Published:Updated:

நெருக்கமான காட்சிகள்... நெருடலான சூழல்...

 ஜெயலட்சுமி சுந்தரேசன்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலட்சுமி சுந்தரேசன்

நட்சத்திரங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் இன்டிமஸி கோ ஆர்டினேட்டர்

நெருக்கமான காட்சிகள்... நெருடலான சூழல்...

நட்சத்திரங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் இன்டிமஸி கோ ஆர்டினேட்டர்

Published:Updated:
 ஜெயலட்சுமி சுந்தரேசன்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலட்சுமி சுந்தரேசன்

‘மீ டூ’ விஷயம் 2006-ல் முதன் முதலாக வெளிச்சத்துக்கு வந்தாலும், அதை உலக அளவில் வைரலாக்கியது சினிமாத்துறை. அமெரிக்க நடிகை அலிஸா மிலானோ, தயாரிப்பாளர் ஹார்வே வெயின் ஸ்டீன் மீது வைத்த குற்றச்சாட்டுதான் அந்தத் தீயை பற்றி எரியச் செய்தது. அடுத்தடுத்து பல்வேறு துறைகளிலிருந்தும் மீ டூ புகார்கள் புற்றீசல்கள் போல கிளம்பின.

இன்றளவும் திரைத்துறையில் திடீர் திடீரென மீ டூ புகார்கள் வெடித்துக் கிளம்பிக் கொண்டுதான் இருக்கின்றன. படப்பிடிப்புக் காட்சிகளில் நடிகர் அத்துமீறினார், என் சம்மதமின்றி காட்சிகளில் அதீத நெருக்கம் காட்டினார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக் கிறது ‘இன்டிமஸி கோ ஆர்டினேஷன்’ என்கிற புதிய துறை. ஹாலிவுட்டில் பிரபல மான இந்தத் துறை, சமீபத்தில் இந்திய சினிமாவுக்குள்ளும் வந்திருக்கிறது. இந்தியா வில் இதுவரை மூன்று பேர் இன்டிமஸி

கோ ஆர்டினேட்டர்களாக அறியப்படு கிறார்கள். அவர்களில் சென்னையைச் சேர்ந்த ஜெயலட்சுமி சுந்தரேசனும் ஒருவர்.

காஸ்டியூம் டிசைனர், தொழிலதிபர், பயண ஆர்வலர் எனப் பன்முகம் கொண்டவர் ஜெயலட்சுமி. ஆரம்பம் முதல், தன் புதிய அவதாரமான ‘இன்டிமஸி கோ ஆர்டினேஷன்’ வரை பேசுகிறார் அவர்.

நெருக்கமான காட்சிகள்... நெருடலான சூழல்...

‘`சென்னைப் பொண்ணு நான். சின்ன வயசுல எந்த லட்சியமும் இல்லாமதான் வளர்ந்தேன். படிக்கணும்... கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கையில செட்டிலா யிடணும்... என் சிந்தனை இப்படித்தான் இருந்தது. விஸ்காம் படிப்பு அறிமுகமான புதுசு. அதைப் பத்தி பெருசா தெரியாமலேயே படிச்சேன். ‘சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு... நமக்கு அதெல்லாம் சரியா வராது... ஞாபகம் இருக்கட்டும்’னு வீட்ல சொன்னாங்க. அந்த கண்டிஷனை ஏத்துக்கிட்டுதான் படிச்சேன்.

படிப்பை முடிச்சதும் அட்வர்டைஸிங் துறையில வேலை பார்த்தேன். இருக்குறது ஒரு வாழ்க்கை... அதை நம்ம விருப்பப்படி வாழ்ந்துடணும்ங்கிறது மட்டும்தான் மனசுல இருந்தது. அதனால அந்தந்த நேரம் என்னைத் தேடி என்ன வாய்ப்புகள் வருதோ, அதை எடுத்துக்கிட்டு சந்தோஷமா வேலை பார்த்திட் டிருந்தேன்...’’ வேக வேகமாக அறிமுகம் சொல்பவரின் வாழ்க்கையும் அதே வேகத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் கண்டிருக்கிறது.

‘`நான் எப்பவுமே ரொம்ப நல்லா டிரஸ் பண்ணுவேன். எங்கே போனாலும் என் டிரஸ்ஸுக்குப் பாராட்டு கிடைக்கத் தவறினதே இல்லை. இத்தனைக்கும் எனக்கும் ஃபேஷன் டிசைனிங்க்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அட்வர்டைஸ்மென்ட் துறையில வேலை பார்த்திட்டிருந்தபோது எதேச்சையா ஸ்டைலிங் பண்ண வாய்ப்பு வந்தது. சென்னையில உள்ள பிரபலமான பல துணிக்கடைகள், நகைக்கடைகளுடைய ஷூட்டிங்குக்கு எல்லாம் நான்தான் ஸ்டைலிங் பண்ணியிருக்கேன்.

ஒரு பீரியட்ல இந்தியா முழுக்க டிராவல் பண்ணிட்டு செம பிஸியா மாறிடுச்சு லைஃப். அப்பதான் ‘விடியும் முன்’ படத்துல வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது. ‘நான் கடவுள்’ ஹீரோயின் பூஜா உமாசங்கருக்குதான் காஸ்டியூம் டிசைன் பண்ணிருந்தேன். அந்தப் படத்துல என் வேலைக்கு மிகப் பெரிய பாராட்டு கிடைச்சது. முதல் படம் பண்ணதும் பத்து, பதினஞ்சு பட வாய்ப்புகள் வந்தது. சினிமா பிடிக்காமதான் முதல் பட வாய்ப்பை ஏத்துக்கிட்டேன்.

அட்வர்டைஸ்மென்ட்டுக்கும் சினிமாவுக் கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சினிமா எனக்கான ஏரியா இல்லைனு மறுபடி விளம்பரங்களுக்கே வொர்க் பண்ணிட்டிருந் தேன். நிற்க நேரமில்லாம ஓடிக்கிட்டே இருந்தபோது நடுவுல எனக்கே ஒரு பிரேக் தேவைப்பட்டது. அதனால மறுபடி சினிமா பக்கம் திரும்பினேன்’’ என்பவர் ‘சக்ரா’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘வேதாளம் சொல்லும் கதை’, ‘சூர்ப்பனகை’, ‘பூமிகா’ உட்பட இதுவரை ஐம்பதுக்கும் மேலான படங்களின் காஸ்டியூம் டிசைனர். அடுத்து பிரபு தேவா நடிக்கும் ‘பொய்க்கால் குதிரை’, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஒரு படம் உட்பட சில புதிய படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். காஸ்டியூம் டிசைனர் டு இன்டிமஸி கோ ஆர்டினேட்டர் பொறுப்புக்கு வந்த கதையும் சொல்கிறார்.

‘`2018-ம் வருஷத்துலேருந்து ஹாலிவுட்ல ‘இன்டிமஸி கோ ஆர்டினேஷன்’ துறை ரொம்ப பெருசா பேசப்படுது. உலக அளவுல சினிமா துறையில இந்தப் பிரிவு இருக்கு. நடிகர், நடிகைகளுக்குப் பாதுகாப்பான ஷூட்டிங் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறதுதான் இந்தத் துறையின் நோக்கம்.

ஒரு படத்துல நெருக்கமான காட்சி வருதுனு வெச்சுப்போம். அது தயாரிப்பாளர், டைரக்டர், கேமராமேன், நடிகர், நடிகைகள்னு யாருக்குமே உறுத்தலா இருந்துடக் கூடாது. வேணும்னே வலிஞ்சு திணிக்கப்பட்ட காட்சியா இருக்கக் கூடாது. அது சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுடைய மனநலம் சம்பந்தப்பட்ட விஷயமும்கூட. இதை உறுதிப்படுத்துறவங்கதான் இன்டிமஸி கோ ஆர்டினேட்டர்.

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்துல காஸ்டியூம் டிசைனரா வொர்க் பண்ணிட்டிருந்தேன். அப்போ எனக்கு இன்டிமஸி கோ ஆர்டினேட்டர்னு ஒருத்தங்க இருக்காங்கனுகூட தெரியாது. ஆனாலும் அதையும் தாண்டி, தனிப்பட்ட விருப்பத்தின் பேர்ல என்னன்னே தெரியாம அதுல நான் இன்டிமஸி கோ ஆர்டினேட்டருக்கான வேலையையும் பார்த்தேன். அப்புறம்தான் இந்தத் துறையை பத்திக் கேள்விப்பட்டு, அமெரிக்காவில் அதுக்காகவே நடத்தப்படுற பிரத்யேக கோர்ஸ் முடிச்சேன்...’’ விளக்கமாகச் சொல்பவர், ஒரு சம்பவமும் பகிர்கிறார்.

நெருக்கமான காட்சிகள்... நெருடலான சூழல்...

‘`நான் வொர்க் பண்ணின ஒரு படத்துல ஹீரோ-ஹீரோயின் சம்பந்தப் பட்ட முத்தக்காட்சி இருந்தது. கடைசி நிமிஷத்துல அதுல தனக்கு நடிக்க விருப்பமில்லைனு ஹீரோயின் சொன்னாங்க. அவங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தின விஷயம் எதுன்னு எனக்குத் தெரியும். ஆனா, பட யூனிட்டுக்குப் புரியாம அவங்களைத் திட்டினாங்க. நடந்ததை எடுத்துச் சொல்லிப் புரியவெச்சேன்.’’

கோவிட் பாதிப்பால் படப்பிடிப்புகள் நடக்காமலிருந்தபோது தற்காலிகமாக கேட்டரிங் பிசினஸ் செய்திருக்கிறார் ஜெயலட்சுமி. அடுத்து ‘இல தமயந்தி’ என்ற பெயரில் ஹேர் ஆயில் பிசினஸை ஆரம்பத்திருக்கிறார்.

``சினிமா, பிசினஸ் தவிர, ஓய்வு நேரத்துல ஸைன் லேங்வேஜ் கத்துக் கிட்டிருக்கேன். என்னவெல்லாம் செய்யணும்னு ஆசைப்படுறோமோ, அதையெல்லாம் பண்ணிப் பார்த்துடணும். இன்டிமஸி கோ ஆர்டி னேட்டரா வொர்க் பண்ண ஏகப்பட்ட வாய்ப்புகள் வருது. ஆனா, காஸ்டியூம் டிசைனரா பிசியா இருக்கிறதால எல்லா வாய்ப்புகளையும் ஏத்துக்க முடியலை. இன்டிமஸி கோ ஆர்டினேஷன் துறைக்கு எதிர் காலத்துல மிகப் பெரிய வாய்ப்பிருக்கு. ஓடிடி தளம் பெருசாயிட்டே போகுது. அதுக்கான சென்சார்ஷிப்பும் மாறிடுச்சு. நெருக்கமான காட்சிகள் நிறைய வருது. இந்த நிலையில இன்டிமஸி கோ ஆர்டினேட்டருக் கான தேவையும் அதிகரிச்சிருக்கு. எதிர்கால சினிமா நிச்சயம் ஆரோக்கிய மாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்’’ என்கிறார் நம்பிக்கையோடு.

நல்லது நடக்கட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism