Published:Updated:

அம்மா... அம்மா.. அம்மம்மா...

காயத்ரி - சுசித்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
காயத்ரி - சுசித்ரா

அன்புள்ள அம்மாக்கள்

24 மணி நேரம் ஹெச்டி மேக்கப்பில் வலம் வரும் அம்மாவில் தொடங்கி, நடமாடும் கிளிசரின் ஃபேக்டரியாக சோகம் பிழிபவர்வரை சீரியல் அம்மாக்கள் பலவிதம். அப்படிச் சில அம்மாக்களிடம் ரீல் - ரியல் கேரக்டர் பற்றிப் பேசினோம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரெண்டு பெட்ரூம் நிறைய புடவை கலெக்‌ஷன் வெச்சிருக்கேன்! - டாக்டர் ஷர்மிளா

சன் டிவி-யில் `ரோஜா', `சந்திரலேகா' என்று இரண்டு சீரியல்களில் செண்பகம், வசுந்தரா என்ற பெயர்களில் கதாநாயகிகளின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டாக்டர் ஷர்மிளா.

`நீங்க நல்லவங்களா, கெட்டவங்களா' என்ற கேள்வியுடன் பேசத் தொடங்கினோம்...

“ `ரோஜா' சீரியல்ல வர்றது மாதிரி அவ்ளோ சாதுவும் கிடையாது. `சந்திரலேகா'வில் வர்றது மாதிரி நெகட்டிவ்வான ஆளும் கிடையாது. சீரியல் கேரக்டரை நிஜ வாழ்க்கையோட எப்பவும் கம்பேர் பண்ண முடியாது. ஒண்ணு ரொம்ப நல்லவங்களா காட்டுவாங்க, இல்லைன்னா ரொம்ப கொடூரமா காட்டுவாங்க. க்ரே ஏரியான்னு ஒண்ணு சீரியல்ல கிடையவே கிடையாது” என்பவர் நிஜத்தில் 16 வயது மகளின் சூப்பர்மாம்.

டாக்டர் ஷர்மிளா
டாக்டர் ஷர்மிளா

“என் மகள் ரித்விகாதான் என்னோட முதல் க்ரிட்டிக். என் நடிப்பு நல்லா இருக்கா, இல்லையாங்கிறதைப் பட்டுன்னு சொல்லிட்டுப் போய்டுவா. அவளோட ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ்கூட நான் வில்லியா நடிக்கிற சீரியல் பார்த்துட்டு என்கிட்ட பேசவே பயப்படுவாங்க. என் பொண்ணுதான் எங்கம்மா ரொம்ப ஜாலியா பேசுவாங்கன்னு சொல்லி வீட்டுக்குக் கூட்டிட்டு வருவா. ஒரு தடவை வீட்டுக்கு வந்து என்கிட்ட பேசிட் டாங்கன்னா அப்படியே ஜெல் ஆகிடுவாங்க”

- முதல் சந்திப்பிலேயே நம்முடனும் ஜெல் ஆகிவிட்ட ஷர்மிளாவின் சேலைகளும் நகைகளும் எப்போதும் கவனம் ஈர்ப்பவை.

“ஸ்பான்சர் கொடுக்கிற காஸ்ட்யூம்ஸை அழுக்கு படாம பாத்துக்கணும், பத்திரமா ரிட்டர்ன் பண்ணணும்னு ஏகப்பட்ட தலைவலி. அதனால என்னோட காஸ்ட்யூம்ஸ், நகைகள்தான் ஷூட்டிங்ல பயன்படுத்துறேன். அதுக்காகவே ரெண்டு பெட்ரூம் நிறைய கலெக்‌ஷன்ஸ் வெச்சிருக்கேன். என் பொண்ணு உன் பெட்ரூமை நிரப்புனது பத்தாதுன்னு என்னோடதையும் நிரப்ப வந்துட்டியான்னு கலாய்ப்பா. எனக்கு பட்டுப்புடவைதான் கிஃப்ட்டா கொடுக்கணும்னு என் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும்” என்று யாருக்கோ ஹின்ட் கொடுக்கிறார்.

“என்னோட படிச்ச சக மருத்துவர்களுடன் 28 வருஷமா தொடர்பில இருக்கேன். எங்க வாட்ஸ்அப் குரூப்ல தினமும் கோவிட்-19 பத்தின அப்டேட்ஸ் வந்துட்டே இருக்கும். அதனால என் கூட வேலை செய்யுறவங்களை எப்பவும் எச்சரிச்சுக்கிட்டே இருப்பேன்” என்று பொறுப்புடன் முடித்தார் டாக்டரம்மா.

மேக்கப் ரொம்ப போர்! - காயத்ரி

`ராசாவே உன்னை விட மாட்டேன்...' என ‘அரண்மனைக் கிளி’ படத்தில் விழிகளால் பேசிய காயத்ரியை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கோகுலத்தில் சீதை' சீரியலில் ஹீரோவின் அம்மாவாக சுசித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

“யூடியூப்ல நான் நடிச்ச பழைய படங்களின் வீடியோ பாடல்களுக்கு கீழேயிருந்த பாசிட்டிவ் கமென்ட்ஸைப் பார்த்ததும் என் பிள்ளைங்க மறுபடியும் நீங்க நடிக்கணும்னு சொன்னாங்க. எனக்கும் சரின்னு பட்டுச்சு. கோகுலத்தில் சீதை வாய்ப்பு வந்ததும் நடிக்க வந்துட்டேன்”

- பல வருட ஃபிளாஷ்பேக்கை சட்டென்று முடித்தார்.

“என்னுடைய முதல் அறிமுகம் இந்தி சீரியல். அதுக்கப்புறம்தான் படங்கள்ல நடிச்சேன். இப்போ மறுபடியும் சீரியலுக்கு வந்துட்டேன். சீரியல்ல காலைல 8.30 மணிக்கெல்லாம் கேமரா லோடு ஆயிடும். ஷூட்டிங் முடியுறதுக்கும் ராத்திரி ஆயிடுது. சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சப்போ இதெல்லாம் எனக்குப் புதுசா இருந்துச்சு. போகப் போக பழகிடுச்சு. கோகுலத்தில் சீரியல் யூனிட்டில் இருந்த எல்லாரும் என்கிட்ட நல்லா பழகுனதால சீக்கிரம் செட்டாயிட்டேன்” என்றவரிடம் சீரியலில் சாந்தமான அம்மா கேரக்டர், நிஜத்தில் நீங்க எப்படி என்றோம்.

“நிஜத்திலும் சீரியலிலும் ரெண்டு பிள்ளைங்க. ரெண்டுலயும் நான் பாசமான அம்மாதான்'' எனும் காயத்ரிக்கு மேக்கப் போடுவதில் பெரிய ஈடுபாடு கிடையாதாம்.

“அது ரொம்ப போர். ஷாப்பிங், அவுட்டிங்னு எங்கே போனாலும் லிப்ஸ்டிக், காஜல்கூட போட மாட்டேன். கையில கிடைக்கிற டிரஸ்ஸ போட்டுட்டு ஒரு கொண்டையப் போட்டுட்டுப் போயிடுவேன். என் பொண்ணுதான் ‘‘ரசிகர்கள் எல்லாம் உன்னோட செல்ஃபி எடுக்கிறாங்க. அதுக்காகவாவது நல்லா மேக்கப் போட்டுட்டு வாயேன்’’னு திட்டுவா. இப்போதும் என் கண்களை வெச்சுதான் அடையாளம் கண்டுபிடிக்கிறாங்க. என்னை ‘அரண்மனைக் கிளி’ படத்தின் கதாநாயகியாதான் ஞாபகம் வெச்சிருக்காங்க. அதுல எனக்கும் சந்தோஷம்தான்”

- கண்களால் சிரிப்பவருக்கு சீரியலைத் தொடர்ந்து படங்களிலும் வாய்ப்புகள் வெயிட்டிங்காம்.

காயத்ரி - சுசித்ரா
காயத்ரி - சுசித்ரா

நம்புங்க... நிஜத்திலும் நான் சாஃப்ட்தான்! - சுசித்ரா

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் `பாக்கியலட்சுமி' சீரியலின் பாக்கியலட்சுமி கதாபாத்திரமும். சாந்தமான முகமும் பாந்தமான குணமுமாக கவனம் ஈர்க்கிறார் சுசித்ரா.

கன்னடம், தெலுங்கில் திரைப்படங்கள், சீரியல்களில் நடித்துள்ளார். இந்தியில் மூன்று ஆர்ட் படங்களிலும் தமிழில் சைவம், நிமிர் படங்களிலும் அவரைப் பார்த்திருக்கலாம்.

“நான் பாக்கியலட்சுமி சீரியல் கமிட்டான புதுசுல எனக்கு இவ்ளோகூட தமிழ் வராது. டயலாக் பேசிப்பேசியும், சக நடிகர்கள் பேசுறதைக் கேட்டும்தான் இந்த அளவாவது பேசுறேன். என் தாய்மொழி தெலுங்கு. ஆனா, கன்னடத்தில்தான் அதிகம் நடிச்சிருக்கேன். தமிழில் பாக்கியலட்சுமிதான் என் முதல் சீரியல். அடிப்படையில் நான் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். 18 வயசிலேருந்து திரைப் படங்களில் நடிக்கிறேன்”

- சுந்தரத் தெலுங்கும் அழகிய தமிழும் கலந்து பேசும் சுசித்ரா, தற்போது பெங்களூரில் வசிக்கிறார். ஷூட்டிங்கின்போது மட்டும் சென்னைக்கு வந்து செல்கிறாராம்.

“சீரியலில் நீங்கள் பார்க்கிறது மாதிரி நேரிலும் நான் பொறுமைசாலிதான். சின்ன வயசுலேயே என் தாத்தா சின்மயா மிஷனுக்குக் கூட்டிட்டுப் போவார். அங்கேயும் ராமகிருஷ்ணா மிஷன்லயும் தன்னார்வலரா இருந்திருக்கேன். இப்போதும் மணப்பாக்கம் ராமச்சந்திரா மிஷன் பக்தை. தியானம் பண்ணுவேன். அதுதான் முகத்தில் நீங்கள் பார்க்கும் சாந்தத்துக்குக் காரணம். `சைவம்' படம் பார்த்துட்டுதான் எனக்கு இந்த சீரியல் வாய்ப்பு வந்தது. நடிச்சு முடிச்சதும் உடனே கிளம்பி பெங்களூருக்கு வந்துடுவேன்.

வழக்கம்போல் ஷூட் முடிஞ்சு ஒருநாள் பெங்களூருக்குப் போயிட்டிருந்தபோது ஓரிடத்தில் வண்டியை நிறுத்தியிருந்தோம். நான் முகத்தில் மாஸ்க் போட்டிருந்தேன். ஆனாலும், சில ரசிகர்கள் என் கண்ணைவெச்சு அடையாளம் கண்டுபிடிச்சு ரொம்ப நேரம் பேசிட்டிருந்தாங்க. முகமே தெரியாத சூழலிலும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சது ரசிகர்கள் என்மீது வெச்சிருக்கும் அன்பைக் காட்டுது” என்று கண்கள் விரியப் பேசுகிறார்.சுசித்ராவின் கணவர் வெளிநாட்டில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க் கிறார். ஒரே மகள் யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

“சீரியல்ல எனக்கு மூணு பிள்ளைங்க. அவங்க மூணு பேரும் என்னை மம்மினுதான் கூப்பிடுவாங்க. சில நேரம் என் மகள், ‘மூணு பிள்ளைங்க இருக்காங்கன்னு... நீ என்னை கவனிக்கவே மாட்டேங்குறே'னு செல்லமாக் கோவிச்சுக்குவா” எனும் சுசித்ராவுக்கு தமிழில் சரண்யா பொன்வண்ணன் மாதிரி அழுத்தமான அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசையாம்.

“எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போதுதான் ஏமாற்றங்கள் வரும். அதனால அதிக எதிர்பார்ப்புகளை வெச்சுக்க மாட்டேன். எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துப்பேன்''

- மென்சிரிப்போடு மெசேஜ் சொல்கிறார் இந்த மம்மி.