Published:Updated:

வீட்டிலேயே விளைவிக்கலாம் கோடைக்கேற்ற கீரை மிளகாய் வெள்ளரி! - ஜெயமலர்

ஜெயமலர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயமலர்

என் இல்லம் பசுமை இல்லம்

ஏழு ஆண்டுகளாக மாடித்தோட்டத்தில் காய்கறிகள், பூச்செடிகள், மூலிகைச்செடிகள் என வெரைட்டியாக வளர்க்கிறார் சென்னை அன்னனூரைச் சேர்ந்த ஜெயமலர்.

“பாரம்பர்ய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு நான். சென்னையில் விவசாயம் பண்ற அளவு இடம் இல்லாததால் மாடித்தோட்டம் அமைக்கலாம்னு திட்டமிட்டேன். அப்போ பண்ணைத் தொழில்நுட்ப தொடர்பான படிப்பு பற்றித் தெரியவந்தது. அதன் மூலமாதான் மாடித்தோட்டம் அமைக்கிறதுக்குக் கத்துக்கிட்டேன்.

இப்போ எங்க வீட்டில் 200 தொட்டிகள் இருக்கு. தினம் ரெண்டு மணி நேரம், இயற்கை உரம், தேவையான அளவு தண்ணீர்... அவ்வளவுதான். வீட்டுக்குத் தேவையான மொத்தக் காய்கறிகளையும் இங்கிருந்துதான் எடுக்கிறேன். அதைச் சமைச்சு சாப்பிடுறப்ப கிடைக்கிற திருப்தியே தனி” என்றபடியே, இந்த சீசனுக்கேற்ற மிளகாய் வளர்ப்பு குறித்தும் சொல்கிறார் ஜெயமலர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மிளகாய் வளர்ப்பு

தென்னங்கழிவு, மண் புழு உரம், மண் மூன்றையும் 2:1:1 என்று கலந்து குழித்தட்டுகளில் (வேளாண் அலுவலகங்களில் கிடைக்கும்) நிரப்புங்கள். ஆறுமணி நேரம் பஞ்சகவ்யா / நுண்ணுயிர் உரங்களில் ஊறவைத்த மிளகாய் விதைகளைக் குழித்தட்டுகளில் ஒரு குழிக்கு ஒன்றாக விதையுங்கள்.

ஜெயமலர்
ஜெயமலர்

குழித்தட்டுகளின் மீது ஒரு பேப்பரைச் சுற்றி ஐந்து நாள்கள் நிழலில் வைத்துவிடுங்கள். பிறகு, பேப்பரை எடுத்துவிட்டு மிதமான வெயில்படும் இடத்தில் வைத்தால், மிளகாய் நாற்று துளிர்விட ஆரம்பிக்கும். தினமும் தண்ணீர் தெளித்துவர, 21 நாள்களில் 5 செ.மீ அளவுக்கு நாற்று வளர்ந்திருக்கும்.

மிளகாய் நாற்றை நடப் போகும் தொட்டியில் தென்னங்கழிவு, மண்புழு உரம், மண் கலந்து, ஏதேனும் ஒரு கீரையை விதையுங்கள். அவற்றை 21-வது நாளில் அறுவடை செய்தது போக, மீதம் இருக்கும் கீரையைத் தொட்டியிலேயே புதைத்து உரமாக்குங்கள். இதில் மிளகாய் நாற்றை நட்டுவையுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாற்று நட்ட 10-ம் நாள் மாட்டுச் சாணம், ஆட்டுச் சாணம், மண்புழு உரங்களை 2:1:2 என்ற விகிதத்தில் தயாரித்து, அதிலிருந்து 50 கிராம் உரத்தை ஒரு தொட்டியில் இட வேண்டும்.

35-ம் நாள் மிளகாய்ச் செடி பூக்கத் தொடங்கும். இந்தப் பருவத்தில் வாரத்துக்கு ஒரு முறை, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி லிட்டர் கடல் பாசி உரம் கலந்து (வேளாண் மையங்களில் கிடைக்கும்) செடிகளில் தெளியுங்கள். பிறகு ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மில்லி கிராம் பஞ்சகவ்யா கலந்து செடிகளின் மீது ஸ்ப்ரே செய்யுங்கள்.

ஜெயமலர்
ஜெயமலர்

55 முதல் 60 நாள்களில் மிளகாய் அறுவடைக்குத் தயாராகி விடும். மகசூல் குறைந்தவுடன் உரம் இடுங்கள். இப்படி மூன்று முறை அறுவடை செய்யலாம்.

காய்ந்த மிளகாய் வேண்டுமா?

செடியிலேயே பழுக்கவிட்டு 100-ம் நாள் பறித்து உலரவைத்தால் காய்ந்த மிளகாய் ரெடி. அதில் இருக்கும் விதைகளைச் சேமித்தால், அடுத்த நடவுக்குத் தாய் விதையும் ரெடி.

வீட்டில் செடிகள் குறைந்த அளவிலேயே இருக்கின்றன என்கிறவர்கள் பஞ்ச கவ்யாவுக்குப் பதில் 3G கரைசல் தெளிக்கலாம்.

3G கரைசல்: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்களைச் சம அளவில் எடுத்து, ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி கிராம் என்ற கணக்கில் கலந்து வாரம் ஒருமுறை செடியில் தெளித்தால் பூச்சிகளைத் தவிர்க்கலாம்.

ஜெயமலர்
ஜெயமலர்

சீசனுக்கு பெஸ்ட்!

இது கோடைக்காலம் என்பதால் உடலுக்குக் குளிர்ச்சி தரும் முடக்கத்தான்கீரை, வெள்ளரி போன்றவற்றை விதைக்கலாம்.

  • கொடி படர இடம் இருந்தால், வெள்ளரிச் செடியைத் தேர்வு செய்யுங்கள். ஒரு தொட்டியில் மூன்று வெள்ளரி விதைகளை நட்டு வையுங்கள். வெள்ளரி விதைகள் 7-ம் நாள் துளிர்விட ஆரம்பித்துவிடும். தினமும் கால் லிட்டர் தண்ணீர், 15 நாள்களுக்கு ஒரு முறை உரம் இடுதல், வாரம் ஒருமுறை 3G கரைசல் அல்லது பஞ்சகவ்யா தெளித்து வர 45-ம் நாளிலிருந்து காய்களை அறுவடை செய்யலாம். செடிகளைத் தொடர்ந்து பராமரித்து வந்தால் அடுத்த 100 நாள்களுக்கு வெள்ளரி துளிர்விட ஆரம்பிக்கும்.

  • குறைவான இடமே இருக்கிறது என்றால், முடக்கத்தான்கீரையைத் தேர்வு செய்து வளர்க்கலாம். மண்கலவை கலந்துவைத்துள்ள தொட்டியில், 20 முடக்கத்தான் விதைகளை விதைத்து விடுங்கள். ஐந்தாம் நாளில் செடி துளிர்த்து விடும். 10 செ.மீ-க்கு மேல் கீரை வளர்ந்த பிறகு இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சமைக்கலாம். தொடர்ந்து பராமரித்தால் அடுத்த ஒரு வருடத்துக்குப் பயன்படுத்த முடியும். முடக்கத்தான் செடியில் காய்க்கும் காய் களிலிருந்து விதைகளைச் சேகரித்து அடுத்த நடவுக்குப் பயன்படுத்துங்கள்.

இருக்கும் இடத்தைப் பசுமையாக மாற்று வதுடன் ஆரோக்கியமாகவும் வாழ்வோம்!