Published:Updated:

ஒரு தனித்த பறவையின் கதை - ஹார்பர் லீ

MARUDHAN G
கார்த்திகேயன் மேடி

புத்துயிர்ப்பு

பிரீமியம் ஸ்டோரி

ரு நாள் சிறிய கும்பலொன்று அட்டிகஸ் ஃபிஞ்சின் காரைச் சூழ்ந்துகொண்டது. `நீ உள்ளேயே இரு' என்று தன் மகனை எச்சரித்து விட்டு காரைவிட்டு இறங்கி வெளியில் வந்தார் அட்டிகஸ். கோபம் பொங்கும் கண்களோடு ஒருவன் அட்டிகஸை நெருங்கினான். ‘நிஜமாகவே உன் மூளை செயலிழந்துவிட்டதா அட்டிகஸ்? பேரும் புகழும் பெற்றிருக்கும் நீ போயும் போயும் ஒரு கறுப்பனுக்காக வாதிட வேண்டுமா? அவன் குடும்பத்தை நீ பாதுகாக்க வேண்டுமா? வெள்ளையினப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் ஒருவனுக்காக இப்படி வரிந்துகட்டிக் கொண்டு நிற்க வெட்கமாக இல்லையா உனக்கு? உன் தோலின் நிறம் வெள்ளையாக இருந்தாலும் ஒரு கறுப்பனுக்காக வாதிடும் நீயும் எங்களுக்கு இனி ஓர் அவமானச் சின்னம்தான். தூ!’

தன் முகத்தில் வழியும் எச்சிலைத் துடைத்துக்கொண்டு காரை நெருங்கினார் அட்டிகஸ். ஹார்பர் லீ எழுதிய To Kill a Mockingbird நாவலில் இடம்பெறும் ஒரு காட்சி இது. முதன்முதலில் இந்நூலை வாசித்தவர்கள் அட்டிகஸின் மென்மையான (அல்லது ‘பெண்மையான’) பாத்திரப் படைப்பைக் கண்டு திகைத்துப்போனார்கள். எச்சில் வடியும் முகத்தோடு தன் குழந்தையின் முன்னால் ஏன் காட்சியளிக்க வேண்டும் அட்டிகஸ்? கதாநாயகனாக இருந்தும் ஏன் ஒரு சாகசக்காரனாக இல்லை அவன்? ஏன் அட்டிகஸால் அந்தக் கும்பலை அடித்து நொறுக்க முடியவில்லை? அவன் ஏன் புத்தரைப் போல, கிறிஸ்துவைப் போல இன்னொரு கன்னத்தைக் காட்டுகிறான்? நாவலை எழுதியவர் ஒரு பெண் என்பதால் அட்டிகஸை ஓர் ஆட்டுக்குட்டியைப் போல அவர் படைத்துவிட்டாரா?

1960-ம் ஆண்டு வெளிவந்த `டு கில் எ மாக்கிங்பேர்டு’ இன்றுவரை அச்சில் இருக்கிறது; இன்றுவரை விவாதிக்கப்படுகிறது. அதிகார மையங்களின்மீது மக்கள் நம்பிக்கையிழந்து கிடந்த ஐம்பதுகளின் அமெரிக்காதான் நாவலின் தளம்.

`அரசு ஒரு நல்ல அமைப்பு; நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை' என்னும் குழந்தைத்தனமான நம்பிக்கையை இழந்து விட்டு, பற்றிக்கொள்ள வேறேதும் இல்லாமல் குழம்பித் தத்தளிக்கும் மக்களே ஹார்பர் லீயின் கதாபாத்திரங்கள். அவர்களுடைய கோபத்தையும் இயலாமையையும் அவநம்பிக்கையையும் வெறுப்பையும் நிதானமாகச் சேகரித்து தன் நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஹார்பர் லீ. எனவே, அவர் படைப்பில் உண்மையின் ஒளி நிறைந்திருந்தது.

யார் இந்த ஹார்பர் லீ? அவர் வயது என்ன? அவர் எங்கிருக்கிறார்? அவர் எப்படி இந்தப் புத்தகத்தை எழுதினார்? என்ன செய்துகொண்டிருக்கிறார்? திருமணமானவரா? இது அவர் புனைபெயரா உண்மைப் பெயரா? அட்டிகஸும் கறுப்பின கைதியும் (டாம் ராபின்ஸன்) கற்பனை பாத்திரங்களா? ஏன், இந்த ஹார்பர் லீ பற்றி எதுவும் தெரிந்துகொள்ள இயலவில்லை? ஊரில் இருப்பவர்களையெல்லாம் மாய்ந்து மாய்ந்து பேட்டியெடுக்கும் இந்தப் பத்திரிகையாளர்கள் எங்கே போய் தொலைந்தார்கள்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புத்தகம் வெளிவந்த அடுத்த ஆண்டே ஹார்பர் லீக்கு புலிட்சர் விருதும் வந்து சேர்ந்தது. அப்போதும் இந்தக் கேள்விகளுக்கு விடையில்லை. மூன்று கோடி பிரதிகளைக் கடந்து அவர் புத்தகம் ஒரு புதிய பதிப்புச் சாதனையை நிகழ்த்திய போதும் ஹார்பர் லீ நிழலாகவே நீடித்தார்.

2016 பிப்ரவரி 19 அன்று தனது 89-வது வயதில் ஹார்பர் லீ இறந்துபோனார். இன்றைய தேதி வரை அவரைப் பற்றி நமக்கு மேலோட்டமாக அன்றி அதிகம் தெரியாது. கிட்டத்தட்ட வெளியுலகத் தொடர்புகளே இல்லாமல் வாழ்ந்து முடித்திருக்கிறார் லீ.

‘என் புத்தகத்துக்கு இத்தனை பலத்த வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. விமர்சகர்கள் அதைப் படித்துவிட்டு மறந்து போய்விடுவார்கள் என்று நினைத்தேன் அல்லது அதை அவர்கள் அமைதியாகக் கொன்றுபோடக்கூடும் என்றும் எதிர்பார்த்தேன். அப்படி நிகழவில்லை என்பது ஆச்சர்யமூட்டுகிறது. மக்களின் ஆதரவை நான் எதிர்பார்த்தேனா? இல்லை என்று சொன்னால் அது பொய். நிச்சயம் எதிர்பார்த்தேன். ஆனால், இந்த அளவுக்கு அழுத்தமான ஆதரவை அவர்கள் தருவார்கள் என்று நினைக்கவில்லை. இந்த ஆதரவு அச்சமூட்டுவதாக இருக்கிறது’ என்று நினைவுகூர்ந்தார் ஹார்பர் லீ.

அலபாமாவில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய தங்கையின் உயிரை மீட்டெடுத்த ஹார்பர் என்னும் மருத்துவரின் பெயரையும் பாட்டி நெல்லியின் பெயரையும் இணைத்து ஹார்பர் நெல்லி என்று பெயரிட்டு வளர்த்தார்கள். சொந்தப் பெயரில் புத்தகம் வெளிவருவதை விரும்பாததால் ஹார்பரோடு லீ என்னும் பெயரை இணைத்துக்கொண்டார். அட்டிகஸைப் போலவே லீயின் அப்பாவும் ஒரு வழக்கறிஞர். அட்டிகஸைப் போலவே அவரும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்காக வாதாடியவர்.

லீக்கு ஆறு வயதாகும்வரை பெண்களுக்கு அமெரிக்காவில் வாக்குரிமை கிடையாது. அரசியல் களத்திலும் சமூகத்திலும் அங்கீகாரம் கிடைக்க பெண்கள் கடுமையாகப் போராடவேண்டிய சூழல். இது ஒருபக்கமென்றால் இன்னொருபக்கம், தீவிர இன வெறுப்பு காரணமாக வெள்ளையர், கறுப்பர்களை இரண்டாம்தரக் குடிமக்களாகச் சுருக்கி வைத்திருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட, மோசமான வசைச் சொற்களால் கறுப்பர்களை அவர்கள் ஏசினார்கள். தாக்கினார்கள். வெள்ளையரின் உலகில் கறுப்பு என்பது அகற்றப்படவேண்டிய கசடு. ஒழிக்கப்படவேண்டிய குற்றம். நீக்கப்படவேண்டிய பாவம்.

ஹார்பர் லீயின் அட்டிகஸும் இந்த உலகில் வாழ்பவர்தான் என்றாலும், அதில் நிலவும் அநீதி அவரை உலுக்குகிறது. குற்றச்சாட்டைச் சுமத்துபவர் ஒரு வெள்ளைப் பெண் என்பதால் அவர் சொல்வது உண்மையாகிவிடுமா? குற்றம் சாட்டப்பட்டவரின் தோல் நிறம் கறுப்பு என்பதால் விசாரணையின்றி அவரைத் தூக்கில் போட்டுவிடலாமா? என் மக்களைப் போல கண்களையும் மனசாட்சியையும் தொலைத்துவிட்டு என்னால் நிற்க முடியாது. கறுப்பர்கள் அடிமையாக இருக்கும்வரை வெள்ளையருக்கு சுதந்திரம் கிடைக்கப்போவதில்லை. கறுப்பர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படும் வரை வெள்ளையரால் பாதுகாப்பாக இருக்க முடியாது. கறுப்பர்கள் கற்கத் தொடங்கும் வரை வெள்ளையரும் கல்லாதவர்களே. வெள்ளையருக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் கறுப்பர்களுக்கு முதலில் நீதி கிடைத்தாக வேண்டும். கறுப்பர்களுக்கான அரசு என்று அமைகிறதோ அன்றுதான் வெள்ளையருக்கான அரசு அமையும். நிறபேதமற்ற ஜனநாயகமே, ஜனநாயகம். நிறபேதமற்ற அன்பே, அன்பு. நிறபேதமற்ற கடவுளே, கடவுள். நிறபேதமற்ற அமெரிக்காவே, அமெரிக்கா.

ஊராரின் எதிர்ப்பையும் பழிப்பையும் அவச்சொற்களையும் தாங்கி நிற்கும்போது, நீ எங்களில் ஒருவனல்ல, துரோகி என்று தூற்றப்படும்போது, முகத்தில் வழிந்த எச்சிலைத் துடைத்தெறியும்போது தன் தோலின் நிறம் வெள்ளையிலிருந்து கறுப்பாக மாறுவதை அட்டிகஸ் நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும். அந்தத் தருணத்தில் குரலற்றவர்களின் குரலாக, நம்பிக்கையற்ற மக்களின் நம்பிக்கையாக, ஒழுங்கற்ற உலகின் ஒழுங்காக அட்டிகஸ் உயர்ந்து நிற்கிறார்.

ஹார்பர் லீ
ஹார்பர் லீ

ஆனாலும், டாம் ராபின்ஸனை அவரால் மீட்க முடியவில்லை. அவன்மீது குற்றம்சுமத்திய வெள்ளைப் பெண்தான் உண்மையில் இச்சையோடு டாமை அணுகியிருக்கிறார். போயும் போயும் ஒரு கறுப்பன் தன்னை ஏற்க மறுப்பதா என்று குமுறும் அவள் டாம்மீது பொய் குற்றச்சாட்டைச் சுமத்துகிறாள். இந்த உண்மையை அட்டிகஸ் வெளிப்படுத்துகிறார். இருந்தும் ஜூரிகள் டாமைக் குற்றவாளி என்றே தீர்ப்பளிக்கிறார்கள். சிறையிலிருந்து தப்ப முயலும் டாம் சுடப்பட்டுக் கொல்லப் படுகிறார். அட்டிகஸ் தனித்து நிற்கிறார்.

ஹார்பர் லீயும் இறுதிவரை தனித்தே இருந்தார். அது அவரே ஏற்படுத்திக்கொண்ட தனிமை. அவர் தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்ட பாதுகாப்பு வளையம். பத்திரிகையாளர் களாலும் புகைப்படக் கலைஞர்களாலும் தொலைக்காட்சி நிருபர் களாலும் அவரை இறுதிவரை நெருங்கவே முடியவில்லை.

என்னை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நான் எங்கே படித்தேன், எங்கே வளர்ந்தேன், எப்படி கனவு கண்டேன், எப்படி அழுதேன் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது?

நான் எங்கே அமர்ந்து எழுதினேன், எப்படிச் சிந்தித்தேன், ஒரு நாளைக்கு எத்தனை பக்கங்கள் எழுதினேன், முழுக்க எழுதி முடிக்க எத்தனை காலம் எடுத்துக்கொண்டேன், எழுதி முடித்த பிறகு எப்படி உணர்ந்தேன் என்பதெல்லாம் முக்கியம் என்றா நினைக்கிறீர்கள்?

தயவு செய்து என்னைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டாம். மாறாக, டாமைத் தெரிந்துகொள்ளுங்கள். டாமுக்காக உங்கள் குரலை எழுப்புங்கள். அப்போது நீங்களும் அட்டிகஸாக மாறுவீர்கள். அட்டிகஸ்கள் பெருகப் பெருக டாம்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவார்கள்.

அட்டிகஸின் குரல்தான் என் புத்தகம். அது என் தந்தையின் குரல். அதுவேதான் என் குரலும்கூட. அந்தக் குரல் என் மக்களின் குரலாகவும் என் அமெரிக்காவின் குரலாகவும் என் உலகின் குரலாகவும் மாற வேண்டும் என்று விரும்புகிறேன். இதுதான் நான். இவ்வளவுதான் நான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு