Published:Updated:

முதல் பெண்கள்: இக்பாலுன்னிசா உசைன் பேகம்

இக்பாலுன்னிசா உசைன் பேகம்
பிரீமியம் ஸ்டோரி
News
இக்பாலுன்னிசா உசைன் பேகம்

மைசூர் சமஸ்தானத்தின் முதல் இஸ்லாமியப் பெண் பட்டதாரி; இந்தியாவின் முதல் ஆங்கிலப் பெண்ணிய நாவல் எழுதியவர்; இந்தியாவின் `ஜேன் ஆஸ்டன்'

“இன்றைய இந்தியாவின் நிலையை, அதன் வெவ்வேறு வண்ணங்களுடனும் வடிவங்களுடனும் எடுத்துச்சொல்லும் ‘பர்தாவும் பலதார மணமும்’ நாவல் போல வேறெந்த நூலும் இல்லை என்றே நான் கருதுகிறேன். அதிகம் அறியப்படாத இந்த நாவலை எழுதிய இக்பாலுன்னிசா உசைனை இந்தியாவின் ஜேன் ஆஸ்டன் என்று எந்தத் தயக்கமும் இன்றி நான் சொல்வேன். காதலும் ஹீரோயிசமும் இவர் பேசவில்லை. நாம் நன்கு அறிந்த சாதாரணர்களையும், தினசரி அவலங்களையுமே பேசுகிறார். வாழ்க்கையையும் சம்பவங்களையும் அழகாகப் பின்னி முதல் சில நிமிடங்களில் நம் கவனத்தை வெல்பவர், நாவலை முடிக்கும்போது நம் மனங்களை முழுதாகக் கொள்ளை கொண்டு விடுகிறார்.”

- சர் ராமலிங்கரெட்டி,

துணைவேந்தர், ஆந்திரப் பல்கலைக்கழகம்,

`பர்தாவும் பலதார மணமும்' முன்னுரையில் (1944).

1900 ஜனவரி 21... அன்றைய மைசூரு சமஸ்தானத்தில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய எம்.ஜி.முகைதீன் அலி - சயீபுன்னிசா தம்பதியின் மகளாக பெங்களூருவை அடுத்த சிக்கபல்லபுராவில் பிறந்தார் இக்பாலுன்னிசா பேகம். இயற்கையாகவே துணிவும் நெஞ்சுரமும் கொண்ட பெண்ணாக வளர்ந்தார் இவர். சிறுமி இக்பாலுன்னிசாவுக்கு கடும் பர்தா நிபந்தனைகளுக்கிடையே அரபு, பாரசீகம் மற்றும் உருது மொழிகள் பயிற்றுவிக்கப்பட்டன. சிறு வயது முதலே கல்வி மேல் அதீத ஆர்வம் கொண்ட இக்பாலுன்னிசாவுக்கு குரான் வாசிப்பும் சொல்லித் தரப்பட்டது. 1914-ம் ஆண்டு, இக்பாலுன்னிசாவுக்கு மைசூரைச் சேர்ந்த சையது அகமது உசைனுடன் திருமணம் நடந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திப்பு சுல்தானின் வம்சாவழி யினரான உசைன் தீவிர தேசப்பற்றாளர். ஆங்கிலேயர் மேல் கடும் கோபம் கொண்டவர்; எந்த உடல் உபாதைக்கும் ஆங்கில மருந்துகளை நாடிச் செல்லாதவர். ஒருமுறை பிளேக் நோய் கண்டு குடும்பத்தில் பலர் ஆங்கில மருத்துவத்தை நாடாமல் இறந்துபோக, நிலைகுலைகிறார் உசைன். அவருக்கும் பிளேக் நோய்த் தொற்று ஏற்பட, 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று ஆங்கில மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று உயிர்பிழைத்தார். அன்று முதல் அறிவியல், கல்வி மேல் பேரார்வம் கொள்ள ஆரம்பித்தார்.

இக்பாலுன்னிசா உசைன் பேகம்
இக்பாலுன்னிசா உசைன் பேகம்

திருமணம் இக்பாலுன்னிசாவுக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. படிப்பில் ஆர்வம் கொண்ட இளம் மனைவிக்குக் கணவர் உசைன் ஆங்கிலமும் கணிதமும் கற்றுத் தந்தார். பொறியியல் பட்டப்படிப்பை முடிக்க உசைன் நான்கு ஆண்டுகள் மும்பையில் தங்கும் நிலை ஏற்பட்டது. தனியே விடப்பட்ட இக்பாலுன்னிசா, கணவருடன் கடிதங்கள் மூலம் படிப்பைத் தொடர்ந்தார். ஓரளவுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்த, கணிதமும் பயின்ற இந்த இஸ்லாமியப் பெண்ணைப் பற்றி அறிந்துகொண்ட மிஷனரிப் பெண்கள், ‘செனானா மிஷன்’ என்ற பர்தா வழக்கமுள்ள பெண்கள் பள்ளி ஒன்றில் இக்பாலுன்னிசாவை ஆசிரியராக நியமித்தனர். நான்கு ஆண்டுகள் கழித்து கணவர் திரும்பி வர, படிப்பை வேகமாகத் தொடர்ந்தார் இக்பாலுன்னிசா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்று எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் பெற வேண்டுமானால் பள்ளியில் சேர்ந்து நேரடியாகக் கல்வி கற்றே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. மைசூரு சமஸ்தானத்தின் கல்வித்துறை பொதுக் கண்காணிப்பாளரான சி.ஆர்.ரெட்டியைச் சந்தித்த இக்பாலுன்னிசா, பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதி கோரினார். இஸ்லாமியப் பெண், அதிலும் பர்தா முறையில் இருப்பவர் என்பதால் அவரது கோரிக்கையை விசாரித்து ஏற்றுக்கொண்ட ரெட்டி, மைசூரு மகாராணி உயர்நிலைப்பள்ளியில் உயர் வகுப்பில் நேரடியாகச் சேர்ந்து படிக்க இக்பாலுன்னிசாவுக்கு அனுமதி அளித்தார். ஓராண்டு மைசூரு பள்ளியிலும், அடுத்த ஆண்டு பெங்களூரு வாணி விலாஸ் கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து படித்த இக்பாலுன்னிசா, இரண்டு ஆண்டுகளில் எஸ்.எஸ்.எல்.சி-யில் தேறினார்.

ஆனாலும் படிப்பைத் தொடர முடியாமல், மூன்று ஆண்டு குழந்தைப்பேறு இடைவெளி விழுந்தது. மனம் தளராத இக்பாலுன்னிசா, வாணி விலாஸின் கலைப் பிரிவு தொடங்கப்பட்டவுடன் அதில் சேர்ந்து, பள்ளி இறுதித் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ந்தார். மைசூரு மகாராணி கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தவர், கடும் சிக்கல்களுக்கு நடுவே மூன்றாண்டுகள் படித்து, 1930-ம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். பாரசீக மொழித் தேர்வில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும் வென்றார். மைசூரு சமஸ்தானத்தில் படித்து பட்டம் வென்ற முதல் இஸ்லாமியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். அப்போது அவர் ஏழு குழந்தைகளுக்கு தாய்!

பி.ஏ முடித்த கையோடு, `பர்தா முறையைப் பின்பற்றப்போவதில்லை' என்று அறிவித்த இக்பாலுன்னிசா, அதைத் துறந்தார். உற்றார், ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிட்டது. மனைவிக்கு முழு ஆதரவு தந்த கணவர் உசைன், அவருக்குக் கல்வி உதவித்தொகை கிடைக்க முயற்சியெடுத்தார். மனைவியை இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி படிக்க வைப்பது என்று முடிவெடுத்தார். லீட்ஸிலும் இடம் கிடைக்க, முதுகலைப் பட்டப்படிப்புக்கென இக்பாலுன்னிசா 1933-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தன் மூத்த மகனுடன் பயணமானார். வீட்டிலிருந்த ஆறு குழந்தைகளும் தாயின் பிரிவைத் தாங்காமல் நாட்கணக்கில் அழுதபடி இருந்ததாகச் சொல்கிறார் இக்பாலுனிசாவின் மகள் சலீமா ரைசுதீன் அகமது.

இஸ்லாமியப் பெண்கள் படிப்பதே பெரும் சிக்கலாக இருந்த காலகட்டத்தில் ஒரு நடுத்தர வர்க்க இஸ்லாமியப் பெண், தன் ஆறு குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு, கையில் ஒரு குழந்தையோடு கப்பலேறி இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றதே பெரும் சாதனைதான்.

“அம்மாவின் இடத்தை நிரப்ப என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் அப்பா செய்தார். பள்ளிப் படிப்பு, வீட்டுப் பாடம், இசை, நடன வகுப்புகள், ஹாக்கி விளையாட்டு என்று நாள் முழுக்க பரபரப்பாக எங்களை இயக்கினார். இரவு வீடு வந்ததும் உணவருந்தி, படுக்கையில் விழ மட்டுமே எங்களுக்குத் தெம்பிருந்தது” என்று சொல்கிறார் அவர். இஸ்லாமியப் பெண்கள் படிப்பதே பெரும் சிக்கலாக இருந்த காலகட்டத்தில் ஒரு நடுத்தர வர்க்க இஸ்லாமியப் பெண், தன் ஆறு குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு, கையில் ஒரு குழந்தையோடு கப்பலேறி இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றதே பெரும் சாதனைதான். அந்த இக்கட்டான சூழலை மனைவிக்கு நல்ல கல்வியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தில் சமாளித்த உசைனை நாம் பாராட்டியே ஆகவேண்டும். மைசூரு சமஸ்தானத்தில் வெளிநாட்டில் படித்து பட்டம் பெற்ற முதல் இஸ்லாமியப் பெண் என்ற பெயரை இக்பாலுன்னிசா பெற்றார்.

இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கும் போதே, 1935-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் காங்கிரஸில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். இந்தியா சார்பில் மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கும் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெண்ணைக் காண பேராவல் கொண்டு சந்திக்க அழைப்பு விடுத்தார் துருக்கியின் அதிபர் முஸ்தபா கெமால் அத்தாதுர்க்.

“அத்தாதுர்க்கை அம்மா சந்திக்கச் சென்றது எங்களுக்குப் பெரும் மகிழ்வாக இருந்தது. அம்மா எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டே இருப்பார்; ஆனால், அவர் என்ன எழுதினார் என்பதை அறிந்துகொள்ள அப்போது நான் முயற்சி செய்யவில்லை” என்று வருத்தத்துடன் பின்னாளில் பதிவு செய்கிறார் இக்பாலுன்னிசாவின் மகள் சலீமா ரைசுதீன் அகமது.

`பர்தாவும் பலதார மணமும்' என்ற இந்தியாவின் முதல் முழுநீளப் பெண்ணிய நாவலை (ஆங்கிலம்) இணையத்தில் வாசிக்க...

https://bit.ly/purkanovel

அனைத்திந்திய மகளிர் மாநாடுகளில் தவறாமல் கலந்துகொண்டார் இக்பாலுன்னிசா. அவரது சமூகப் பார்வை விரிவடைந்தது. பெங்களூரில் இஸ்லாமியப் பெண்கள், கைவிடப்பட்டோர், கைம்பெண்களுக்கான பள்ளி ஒன்றை நிறுவினார். கல்வியோடு, பாய் முடைதல், கம்பளம் நெய்தல், மூங்கில் வேலைப்பாடு, தையல் கலை, பூத்தையல் எனப் பொருளாதார ரீதியில் தற்சார்புடன் இயங்கும் வகையில் பயிற்சிகளும் தந்தார். தன் மூத்த மகள் மாலிகா உசைனை இந்தப் பள்ளியில் பணியாற்றவும் அனுப்பினார்.

அவரது பள்ளியில் படித்த பெண்கள் கேர்ள் கைடுகளாகவும், சிறந்த கைவினைஞர்களாகவும் திகழ்ந்தனர். நாடகங்கள் நடிக்கவும் இயக்கவும் கற்றுக்கொண்டனர். தொடக்கப் பள்ளி ஒன்றை அவர் நிறுவ, அது உருது பெண்கள் நடுநிலைப் பள்ளியாக வளர்ச்சியடைந்தது. இஸ்லாமிய ஆசிரியர்களுக்கான தனி ஆசிரியர் அமைப்பையும் நிறுவினார். அவரது கேர்ள் கைடுகள் அமைப்புக்கு இஸ்லாமியரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தன் தொடர் முயற்சிகளாலும், பேச்சினாலும், எழுத்தாலும் அவர்களுக்குச் சரியான பதில் தந்துவந்தார். பெங்களூரு மகிளா சமாஜத்தின் சமூகச் செயற்பாட்டாளர்களான நஞ்சம்மா, கமலம்மாவுடன் இணைந்து இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். பெண் கல்வி மற்றும் பெண்கள் நலனுக்கான வழிகாட்டலை இந்தப் பெண்கள் நாடு முழுக்க பயணித்துச் செய்தனர். மைசூரின் திவான் சர் மிர்சா இஸ்மாயிலுடன் தம்பதிக்கு நல்ல நட்பு இருந்தது.

1940-ம் ஆண்டு, இக்பாலுன்னிசா எழுதிய முதல் நூல் பெங்களூருவில் வெளியிடப் பட்டது. `எ முஸ்லிம் வுமன் ஸ்பீக்ஸ்' என்று பெயரிடப்பட்ட அந்நூல் வெவ்வேறு காலகட்டத்தில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நூலுக்கு முன்னுரை எழுதியவர் ஜான் ஸ்பியர்ஸ் என்ற ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த, இந்துவாக மதம் மாறிய சாமியார்.

“ஆணாதிக்க சமூகங்களில் அவ்வப்போது சில பெண்களது சிறுபங்கு வெளிவரும். இந்தியாவில் ஆங்கிலேயர் கோலோச்சிய அவர்களது ஆட்சியின் இறுதி சில ஆண்டுகள் அப்படியான காலகட்டம்தான். கலை, எழுத்து, அரசியல் எனப் பல துறைகளில் தனித்து இயங்கியோ, தங்கள் கணவர், சகோதரர்கள், தந்தை வழிகாட்டலிலோ சில பெண் நட்சத்திரங்கள் ஒளிர்ந்தார்கள். ஆனால், இந்த மிகச் சில பெண்களில்கூட ஓரிருவருக்கு சரியான வெளிச்சம் கிடைக்கவில்லை” என்று தன் தாய் இக்பாலுன்னிசா எழுதிய நூலின் மறுபதிப்பு முன்னுரையில் குறிப்பிடுகிறார் மகள் சலீமா ரைசுதீன் அகமது. இவர் பாகிஸ்தான் அரசின் மூத்த தணிக்கைத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் கிடைத்த அனுபவங்களை மைசூரு பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை ஒன்றில் இக்பாலுன்னிசா குறிப்பிடுகிறார்... “லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘கன்சர்வேட்டிவ் சொசைட்டி’ அமைப்பு இருந்தது; இந்த அமைப்பு கல்வி மற்றும் அப்போதைய அரசியல் நிகழ்ச்சிகள் குறித்து மாணவர்கள் விவாதங்களை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது. ஆனால், இந்தியப் பல்கலைக்கழகங்களில் அரசியல் பேசுவது என்பதே எட்டாக்கனிதான்” என்று அவர் ஆற்றிய உரை பதிவாகியிருக்கிறது.

இக்பாலுன்னிசாவின் தலைசிறந்த படைப்பாக இன்றளவும் பார்க்கப்படுவது `பர்தாவும் பலதார மணமும்' என்ற அவரது புனைவு நூல்தான். 1944-ம் ஆண்டு வெளியான இந்த நூல், அன்றைய இஸ்லாமியர் பின்பற்றிய பெண்களுக்கு எதிரான கொடிய வழக்கங்களைக் கேள்விக்கு உட்படுத்தியது. வங்க எழுத்தாளர் தஸ்லிமா நஸ்‌ரீனின் `லஜ்ஜா' நாவல் கிட்டத்தட்ட `பர்தாவும் பலதார மணமும்' நாவலுக்கு இணையானதே. அப்படியென்றால், இந்தப் படைப்புக்கு அப்போது என்ன எதிர்வினை இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். இந்த நாவல்தான் தென்னிந்திய இஸ்லாமியப் பெண் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய முதல் நாவல். முதல் இஸ்லாமிய பெண்ணிய நாவலும்கூட. மூன்று தலைமுறைகளாக ஒரு இஸ்லாமியக் குடும்பம் அதன் பெண்கள் மேல் காட்டும் அடக்குமுறையைத் தோலுரிக்கிறது நாவல்.

எந்த முக்கிய முடிவும் மனைவிகளிடம் கேட்டு எடுக்கப்படுவதில்லை; கண்ணை மூடிக்கொண்டு திருமணங்கள் செய்கிறார்கள் கதையில் வரும் ஆண்கள்.

நகரின் நெரிசலான பகுதியில் தில்குஷா (மகிழ்வான இதயம்) என்ற உயரமான சுற்றுச் சுவர் கொண்ட, எட்டு அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கும் உமர் அந்த வீட்டின் நான்கு பகுதிகளை வாடகைக்குவிட்டு சம்பாதிக்கிறான். அவன் திடீரென புற்றுநோய் கண்டு இறந்துபோக, குடும்பத்தின் மூத்த மகன் கபீர் தலைமைப் பொறுப்பேற்கிறான். நஸ்னி என்ற பெண் மேல் காதல் கொள்ளும் கபீர், தாய் சுஹ்ராவுக்குத் தெரியாமல் அவளை மணம் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறான். குழந்தைப்பேற்றில் சிக்கல் ஏற்பட்டு முதல் மனைவி உடல்நலம் தேற காஷ்மீர் சென்றுவிட, தாயின் ஆசைக்கு இணங்கி முனிரா என்ற பெண்ணை மணக்கிறான் கபீர்.

இரண்டாவது மனைவி முனிராவும் குழந்தைப்பேற்றுக்கு தாய்வீடு செல்ல, மூன்றாவதாக மக்பூல் என்ற பெண் கவிஞரை மணக்கிறான் கபீர். தெரிந்தே அவனை மணக்கும் அவள், அவனின் மற்ற மனைவிகள் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல், கவிதைகள் எழுதிப் பதிப்பிக்கிறாள். காரணம், அவள் ஏழை இஸ்லாமியக் குடும்பத்தின் மூன்றாவது பெண். `மூன்றாவது பெண் ராசியில்லாதவள்' என்ற எண்ணத்திலுள்ள அவளது குடும்பம் அவள் வீட்டைவிட்டு கிளம்பினால் சரி என்றே அனுப்பிவைக்கிறது. `அரைச் சிறையிலிருந்து முழுச் சிறைக்கு மாறிவரும் பெண்ணுக்கு வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இருப்பதில்லை' என்று சொல்கிறாள்.

கபீர் உடல்நிலை மோசமடைகிறது; ஆனால், அவன் ரகசியமாக நூர்ஜஹான் என்ற பெண்ணை நான்காவதாக மணமுடிக்கிறான். அவளை மற்ற மூன்று மனைவிகளும் கொஞ்சமும் அங்கீகரிக்கவில்லை. `முதல் மூன்று மனைவிகளுடனும் தனியே நிறைய நாள்கள் செலவிட்டுவிட்டேன். நான்காவதாக என்னை நம்பி வந்தவளை எப்படி நட்டாற்றில் விடுவது? அவளுக்கும் தனியே வீடெடுத்துத் தருவேன். கட்டிய மனைவியை நல்லபடியாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது' என்று தன் தவற்றுக்கு நியாயம் கற்பிக்கிறான் கபீர்.

இப்படிச் செல்கிறது நாவலின் கதை. காற்றோட்டமும் வெளிச்சமுமற்ற அந்தப் பெரிய வீட்டில் இருக்கும் ஒரே நிம்மதியான இடம் அதன் முற்றம். அங்கும் ஆண் யாராவது வந்தால் அறைகளுக்குள் ஓடிச் சென்று மறைய வேண்டிய கட்டாயம் தில்குஷாவில் வாழும் பெண்களுக்கு இருக்கிறது. எந்த முக்கிய முடிவும் மனைவிகளிடம் கேட்டு எடுக்கப்படுவதில்லை; கண்ணை மூடிக்கொண்டு திருமணங்கள் செய்கிறார்கள் கதையில் வரும் ஆண்கள்.

`கணவர் இறந்தபின் பெண்ணுக்கு என்ன இருக்கிறது? பெண் ஆணுக்காகவே வாழ்கிறாள். அவனது மரணம் அவளது ஆசை, கனவு, வசதி எல்லாவற்றுக்கும் முடிவு கட்டுகிறது. இந்த நிலைக்கு நாய்களே பரவாயில்லை' என்று நூலில் வரும் பெண் ஒருத்தி கணவனை இழந்தவளுக்கு ஆறுதல் சொல்கிறாள்.

1944-ம் ஆண்டு, இஸ்லாமியப் பெண் ஒருவர் இதை எழுதியிருக்கிறார் என்பதே பெரும் ஆச்சர்யம்தான்.

2018-ம் ஆண்டு, எழுத்தாளரும் பேராசிரியருமான ஜெசிகா பெர்மனின் முன்னுரையுடன் மறுபதிப்பாக வெளிவந்தது ‘பர்தாவும் பலதார மணமும்’ நாவல். உலகெங்கும் பெண்ணியவாதிகளின் கவனத்தை மீண்டும் ஈர்த்திருக்கிறார் இக்பாலுன்னிசா.

`எவ்வளவு நம்பிக்கைக்குரியவளாக இருந்தாலும் ஒரு பெண் ஆணுக்கு அடங்கி ஒடுங்கித்தான் இருக்க வேண்டும். ஏன் இந்த கற்பு குறித்த இரட்டை நிலைப்பாடு? இதைச் சமூகமும் ஆணும்தானே ஏற்படுத்தியது? பெண்ணுக்கும் ஆணைப் போன்ற மனமுண்டு தானே? ஆண் பெண்ணுக்கு எப்போதாவது அடிபணிந்து நடப்பானா என்ன?'

- இக்பாலுன்னிசா உசைன் பேகம்