Published:Updated:

ஐம்பதில் மலர்ந்த அன்பு... இது ரீல் அல்ல; ரியல் காதல்

டாக்டர் ரவீந்திரன்-ராஜேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் ரவீந்திரன்-ராஜேஸ்வரி

அன்பு உள்ளங்கள்...

``எதிர்பாராத நேரத்தில் நாங்க இருவரும் எங்க வாழ்க்கைத் துணையை இழந்தோம். பிறகு, அவரவர் பிள்ளைகளின் நலனுக்காகவே வாழ்ந்தபோதுதான் ரெண்டு குடும்பங்களும் இணைஞ்சுது. எதிர்பாராத திருப்பமாக நாங்க தம்பதியா இணைஞ்சோம். இப்போ இருவரின் அஞ்சு பிள்ளைகளுக்கும் நாங்கதான் பெற்றோர்!'' - யதார்த்தமாகப் பேசுகிறார்கள் டாக்டர் ரவீந்திரன்-ராஜேஸ்வரி தம்பதி. அரை செஞ்சுரி கடந்த வயதில் இருவருக்கும் காதல் மலர, தங்கள் பிள்ளைகளின் விருப்பத்துடன் புது இல்லறத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர்.

“இன்ஜினீயரான என் கணவர் சோளிங்கர்ல இருந்த டி.வி.எஸ் நிறுவனத்துல வேலை செய்தார். ரொம்பவே சந்தோஷமா வாழ்ந்தோம். 1999-ல் சாலை விபத்துக்குள்ளாகி ஒரு மாசம் சிகிச்சையில் இருந்த கணவர், நினைவு திரும்பாமலேயே இறந்துட்டார். மொத்தக் குடும்பமும் நிலை குலைஞ்சது. சராசரி வெளியுலக வாழ்க்கைகூட தெரியாம தான் இருந்தேன். பிறகு, டி.வி.எஸ் நிறுவன ஸ்கூல்ல டீச்சரா சில வருஷம் வேலை செஞ்சு கிட்டு, பிள்ளைங்களை வளர்த்தேன்.

குடும்ப நண்பரான டாக்டர் ரவீந்திரன் நிறைய தன்னம்பிக்கை கொடுத்து நாங்க மூணு பேரும் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவினார். அவர் மனைவியை இழந்தவர். குடும்பத்துக்கு அஸ்திவாரமா இருந்த இவரோட அம்மாவும் இறந்துட்டாங்க. அப்போ எங்க குடும்பத்துடனான பழக்கம் டாக்டருக்கும் ஒருவிதமான பிடிப்பைக் கொடுத்திருக்கு. எங்க குடும்ப நட்பு பலமாகி, நாங்க இருவரும் இணைந்து வாழலாம்னு நினைச்சோம். அதுதான் எங்க ஐந்து பிள்ளைகளின் விருப்பமாகவும் இருந்துச்சு. 2013-ல் நாங்க தம்பதியா சேர்ந்துவாழ ஆரம்பிச்சோம்” என்று நிறுத்தும் ராஜேஸ்வரியின் பார்வை கணவர்மீது திரும்புகிறது.

டாக்டர் ரவீந்திரன்-ராஜேஸ்வரி
டாக்டர் ரவீந்திரன்-ராஜேஸ்வரி

“என் மனைவி புற்றுநோயால் 29 வயசுலயே இறந்துட்டாங்க. மூணு மகள்களுக்காகவே இன்னொரு கல்யாணம் செய்துக்காம இருந்தேன். மகள்களை வளர்த்து ஆளாக்கிய அம்மா இறந்தபோது நாங்க உடைஞ்சு போயிட்டோம். அப்போ எங்க வீட்டில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிய ராஜி, எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முற்போக்குச் சிந்தனை களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எங்க வீட்டில் மூணு மகள்களுக்கும் காதல் திருமணம்தான். மருமகன்கள்தாம் எங்களை முறைப்படி இணைச்சு வைக்கும் பேச்சைத் தொடங்கினாங்க. அஞ்சு பிள்ளை களின் ஆதரவும் இருந்ததால் தம்பதியா இணைஞ்சோம். என் கடைசி மகள், தன்னோட பிரசவத்தின்போது அம்மா ஸ்தானத்துல ராஜியைத்தான் அமெரிக்காவுக்குக் கூப்பிட்டாள். அவதான், இவங்க மகளுக்கு வரன் பார்த்தாள். பெற்றோர் ஸ்தானத்துல நாங்க கல்யாணத்தை நடத்தினோம்” என்று புன்னகையுடன் கூறும் ரவீந்திரன், விழுப்புரத்திலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்.

“முதிர்ச்சியான வயதிலும் பக்குவத்திலும் எடுத்த முடிவு என்பதால், முறைப்படி கல்யாணம் செய்துக்காம சேர்ந்து வாழறோம். ஆஸ்திரேலியாவிலுள்ள மூத்த பொண்ணு வீட்டுக்கு இருவரும் ஒருமுறை போனோம். அப்போ விசா விண்ணப்பத்திலேயே, ‘உங்ககூட வருவது மனைவியா அல்லது பார்டனரா?’னு கேட்டிருந்தாங்க. பல நாடுகளில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருக்கிறவங்களை அங்கீகரிச்சு மதிப்பு கொடுக்குறாங்க. ஆனா, அந்த நிலை நம்ம நாட்டில் இல்லை. எங்களை மாதிரி வாழ்க்கைத் துணையை இழந்து இக்கட்டான சூழலில் இருக்கிறவங்க, மத்தவங்களைக் காயப்படுத்தாத, குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளக்கூடிய புது வாழ்க்கையை அமைச்சுக்கிறது நல்ல முடிவுதான்” என்னும் ரவீந்திரன் இடைவெளிவிட...

“அஞ்சு பிள்ளைகளும் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்காங்க. நாங்க சேர்ந்து இருக்கிறதால அவங்க எங்க உடல்நலம், நிம்மதி குறித்து வருத்தப்படாம நிம்மதியா இருக்காங்க. பிள்ளைங்க விருப்பத்துக்கு மாறா நடந்துக்க மாட்டோம். என் பிள்ளைகளுக்கு அப்பா ஸ்தானத்துல இவரும், இவரின் மகள்களுக்கு அம்மா ஸ்தானத்துல நானும் இருக்கோம். பிள்ளைகள் எங்களைப் பெற்றோரா அங்கீகரிச்சதால, எங்க மீதான சமூகத்தினரின் பார்வையும் நல்லபடியா மாறுச்சு” என்கிற ராஜேஸ்வரி, டெரகோட்ட நகைகள் தயாரிக்கும் சுயதொழிலில் சில பெண்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கிறார்.

நல்லதொரு குடும்பம்!