Published:Updated:

பெண்கள் அரசியல் பழகணும்! - துணி நாப்கின் பிசினஸில் அசத்தும் 19 வயது இஷானா

இஷானா
பிரீமியம் ஸ்டோரி
News
இஷானா

#Motivation

``ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியில வந்தவுடனே, எப்படிப் பேசினா உடைஞ்சுபோவான்னு தெரிஞ்சுக்கிட்டு பல வார்த்தைகளை விடுவாங்க. அதையெல்லாம் உறுதியோட கடந்து நின்னாதான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்'' - அனுபவத்திலிருந்து சொல்கிறார் கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இஷானா. பெண்களுக்கான துவைத்துப் பயன்படுத்தக் கூடிய துணி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில்முனைவோர். ஐந்து வேலையாட்கள், இந்தியா முழுக்க கஸ்டமர்கள் என்று அசத்திக் கொண்டிருக்கிறார். கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பப் பெண்ணாக இருந்து இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியிருக்கும் கதை சொன்னார் இஷானா...

“மிடில் கிளாஸ் இஸ்லாமிய பெண் நான். ப்ளஸ் டூ முடிச்சதும் காலேஜ்ல சேர்வதைவிட பிசினஸ்ல விருப்பம் இருந்தது. இஸ்லாம்ல சீக்கிரம் கல்யாணமும் பண்ணி வெச்சுருவாங்க. அதுக்குள்ள ஏதாவது சாதிக்கணும்னு ஃபேஷன் டிசைனிங் டிப்ளோமா கோர்ஸ் சேர்ந்தேன். 2018-ல நார்மலான டெய்லரிங் பிசினஸைதான் தொடங்கினேன்'' என்று தன் பணியில் கவனம்செலுத்திக்கொண்டே நம்மிடம் பேசினார்....

பெண்கள் அரசியல் பழகணும்! - துணி நாப்கின் பிசினஸில் அசத்தும் 19 வயது இஷானா

``சானிட்டரி நாப்கின் பயன்படுத்திட்டு வந்த எனக்கு, சில ஹெல்த் இஷ்யூஸ் வந்துச்சு. அதனால, துவைச்சுப் பயன்படுத்துற வகையில துணி நாப்கின் செஞ்சு பயன்படுத்தினேன். நல்ல மாற்றம் தெரிஞ்சது. பீரியட்ஸால வீட்டுக்குள்ளேயே முடங்கின பெண்களை, 'வாங்க பார்த்துக்கலாம்'னு வெளிய வரவெச்சு ஒரு பெரிய புரட்சியை சானிட்டரி நாப்கின்கள் பண்ணுச்சு. அதே நேரத்துல, அதில் பயன்படுத்தப்படுற ரசாயனங்களால ஏற்படுற சைடு எஃபக்ட்ஸும் இன்னொரு பக்கம் அதிகரிக்க ஆரம்பிச்சுச்சு. என்னை மாதிரி நாப்கின்களால பாதிக்கப்பட்ட பெண்கள், மற்றும் பாதிப்புக்கு முன்னாலேயே அதை உணர்ந்து அதிலிருந்து விலக நினைக்கிற பெண்களைக் கணிச்சு, துணி நாப்கின்கள் தயாரிக்கிற தொழில்ல இறங்கினேன். `அனா'னு என் புராடக்டுக்குப் பெயர் வெச்சு, சாம்பிளை எனக்குத் தெரிஞ்சவங்களுக்குக் கொடுத்தப்போ, `என்னது துவைச்சுப் பயன்படுத்தணுமா?'னு கேட்டாங்க. ஒரு பாட்டி, `அந்தக் காலத்துல நாங்க பயன்படுத்தின எல்லாமேதானே திரும்பி வந்துட்டு இருக்கு... இப்போ இது. கொடு என் பேத்திக்கு ஒரு பாக்கெட்'னு சொல்லி வாங்கிட்டுப் போனாங்க. முதல் நம்பிக்கை விழுந்தது. தொடர்ந்து, தோழிகள், தெரிஞ்சவங்கனு சின்ன கஸ்டமர்கள் வட்டம் கிடைச்சது. சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்கால இப்போ இந்தியாவின் பல பகுதிகளுக்கும் டெலிவரி அனுப்புறோம்'' என்பவர், நாப்கின் தயாரிப்பு பற்றி கூறினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``பேடுல காட்டன், டெடி டவல், லீக் ஃப்ரூப் லேயர், மெட்டல் பட்டன்னு வைக்கறோம். கிட்டத்தட்ட மார்க்கெட்ல கிடைக்கற அதே பேடு மாடல்தான். ஒரு பேடை 15 முதல் 18 தடவை வரை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துறதாலேயே பீரியட்ஸ் பிரச்னை சரியாகிடும்னு சொல்ல முடியாது. உடல்நிலை காரணங்களால ஏற்பட்ட பீரியட்ஸ் பிரச்னைகளுக்கு மருத்துவம்தான் தீர்வு. ஆனா, ரசாயன நாப்கின்களால ஏற்படுற பிரச்னைகள் தீர, தவிர்க்க இது நிச்சயம் நல்ல மாற்றா இருக்கும்” என்றவர் தனது ஊழியர்களிடம் பேசிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“ஆரம்பத்துல ஒரு நாளுக்கு சராசரியா 10 பேடுகள் தயாரிச் சுட்டு இருந்தோம். இப்ப எங்க கிட்ட ஐந்து டெய்லர்கள் இருக்காங்க. சராசரியா ஒருத்தர் ஒரு நாளுக்கு 100 பேடுகள் தயாரிக்கறாங்க. இந்த மாதிரி ரீ-யூஸபிள் பேடு தயாரிக்கிற ஒரு நிறுவனத்துல போய் ட்ரெய்னிங் கேட்டப்போ அவங்க அனுமதிக்கல. ஆனா நான் இப்போ என்னை அணுகிறவங்களுக்கு இலவச பயிற்சி தர்றேன். அப்படி நம்மகிட்ட பயிற்சியெடுத்த மூணு பேர் இப்போ கேரளாவுல துணி பேடுகள் தயாரிச்சிட்டு இருக்காங்க. எங்களோட டிசைன் டிராயிங்வரை அப்படியே கொடுக்கறோம்'' என்றவர்,

``ஒருநாள் குடியரசுத் தலைவர் ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டுப் பாராட்டினாங்க. இன்னும் வேகமா ஓட உத்வேகம் கிடைச்சது. இப்ப குழந்தைகளுக்கான துணி டயப்பர், படுக்கைகளும் தயாரிக்கறோம். என்ன மாதிரி இன்னும் நூற்றுக்கணக்கான பெண்களை தொழில் முனைவோரா உருவாக்கணும். அவங்க மூலமா ஆயிரக் கணக்கான பேருக்கு வேலை கிடைக்கணும். அதான் என் ஆசை” என்கிறார் துடிப்புடன்.

பதின் வயதுப் பாய்ச்சலுக்கு வாழ்த்துகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரியார், அம்பேத்கரை படிக்க ஆரம்பிச்சேன்!

தடைகளைத் தாண்டிவந்த நாள்கள் பற்றி பேசிய இஷானா, “எங்க குடும்பத்துல ஆரம்பத்துல, ‘இதையெல்லாம் எப்படி சகஜமா பேச முடியும்?’னு கேட்டாங்க. என் கல்யாணத்துக்கு சேர்த்துவெச்ச தொகையிலதான் பிசினஸைத் தொடங்கினேன். `இன்னும் கல்யாணம் பண்ணாம சுத்திட்டு இருக்க?'னு கேட்பாங்க. பெரியார், அம்பேத்கரை படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் என் மனசுல இருந்த பல குழப்பங்கள் ஒண்ணுமே இல்லாம உடைஞ்சு போயிடுச்சு. ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியில வந்தா அவளை மீண்டும் வீட்டுக்குள் அனுப்ப இங்க எல்லா விஷயங்களும் நடக்கும். அதையெல்லாம் கடந்துவர, பெண்கள் அரசியல் பழகணும். அப்பதான் மாற்ற முடியாத பல விஷயங்களையும் மாற்ற முடியும்'' என்றார் உறுதியான குரலில்.