Published:Updated:

புத்துயிர்ப்பு: உயிர்த்தெழுதல்

மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட் காட்வின் ஷெல்லி
பிரீமியம் ஸ்டோரி
News
மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட் காட்வின் ஷெல்லி

மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட் காட்வின் ஷெல்லி

அசாதாரணமான பெருமழைக் காலத்தில் மேரி தன் முதல் நாவலை எழுத ஆரம்பித்தார். அது 1816-ம் ஆண்டு. அப்போது மேரியின் வயது 18. விடுமுறைக்காக ஒரு குழுவாக இங்கிலாந்திலிருந்து கிளம்பி ஜெனிவாவுக்கு வந்திருந்தார். அவரோடு மூன்று பேர். கணவரும் கவிஞருமான ஷெல்லி, கவிஞர் பைரன், மருத்துவர் ஜான் போலிடோரி. அங்கே போகலாம், இங்கே சுற்றலாம் என்று நிறைய எதிர்பார்ப்போடு இருந்தார் மேரி. எதிர்பாராதவிதமாக மழை வந்துவிட்டதால் வீட்டோடு நால்வரும் அடைந்து கிடக்கவேண்டிய நிலை. `நாம் ஏன் ஆளுக்கொரு திகில் நாவல் எழுதக் கூடாது?' என்று ஆரம்பித்து வைத்தார் பைரன்.

எல்லோரும் அவரவர் அறைக்குச் சென்றனர். மேரி தன் குழந்தையின் மீது ஒரு கண் வைத்தபடியே எழுத அமர்ந்தார். அது அவருடைய இரண்டாவது குழந்தை. முதல் குழந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது. அப்போது மேரி உற்சாகத்தோடு டைரி எழுத ஆரம்பித்திருந்தார். ‘இன்று என் குழந்தையை நான் மிகுந்த கவனத்தோடு பார்த்துக்கொண்டேன்.’ பத்து நாள்கள் கழிகின்றன. 11-வது நாள் நள்ளிரவில் மேரிக்கு விழிப்பு வருகிறது. குழந்தைக்குக் கொஞ்சம் பாலூட்டிப் பார்க்கலாமா... மேரி தயாரானார். குழந்தையோ சுகமாக உறங்கிக்கொண்டிருக்கிறது. எழுப்பலாமா என்று கணம் தயங்கினார். `சரி பாவம், உறங்கட்டும்' என்று மீண்டும் படுத்து உறங்கினார். ‘மறுநாள் காலை குழந்தை இறந்திருந்தது.’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது நடந்து பல தினங்கள் கழிந்து ஒரு நாள் கனவொன்று வருகிறது. குழந்தை படுத்திருக்கிறது. மேரி குழந்தையை நோக்கி நகர்ந்து செல்கிறார். குழந்தையிடம் அசைவில்லை. ஏன் என்று விழிக்கிறார் மேரி. குழந்தையைக் கையில் எடுக்கிறார். உடல் ஜில்லிட்டுப் போயிருப்பதை உணர்ந்து, விரைந்துசென்று இளஞ்சூட்டில் குழந்தையைக் காண்பிக்கிறார். வெப்பம் உடலுக்குள் பாய, குழந்தை மெள்ள கண்களைத் திறந்துகொள்கிறது. கையையும் காலையும் அசைக்கிறது. `ஓ, என் குழந்தை பத்திரமாகத்தான் இருக்கிறது போலும்' என்று நினைத்தபடியே கண்களைத் திறக்கிறார் மேரி. கனவு கலைகிறது.

மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட் காட்வின் ஷெல்லி
மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட் காட்வின் ஷெல்லி

ஒரு திகில் கதை எப்படி இருக்க வேண்டும்? இருள் போல அடர்த்தியாகவும் கனமாகவும் இருக்க வேண்டும். வாசிக்க வாசிக்க அந்த அடர்த்தியும் கனமும் நமக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி நம் உடலைப் பற்ற வேண்டும். நம் மூளையை மயக்கி, இதயத்தை வேக வேகமாகத் துடிக்க வைக்க வேண்டும். மலைபோல நம்மீது ஏறி நின்று அழுத்த வேண்டும். உறங்கவிடாமல், பணியாற்றமுடியாமல், சிந்திக்க இயலாமல் நம்மைப் புரட்டிப் புரட்டிப் போட வேண்டும். `இறந்துபோன என் குழந்தையை உயிர்ப்பித்து எழுப்பிக்கொண்டு வந்த என் கனவைப் போல. அதுதான் இருள். அதுதான் திகில். அதுதான் என் நெஞ்சைவிட்டு இறங்காமல் இன்னமும் போட்டு என்னை அழுத்திக்கொண்டிருக்கிறது.'

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேரியின் ‘ஃபிராங்கன்ஸ்டைன்’ 1818-ம் ஆண்டு வெளிவந்தது. எழுதியவரின் பெயர் புத்தகத்தில் இல்லை. வேண்டாம் என்று மறுத்து விட்டார் மேரி. தயக்கத்தினால் அல்லது அச்சத்தினால் என்று சொல்ல முடியாது. தன் கதை மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருவதை உணர்ந்த பிறகும், வெளிவந்த ஐந்து ஆண்டுகளில் லண்டனில் அது மேடையேறியது தெரிந்தும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை மேரி. இருள் அவரை விடுவதாக இல்லை. அடுத்தடுத்து மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து, இரண்டை அவர் அடுத்தடுத்து இழக்கவேண்டியிருந்தது. ஒரு குழந்தை மட்டுமே மிஞ்சியது. அவருமேகூட மரணத்தின் விளிம்பு வரை சென்றுவிட்டு இறுதிக்கணத்தில் மீண்டார்.

திடீரென்று வெடித்துப் பரவும் ஒரு தொற்று நோய் கிருமி ஒட்டுமொத்த மனித குலத்தையும் அழித்து ஒழிக்கிறது. இப்படியொரு பேரழிவைக் கற்பனை செய்யும் முதல் முழுநீள நாவல் இதுவே.

இறை நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் போரொன்று நடந்துகொண்டிருந்த நேரம் அது. `மனிதனை மீட்டெடுக்க இறைவன் போதும்' என்று ஒரு பிரிவினரும், `அறிவியலால் முடியாதது எதுவுமில்லை' என்று இன்னொரு பிரிவினரும் வாதிட்டுக்கொண்டிருந்தனர். தன்னைச் சுற்றி நடைபெற்றுவந்த அறிவார்ந்த விவாதங்களை மேரி உன்னிப்பாகக் கவனித்து வந்தார். அவர் அறிவியலின் பக்கம்தான் நின்றார் என்றாலும் அறிவியலைக் கடவுள் போல மாற்றி வழிபடுவதற்கு அவர் தயாராக இல்லை. `மனித அறிவைப்போலவே அறிவியலுக்கும் எல்லைகள் உண்டு' என்றார் அவர். `இல்லை, அறிவியலால் நிகழ்த்தமுடியாத அதிசயம் என்று எதுவுமில்லை இவ்வுலகில்' என்றனர் அறிவியலாளர்கள்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விக்டர் ஃபிராங்கன்ஸ்டைன் அவர்களில் ஒருவன். உடற்கூறியலை தீராத வேட்கையோடு பயின்று வரும் அவன் இதுவரை அறியாத மாபெரும் மானுட ரகசியத்தை அறிவியலின் துணைகொண்டு, தான் கண்டறிந்துவிட வேண்டும் என்று துடிக்கிறான். மனிதனுடைய பிணிகளைப் போக்கக்கூடிய ஆற்றல் அறிவியலுக்கு மட்டுமே இருக்கிறது. வெட்டுப்பட்ட விரலையோ, ஏன் கையையோ காலையோகூட அறிவியலால் மாயம்போல ஒட்டிவிட முடிகிறது. இமைக்காத கண்களை அது இமைக்க வைக்கிறது. பேசாத வாயைப் பேச வைக்கிறது. கிழிந்த துணிபோல சுருண்டிருக்கும் ஓர் உடலை அது விருட்டென்று எழுந்து, நடமாட வைக்கிறது. கடவுள் நிகழ்த்துவதாகச் சொல்லும் அனைத்து மாயங்களையும் உண்மையில் அறிவியல்தான் நிகழ்த்துகிறது. இனி அது நிகழ்த்தவேண்டிய ஒரே அற்புதம், இறந்த உடலை உயிர்ப்பிப்பது மட்டுமே. `அதை நான் செய்வேன்' என்கிறான் ஃபிராங்கன்ஸ்டைன்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித உடல் பாகங்களைச் சேகரித்து எடுத்துவந்து அவற்றை ஒன்றோடொன்று ஒட்டி, சேர்த்து உயிர் கொடுக்கும் ரகசிய முயற்சியில் இறங்குகிறான் ஃபிராங்கன்ஸ்டைன். பரிசோதனை வெற்றி பெறுகிறது. ஃபிராங்கன்ஸ்டைனின் அரக்கன் உயிர்பெற்று எழுகிறான் (எந்தப் பரிசோதனையின்மூலம் இது சாத்தியமானது என்பதை மேரி நமக்குச் சொல்லவில்லை). ஆனால், மகிழவேண்டிய விஞ்ஞானியோ அரக்கனைப் பார்த்து திகிலடைகிறான். தனக்குக் கட்டுப்பட்டு நடக்காமல், தன்னுணர்வு கொண்ட ஓர் உயிராக அரக்கன் வளர்ந்து நிற்பதை அவன் விரும்பவில்லை. மனிதனைப் போல நடந்துகொள்வது போதாதென்று, மனித சமூகத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ள முயலும் அரக்கனை ஃபிராங்கன்ஸ்டைன் எதிர்க்கிறான். அரக்கனோ தன்னை உருவாக்கியவனுக்கு எதிராகத் திரும்புகிறான். ஃபிராங்கன்ஸ்டைனுக்கு விருப்பமான அனைவரையும் கொல்கிறான். ஃபிராங்கன்ஸ்டைன் மனமுடைந்து இறந்து போகிறான். தனது கடவுள் இறந்துவிட்டதை அறிந்ததும் அரக்கன் மனம் வருந்தி காணாமல் போய்விடுகிறான்.

மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட் காட்வின் ஷெல்லி... என் பெயருமேகூட பல்வேறு துண்டு களின் கலவை போலல்லவா காட்சியளிக்கிறது? நானுமேகூட ஃபிராங்கன்ஸ்டைனின் அரக்கன் போன்ற உயிர்தானா? அம்மா, மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட் குறிப்பிடத்தக்க பெண்ணியச் சிந்தனையாளர். அப்பா வில்லியம் காட்வின் ஒரு தத்துவவியலாளர். கணவரின் பெயரிலிருந்து ஷெல்லி என்னும் துண்டை வெட்டியெடுத்து இணைத்துக் கொண்டாகிவிட்டது. எனில், நான் என்பது என் தாய், தந்தை மற்றும் கணவரின் தொகுப்பா?

தன் அரக்கனுக்குப் பெயர் எதுவும் கொடுக்கவில்லை மேரி. `எனக்கும் பெயரில்லை, நான் உருவாக்கிய பயங்கர உயிருக்கும் பெயரில்லை. இப்படியொரு படைப்பையா நான் உருவாக்கினேன்' என்று பெயரிடாமலேயே அந்த இடத்திலிருந்தே ஃபிராங்கன்ஸ்டைன் ஓடிவிடுகிறான்.

மேரிதான் அதை எழுதினார் என்பது தெரியவந்ததும், `இத்தனை சிறிய வயதில் இப்படியொரு பயங்கரத்தை ஏன் உருவாக்கினீர்கள்?' என்று பலரும் கேட்டனர். `அது நான் கற்பனை செய்து எழுதியதல்ல' என்றார் மேரி. `நான் கண்ட கனவு அது. அதை அப்படியே சொற்களில் வடித்தேன், அவ்வளவுதான்.'

அது மேரியின் கனவு மட்டுமா அல்லது அவர் கதையுமா? ஃபிராங்கன்ஸ்டைனில் பல துண்டுகள் இருக்கின்றன. அதில் ஒன்று, அநேமாக மேரியின் கதையாகவும் இருக்கக் கூடும். வாழ்க்கையின் துண்டுகள்தாம் கனவாக வளர்ந்து நிற்கிறது. துயரங்களின் தொகுப்பாக வாழ்க்கை இருக்கும்போது கனவு மட்டும் வேறாகவா இருந்துவிடும்?

மேரியின் ஃபிராங்கன்ஸ்டைன் ஒவ்வொரு மறுவாசிப்பிலும் புதிய புதிய அர்த்தங்களை அளித்துக்கொண்டே இருக்கிறது. அறிவியலின் எல்லையை அது கேள்விக்கு உட்படுத்துவதாகச் சிலர் சொல்கிறார்கள். வேறு சிலரோ அறிவியலின் எல்லையை அது தகர்த்திருக்கிறது என்கிறார்கள். செயற்கை அறிவு குறித்தும் ரோபோ தொழில்நுட்பம் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் ஃபிராங்கன்ஸ்டைனின் பெயரிடப்படாத அரக்கனிடமிருந்து நுணுக்கமான பாடங்களைக் கற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்கள்.

எடுத்துக்காட்டுக்கு, அணுகுண்டு என்பது என்ன? உருவாக்குபவர்களையே அழிக்கும் ஆற்றல்கொண்ட ஃபிராங்கன்ஸ்டைனின் அரக்கன்தானே அது? மனிதன் உருவாக்கிய ரோபோ மனிதனின் வாழ்வாதாரத்தையே பறிப்பதை வேறு எந்த நூலைக் கொண்டு நாம் விவாதிக்க முடியும்? அறிவியலாளர்கள் பொறுப்புமிக்கவர்களாக இருக்க வேண்டும். அவர்களுடைய சிந்தனைகள் அறம் சார்ந்தும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றல்லவா வலியுறுத்துகிறார் மேரி... இந்த விதியை யார் மீறினாலும் அவர்களிடமிருந்து ஓர் அரக்கன் வெளியில் வந்துவிடுவதை நாம் இன்றும் பார்க்கிறோம்தானே!

அமெரிக்கப் பண்பாட்டு வரலாற்றில் ‘ஃபிராங்கன்ஸ்டைன்’ அசைக்கமுடியாத ஓரிடத்தைப் பெற்றிருக்கிறது. மேரி எழுதிய மற்றொரு மறக்கமுடியாத நாவல் ‘கடைசி மனிதன்’. கதை நடப்பது 21-ம் நூற்றாண்டில். திடீரென்று வெடித்துப் பரவும் ஒரு தொற்று நோய் கிருமி ஒட்டுமொத்த மனித குலத்தையும் அழித்து ஒழிக்கிறது. இப்படியொரு பேரழிவைக் கற்பனை செய்யும் முதல் முழுநீள நாவல் இதுவே. இதை எழுதி வெளியிடும்போது மேரியின் வயது 29. அதற்குள் அவர் நேசித்த அனைவரும் ஒவ்வொருவராக அவர் கண் முன்னால் இறந்துபோகிறார்கள். தனது ஒரே குழந்தையோடு மேரி எஞ்சி நிற்கிறார்.

அந்த நோய் கிருமி எங்கிருந்து வெடித்து வந்தது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. அரசாங்கங்கள் அதைக் கண்டு அஞ்சுகின்றன. ‘அமெரிக்காவின் பெரும் நகரங்களும் இந்துஸ்தானின் செழிப்பான நிலங்களும் சீனர்களின் ஆரவாரமிக்க வீதிகளும் முழு அழிவைச் சந்திக்கின்றன’ என்கிறார் மேரி. ‘இறுதியில் இங்கிலாந்துக்கும் கொள்ளை நோய் வந்துசேர்கிறது. பூமியில் எங்கும் ஒளிவதற்கு இடமில்லை. உலகமே கொள்ளை நோயாக மாறிவிட்டிருக்கிறது.’

ஒரேயொரு மனித உயிர் எஞ்சி நிற்கிறது. இத்தனை அழிவையும் பார்த்து தீர்த்த அந்த மனிதன் என்ன செய்யப்போகிறான்? ‘நான் ஒரு புத்தகத்தை எழுதுவேன்’ என்கிறான். மேரியைப் போல. ‘அந்தப் புத்தகத்தை வாசிக்க ஒருவரும் இருக்கமாட்டார்கள். இருந்தாலும் நான் எழுதுவேன். அது இறுதி மனிதனின் கதையாக இருக்கும்!’