Published:Updated:

மைக் பிடித்த கையில் கரண்டி... கைமணத்தில் அசத்தும் - ஆர்.ஜே விஷ்ணு

இது வேற லெவல்

பிரீமியம் ஸ்டோரி
‘தயக்கம்’ - இந்த ஒற்றைச் சொல், பலரின் விடியல்களை இருட்டாகவே நீளச்செய்து கொண்டிருக்கிறது. `தயக்கம் என்கிற மனத்தடையை மீறி செயலுக்குள் இறங்கிவிட்டால், சுவைப்பது வெற்றியாகத்தான் இருக்கும்' என்று நிரூபித்திருக்கிறார் விஷ்ணுப்ரியா.

`ஆர்.ஜே விஷ்ணு’ என்ற பெயர்தான் ரேடியோவாசிகளுக்குப் பரிச்சயம். பத்து ஆண்டுகள் பிரபலமான இரண்டு எப்.எஃம் சேனல்களில் பணியாற்றியவர். இடையில் செய்தி வாசிப்பாளராகவும் சின்னத்திரை நடிகையாகவும் முகம்காட்டியவர். ‘வாட் நெக்ஸ்ட்...’ என்ற சிந்தனை எழுந்ததால், கைகளில் பற்றியிருந்த மைக்கை வைத்துவிட்டு கேட்டரிங் தொழில் தொடங்கி கரண்டியைப் பிடித்திருக்கிறார். அதுவும், உலகையே முடக்கிப்போட்டிருக்கும் கொரோனா ஊரடங்கு நேரத்தில்.

`நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு. திடீர்னு ஏன் இந்த முடிவு?' - கேள்வியை முடிக்கும் முன்னரே, “நான் உணவுப் பிரியை. பிடித்த உணவுகளைத் தேடித்தேடிச் சாப்பிடறது வழக்கம். அப்பல்லாம், ‘ஏன் இப்படி அநியாய விலை வைக்கிறாங்க... ஹோட்டல் பிசினஸ் பண்ணினா நல்லா லாபம் சம்பாதிக்கலாம் போல’ என்று நினைத்துக்கொள்வேன். அப்போதே `நியாயமான விலையில் தரமான உணவை வழங்கும் ஹோட்டல் ஒன்றைத் தொடங்க வேண்டும்' என்ற பொறி மனத்துக்குள் விழுந்துவிட்டது. மூன்று ஆண்டுகளாகவே அது உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்தது.

விஷ்ணுப்ரியா
விஷ்ணுப்ரியா

செயலாக்கத் துணிந்தபோது, என் கணவர் தந்த ஓர் எச்சரிக்கை, ‘பெரிய அளவில் தொழில் தொடங்க வேண்டும் என்று கடன் வாங்கி அதிகமாக முதலீடு செய்து மாட்டிக்கொள் ளாதே. கையிலிருப்பதைப் பயன்படுத்தினாலே போதும். நஷ்டம் வந்தாலும் அப்போதுதான் சமாளிக்க முடியும்’ என்பதுதான். இந்த எச்சரிக்கையோடுதான் கால்வைத்தேன்.

ஆரம்பக்கட்ட வேலைகளைத் தொடங்கிய நேரத்தில்தான் கொரோனா ஊரடங்கு. அதனால் ஹோட்டல் என்கிற முடிவை மாற்றி, ‘டேக் அவே’ மட்டும் வழங்கலாம்; அதற்கான கிச்சனை 1000 சதுர அடி கொண்ட என் வீட்டு மொட்டை மாடியிலேயே உருவாக்கலாம் என்று நினைத்தேன். ஊரடங்கு காரணமாக துரிதமாக வேலைகளை முடிக்க முடியவில்லை. ஒருவழியாக கிச்சன் தயாரான நேரத்தில், ரேடியோ நிறுவனத்திலிருந்தும் சிறிய பிரேக் கொடுத்துவிட்டார்கள். இதுதான் சரியான தருணம் என ‘கைமணம்’ என்ற பெயரில் ஹோட்டலைத் தொடங்கிவிட்டேன்” என்று விவரிக்கும் விஷ்ணு, தனக்கு அனுபவமில்லாத துறை என்பதால்... மேடு, பள்ளம் எனத் தடுமாறத்தான் செய்திருக்கிறார்.

“ஹோட்டல் தொடங்கிய முதல்நாளே பெரிய ஏமாற்றம். ஒரு ஆர்டர்கூட வரவில்லை. இரவு வரை பார்த்துவிட்டு, தயாரித்துவைத்திருந்த உணவையெல்லாம் சாலையோரம் வசிப்பவர் களுக்குத் தன்னார்வ நிறுவனத்தின் மூலம் கொடுத்துவிட்டோம். அதற்குப் பிறகுதான் தெரிந்தது, எங்களுடைய `கைமணம்' ஸ்விக்கி, ஸோமெட்டோ ஆப்களில் ஆக்டிவேட் ஆகவே இல்லை என்று'' எனச் சொல்லும் விஷ்ணுப்ரியா அதைச் சரி செய்துவிட்டு நிமிர்ந்தால், வேறு ரூபத்தில் பிரச்னைகள்.

விஷ்ணுப்ரியா
விஷ்ணுப்ரியா

``வேலையிலிருந்த சமையல் மாஸ்டர், ஏற்கெனவே தயாரித்த பழைய உணவுகளைச் சூடாக்கிக்கொடுப்பது, புதிதாகத் தயாரித்த உணவுடன் பழைய உணவைச் சேர்ப்பது என்று இருந்தார். அவரை அனுப்பிவிட்டு, நானே கிச்சனில் இறங்கினேன். ஃபிரெஷ் உணவுப் பொருள்களை வாங்கினேன். மீன், இறால் என நாள்தோறும் பட்டினப்பாக்கம் சென்று வாங்கிச் சமைத்தேன். ஊரடங்கு நேரத்தில் வெளியில் சாப்பிடவே தயங்கும் போது, தரமான உணவைக் கொடுப்பதால் ஒரு மருத்துவரே எங்கள் வாடிக்கையாளராகி விட்டார். உணவு மிகவும் நன்றாக இருக்கிறது என்று நெகிழ்ந்து மெசேஜும் அனுப்பினார்’’ - சந்தோஷம் பகிர்கிறார் விஷ்ணுப்ரியா.

ஒரு பெண், அடுத்து இரட்டை ஆண் குழந்தைகள் என மூன்று குழந்தைகள். நாள் முழுவதும் ஹோட்டல் பணிகளை கவனிப்பதால், குழந்தைகளை உறவினர்கள் பொறுப்பில் விட்டிருக்கிறார் விஷ்ணுப்ரியா.

மைக் பிடித்த கையால் கரண்டியைப் பிடித்தபோது வருத்தம் தோன்றியதா?

“ஹோட்டல் தொடங்கிய நான்கைந்து நாள்கள் மிகவும் அழுத்தமாகவும் வருத்தமாகவும் உணர்ந்தேன். பொதுவாகத் தொட்டதற்கெல் லாம் எனக்குக் கண்ணீர் வந்துவிடும். ஆரம்ப நாள்களில் எல்லாமே குழப்பாகத் தெரிந்தது. நாள்கள் செல்லச் செல்ல வேலை என்னை முழுவதுமாக ஆக்கிரமித்ததால் கவலைப் படுவதற்கே நேரமில்லாமல் போய்விட்டது. என்னிடம் பேசும் சக ஆர்.ஜேக்கள் பலரும், `ஹோட்டல்தான் எங்களுக்கும் நீண்ட நாள் ஆசை. நாங்கள் தயங்கி நிற்கிறோம். நீ துணிந்துவிட்டாய்' என்று பாராட்டுகிறார்கள். அடுத்ததாக இன்னுமொரு கிளை தொடங்கவும் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். களத்தில் இறங்கிப் பணியாற்றவேண்டிய நேரமிது” என்று சந்தோஷத்துடன் கரண்டியைக் கையில் எடுத்தார் மாஸ்டர் விஷ்ணுப்ரியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு