Published:Updated:

``என் வளைகாப்பும் அப்படித்தான் நடந்தது!" - காதல் கதைகள் பகிரும் ரியல் `ஏகத்வம்' குடும்பங்கள்

Marriage (Representational Image)
Marriage (Representational Image) ( Photo by Jayesh Jalodara on Unsplash )

ஒரு புனைவு விளம்பரம் ஜனநாயக நாடான இந்தியாவில் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிற நிலையில், நிஜ வாழ்வில் மதங்கள் கடந்து இணைந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

டாடா நிறுவனத்தின் தனிஷ்க் ஜுவல்லரி விளம்பரம், நாட்டின் சமீபத்திய சர்ச்சை. இஸ்லாமிய மாமியார், கர்ப்பிணியான தன் இந்து மருமகளுக்கு இந்து முறைப்படி வளைகாப்பு நடத்துவதுதான் அந்த விளம்பரம்.

`அன்பின் பிணைப்பால் நாம் ஒரு முனையை மற்றொரு முனையுடன் இணைப்போம். வலுவான பிணைப்போடு அவற்றை ஒன்று சேர்ப்போம்' என்ற வாய்ஸ் ஓவருடன், ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக அழகியலுடன் எடுக்கப்பட்ட விளம்பரம் அது.

marriage
marriage

ஆனால், இதற்கு ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ``இது லவ் ஜிஹாத்தை ஆதரிப்பதுபோல் உள்ளது" என்று குற்றம் சுமத்தினர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்த எடுக்கப்பட்ட விளம்பரத்தை, ``இது மத வெறுப்பைத் தூண்டும்" என்றனர். #BoycottTanishq என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கினர். விளைவாக, அனைத்து தளங்களிலிருந்தும் தன் விளம்பரத்தைத் திரும்பப் பெற்றது தனிஷ்க் நிறுவனம். அது குறித்த வருத்தமான தனது அறிக்கையையும் வெளியிட்டது.

இரு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வது போன்ற ஒரு புனைவு விளம்பரம், ஜனநாயக நாடான இந்தியாவில் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிற நிலையில், நிஜ வாழ்வில் தங்கள் மதங்கள் கடந்து இணைந்தவர்கள் இதுகுறித்து என்ன சொல்கிறார்கள்?

எஸ்.சாந்தினி பீ, வரலாற்றுத்துறை பேராசிரியர், மூத்த பத்திரிகையாளர் ஆர்.ஷபிமுன்னாவின் மனைவி, உத்தரப்பிரதேசம்

``நான் பாரம்பர்ய இந்து குடும்பத்தில் பிறந்தவள். என் கணவர் குடும்பமும் என் குடும்பமும் நண்பர்கள். ஒருகட்டத்தில் நானும் என் கணவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தபோது எங்கள் வீடுகளில் தெரிவித்தோம். எதிர்ப்பு இல்லையென்றாலும் முழுமையான சம்மதமும் இல்லை. திருமணப் பேச்சுவார்த்தைக்கு பெற்றோர் வந்தனர். நான் என் முடிவில் தீர்மானமாக இருந்ததால் `உன் விருப்பம்' என்று சொல்லிவிட்டனர்.

இஸ்லாம் மதத்துக்கு மாறி, சாமுண்டீஸ்வரி என்ற என் பெயரை சாந்தினி பீ என்று மாற்றித் திருமணம் செய்துகொண்டோம். குடும்பத்தில் எனக்கு மிகப்பெரிய ஆதரவு என் மாமியார்தான். என் உணர்வுகளைப் புரிந்து நடந்துகொள்வார். திருமணமாகி எங்களுக்கு முதல் பக்ரீத். சேலத்தில் இருக்கிற மாமியார் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். பண்டிகைக்காக வீட்டில் ஆடு வெட்டினார்கள். குடும்பமாக பங்கேற்கிற நிகழ்வு அது. ஆனால், என் மாமியார் என்னிடம் வந்து, `உனக்கு இதெல்லாம் பாத்துப் பழக்கமிருக்காது. அதனால, இந்த ரூமுக்குள்ள போய் இருந்துக்கோ' என்று சொன்னார்.

Shafi Munna and S.Chandini Bi
Shafi Munna and S.Chandini Bi

மேலும், யாருக்கும் தெரியாமல் சாப்பாடு கொண்டுவந்து ரூம்குள்ளேயே கொடுத்துவிட்டுப் போனார். ஆடு வெட்டும் நிகழ்வு முடிந்து இரவானதும், வீட்டில் செய்த சாப்பாட்டை நான் ஒரு வாயாவது சாப்பிட வேண்டும் என்று வீட்டிலிருந்தவர்கள் ஆசைப்பட்டார்கள். ஆனால் என் மாமியார், ``இல்ல அவளுக்கு இந்தச் சாப்பாடெல்லாம் ஒத்துவராது. போய் ஹோட்டல்ல டிபன் வாங்கிக் கொடுங்க" என்று சொல்லிவிட்டார்.

வீட்டு அரசியலை எப்படி கையாள வேண்டும் என்று என் மாமியார்தான் எனக்குக் கற்றுத்தந்தார். ``வீட்டுல அண்ணன், தம்பிக்குள்ள பிரச்னை வந்துச்சுன்னா அதுல நீ நுழையாத. ஏதாவது மனஸ்தாபம் வந்துடுச்சுன்னா, நாளைக்கு அவங்கயெல்லாம் அண்ணன், தம்பினு சேர்ந்துப்பாங்க. உனக்கு மனசு ஒட்டாது. அதனால உன்கிட்ட யாராவது வந்து உன் கணவரைப் பத்தி புகார் சொன்னாலோ, பிரச்னையைப் பத்தி பேசினாலோ, எதுவானாலும் என் கணவர்கிட்ட பேசிக்கோங்கனு சொல்லிடு" என்பார்.

மாற்று மதத்தில் திருமணம் செய்துக்கொண்ட பெண்ணுக்கு அவருடைய மாமியார் சீமந்தம் செய்வது போன்று வெளியான நகைக்கடை...

Posted by Aval Vikatan on Saturday, October 17, 2020

அதேபோல, குடும்பத்தில் என்னை யாரும், எதுவும் நேரடியாகச் சொல்ல விடமாட்டார். ``என்கிட்ட சொல்லுங்க, நான் பாத்துக்குறேன்" என்பார். அதேபோல, எனக்கு ஏதாவது பிரச்னை என்றாலும் அவரிடம்தான் முதலில் சொல்வேன். இப்படி, வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் என்னையும் என் உணர்வுகளையும் என் புகுந்த வீட்டில் புரிந்துகொண்டு நடந்த பல நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

Shafi Munna and S.Chandini Bi and their kids
Shafi Munna and S.Chandini Bi and their kids

திருமணம் முடிந்து 27 வருடங்கள் ஆகின்றன. மதம் எங்கள் சந்தோஷத்துக்கு ஒருநாளும் தடையாக இருந்ததில்லை. இப்போது நடக்கும் பிரச்னைகளைப் பார்க்கும்போது, வரலாற்றுப் பேராசிரியராகவும், மாற்று மதத்தில் திருமணம் செய்தவள் என்ற வகையிலும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இந்த உலகத்தில் தூய்மையான இன, மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது. உலகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்து வந்து கலந்தவர்கள்தாம் நாம் அனைவரும். மத உணர்வுகளை வைத்து அரசியல் லாபத்துக்காகச் சிலர் செய்யும் விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் இளைய சமுதாயத்தினருக்கு என் அறிவுரை."

இந்திரா, வழக்கறிஞர் - அப்துல் கபூர், வழக்கறிஞர் - சிவகங்கை

``சேலம் சட்டக் கல்லூரியில் படிச்சப்போ எனக்கும் இந்திராவுக்கும் காதல் ஏற்பட்டது. அவங்க சொந்த ஊர் கோவில்பட்டி, எனக்கு சிவகங்கை. அவங்க இந்து, நான் முஸ்லிம். படிப்பை முடிச்சிட்டு நாங்க வழக்கறிஞரா பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சோம். திருமணப் பேச்சு வந்தப்போ, மனைவி வீட்டில் எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கலை; எங்க வீட்டுல சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கொஞ்ச நாள் இங்கயிருந்துட்டு, குடும்பத்தோடு சவுதி போயிட்டோம். 15 வருஷம் அங்கதான் இருந்தோம். மீண்டும் ஊருக்குத் திரும்பி, சில பிசினஸ் ஆரம்பிச்சு பார்த்துட்டு இருக்கேன்.

marriage
marriage

இத்தனை வருஷ வாழ்க்கையில மதம் ஒரு பிரச்னையா எங்களுக்கு இடையில இருந்ததேயில்ல. சொல்லப்போனா, காதல் திருமணம் செய்துகிட்டதால மனைவியை நல்லா வெச்சு, எல்லாருக்கும் முன்னாடி நல்லா வாழணும்ங்கிற உத்வேகம் இருந்துகிட்டே இருக்கும். அதனாலதான் என் கடுமையான உழைப்பால வாழ்க்கையில இன்னைக்கு நாங்க நல்லபடியா இருக்கோம். எங்களுக்கு மூணு பொண்ணுங்க. மூத்த பொண்ணு டாக்டருக்குப் படிக்கிறா, ரெண்டு பொண்ணுங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க. இப்போவரை என் மனைவி பெயர் இந்திராதான். என் மூணு கார்லயும் கபூர் - இந்திரானுதான் எழுதியிருப்பேன். பார்க்கிறவங்க எல்லாம் ஆச்சர்யமா விசாரிப்பாங்க.

என் மாமனார், கடைசிவரை எங்களை ஏத்துக்கலை. அவர் பொண்ணை எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்கணும்னுதான் எப்பவும் நினைப்பேன். என் மாமனார் இறந்ததுக்கு அப்புறம் என் மனைவி குடும்பம் ஓரளவு இணக்கமா இருக்காங்க. மனைவியின் தம்பியை, என் பிசினஸுக்குள்ள கொண்டு வந்துட்டேன். மாமன், மச்சான்னு நல்லாருக்கோம். இவ்ளோதான் வாழ்க்கை. மத வழிபாட்டு முறைகள் வேறு வேறா இருந்தாலும், மனுஷங்க எல்லாரும் ஒண்ணுதானே'' என்றவரை தொடர்ந்தார் இந்திரா.

``அந்த விளம்பரத்துல காட்டியதுபோலதான், என் கணவர் வீட்ல எனக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா, இந்த விளம்பரத்துல அப்படி ஒரு அழகான தருணம் இடம்பெற்றதை சர்ச்சையாக்குறது அதிர்ச்சியா இருக்கு. பொதுவா, இதுபோன்ற இந்து - முஸ்லிம் பிரச்னைகள் சார்ந்த நாட்டு நடப்புகளை எல்லாம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்கும்போது வருத்தமா இருக்கும். ஒருமைப்பாட்டுக்கு உதாரணமா நாங்க வாழ்ந்து காட்டுறோம்.

marriage
marriage
̀`இந்தியா என்ற ஜனநாயகத்தின் முரண்பாடு!' கும்பல் கலாசாரத்திற்கு பணிந்த தனிஷ்க் #TanishqEkatvam

வீட்டுல எங்களுக்குள்ள ஏதாச்சும் சண்டை வந்தா விட்டுக்கொடுக்கிறது அவர்தான். என்னோட சின்னச் சின்ன சென்டிமென்ட்களுக்கும் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். பல தடைகளைத் தாண்டி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டதால, வழக்கத்தைவிட கூடுதல் அன்பு, பொறுப்புனு இருக்கார் என் கணவர். ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.''

அடுத்த கட்டுரைக்கு