Published:Updated:

மகளிர் தினத்தில் முதலீட்டு உறுதியேற்போம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

மகளிர் தினத்தில் முதலீட்டு உறுதியேற்போம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

மார்ச் 8... உலக அளவில் மகளிர் தினமாகக் கொண்டாடப்படும் இந்த நாளில், நம் நாட்டுப் பெண்களுக்கு மிக முக்கியமான தேவையாக இருப்பது நிதிச் சுதந்திரம். வருமானம் ஈட்டுவதில் பெண்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாத நிலையில், ஒவ்வொரு சின்னச் சின்ன செலவுக்கும் பெற்றோரையோ, கணவரையோ எதிர்பார்த்து நிற்கும் நிலையே இன்றைக்கும் பல வீடுகளில் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமெனில், வருமானம் ஈட்டும் நபர்களாகப் பெண்கள் மாற வேண்டும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பைவிட, ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தோ, வீட்டில் ஏதோ ஒரு பொருளைத் தயார் செய்தோ சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கை இப்போது அதிகரிக்கவே செய்திருக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சி நிச்சயம் போதாது. ஆண்கள் வருமானம் ஈட்டுவது என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பெண்களும் வருமானம் ஈட்டுவது என்பது முக்கியம். அப்படி செய்யும்போது அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வது மட்டுமல்ல, நம் நாட்டின் பொருளாதாரமும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி காணும். வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வேலைக்குச் செல்வதாலும், பொருள் உற்பத்தியில் ஈடுபடுவதாலும்தான் அங்கு மிகப் பெரிய வளர்ச்சியைக் காணமுடிகிறது. அந்த மாதிரியான ஒரு சிந்தனைப் போக்கு நம் நாட்டுப் பெண்களிடமும் மேலும் மேலும் வலுப்பெற வேண்டும்.

சுய சம்பாத்தியம் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் நிதி நிர்வாகம் தொடர்பான விழிப்புணர்வை எல்லாப் பெண்களும் பெறுவது. பணவீக்கம் என்றால் என்ன, சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் என்ன வித்தியாசம், நீண்ட காலத்துக்கு எந்த முதலீட்டைத் தேர்வு செய்வது என்கிற மாதிரியான பல கேள்விகளுக்கான பதில் பெரும்பாலான பெண்களுக்குத் தெரிவதே இல்லை. நிதி நிர்வாகத்தை அவர்களுக்கு சொல்லித் தராமல் இருந்தது ஆண்கள் செய்த தவறு எனில், அதைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பது பெண்களின் தவறு. ஃபிக்ஸட் டெபாசிட், அஞ்சலக சேமிப்பு, தங்கம் போன்ற பாரம்பர்யத் திட்டங்களில் பெண்கள் தங்களை முடக்கிக்கொள்ளாமல், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற காலத்துக்கேற்ற முதலீடுகளையும் பரிசீலிக்கத் தொடங்க வேண்டும்.

‘‘இவையெல்லாம் எங்களுக்குப் புரியாது; நாங்கள் எப்போதுமே ரிஸ்க் எடுக்க மாட்டோம்’’ என்று சொல்லி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளாமல், திட்ட மிட்ட வகையில் ரிஸ்க் எடுக்கப் பழகிக்கொள்வதன்மூலமே நிதிச் சுதந்திரத்தை அடைய முடியும் என்கிற உண்மையை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பொருளாதாரம், சம்பாத்தியம், முதலீடு என்பனவற்றுக்கெல்லாம் ஆண், பெண் பாலின வேறுபாடு இல்லை. இத்தனை நாளும் பெண்கள் இவற்றிலிருந்து ஒதுங்கி இருந்திருக்கலாம்; இனியும் அப்படி ஒதுங்கியிருந்தால், வாழ்க்கையில் நிச்சயம் வளர்ச்சி காண முடியாது என்பதை உணர்வது காலத்தின் கட்டாயம்!

- ஆசிரியர்