Published:Updated:

ஊதிய உயர்வில் மாற்றம், வீடு-குடும்ப வேலைப் பளு - பேசுகிறார்கள் ஐ.டி பெண்கள்!

ஐ.டி பெண்கள்
ஐ.டி பெண்கள்

"ஈகோ பார்க்காம குடும்ப வேலையை ஆண்கள் ஏத்துக்கத் தயாரா?!"

பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை என்று கூறும் வகையில் அவர்கள் எல்லா துறைகளிலும் ஜொலிக்கிறார்கள். குறிப்பாக, ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். பாலியல் தொந்தரவுகள், ஊதிய முரண்பாடுகள், மன அழுத்தம் என அத்துறை பெண்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன. இதுகுறித்து உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள, ஐ.டி நிறுவன பெண்கள் பலரிடமும் பேசினோம்.

ஐ.டி பெண்கள்
ஐ.டி பெண்கள்

சென்னையிலுள்ள பன்னாட்டு ஐ.டி நிறுவனம் ஒன்றில் புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்யும் அர்ச்சனா ஶ்ரீ கூறுகையில், "ஐ.டி நிறுவனத்துல வேலை செய்யணும்ங்கிறது என் கனவு நிறைவேறியது. கடந்த எட்டு வருஷமா ஒரே நிறுவனத்துல வேலை செய்றேன். நல்ல சம்பளம்ங்கிற கண்ணோட்டத்துல ஐ.டி வேலைக்கு வருபவர்கள் எண்ணிக்கை முன்பு அதிகமா இருந்துச்சு. ஆனா, அந்த நிலை இப்போ குறைஞ்சுகிட்டே வருதுனு நினைக்கிறேன். வேலைச் சூழல்ல ஆண், பெண் இருவருக்குமே ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். ஆனா, அது பெண்களுக்கு சற்றே அதிகமா இருக்கும். மகப்பேறு காலம் உள்ளிட்ட பெண்களின் உடல்நிலை காரணங்கள் வேலை விஷயத்துல பெரிய தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். இதனால், ஆண்களை ஒப்பிடுகையில் எங்க வளர்ச்சி குறைவாகவே இருக்குது. ஒரு கட்டத்தில் வர்ற சம்பளம் வந்தா போதும்ங்கிற மனநிலைக்கு பல பெண்களுக்கு உண்டாகிடும்.

எல்லாத் துறையிலயும் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கக்கூடும். ஆனா, நாம நடந்துக்கிற விதம், நம்ம நண்பர்கள் உட்பட வேலைச் சூழல்ல நம்மைச் சுத்தியிருக்கிறவங்க நல்லவங்களா இருந்தா எந்தப் பிரச்னையும் வராது. வெளியூரிலிருந்து பெரு நகரங்களுக்கு வந்து ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்ற பெண்கள் பலரும் தங்களுக்கு நடக்கிற பாலியல் விஷயங்களை வெளிப்படையா சொல்ல முன்வருவதில்லை. அதனால, இதுபோன்ற பிரச்னைகள் தொடருது. ஒருவேளை எனக்கு அத்தகைய பிரச்னைகள் வந்தால், நிச்சயம் வெளிப்படையா சொல்வேன். அப்போதான் தப்பு செய்றவங்க எண்ணிக்கை குறையும். ஒருவேளை பெண்கள் தைரியமா முன்வந்து புகார் கொடுத்தாலும், பல நிறுவனங்கள்ல உரிய தீர்வு கிடைக்கிறதில்லை. தீர்வுக்கு வழிவகை செய்யாம, `நீங்க அப்படி இருக்கணும், உங்களை இப்படி மாத்திக்கணும்'னு ஆலோசனைகள்தான் சொல்லுவாங்க. அதனால, நிறைய பெண்கள் தங்கள் வேலைச் சூழல்ல ஏற்படும் பிரச்னைகளை சகிச்சுகிட்டுதான் வேலை செய்றாங்க. 

ஒருவேளை பெண்கள் தைரியமா முன்வந்து புகார் கொடுத்தாலும், பல நிறுவனங்கள்ல உரிய தீர்வு கிடைக்கிறதில்லை. தீர்வுக்கு வழிவகை செய்யாம, `நீங்க அப்படி இருக்கணும், உங்களை இப்படி மாத்திக்கணும்'னு ஆலோசனைகள்தான் சொல்லுவாங்க.
அர்ச்சனா ஶ்ரீ

பேச்சுலரா இருந்தா, மாலை நேரத்துல கூடுதலா வேலை செய்யலாம். ஆனா, கல்யாணமான பெண்கள் வேலை முடிச்சுட்டுப்போய் குடும்பத்தைப் பார்க்கணுமே! அதனால டார்கெட் வேலையை முடிச்சுட்டு மாலை 6 மணிக்கு வீட்டுக்குக் கிளம்பினாலும், அதைப் பெரிய விஷயமா பார்ப்பாங்க. ஆனா, காலையில எத்தனை மணிக்கு வேலைக்கு வர்றாங்கனு பார்க்க மாட்டாங்க. எங்க துறையில பெண்களைவிடவும், ஆண்கள்தான் தலைமைப் பொறுப்புக்கு அதிகம் வர்றாங்க. அந்த நிலைக்குப் பெண்களும் வந்தால்தான், சகப் பெண்கள் எதிர்கொள்ளும் வேலை சார்ந்த பிரச்னைகள் ஓரளவுக்குக் குறையும்.

ஐ.டி ஊழியர்கள் மகிழ்ச்சியா இருக்கிறதா பலரும் நினைக்கிறாங்க. எங்களுக்கு உடல் உழைப்பு குறைவுதான். ஆனா, மனரீதியா நாங்க எதிர்கொள்ளும் பிரச்னைகள் அதிகம். இருக்கையில உட்கார்ந்தபடியே, பல மணிநேரம் வேலை செய்யணும். நேரத்துக்குச் சாப்பிட முடியாது, டீ பிரேக் போக முடியாது. அடுத்த வாரம் எனக்குப் பிரசவ டெலிவரி. ஆனா, நான் ஒப்புக்கொண்டபடி என் புராஜெக்ட் வேலையைச் செய்யணும். அதனால, டெலிவரிக்கு ஒருசில நாள் முன்னாடி வரை வேலை செய்யணும். இப்படி எத்தனையோ பிரச்னைகள். எல்லாத்தையும் கடந்துதான் வந்தாகணும்" என்று இயல்பாகப் பேசி முடித்தார். 

ஐ.டி பெண்கள்
ஐ.டி பெண்கள்

ஐ.டி நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர் விஜி ஹரி. தற்போது 'Kelp HR' என்ற தன் நிறுவனத்தின் மூலம் பல துறை நிறுவன ஊழியர்களுக்கும் தன்னம்பிக்கை பயிற்சி கொடுத்துவருகிறார். ஐ.டி நிறுவன பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விளக்குகிறார் விஜி ஹரி.

"ஐ.டி நிறுவன பெண் ஊழியர்களுக்குத் திருமணத்துக்கு முன்புதான் பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகம் ஏற்படுது. அதேசமயம் திருமணத்துக்குப் பிறகு, உயரதிகாரிகளின் தொந்தரவுகள் அதிகம் நிகழ ஆரம்பிக்கும். குழந்தை பிறந்த பிறகு, குழந்தை வளர்ப்பு பெண்களின் பொறுப்பாகிடுது. இதனால், குடும்பம், வேலை என இரண்டு சூழலிலும் பெண்கள் பல்வேறு மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால், வேலையில் குடும்பம் சார்ந்த நினைவுகளும், வீட்டில் வேலை சார்ந்த நினைவுகளும் பெண்களுக்கு அதிகம் ஏற்படும். வேலைக்குப் போனாலும், வீட்டு வேலைகள் செய்றதில் பெண்களின் பங்குதான் பிரதானமாக இருக்குது. அதனால் அலுவலக வேலை, வீட்டு வேலைனு ஒவ்வொரு நாளும் பெண்கள் இரண்டு ஷிஃப்ட் வேலை செய்ற நிலை இருக்குது. 

விஜி ஹரி
விஜி ஹரி
குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு எந்த நிர்பந்தமும் கிடையாது. ஈகோ பார்க்காமல் அவர்களும் குழந்தை வளர்ப்பு, சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தால், நிச்சயம் பெண்களால் வேலையில் நன்றாகக் கவனம் செலுத்த முடியும்.
விஜி ஹரி

அதேசமயம் குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு எந்த நிர்பந்தமும் கிடையாது. ஈகோ பார்க்காமல் அவர்களும் குழந்தை வளர்ப்பு, சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தால், நிச்சயம் பெண்களால் வேலையில் நன்றாகக் கவனம் செலுத்த முடியும். ஆனால், இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது பெரிய கேள்விக்குறி. வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து என் நிறுவனத்தின் சார்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தோம். அதில், 1,000 பெண்களில் சராசரியாக 30-40 பெண்கள் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு சிங்கிள் பேரன்ட் பெண்களுக்குதான் பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகம் நிகழ்கின்றன.

பெண்களின் திறமைக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால், அவர்களாலும் ஒரே நிறுவனத்தில் நீண்ட காலத்துக்கு வேலை செய்ய முடியும். அதனால் உயர் பொறுப்புகளுக்கு உயரும் பெண்களின் எண்ணிக்கையும் உயரும். `ஆண்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப்படுவதில்லை. இந்த விகிதாசாரம் (pay parity) சரிசெய்யப்பட வேண்டும்'னு வெளிநாடுகளில் பெண்கள் தைரியமாகப் போராடுறாங்க. ஆனால், இந்தியாவில் இதுகுறித்த துல்லியமான தகவல்கள் கிடைப்பதில்லை " என்கிறார் விஜி ஹரி.

Work From Home
Work From Home

சென்னையிலுள்ள `nThrive Global Solutions' நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியான (ஹெச்.ஆர்)  மாதங்கி, "ஐ.டி துறையில் ஆண்-பெண் பாகுபாடு பார்க்கப்படுவதில்லை. திறமைக்கே முன்னுரிமை" என்ற கருத்தை அழுத்தமாக முன்வைக்கிறார். மேலும் அவர் கூறுகையில், "ஐ.டி நிறுவனங்களின் எல்லாத் துறைகளிலும் பெண்களும் இருப்பாங்க. அவங்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுது. இரவுப் பணிகள்ல ஆண், பெண் இருவரும் வேலை செய்றாங்க. ஆணுக்கோ, பெண்ணுக்கோ வேலை விஷயத்துல எந்த முன்னுரிமையும் கொடுக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரின் பணித்திறனுக்கு மட்டுமே ஊதியம் மற்றும் பதவி உயர்வு கொடுக்கப்படுது. அதேசமயம் பெண்களுக்கு ஆறு மாத சம்பளத்துடன், மகப்பேறு கால விடுமுறை நிச்சயம் கொடுக்கப்படுது.

ஐ.டி நிறுவனங்கள்ல பாலியல் ரீதியான குற்றங்களைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பான விளக்கங்களை, ஓர் ஊழியரைப் புதிதாக வேலைக்கு எடுக்கும்போதே தெளிவா சொல்லிடுவோம். அதையும் மீறி பாலியல் தொந்தரவுகள் நிகழ்ந்தால், பெண்கள் தைரியமாகப் புகார் செய்யலாம். அதுக்கு நிறைய மறைமுக வழிவகைகள் செய்யப்பட்டிருக்கு. தவறு செய்த ஆண் யாரா இருந்தாலும் அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாதங்கி
மாதங்கி
ஆணுக்கோ, பெண்ணுக்கோ வேலை விஷயத்துல எந்த முன்னுரிமையும் கொடுக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரின் பணித்திறனுக்கு மட்டுமே ஊதியம் மற்றும் பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது.
மாதங்கி

என் 20 வருட பணி அனுபவத்தில், ஐ.டி நிறுவனங்களில் பெண்களின் வளர்ச்சி பெரிய அளவில் உயர்ந்திருக்கு. வெளிப்படைத்தன்மையும் அதிகமாகிடுச்சு. விதிவிலக்கா சில நிறுவனங்கள்ல பெண்களுக்கு எதிரான சில விஷயங்கள் நடக்கலாம். அதுக்காக ஒட்டுமொத்த துறையையும் குற்றம் சொல்லக் கூடாது. வேலைக்குப் போறதால, இன்னைக்குப் பெண்கள் சொந்தக் கால்ல நிற்கிறாங்க. ஐ.டி நிறுவனங்கள் பெண்களின் வளர்ச்சிக்கு வரும் காலங்களில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு