Published:Updated:

பொண்ணுங்க இதைப் படிக்கிறது இன்னும் நல்ல விஷயம்!

ஜெனிஃபர் கிறிஸ்டா பால்
பிரீமியம் ஸ்டோரி
ஜெனிஃபர் கிறிஸ்டா பால்

வித்தியாசம்!

பொண்ணுங்க இதைப் படிக்கிறது இன்னும் நல்ல விஷயம்!

வித்தியாசம்!

Published:Updated:
ஜெனிஃபர் கிறிஸ்டா பால்
பிரீமியம் ஸ்டோரி
ஜெனிஃபர் கிறிஸ்டா பால்

ண்களின் ஆதிக்கத்தால் அதிர்ந்து கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறையில் அத்திப்பூத்தாற்போல கவனம் ஈர்க்கும் ஒரே பெண் ஜெனிஃபர் கிறிஸ்டா பால். ‘இந்தியாவின் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர்’ என்ற இலக்கை எட்டும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கும் ஜெனிஃபரின் வாழ்க்கை ரேஸிலும் ரேஸ் டிராக்கிலுமாகச் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

‘`வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. எனக்கு ஆறு கசின்ஸ். அத்தனைபேரும் ஆம்பிளைப் பசங்க. சின்ன வயசுல வீடியோ கேம்ஸ் விளையாடுவோம். அப்படி நாங்க விளையாடினது ‘என்.எஃப்.எஸ் அண்டர்கிரவுண்டு’ (Need For Speed: Underground), அது கிட்டத்தட்ட கார் ரேஸிங் மாதிரியான விளையாட்டு. பொதுவா பசங்ககூட விளையாடும்போது பொண்ணுங்களுக்குக் கடைசியாதான் விளையாட சான்ஸ் கொடுப்பாங்க. அந்த வயசுலேயே எனக்கு அது பிடிக்கலை. என்னுடைய அந்த ஃபீலிங்கைப் பார்த்துட்டு அப்பா எனக்கே எனக்குன்னு வீடியோ கேம்ஸ் வாங்கித் தந்தார். அப்படித்தான் எனக்கு கார்களைப் பத்தித் தெரிஞ்சுக்கிற ஆர்வம் அதிகமாச்சு.

பொண்ணுங்க இதைப் படிக்கிறது இன்னும் நல்ல விஷயம்!

என்னுடைய 18-வது பர்த்டேவுக்கு அப்பா `யமஹா ஆர்15 வி1' பைக் வாங்கித் தந்தார். ‘பைக் இருக்கேன்னு ரோடுல சீன் போடக் கூடாது. உன்னோட ஸ்பீடுக்கு ரோட்டுல ஓட்டறது பாதுகாப்பு கிடையாது. வேகமா வண்டி ஓட்டும்போது எதிர்ல ஆட்களோ, பிராணிகளோ குறுக்கே வரலாம். உன்னோட ஸ்பீடு திறமையைக் காட்டணும்னு நினைச்சா, ரேஸ் ட்ராக்ல ஓட்டு’ன்னு சொல்லி எனக்கு ரேஸ் ட்ராக்கை அறிமுகப்படுத்தினார். ஹோண்டா ஒன் மேக் லேடீஸ் ரேஸ்ல (ரவுண்டு 1) கலந்துக்கிட்டேன். ப்ளஸ் டூ முடிச்சதும் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிக்க முடிவு பண்ணினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியில் அந்த டிபார்ட்மென்ட்டில் 250 ஸ்டூடன்ட்ஸும் பசங்க. புரொஃபசர்ஸும் ஆண்கள். நான் மட்டும்தான் ஒரே பெண். நாலு வருஷ காலேஜ் வாழ்க்கை சூப்பரா இருந்தது. மொத்த காலேஜின் கவனமும் என்மேல இருக்கும். அதுவே செம ஃபீலிங். பொண்ணுங்க கம்ஃபர்ட் ஸோனைவிட்டு வெளியில வரணும், ஆண்களுக்கு இணையானவங்கதான் நிரூபிக்கணும்னு நினைச்சதும் நான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க ஒரு காரணம்’’ - அசத்தல் அறிமுகம் தருகிறவரின் வீட்டில் ஒரு சுவர் கவனிக்க வைக்கிறது.

‘`அத்தனையும் நியூஸ்பேப்பர் கட்டிங்ஸ். மோட்டார்ஸ்போர்ட் துறை தொடர்பான அப்டேட்ஸ். அந்தத் துறையில நடக்கிற எந்த விஷயத்தையும் நான் மிஸ் பண்ணிடக் கூடாதுனு அப்பா செய்திருக்கிற ஏற்பாடு இது. லேசா மனசு சரியில்லைனாலும் உடனே அந்தச் சுவர் பக்கத்துல போய் நின்னுடுவேன். சட்டுன்னு உற்சாகம் பத்திக்கும்’’ - ஜெனிஃபரின் பக்கத்தில் நின்றால் நமக்கும் அந்த உற்சாகம் பற்றிக்கொள்கிறது.

பொண்ணுங்க இதைப் படிக்கிறது இன்னும் நல்ல விஷயம்!

‘`பைக் ரேஸ்லேருந்து மெள்ள மெள்ள என் ஆசை கார் ரேஸ் பக்கம் திரும்புச்சு. லெவல் ஒன் கார்ட்டிங் பயிற்சிக்குப் போனேன். அதை நடத்தின மீகோ மோட்டார் ஸ்போர்ட்ஸ் கம்பெனியின் உரிமையாளர் அக்பர் இப்ராஹிம்தான் எனக்கு மோட்டார்ஸ்போர்ட்ஸ் இன்ஜினீயரிங் பற்றிச் சொன்னார். மோட்டார்ஸ்போர்ட்ஸ் இன்ஜினீயரா நான் என்ன செய்யமுடியும்னு விளக்கினார். ‘நீ ஏற்கெனவே ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கே, இந்தத் துறையில உனக்கு வாய்ப்புகள் பிரகாசமா இருக்கும்’னு சொன்னார். அந்த நிமிஷத்துலேருந்து என் மனசு ரேஸிங்கைவிட்டு விலகி, ரேஸ் இன்ஜினீயரிங் பக்கம் தீவிரமாயிடுச்சு. கோயம்புத்தூர்ல உள்ள ஆசியாவின் மிகப்பெரிய மோட்டார் ஸ்போர்ட் கம்பெனியான ஜே.ஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ்ல இன்டெர்ன்ஷிப் பண்ணினேன். ஃபார்முலா 1600 மற்றும் ஃபார்முலா 2000 கார்களைத் தயாரிக்கிற கம்பெனி அது. ஒவ்வொரு வருஷமும் சாம்பியன்ஷிப்பும் நடத்தறாங்க. போன வருஷம் யுகேவைச் சேர்ந்த பெண் ரேஸ் கார் டிரைவர் ஜேமியோடு வொர்க் பண்ற மிகப் பெரிய வாய்ப்பு எனக்கு கிடைச்சது. பிரிட்டிஷ் ரேஸ் இன்ஜினீயர் லீனா காடேதான் என் ரோல் மாடல் அவங்களை மாதிரி வரணும்கிறதுதான் என் லட்சியம். ஃபார்முலா ஒன்னுக்கான ரேஸ் இன்ஜினீயராகணும். எதிர்காலத்தில் ரேஸ் கார்களும் ஓட்டுவேன். ஆனா, ரேஸ் என் பொழுதுபோக்கா மட்டும்தான் இருக்கும். ரேஸ் இன்ஜினீயர் என்பதுதான் எனக்கான அடையாளமா இருக்கணும்னு ஆசைப் படறேன்’’ - விருப்பங்களால் வியக்கவைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`2018-ல் நான் காலேஜ் முடிச்சேன். ஒரு வருஷம் பிரேக் எடுத்துக்கிட்டு, ட்ராக் கில் நடக்கிற விஷயங்களை இன்னும் கூர்ந்து கவனிக்கவும் கத்துக்கவும் ஆரம்பிச்சிருக்கேன். இண்டியானா யுனிவர்சிட்டியில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் கான்சென்ட்ரேஷன்ல ரெண்டு வருஷ மாஸ்டர்ஸ் படிக்கப்போறேன். ஆகஸ்ட் மாசம் கிளம்பறேன். இந்தியாவில் பிரபலமான ஃபார்முலா ஒன் ரேஸ் மாதிரி அமெரிக்காவிலும் ஒண்ணு இருக்கு. அந்த டெக்னாலஜியைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதுல ரொம்ப ஆர்வமா இருக்கேன். அதுல என்னை அப்டேட் பண்ணிக்கணும். தினசரி உபயோகத்துல இருக்கிற கார்களில் நாம் பயன்படுத்தற ரியர் வியூ மிரர் உட்பட பல விஷயங்களும், ரேஸிங்லேருந்து அறிமுகப் படுத்தப்பட்டவைதாம். அதையெல்லாம் படிக்கணும்னு ஆசை.

ரேஸ் இன்ஜினீயரின் வேலை வெறும் ரேஸ் ட்ராக்குகளோடு முடிஞ்சுபோறதில்லை. லேப் டெஸ்ட்டிங், டேட்டா அனாலிசிஸ்னு நிறைய விஷயங்களைப் பத்தின அறிவு வேணும். மோட்டார்ஸ்போர்ட்ஸ் பத்தின டெக்னிக்கல் மற்றும் பிராக்டிகல் விஷயங்களுக்கிடையிலான இடைவெளியைப் போக்குவதுதான் ரேஸ் இன்ஜினீயரின் வேலை. அதாவது டிரைவர், டேட்டா அனாலிஸ்ட், டெக்னீஷியன் இந்த மூன்று தரப்பிருக்குமான இடைவெளியை நீக்குவதும், வாகனங்களில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்யவைக்கிறதும் இந்த வேலையில் அடக்கம்.

‘இதெல்லாம் பசங்க பண்ற விஷயம், பொண்ணுங்களுக்கு எதுக்கு’ன்னு கேட்கறவங்க எல்லா காலத்திலும் இருக்காங்க. அதைப் பத்தி ஒரு பொண்ணா நான் கவலைப்பட வேண்டியதில்லை. சின்ன வயசுலேருந்தே அப்பாகூட பைக்ல ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளுக்குப் போயிருக்கேன். பைக் ரிப்பேர் பண்றப்போ மெக்கானிக் பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டு, எந்த பார்ட்டை எப்படிப் பொருத்தறாங்க, எப்படியெல்லாம் வேலைசெய்யறாங்கன்னு கவனிச்சிருக்கேன். எனக்குப் பிடிச்ச விஷயத்தை நான் செய்யறேன். என்னைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி நாளைக்கு இன்னும் நாலு பேர் அதைப் பண்ணுவாங்க. உலகின் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயரான லீனா காடேவைப் பார்த்துதான் நான் இன்ஸ்பையர் ஆனேன். இதெல்லாம் ஆண்கள் வேலைன்னு சொல்லிச் சொல்லியே வளர்க்கப்படற பெண்கள், ஒரு கட்டத்துல அதை நம்பவும் ஆரம்பிச்சிடறாங்க. என் விஷயத்துல அப்படி நடக்காம இருக்கக் காரணம் என் அப்பா. ‘உனக்குப் பிடிச்சதைச் செய்ய நீ ஆணா, பெண்ணான்னு பார்க்க வேண்டியதில்லை. உன்னால் முடியும்னா எந்த வேலையையும் செய்யலாம்’னு ஊக்கம்கொடுத்தவர் அவர்’’ - அன்போடு தன்னம்பிக்கையையும் சேர்த்து ஊட்டிவளர்த்திருக்கிறார்கள் ஜெனிஃபரின் பெற்றோர்.

‘`என்னுடைய உயரம் வெறும் ஐந்தடி. நான் பைக் ஓட்டும்போது என்னை எல்லாரும் வித்தியாசமா பார்ப்பாங்க. ‘அஞ்சடி உயரமுள்ள உன்னால எப்படி பைக் ஓட்ட முடியும்?’, ‘இந்த உயரத்தைவெச்சுக்கிட்டு நீ எப்படி ரேஸ் கார் பார்ட்ஸை எல்லாம் தூக்கி வேலைசெய்யப் போறே?’ - இப்படியெல்லாம் என்னைப் பார்த்துக் கேட்டிருக்காங்க. ‘பைக் ஓட்டும்போது உன் கால்கள் தரையில இருக்கான்னு பார்க்கவேண்டியதில்லை. அந்தத் திறமை உன் மனசு சம்பந்தப்பட்டது. நீ நினைச்சா எப்படிப்பட்ட பைக்கையும் ஓட்டலாம்’னு சொல்லி ஊக்கப்படுத்தினாங்க என் பெற்றோர். நான் பொண்ணுங்கிறதை மறக்கலை. ஆனா, பசங்க பண்ற வேலையை என்னாலயும் செய்ய முடியும்னு நம்பறேன். என் பெற்றோரும் நம்பறாங்க.

உங்களுக்கு ரேஸ் பார்க்கப் பிடிக்குமா? ரேஸ் பைக், கார்களைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதுல ஆர்வமிருக்கா? கைகால்கள் அழுக்காகிற மாதிரி வேலை செய்யறதுல கவலையில்லையா? ஸ்பீடு பிடிக்குமா? நீங்க தாராளமா மோட்டார்ஸ்போர்ட்ஸுக்குள்ளே வரலாம்!

உங்களை விமர்சனம் பண்ணுவாங்க. உங்க ஆர்வத்தைக் குலைக்கிற மாதிரியான விஷயங்களைச் செய்வாங்க. அதையெல்லாம் கண்டுக்காதீங்க. உங்க விருப்பம்தான் உங்களுக்கு ஸ்பெஷலா இருக்கணும். மற்ற இன்ஜினீயரிங் பிரிவுகளைவிடவும் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் கொஞ்சம் ஸ்பெஷல். மனுஷங்களோட வாழ்க்கையை ஈஸியாக்கும் வாகனங்களைப் பத்திப் படிக்கிறது நல்ல விஷயம். பொண்ணுங்க அதைப் பத்திப் படிக்கிறது இன்னும் நல்ல விஷயம்'' - அடுத்த தலைமுறைப் பெண்களை ஆட்டோமொபைல் துறைக்குள் அடியெடுத்துவைக்க அழைப்பு விடுக்கிறார்.

முதல் பெண்களின் பட்டியலில் இணையக் காத்திருக்கிறவருக்கு முன்கூட்டியே சொல் வோம் வாழ்த்துகளை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism