Published:Updated:

வழிகாட்டி: “இப்படியெல்லாம் படிச்சா, சிவில் சர்வீசஸ் தேர்வுல ஜெயிக்கலாம்!”

பிரவீனா ஐ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரவீனா ஐ.பி.எஸ்

வழிகாட்டும் குமரி மாவட்ட முதல் பெண் ஐ.பி.எஸ்

“கன்னியாகுமரி மாவட்டத்துலயிருந்து ஐ.பி.எஸ் ஆகியிருக்கிற முதல் பெண் என்ற பெருமை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் நிறைய பொண்ணுங்க குமரியிலயிருந்து பல சாதனைகளைச் செய்யணும்னு ஆசைப்படுறேன்’’ - தன் வெற்றியைக் கொண்டாடும் அதே நேரத்தில், சக பெண்களின் வெற்றிக்கான அக்கறையையும் வெளிப்படுத்துகிறார் பிரவீனா.

கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் மங்களநடைப் பகுதியைச் சேர்ந்தவர், 27 வயதான பிரவீனா. ஓய்வுபெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேமச்சந்திரன் - ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர் ரெஜினாள் தம்பதியின் மகள். 2019-ம் ஆண்டுக்கான இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (Civil Services Examination - CSE) முடிவுகள், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டன. அதில் 445-வது இடம்பெற்று வெற்றிபெற்ற பிரவீனா, இப்போது ஐ.பி.எஸ் பயிற்சிக்குத் தயார். ‘‘நீங்க இதைப் படிச்சிட்டு இருக்கும்போது நான்

ஐ.பி.எஸ் பயிற்சியில் ஜாயின் பண்ணியிருப்பேன்’’ என்றவர், சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகிறவர்களுக்குத் தன் அனுபவத்திலிருந்து பாடங்களைப் பகிர்ந்தார்.

இப்படித்தான் விழுந்தது விதை!

“எனக்கு 10 வயசு இருக்கும்போது, எங்க சர்ச் ஃபாதர் பீட்டர் ஆனந்த், ‘நீ கலெக்டரா வரணும், உன்னைப் பார்க்க நான் நிறைய மனு எடுத்துட்டு வருவேன், அவங்களுக்கு எல்லாம் நீ உதவணும்’னு சொன்னார். அப்போதான் ஐ.ஏ.எஸ் ஆசை என் மனசுல விழுந்தது. ஆனா, அதை நான் வளர்க்கவோ, செதுக்கவோ இல்ல. எல்லாரையும்போல நானும் இன்ஜினீயரிங் படிச்சேன்.

பிரவீனா ஐ.பி.எஸ்
பிரவீனா ஐ.பி.எஸ்

காலேஜ்ல மூணாவது வருஷம் ப்ளேஸ்மென்ட்டுக்காக ரெஸ்யூம் தயார் பண்ணினப்போதான், ‘இந்த வேலைக்குப் போகணுமா..? நம்மளோட சிவில் சர்வீசஸ் கனவு என்னாச்சு..?’னு ஞாபகம் வந்தது. அதுக்கு முழு நேரமா படிக்கணும்னு முடிவெடுத்தேன். ஒருவேளை தொடர் முயற்சிகளுக்கு அப்புறமும் வெற்றி கிடைக்கலைன்னா என்ற தயக்கமும் இருந்தது. ‘பயந்துகிட்டே இருந்தா எதுவும் நடக்காது’னு பெற்றோரும், அண்ணன் டால்பின் பிரேமும் தைரியம் கொடுத்தாங்க. ‘அப்போ சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றபெற்ற பிறகுதான் கல்யாணம்’னு நான் அவங்ககிட்ட அனுமதி வாங்கினேன். ஒரு பெரிய இலக்குக்கான பயணம் ஆரம்பமாச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பயிற்சிகள்..!

கோயம்புத்தூர்ல `கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமி'யில அஞ்சு வருஷம் இலவசமா படிச்சேன். அடையாறுல இருக்கிற தமிழக அரசின் `ஆல் இந்தியா சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டர்'லயும் பயிற்சியெடுத்தேன். அப்புறம், `கோவை ஐ.ஏ.எஸ் அகாடமி'யில மாணவர்களுக்குப் பாடம் எடுக்க ஆரம்பிச்சேன். இடைப்பட்ட காலத்தில், மூன்று முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தோல்வியடைஞ்சிருந்தேன். நாலாவது முறை தேர்வில் வெற்றி பெற்று 619-வது ரேங்க் எடுத்தேன். இந்தியன் ரயில்வே டிராஃபிக் சர்வீஸ்ல (IRTS - The Indian Railway Traffic Service) பணி கிடைச்சது. ஆனாலும், ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ்தான் இலக்கா இருந்தது. திருவனந்தபுரத்துல ஐ.ஆர்.டி.எஸ் பயிற்சியில் சேருவதற்கு முன்னாடி, 2019-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதினேன். அந்த ஐந்தாவது முயற்சியில்தான் இப்போ ஐ.பி.எஸ் கிடைச்சிருக்கு'' என்றவர், சிவில் சர்வீசஸ் பணியிடங்கள் பற்றியும் பேசினார்.

``எனக்கு ஆரம்பத்துல, சிவில் சர்வீசஸ்னா ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மட்டும்தான் தெரியும். பரீட்சைக்குத் தயார் செய்ய ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான், இதுல 24 சர்வீஸ்கள் இருக்குனு தெரிஞ்சது. ரேங்க்கின் அடிப்படையில பணியிடங்கள் ஒதுக்கப்படுது. அதேபோல, சிவில் சர்வீசஸ் பரீட்சைக்குத் தயாராக ஆரம்பிச்சப்போ இருந்த என்னோட மனநிலைக்கும், இப்போ இருக்கிற என்னோட மனநிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சமுதாயத்துல நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் கோணத்தில் மெச்சூரிட்டி ஏற்பட்டிருக்கு. இந்த எக்ஸாம் பிராசஸ் நம்மை ஓர் அதிகாரியா மட்டுமல்லாம, நல்ல மனுஷனாவும் மாத்துதுனு நான் நினைக்கிறேன்'' என்று பெருமிதத்தோடு சொன்ன பிரவீனா, சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெறுவதற்காக டிப்ஸ்களையும் தந்து வாழ்த்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரவீனா தந்த டிப்ஸ்

வெற்றிக்கு... இவற்றையெல்லாம் குறிச்சுக்கோங்க!

பயிற்சி மையத்தில் சேர்ந்தும் படிக்கலாம், சுயமாவும் படிக்கலாம். இப்போ ஆன்லைன்லேயே எல்லா மெட்டீரியல்களும் இலவசமா கிடைக்குது என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்புகளை பயன்படுத்திக்கோங்க.

தேர்வு எழுதி வெற்றி கிடைக்கலைன்னா, அதுக்கு என்ன காரணம்னு ஆராய்ந்து தோல்வியிலிருந்து கத்துக்கணும்.

தேர்வுக்குத் தயாராகிற முதல் ரெண்டு வருஷத்திலேயே, இதை நம்மால க்ளியர் பண்ண முடியுமான்னு உணர்ந்துட முடியும். வெற்றியடைய முக்கியத் தேவை... இதுதான் ஒரே இலக்கு என்ற அர்ப்பணிப்போட படிக்கணும்.

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு முழுமையா தயாராகும்போது, மற்ற எந்தப் போட்டித் தேர்வுகளையும் க்ளியர் செய்துவிடக்கூடிய அறிவும் அனுபவமும் கிடைக்கும்.

மெயின் பரீட்சைக்கு எழுத்துப் பயிற்சி ரொம்ப முக்கியம்.

10 மார்க் கேள்விக்கு ஏழு நிமிஷத்துல பதிலை சிந்துச்சு எழுதி முடிச்சிருக்கணும். சிலருக்கு பாட அறிவு சிறப்பா இருந்தும், பேப்பர்ல எழுத்தா எழுதும்போது திணறுவாங்க. அதனால, மாடல் தேர்வுகள் நிறைய எழுதிப் பார்க்கணும்.

கடைசியா, பர்சனாலட்டி அசஸ்மென்ட்ல நம்ம செயல்பாடு, முடிவெடுக்கும் திறனை எல்லாம் ஆராய்வாங்க. அதனால, எப்போ சிவில் சர்வீசஸ் தேர்வுப் பயிற்சிக்குள்ள வர்றீங்களோ, அப்போயிருந்தே உங்க ஆளுமையையும் மெருகேத்திட்டே வரணும். கண்ணாடி முன்னாடி, ரெண்டு, மூணு நண்பர்கள் முன்னாடினு பேசிப் பயிற்சி எடுங்க. உங்க மனசுல இருக்கிறதை தெளிவாவும் தைரியமாவும் வெளிப்படுத்த உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்.