Published:Updated:

முதல் பெண்கள்: தமிழகத்தின் முதல் கிறிஸ்துவப் பெண் சட்டமன்ற உறுப்பினர் - ஜெபமணி மாசிலாமணி

அவள் விகடன் டீம்
கார்த்திகேயன் மேடி

ஹம்சத்வனி

பிரீமியம் ஸ்டோரி

``பள்ளி நாள்கள் முதலே எனக்கு அவர்களைத் தெரியும். நான் சிறு பிள்ளையாக இருந்தபோது சென்று கொண்டிருந்த தூத்துக்குடி ஆயர் இல்லத்தை அடுத்த சின்ன தேவாலயம்தான் அவர்களைப் பார்க்கும் இடம். கறுப்பு கோட்டும் காந்தி குல்லாவுமாக அந்தச் சூழலில் வேறுபட்ட உடையுடன் வருவார் மாசிலாமணிப் பிள்ளை. முன்னொரு காலத்தில் கணவனும் மனைவியுமாக அவர்கள் பேசிய விடுதலைவேட்கைக் கூட்டங்களில் நான் சிறுவனாக முன்வரிசையில் மணலைக் குவித்துவைத்து அமர்ந்து கேட்டிருக்கிறேன். அவர்களது சித்திரங்களை சுவர்களில் முன்னொரு காலத்தில் வரைந்ததைப் பார்த்திருக்கிறேன்'' என்று சொல்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த கலாபன் வாஸ்.

1941 ஜனவரி 20 அன்று நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற தம்பதி, மாசிலாமணி - ஜெபமணி தம்பதி. தம்பதியாக சிறை சென்ற முதல் கிறிஸ்துவர்கள். அப்போது ஜெபமணி அம்மாள் தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். காந்தியடிகளின் கட்டளைப்படி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் மட்டுமே தொடக்கத்தில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டனர். தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயத்திலிருந்து காந்தியிடம் சிறப்பு அனுமதி பெற்று கணவரோடு ஊர்வலம் தொடங்கி நடத்தினார் ஜெபமணி. இருவருமே கைது செய்யப்பட்டனர். வேலூர் சிறையில் கணவர் ஆறு மாதமும் மனைவி ஒன்பது மாதமும் வாட நேரிட்டது.

தியாகிகளுக்கு அரசு தரும் பணம், இடம் ஆகியவற்றுக்காக நான் போராடவில்லை. நாட்டுக்காக என் கடமையைத்தான் செய்தேன்.

``பாட்டி அதிக நாள்கள் சிறையில்தான் வாழ்க்கையைக் கழித்தாராம். என் அம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் பாட்டி அதைப் பற்றி கவலைப்படவில்லை. `உன்னை அத்தை பார்த்துக்கொள்வாள், தேசம் எனக்கு முக்கியம்' என்று சொல்லியே சிறை சென்றிருக்கிறார். ஒருமுறை சிறையிலிருந்து திரும்பியதும் பிறந்திருந்த பேரனுக்கு வெற்றி என்று பொருள்பட `விக்டர்' என்று பெயரிட்டாராம் பாட்டி. வீட்டுக்கு ராஜாஜி, நேரு போன்ற தலைவர்கள் வருகை தந்ததுண்டு. அதனாலேயே தூத்துக்குடி அந்தோணியார் கோயில் பக்கம் இருந்த பாட்டியின் வீட்டுக்கு அடிக்கடி போலீஸும் வருமாம். சிறு வயதில் என் அம்மா, மாமா எல்லோரும் போலீசுக்கு பயந்தேதான் இருப்பார்களாம்'' என்று சொல்கிறார் பிலோமினா ஜான். ஜெபமணி மாசிலாமணி அம்மாளின் மகள் வயிற்றுப் பேத்தி இவர்.

1930-ம் ஆண்டுக்கு முன்பே நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற மாசிலாமணிப் பிள்ளையை சிறைத் தண்டனையிலிருந்து மீட்க நீதிமன்றத்தில் வாதிட்டுக் காப்பாற்றியவர் வ.உ.சிதம்பரனார். `என்னை ஆங்கிலேய அரசு துன்புறுத்திய காலத்தில் என்னுடனே பயணித்து பாதுகாத்த மாசிலாமணிக்கு என் நன்றிக்கடன் இது' என்று கடிதம் எழுதியிருக்கிறார் வ.உ.சி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வ.உ.சிதம்பரனாரை ஜெபமணி அம்மாளின் பிள்ளைகள் `பெரியப்பா' என்றே அழைத்து வந்துள்ளனர். இருவருக்கும் மிக நெருங்கிய நட்பு இறுதிவரை தொடர்ந்திருக்கிறது. ``வ.உ.சி மரணப் படுக்கையில் இருக்கும்போது அவர் தலைமாட்டில் என் தாத்தா இருக்கும் புகைப்படத்தைக்கூட நான் பார்த்திருக்கிறேன். எங்களிடம் இருந்தது. அவர் இறக்கும் நேரத்தில் `மாசிலாமணி' என்று என் தாத்தாவைத்தான் மும்முறை அழைத்து உயிர்விட்டிருக்கிறார். அந்தப் படம் இப்போது பாளையங்கோட்டை வ.உ.சி மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. வ.உ.சி, தாத்தாவுக்கு எழுதிய கடிதத்தை அந்த மண்டபத்தில் காட்சிப்படுத்தத் தந்திருக்கிறோம்'' என்றும் சொல்கிறார் பிலோமினா ஜான். ராஜாஜி, டாக்டர் வரதராஜு நாயுடு போன்ற தலைவர்கள் `தங்கை' என்றும் `தங்கை கணவர்' என்றும் இந்தத் தம்பதியை அழைத்ததுண்டு!

1890 அக்டோபர் 7 அன்று கடம்பூரை அடுத்த குருவிநத்தம் என்ற ஊரில் பிறந்தார் ஜெபமணி. தந்தை டி.சவரிராயப் பிள்ளை, தாய் செபஸ்தியம்மாள். திருச்சி தூய ஜோசப் கல்லூரியில் முதல் தமிழ்மொழி விரிவுரை யாளராகப் பணியாற்றியவர் சவரிராயப் பிள்ளை. தந்தை பெற்ற கல்வியின் பயனாக ஜெபமணிக்கும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1909 ஆகஸ்ட் 20 அன்று தூத்துக்குடியை அடுத்த கொம்பாடியைச் சேர்ந்த மாசிலாமணிப் பிள்ளைக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார் ஜெபமணி.

தூத்துக்குடி நகரில் வாழ்க்கையைத் தொடங்கினார் ஜெபமணி. நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் அடுத்தடுத்து பிறந்தனர். மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து போயின. இதில் மூத்த மகள் ஜெயசீலியின் மகள் பிலோமினா.

ஜெபமணி மாசிலாமணி
ஜெபமணி மாசிலாமணி

சிறுவயது முதலே காந்தியால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கத் தொடங்கினார் மாசிலாமணி. மரக்கடை தொழில் செய்துவந்த மாசிலாமணி, காந்தியின் மீது கொண்ட பற்றால் தன் மரக்கடையில் கதராடை நெய்வதற்கான ராட்டைகளைச் செய்துகொண்டார். கதராடையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்துடன் மக்களுக்கு இலவசமாக ராட்டைகளை வழங்கிவந்தார். கணவருடன் போராட்டங்களில் துணை நின்றார் ஜெபமணி. சுதந்திரம், சுயாட்சி என்று மேடைகளில் முழங்கி வந்தனர் இருவரும். காந்தி, நேரு போன்ற தலைவர்களின் மேடைப் பேச்சை தமிழில் மொழிபெயர்த்தும் வந்தார், `சிம்மக்குரலோன்' என்று அழைக்கப்பட்ட மாசிலாமணி.

தூத்துக்குடியில் மட்டுமல்லாது சிவகங்கை தாலுகா வரையில் பொதுக்கூட்டங்களில் பேசிவந்தனர். சொந்தமாக தாங்களே மெட்டமைத்து விடுதலை வேட்கையைத் தூண்டும் பாடல்களையும் பாடி வந்தனர். கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களிடையே மதம் தாண்டிய விடுதலைப் போராட்ட உணர்வை விதைத்தார்கள்.

கிறிஸ்துவ நெறியில் ஊறியவரான மாசிலாமணி தினமும் தேவாலயம் செல்லும் வழக்கமுடையவர்; இரவில் ஜெபமாலை சொல்லும் வழக்கம் கொண்டவர். கடிதங்கள் முதற்கொண்டு சிலுவைக் குறியிட்டு எழுதத்தொடங்கினாலும், `வந்தே மாதரம்' என்ற முழக்கத்தை விடுத்து எழுதியதில்லை. பக்தியையும் நாட்டுப் பற்றையும் தன் இரு கண்களாக மதித்தவர்கள் இருவரும்.

1933 ஆகஸ்ட் 6 அன்று, மதராஸில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்று காரணம் காட்டி கைது செய்யப்பட்டார் ஜெபமணி.

சுதேசிப்போராட்டத்தின் போது கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு கைதானார் ஜெபமணி. பல போராட்டங்களில் ஆங்கிலேய காவல்துறையினரால் தாக்கப்பட்டார். அவரைப் போல தாக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தன் வீட்டில் அடைக்கலம் தந்து அவர்களின் உடல்நலம் மேம்பட உதவினார்.

1934 மற்றும் 1937-ம் ஆண்டுகள் நடைபெற்ற மதராஸ் மாகாண சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது. 1937-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தூத்துக்குடி தொகுதியில் களமிறங்கினார் ஜெபமணி. 3,680 வாக்குகள் முன்னிலையில் வெற்றிபெற்றார். மதராஸ் மாகாணத்தின் சட்டமன்றத்தில் நுழைந்த முதல் கிறிஸ்துவப் பெண் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார் ஜெபமணி.

சட்டசபையில் கிராமப்புறங்களில் ஆடு மாடுகளை மேய்க்க மேய்ச்சல் நிலங்களைத் தனியே ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றும், இதனால் வேளாண் நிலங்கள் பாதிக்கப்படாது என்றும் வலியுறுத்தினார் ஜெபமணி. மரம்வைத்து தண்ணீர் ஊற்றுவது போலத்தான் விவசாயிகளுக்கு தனி மேய்ச்சல் நிலம் வழங்குவதும் என்று வாதிட்டார். விவசாயிகள் நலம் காக்க இந்த நடவடிக்கையை அரசே மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார் ஜெபமணி. மீண்டும் 1941-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியிலிருந்து போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை தேர்தல்களத்தில் வென்று சட்டமன்றம் சென்ற கிறிஸ்துவப் பெண் ஜெபமணி அம்மாள்தான்.

1949-ம் ஆண்டு மரணமடைந்தார் மாசிலாமணிப் பிள்ளை. அத்துடன் தன் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஜெபமணி அம்மாள்.

`பொது வாழ்வில் மாசு இல்லா மணியாக மாசிலாமணியும், பெண்களை விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் செய்வதில் வெற்றிப் பெண்மணியாகச் செயல்பட்ட ஜெபமணி அம்மையாரும் கருத்தியலால் ஒன்றுபட்ட இரட்டைக்குழல் துப்பாக்கியாகப் பணியாற்றியுள்ளனர்' என்று தன் `எனது ஊர் தூத்துக்குடி' நூலில் எழுதியுள்ளார் தூத்துக்குடி மாவட்ட வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான நெய்தல் யு அண்டோ.

``தியாகிகள் பென்ஷன், வாரிசு வேலை வாய்ப்பு என்று விடுதலை வீரர்கள் பட்டியலில் தாத்தா பாட்டி இருவரின் பெயரையும் சேர்க்கச் சொல்லி கேட்டபோது, பாட்டி பிடிவாதமாக மறுத்துவிட்டார். `தியாகிகளுக்கு அரசு தரும் பணம், இடம் ஆகியவற்றுக்காக நான் போராடவில்லை. நாட்டுக்காக என் கடமையைத்தான் செய்தேன்' என்று சொல்லி மறுத்துவிட்டார். தாத்தா பாட்டி இருவர் பெயருமே அரசு தயாரித்த விடுதலைப் போராட்ட வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை'' என்று வருத்தத்துடன் பதிவு செய்கிறார் பிலோமினா. பல்லாவரத்தில் தன் மூத்த மகன் ராஜா ஜோசப்பின் வீட்டில் தன் இறுதிக் காலத்தைக் கழித்த ஜெபமணி அம்மாள், 1977 நவம்பர் 7 அன்று மரணமடைந்தார். பல்லாவரம் கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

தூத்துக்குடியை அடுத்த கிராமம் ஒன்றின் நூலகத்துக்கு மாசிலாமணிப் பிள்ளையின் பெயர் சூட்டப்பட்டு, அங்கு அவரது உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெபமணி அம்மாளின் நினைவாக இதுவரை எந்த சிலையும் உருவப்படமும் அரசு அலுவலகங்களிலோ, பொது இடங்களிலோ இடம்பெறவில்லை. `தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை; கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?' என்பது தவிர வேறென்ன சொல்ல?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு