல குயின் எலிசபெத் ஹாலில் பிரமாண்டமான ஷோ பண்றது சாதாரண விஷயமில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. அந்த நிகழ்ச்சி முடிஞ்சதும் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் ஸ்கிரீன்பிளே டைரக்‌ஷன் கோர்ஸ் படிச்சேன். அதை முடிச்சிட்டு மறுபடியும் இந்தியா வரப்போற நாளை எதிர்பார்த்திட்டிருந்த போது ஒருநாள் அந்தக் கனவு நொறுங்கி, சிதைஞ்சு போனது. எங்க வீட்டுல எல்லாரும் என்னை லண்டன்லயே நிரந்தரமா இருக்கச் சொன்னாங்க. என்னுடைய மொத்தக் குடும்பத்தினரும் அப்போ லண்டன்லதான் இருந்தாங்க. மீடியாவில் புகழின் உச்சத்தில் இருந்த நேரமது. எல்லாத்தையும் விட்டுட்டு, மறந்துட்டு வேற ஒரு சூழலில், வேற ஒரு வேலையில் வாழ்க்கையைத் தொடரணும்னு நினைச்சுப் பார்க்கவே பயமா இருந்தது. என் மனநிலையை அப்போ வீட்டில் உள்ளவங்ககிட்ட சொல்லிப் புரியவெச்சிருந்திருக்கலாம். ஏனோ நான் அதை பண்ணலை.

இந்த நிலையில்தான் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே நேரத்துல உடம்புக்கு முடியாமல் போச்சு. என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தினாங்க. அதுவரை கல்யாணமே வேணாம்னு இருந்த என்னால், அந்த நிலைமையில அம்மா அப்பா பேச்சை மறுக்க முடியல. அவங்க பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். குடும்பப் பொறுப்புகள், கர்ப்பம்னு வாழ்க்கை வேகமெடுத்தது. அப்பாவுடைய இழப்பு, அடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு விபத்துன்னு என்னுடைய கர்ப்பகாலமும் சந்தோஷம் இல்லாமலேயே நகர்ந்தது. குழந்தைக்கு முதுகெலும்புப்பகுதியில் அசாதாரணமான வளர்ச்சி அதிகரிக்கிற `ஸ்பைனல் பிஃபிடா' பிரச்னை இருக்கிறதா சந்தேகப்பட்டு, `அது உறுதியானால் குழந்தையை அபார்ட் பண்ணிடுவோம்'னு டாக்டர்ஸ் சொல்லியிருந்தாங்க. பிரசவத்தின்போது குழந்தையின் இதயத்துடிப்பு குறைஞ்சுகிட்டே வந்தது. வேற வழி இல்லாம வாண்ட்டோஸ்னு சொல்லக்கூடிய டெக்னிக்கைப் பயன்படுத்தி குழந்தையை எடுத்தாங்க. கிட்டத்தட்ட குழந்தைக்கு ஷாக் கொடுக்கிற மாதிரியானது அது. இத்தனை போராட்டங்களையும் கடந்து 2004-ம் வருஷம் என் மகன் லக்ஷ்மண் பிறந்தான்.

பிறந்ததிலிருந்து குழந்தை அழுகையை நிறுத்தலை. மறுபடியும் ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சாங்க. எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பிறகும் அவன் அழுகையை நிறுத்தலை. குழந்தைக்கு கழுத்துல அடிக்கடி சுளுக்கு மாதிரி வர ஆரம்பிச்சது. ஒவ்வொரு முறையும் மூளையை ஸ்கேன் எடுக்கச் சொல்வாங்க. ஹாஸ்பிடல் விசிட் அன்றாட வாடிக்கையானது. கொஞ்சம் வளர்ந்ததும் அவனுக்குப் பேச்சிலும் நடையிலும் தாமதம் ஏற்பட்டது. வீட்டுக்கு யார் வந்தாலும் அலறுவான். அவன்கிட்ட பேசினா பயப்படு வான், அழுவான். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ட்ரீட்மென்ட்டுக்கு கூட்டிட்டுப் போவேன். இந்த நிலையிலதான் அவனுக்கு ஆட்டிசம்னு கண்டுபிடிச்சாங்க. கண்ணீர் வற்றும்வரை அழுது தீர்த்தேன். அப்புறம், எப்படியும் என் குழந்தையை நல்லபடியா வளர்த்துக் காட்டுவேன்னு வைராக்கியத்தை ஏற்படுத்திக்கிட்டேன். என் வாழ்க்கைக்கான அர்த்தம் அவன்தான்னு உணர்ந்தேன்.

 மகன் லக்ஷ்மண் உடன்...
மகன் லக்ஷ்மண் உடன்...

நீச்சல் கற்றுக்கொடுக்கக் கூட்டிட்டுப் போனபோது முதன்முறை தண்ணீரில் கால்வைக்கவே பயந்து அழுதான். அடுத்தடுத்த நாள்களில் அவனே தண்ணீரை என்ஜாய் பண்ண ஆரம்பிச்சான். லண்டன் ஸ்கூல் ஆஃப் மியூசிக் அண்டு டிராமடிகல் ஆர்ட்ஸில் சேர்த்துவிட்டேன். ஸ்பாட் லைட் வெளிச்சத்தில் நின்றபடி, 50 பேர் இருக்கும் அந்த அரங்கில் மனசுல தோணும் விஷயங்களைக் குழந்தைங்க பேசுவாங்க. அவங்க பயத்தைப் போக்கி, தன்னம்பிக்கையை அதிகரிக்க வைக்கிற அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பரிசுகளோடு வர ஆரம்பிச்சான் லக்ஷ்மண். அவனுக்கு தினம் தினம் நிறைய கதைகள் சொல்வேன். மியூசிக்கல் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வெச்சேன். என் குழந்தையை இந்தச் சமூகம் ஏத்துக்குமான்னு பயந்த காலம் உண்டு. அதுக்கு நேரெதிரா அவனுக்கு அன்பும் பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைச்சது. மருத்துவமும் விஞ்ஞானமும் செய்யாத மாயத்தை அன்பு அவனுக்குச் செய்தது. என் குழந்தையின் நிலைமையை நான் முதலில் ஏத்துக்கிட்டேன். யாருடைய நெகட்டிவ் கமென்ட்டுகளையும் காதுல வாங்கினதில்லை. அவன்கிட்ட ஒவ்வொரு சின்னச்சின்ன முன்னேற்றத்தைப் பார்க்கும்போதும் எனக்கு பல மடங்கு நம்பிக்கையும் தைரியமும் வரும்.

அவனுக்கு பென்சில் பிடிக்கிறதுலயே பிரச்னை இருந்தது. முழுநேரமும் அவன் கூடவே இருக்கிற மாதிரி டீச்சர் கிடைச்சாங்க. மத்த குழந்தைங்க ஒரே நாளில் கத்துக்கிற விஷயங்களை என் குழந்தை கத்துக்க சில மாசங்கள் ஆகும். ஆனாலும், அவனால முடிஞ்சது. இப்போ லக்ஷ்மண் லண்டனில் `இயர் லெவன்' படிக்கிறான். டிரம்ஸ் ஸ்ரீதர்கிட்ட ஸ்கைப்ல டிரம்ஸ் கத்துக்கறான். ஆட்டிசம் பாதிச்ச குழந்தைகளிடம் எப்போதும் கண்களைப் பார்த்து உறுதியான குரலில் பேசணும். ஆனா, சத்தமாவோ, முகத்தைக் கோபமா வெச்சுக்கிட்டோ பேசக் கூடாது. எக்காரணம் கொண்டும் இந்தக் குழந்தைகளிடம் ‘நோ’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. இதையெல்லாம் பின்பற்றியதால் 99 சதவிகிதமா இருந்த ஆட்டிசம் 0 சதவிகிதமாக மாறியிருக்கு. இப்போ அவன் ஆட்டிச குழந்தையே இல்லைன்னு என்னால உறுதியா சொல்ல முடியும். என் குழந்தையை மட்டுமல்ல எல்லாக் குழந்தைகளையும் இப்படி மாத்த முடியும். ஆட்டிசம் பாதிச்ச குழந்தைகளின் அம்மாக்களுக்குச் சொல்லவும் புரியவைக்கவும் என்கிட்ட நிறைய விஷயங்கள் இருக்கு. குறிப்பா இந்தியாவில் இந்த விஷயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தணும் என்பதுதான் என் ஆசை, லட்சியம் எல்லாம். அப்படியொரு வாய்ப்புக்காக காத்திட்டிருக்கேன்...’’ - சாதனைத் தாயாக நெகிழவைப்பவர், லண்டனில் `நிருத்ய சங்கீத அகாடமி' என்ற பெயரில் பாட்டு, நடனம், நாடகம் உள்ளிட்ட கலைகளுக்கான பயிற்சி பள்ளி நடத்துகிறார்.

ராதிகா சூப்பர் மாம் மட்டுமல்ல, சூப்பர் வுமனும் கூட. அவரது வாழ்க்கையின் இன்னொரு பக்கமே அதற்கு சாட்சி.

``லக்ஷ்மண் பிறந்த ரெண்டு வருஷத்துல எனக்கு டயாபடீஸ் வந்தது. அப்புறம் மூணு வருஷத்துக்கு நான்ஸ்டாப்பா பிளீடிங்கால் அவதிப்பட்டிருக்கேன். டெஸ்ட் பண்ணினதுல கேன்சர் செல்ஸ் உருவாகியிருப்பது உறுதி யாச்சு, கர்ப்பப்பையில் கேன்சர்... அதை அப்படியே விட முடியாதுன்னு கர்ப்பப்பையை நீக்கிட்டாங்க. சின்ன வயசுலேருந்தே எனக்கு ஆஸ்துமா பிரச்னை உண்டு. அதுக்கான ட்ரீட்மென்ட் ஒருபக்கம் போயிட்டிருக்கு.

இத்தனை நோய்களும் சேர்ந்து என் உடம்பை பலவீனமாக்கலாம். ஆனா, என் மனசை பலவீனமாக்க முடியாது.

டான்ஸ் ஆடுவேன்... சொல்லித் தருவேன். ஆனா, என்னால நிறைய நடக்க முடியாது. அது ஏன்னுகூட நான் யோசிக்கலை, திடீர்னு ஒருநாள் ரத்தமா யூரின் போனதும் பயந்துபோய் ஆம்புலன்ஸை வரவழைச்சு டாக்டர்கிட்ட தூக்கிட்டுப்போனாங்க. கிட்னியில் ஸ்டோன்ஸ் உருவாகியிருக்கிறதா சொன்னவங்க, அடுத்து ஒரு பெரிய குண்டைத் துக்கிப்போட்டாங்க. அன்னிக்குத்தான் தெரியும் எனக்கு இருப்பதே ஒரே ஒரு கிட்னிதான்னு. அத்தனை வருஷங்களில் ஒரு கிட்னிதான் ரெண்டு கிட்னிகளுக்கான வேலைகளையும் பார்த்திட்டிருந்ததும் அன்னிக்குத்தான் தெரிஞ்சது. கிட்னியை டெஸ்ட் பண்ணின டாக்டர், ‘நீங்க எதுக்கும் ஒருமுறை நுரையீரலையும் டெஸ்ட் பண்ணிடறது நல்லது’னு சொன்னார். கிட்னிக்கும் லங்ஸுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டபோது அடுத்த அதிர்ச்சி காத்திட்டிருந்தது. இந்த மாதிரி பிரச்னை இருக்கிறவங்களுக்கு நுரையீரலிலும் பாதிப்பு இருக்கலாம்னு சொன்னார். டெஸ்ட் பண்ணினபோது சார்க்காய்டோசிஸ்னு சொல்ற ஆட்டோ இம்யூன் டிசீஸ் இருப்பது உறுதியானது. அதனால எப்போதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கும். கிட்னி ஸ்டோன் பிரச்னைக்கு ஒரு கட்டத்துக்கு மேல மருந்து, மாத்திரைகள் உதவலை. அப்புறம் நெப்ராஸ்டமினு ஒரு சர்ஜரி செய்தாங்க. ரெண்டு கிட்னி இருக்கிறவங்களுக்குத்தான் இதைச் செய்வாங்க. என் விஷயத்துல ரிஸ்க் அதிகம்னு தெரிஞ்சும் செய்தாங்க.

இந்த நிலைமையில புதுசா இன்னொரு பிரச்னை. டான்ஸ் கிளாஸ்ல என்னால ரொம்ப நேரம் உட்கார முடியாது. அதுக்கொரு டெஸ்ட் எடுத்தபோது, ‘டெதர்டு ஸ்பைனல் கார்டு சிண்ட்ரோம்'னு சொன்னாங்க. முதுகுத்தண்டை பாதிக்கிற இந்தப் பிரச்னை யுகேவிலேயே மொத்தம் ஏழு பேருக்குதான் இருக்கு. அவங்கள்ல நானும் ஒருத்தி! ஏற்கெனவே ஏகப்பட்ட பிரச்னைகளோடு இருப்பதால இதுக்கு எந்த ட்ரீட்மென்ட்டும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. திடீர்னு உடம்பெல்லாம் வலி. டெஸ்ட்டுல எந்தப் பிரச்னையும் இல்லைனு வந்தது. வலி மட்டும் குறையலை. கடைசியா அது `ஃபைப்ரோமயால்ஜியா'னு ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்னு சொன்னாங்க. எத்தனையோ வலிகளைப் பார்த்த எனக்கு இந்த வலியும் ஒருகட்டத்துல பழகிடுச்சு.

 நடனக் குழுவினர்...
நடனக் குழுவினர்...

கழுத்தில் மூணு டிஸ்க் விலகியிருந்தது. இடது கை அடிக்கடி மரத்துப் போகும்... சரியா தூக்க முடியாது. அதுக்கான ட்ரீட்மென்ட்டும் போயிட்டிருக்கு ஒரு கையை மட்டுமே யூஸ் பண்ணிதான் டான்ஸ் சொல்லித் தந்திட்டிருந்தேன்.

இதுக்கிடையில நுரையீரல் பாதிப்பு காரணமா இதயத்திலும் பிரச்னை வர ஆரம்பிச்சது. ஸ்கேன் பண்ணினபோது முதுகில் ஒரு வளர்ச்சி தெரியறதா சொன்னாங்க, அது, கேன்சர் இல்லைன்னு உறுதியானாலும், அது என்ன வளர்ச்சின்னு இன்னும் கண்டுபிடிக்க முடியலை. ஆர்த்ரைட்டடிஸ், ஹியரிங் பிரச்னைகள் எல்லாம் எக்ஸ்ட்ரா. இத்தனை நோய்களும் சேர்ந்து என் உடம்பை பலவீனமாக்கலாம். ஆனா, என் மனசை பலவீனமாக்க முடியாது. மனசோட கட்டுப்பாடு என்கிட்டதான் இருக்கு. என்னைப் பத்தி தெரிஞ்ச எல்லாருக்கும் நான் ஓர் ஆச்சர்ய மனுஷிதான். இத்தனை நோய்களை எனக்குக் கொடுத்த கடவுள், கூடவே கெட்டதையெல்லாம் உடனே மறந்துபோகிற சக்தியையும் கொடுத்திருக்கார். அதனாலதான் என்னால அடுத்தடுத்து நகர்ந்துபோக முடியுது. பேசுவானானு ஏங்கின என் மகன், இன்னிக்கு நான் சோர்ந்துபோகும் தருணங்களில் எனக்கு ஆறுதல் சொல்றான். முடிவெடுக்க முடியாத விஷயங்களில் தெளிவு கொடுக்கறான். நான் எதிர்பார்த்ததைவிடவும் என் வாழ்க்கை இப்போ அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறியிருக்கு...’’

அன்பு அதிசயங்களைக் காணச் செய்யும்!