Published:Updated:

பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் சட்டம்... மத்திய அரசின் முடிவு சரிதானா?!

குழந்தைத் திருமணம்
News
குழந்தைத் திருமணம்

ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது. தற்போது பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்றுவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. விரைவில் இது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நடைமுறைக்கு வரவிருக்கிறது.
திருமணம்
திருமணம்

பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்தவேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்துகொண்டிருந்தன. கடந்தாண்டு சுதந்திர தின உரையாற்றியபோது, பிரதமர் மோடியும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு பட்ஜெட் உரையில், 'பெண்களின் திருமண வயதை உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார். சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி தலைமையில் மத்திய சுகாதார அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பெண்களின் ஆரோக்கியம் உள்பட பல்வேறு அம்சங்களை ஆய்வுசெய்த அந்தக்குழு, பெண்கள் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்களுடன் பல கட்ட கலந்துரையாடல்களை நடத்தி தனது அறிக்கையை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தது. திருமண வயதை 21 ஆக உயர்த்துவதன் மூலம் தாய்-சேய் ஆரோக்கியத்தை மேம்படுத்தமுடியும்; இறப்பு விகிதத்தையும் குறைக்கமுடியும் என்று அந்தக்குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது. திருமண வயதை உயர்த்துவதன்மூலம் பெண்களின் சுய பொருளாதார, சமூகப் பங்களிப்பும் மேம்படும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ள அந்தக்குழு, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் உள்பட திருமணச் சட்டங்கள் அனைத்திலும் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.

பெண்கள்
பெண்கள்
அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசு, விரைவில் அதை நடைமுறைக்குக் கொண்டுவரவிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதன்முதலில் திருமண வயதை வரையறுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது, 1929-ல். குஜராத்தைச் சேர்ந்த மலபாரி என்ற செயற்பாட்டாளர், 'சமய நம்பிக்கை என்ற பெயரில் சிறுவயதுக் குழந்தைகளுக்கு நடக்கும் திருமணங்களைத் தடுக்க ஆங்கிலேய அரசு வலுவான ஒரு சட்டத்தை உருவாக்கவேண்டும்' என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 1891-ல் இதுதொடர்பாக ஒரு சட்டமுன்வரைவை உருவாக்கியது ஆங்கிலேயே அரசு. ஆணுக்கு 18 வயது நிறைவடைந்தபிறகும் பெண்ணுக்கு 12 வயது நிறைவடைந்தபிறகுமே திருமணம் செய்விக்கவேண்டும் என்றும் அந்த வரைவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திலகர் உள்ளிட்ட பலரும் இந்த வரைவை எதிர்த்து எழுதினார்கள். மதம் சார்ந்த நம்பிக்கைகளில் தலையிடவேண்டாம் என்று பிரிட்டிஷ் தலைமையும் கண்டித்ததால் அந்த வரைவை கைவிட்டார்கள் இந்தியாவை நிர்வகித்த பிரிட்டிஷ் அதிகாரிகள்.

சட்டம்
சட்டம்

அதேநேரத்தில் குழந்தைத் திருமணத்தால் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும் என்ற குரலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. 1913-ல் மீண்டும் திருமண வயதை சட்டப்பூர்வாக்கும் முயற்சிகள் நடந்தன. ஆச்சார்யா போன்றவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.

19-ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்ணுரிமை சார்ந்த குரல்கள் தீவிரமடைந்தன. குழந்தைப்பருவத்தில் திருமணம் செய்வதால் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. 1929-ல் ராய் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா என்ற ஆங்கிலேயர் திருமணம் செய்ய பெண்ணுக்கு 14 வயதும் ஆணுக்கு 18 வயதும் நிறைந்திருக்கவேண்டும் என்ற சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்தார். கடும் எதிர்ப்புக்கிடையில் 1929 செப்டம்பர் 28-ம் தேதி அந்த வரைவு சட்டமானது. சார்தாவால் உருவாக்கப்பட்ட இந்தச் சட்டமே காலப்போக்கில் பெயர் மருவி சாரதா சட்டம் என்றானது.

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமணம்
கால மாற்றத்துக்கேற்ப ஆண்-பெண் திருமண வயது தொடர்ந்து மாறுதலுக்குள்ளாகி வந்தது. 1978-ஆம் ஆண்டில், சட்டத்திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது. தற்போது பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்றுவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

சட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் பதினெட்டு வயதுக்கு முன்பாக திருமணம் செய்யும் சம்பவங்கள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. செம்மஞ்சேரி போன்ற நவீன குடியேற்றப்பகுதிகளிலும்கூட 15 - 16 வயதில் திருமணம் நடப்பது சாதாரணமாக இருக்கிறது. அதேநேரம், நகர்ப்புற பெண்கள் கல்வி, வேலையென பெரும்பாலும் 21 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

பெண்கள்
பெண்கள்
இந்நிலையில், பெண்களின் திருமண வயது உயர்த்தப்பட்டதை பெரும்பாலானோர் வரவேற்கிறார்கள்.

"பொதுவாக மனைவி கணவனைவிட வயது குறைவானவளாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பெண் என்பவள் கணவனுக்கு சமையல் செய்யும் சமையற்கருவியாகவும், பிள்ளை பெற்று தரும் கருவியாக மட்டுமே பார்க்கப்படுவதன் வெளிப்பாடு இது. மேலும் ஆண்கள் தங்கள் மனைவி இளமையாக இருக்க வேண்டும் என்றும் கருதினார்கள். இப்பொழுது பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறிவிட்டார்கள்.

திலகவதி
திலகவதி

பெண்களின் திருமண வயதை உயர்த்தும்போது அவள் முறையாகக் கல்வி பெற்று முதிர்ச்சி அடைந்திருப்பாள். சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பக்குவத்தைப் பெறுவாள். மேலும் முதிர்ச்சி பெற்ற பெண்ணை, ஆண் திருமணம் செய்யும்போது அவனும் பல பலன்களை பெறுவான். அப்படியான தம்பதிகள் மூலம் நல்ல குழந்தைகள் சமூகத்துக்குக் கிடைப்பார்கள். பெண்களின் திருமண வயதை சட்டப்பூர்வமாக உயர்த்தும் முடிவென்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது" என்கிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதி.

பேராசிரியையும் பேச்சாளருமான சுமதிஸ்ரீயும் பெண்களின் திருமண வயது உயர்வை வரவேற்கிறார்.

"கிராமப்புற மகளிர் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்த அனுபவத்தை வைத்துச்சொல்கிறேன்... முதல் செமஸ்டர் அல்லது முதல் வருடம் முடியும்போதே, 'எனக்கு கல்யாணம் மேம்... இனிமே காலேஜ்க்கு வர மாட்டேன்' என்று சொல்கிற மாணவிகளை ஒவ்வொரு வருடமும் சந்தித்திருக்கிறேன். கல்லூரியில் சேரும்போது பதினேழு வயதில் இருந்திருப்பார்கள். முதல் வருடத்திலேயே பதினெட்டு வயது நிறைவடைந்தபின், 'நல்ல இடத்துல மாப்பிள்ளை அமைஞ்சுச்சு' என அந்த மாணவிகளுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். 'மாப்பிள்ளை வீட்ல கல்யாணத்துக்கு பிறகு படிக்க வைக்கிறேன்னு சொல்லிருக்காங்க மேம்' என சந்தோஷமாக சொன்ன எந்தப் பெண்ணும் அதன் பிறகு கல்லூரிக்குப் படிக்க வந்ததில்லை.

பேச்சாளர் சுமதிஸ்ரீ
பேச்சாளர் சுமதிஸ்ரீ

திருமணத்தை சுயமாக தேர்வு செய்து, 'கல்யாணம் ஆகிடுச்சு... டி.சி. வேணும்' எனக் கேட்டவர்களையும் என் பேராசிரியர் அனுபவத்தில் சந்தித்திருக்கிறேன். 'டிகிரி முடிச்சுட்டு பண்ணிருக்கலாமே' என்றால், நான் மேஜர் என்பதை பெரும் தகுதியாக சொல்லி, மேற்கொண்டு படிக்காமல் போனவர்களும் உண்டு... நானே காதல் திருமணம் செய்தவள்தான். திருமணம் என்பது பெண்ணின் சுயதேர்வாக இருக்க வேண்டும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவள். அதேநேரம் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, திருமணம் செய்வபர்களை நான் ஆதரிப்பதில்லை.

இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன், பத்தாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிக்குப் போக அனுமதியில்லாமல், வீட்டுக்கு அருகிலேயே டைப் ரைட்டிங் போன பெண்கள் அநேகம். அதன் பிறகு, அவர்களைப் போன்றவர்கள், ப்ளஸ் டூ வரை படிக்க வந்ததே, 'இப்ப கல்யாணம் பண்ண கூடாதாமே... வீட்ல இருக்குறதுக்கு ஸ்கூலுக்கு போகட்டுமே' என்ற பெற்றோரின் மனப்பான்மையால்தான்.

இந்தத் திருமண வயது உயர்வு, பெண்கள் எல்லோருமே கல்லூரிப் படிப்பை முடிக்கிற ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்..." என்கிறார் சுமதிஸ்ரீ.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளரும் கவிஞருமான திலகபாமாவும் பெண்களின் திருமண வயது உயர்வை வரவேற்கிறார்.

"இது எங்களின் நீண்டநாள் கோரிக்கை. பெண்களுக்கு 17 வயது ஆகும்போதே மாப்பிள்ளை பார்த்து வைத்துவிட்டு 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வைக்கிறார்கள். இதனால் அவர்கள் இளம்தாயாக மாற நேரிடுகிறது. மேலும் அவர்களுக்கு ஊட்டசத்து குறைபாடும் ஏற்படுகிறது. கல்வித் தகுதி, கனவு என எதுவும் இல்லாமல் போகிறது. திருமண வயதை உயர்த்தும்போது பெண்களுக்கு உலக அனுபவம் கிடைக்கும். நிச்சயம் வரவேற்கக்கூடிய விஷயம்..." என்கிறார் திலகபாமா.

திலகபாமா
திலகபாமா
இதுபற்றி கவிஞரும் ஆசிரியையுமான சுகிர்தராணியிடம் பேசினோம்.

"நான் ஒரு ஆசிரியை. 25 வருடங்களாக மாணவிகளோடு இருக்கிறேன். தமிழகச்சூழலில் இப்போதுதான் நிறைய பெண் குழந்தைகள் படிக்க வருகிறார்கள். அரசு தரக்கூடிய சைக்கிள், லேப்டாப் போன்ற பொருள்களெல்லாம்கூட அதற்கு முக்கிய காரணம்.

சுகிர்தராணி
சுகிர்தராணி

இங்கு குழந்தைத் திருமணங்கள் நிறைய நடக்கின்றன. ஆனால் அதுகுறித்து முழுமையான புள்ளி விவரங்கள் இல்லை. குழந்தைத் திருமணங்களை தடுக்க ஒருங்கிணைந்த நடைமுறைகள் இல்லை. இந்தச் சூழலில் திருமண வயதை 21 ஆக மாற்றும் முடிவை வரவேற்கிறேன். பெற்றோர்கள் பெண்பிள்ளைகளுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்துவைத்துவிடவே நினைக்கிறார்கள். வெகுசிலரே பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கித்தர நினைக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை 18 வயது என்பது படிக்கவேண்டிய வயது. இந்தப் பருவத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பக்குவமடையாதவர்களாகவலே இருப்பார்கள். இன்று நிறைய பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமாகவே நடக்கின்றன. அதைத்தாங்கும் அளவுக்கு இந்த வயதில் பெண்களின் உடல்நிலை இருப்பதில்லை. 21 வயதில் திருமணம் செய்யும்போது பெண்கள் பட்டப்படிப்பை முடித்துவிடமுடியும். அதன்மூலம் தன்னம்பிக்கை கிடைக்கும். உலகத்தைப் புரிந்துகொள்ள முடியும். முதிர்ச்சியும் ஏற்படும்" என்கிறார் சுகிர்தராணி.

பெண்கள்
பெண்கள்

18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் குழந்தைகளே என்கின்றன இந்திய சட்டங்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுயமாக முடிவெடுக்கும் தகுதியைப் பெறுகிறார்கள் என்பதே உலகளாவிய நடைமுறை. தற்போது காதல் திருமணங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணின் முடிவே இறுதியாக இருக்கிறது. தற்போது திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சூழலில் அதற்குட்பட்ட காலங்களில் காதல் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி குற்றமாகும். இது பெண்கள் தங்கள் வாழ்க்கையைச் சுயமாகத் தேர்வு செய்வதைப் பாதிக்கும் என்ற குரலும் ஒலிக்கிறது.

"பெண்களின் திருமண வயதை உயர்த்துவது பெண் தன் வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்யும் உரிமைமீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே இருக்கும். இந்திய அரசியல் சாசனம் பெண்களுக்கு அளித்துள்ள தனிப்பட்ட உரிமையை இது பறித்துவிடும். அரசு இந்த நடவடிக்கையைக் கைவிடவேண்டும்" என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

திருமணம்
திருமணம்
எதுவாயினும் பெண்கள் தங்கள் திருமணம் குறித்த முடிவை தாங்களே தேர்வு செய்யவேண்டும். திருமண விஷயத்தில் ஆண்களுக்குத் தரப்படும் சுதந்திரம் பெண்களுக்கும் தரப்படவேண்டும். அதிலிருக்கும் இடையூறுவகளைக் களையும் முன்னெடுப்புகள் காலத்தில் தேவை!