Published:Updated:

ரமணி அக்கா எழுத்துலக ரஜினி!- காஞ்சனா ஜெயதிலகர் - காஞ்சனாவோட அந்தக் கடிதம் இப்பவும் எனக்கு ஆறுதல்!

நட்பு
பிரீமியம் ஸ்டோரி
News
நட்பு

காஞ்சனா ஜெயதிலகர்

நட்பு

பெண்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ரமணிசந்திரனுக்கும் காஞ்சனா ஜெயதிலகருக்கும் முக்கியமான இடம் உண்டு. அழகான காதல் கதைகளைத் துளியும் ஆபாசமில்லாமல் நாவல்களாக்குவதில் இருவருமே வல்லவர்கள். இருவருக்கும் இடையிலான பாசமும் நட்பும் பலரும் அறியாதது. மூத்தவர் சென்னையிலும், இளையவர் கொடைக்கானலிலும் இருக்க, 90-களில் கடிதங்கள் வழியாக ஆரம்பித்த நட்பு வாட்ஸ்அப் மெசேஜ்களாக இன்றைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒருவரைப் பற்றி ஒருவர் சொல்வதை அவரவர் வார்த்தைகளிலேயே கேளுங்கள். முதலில் மூத்தவரைப் பற்றி இளையவர்...

``நான் பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருந்த போதுதான் ரமணிசந்திரனோட நாவல்களை வாசிக்க ஆரம்பிச்சேன். எங்கம்மா ரமாபாய் பொன்னுதுரை டாக்டர். நான் எப்பவும் அம்மாவோட க்ளினிக் வாசல்ல உட்கார்ந்துட்டு கதைப்புத்தகம் படிச்சிட்டிருப்பேன். அதைப் பார்த்த ஒருவர், கிறிஸ்துவ சிறார் கதைகள் எழுதித் தரச் சொல்லிக் கேட்க, என்னோட எழுத்துப் பயணம் ஆரம்பிச்சதது. ‘நீ ஏன் பெண்கள் பத்திரிகையில் கதை எழுதக் கூடாது’ன்னு நண்பர்களும் உறவினர்களும் கேட்டாங்க. அந்த முயற்சியில் வெற்றியும் கிடைச்சுது.

ரமணி அக்கா எழுத்துலக ரஜினி!- காஞ்சனா ஜெயதிலகர் - காஞ்சனாவோட அந்தக் கடிதம் இப்பவும் எனக்கு ஆறுதல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதலில் சிறுகதைகள், பிறகு தொடர்கதை, அப்புறம் நாவல்னு எழுதிக்கிட்டிருந்த என்னை அருணோதயம் பதிப்பகத்தார், ‘உங்க எழுத்துல ரமணிசந்திரன் மாதிரியே ஒரு வசீகரம் இருக்கும்மா. நீங்களும் அவங்களை மாதிரியே புகழ் பெறுவீங்க’ன்னு சொன்னாங்க. நான் நேசிச்ச எழுத்தாளருடனான அந்த ஒப்பீடு அப்படியே பறக்கிற மாதிரி உணரவெச்சது’’ என்று சிலிர்க்கிற காஞ்சனா ஜெயதிலகர், ரமணிசந்திரனுக்குக் கடிதங்கள் எழுத ஆரம்பித்தது பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்

`` `அன்புள்ள ரமணி அக்காவுக்கு’ன்னு ஆரம்பிச்சு, அவருக்கு ஒரு தீபாவளி வாழ்த்து அனுப்பினேன். அவங்க எனக்கு போன் பண்ணி, ‘எனக்கு கூடப்பிறந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா, யாருமே என்னை ரமணி அக்கான்னு கூப்பிட்டதில்ல. நீங்க என்னை அப்படிக் கூப்பிட்டது ரொம்ப பிடிச்சிருந்தது’ன்னு சொன்னாங்க. அப்புறம் பேசப்பேச, நாங்க ரெண்டு பேரும் சாராள் டக்கர் காலேஜ்ல படிச்சவங்க என்பதும், என் பெரியம்மா அவங்களோட மரியாதைக்குரிய புரொபசர்னும் தெரிஞ்சது. அப்படியே எங்க அன்பு வளர ஆரம்பிச்சது. எனக்கும் ரமணி அக்காவுக்கும் 20 வயது வித்தியாசம். அதெல்லாம் எங்க நட்புக்குத் தடையாவே இல்லை’’ என்பவர், ரமணிசந்திரனுடனான முதல் சந்திப்பை பகிர்ந்தார்.

``என் பொண்ணு மினோத்தியும் அவ டீன் ஏஜ்ல ரமணிசந்திரன் நாவல்களைப் படிக்க ஆரம்பிச்சா. அவளுக்குக் கல்யாணமாகி எனக்கு பேத்தி பிறந்த நேரத்துல, அவளையும் பேத்தியையும் அழைச்சிட்டு அக்காவை முதன்முறையா சந்திக்க 2008-ல சென்னைக்கு வந்தேன். அதாவது, அவங்க நாவல்களை வாசிக்க ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கப்புறம் நான் அவங்களை நேர்ல சந்திச்சேன். ரொம்ப வருஷமா பழகின உணர்வோட ரெண்டு பேரும் நிறைய பேசினோம். அந்த நாளை இப்ப நினைச்சாலும் அக்காவைப் பார்க்க மறுபடியும் சென்னைக்கு வந்துட மாட்டோமான்னு இருக்கு’’ என்பவரின் குரலில் ஏக்கம் தெரிகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``அப்புறம் நானும் அக்காவும் வாசகர் சந்திப்புகள்ல மீட் பண்ணிக்குவோம். அவங்க கணவர் பாலசந்திரன் சார் இறந்த கொஞ்ச நாள் கழிச்சு நானும் என் கணவரும் அக்காவைப் பார்க்க சென்னைக்குப் போனோம். ‘அவர் போனதுல இருந்து கண்ணீர் நிக்கவே இல்லை. 56 வருஷ தாம்பத்யம் நொடியில முடிஞ்சு போச்சே காஞ்சனா’ன்னு வருத்தப்பட்டவங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு கிளம்பினோம். தமிழ் நாவல் உலகின் ரஜினிகாந்த் அக்காதான். ரஜினியோட நடிப்புல, ஸ்டைல்ல இருக்கிற ஈர்ப்பு... ரமணி அக்காவோட எழுத்துல இருக்கும்’’ என்கிறார் காஞ்சனா.

அடுத்து இளையவருடனான நட்பு பற்றி மூத்தவர் ரமணிசந்திரன் பகிர்ந்துகொண்டார்.

 காஞ்சனா மகன் திருமணத்தில்...
காஞ்சனா மகன் திருமணத்தில்...

``காஞ்சனாகிட்ட முதல் தடவை போன்ல பேசினப்போ, அதுவரைக்கும் நேர்ல பார்த் திருக்காத ஒருவர்கிட்ட பேசற உணர்வே வரலை. என் தங்கைகிட்ட பேசுற மாதிரிதான் இருந்துச்சு. பொதுவா, என் கஷ்டங்களை நான் யார்கிட்டேயும் பகிர்ந்துக்க மாட்டேன். ஆனா, காஞ்சனாகிட்ட எல்லாத்தையும் ஒளிவுமறைவு இல்லாம பேச முடிஞ்சது. அந்தக் காலத்து எழுத்து, இந்தக் காலத்து எழுத்து முதற்கொண்டு பலதும் பேசியிருக்கோம்’’ என்றவர் மென்மையாகச் சிரிக்கிறார்.

``நான் முதன்முதலா படிச்ச காஞ்சனாவின் கதையோட நாயகி பேர் தாமரைங்கிறது நல்லா நினைவிருக்கு. காஞ்சனா கொடைக்கானல்ல வசிக்கிறதால மலைப்பிரதேசங்கள் பத்தி அந்த நாவல்ல ரொம்ப விலாவாரியா எழுதி யிருப்பாங்க. மலைப்பிரதேசங்களை நேர்ல பார்க்கிற மாதிரியே இருக்கும்’’ என்று மனதார பாராட்டினார்.

``என் ஃபேமிலி மெம்பர்ஸுக்கு எழுத் தாளர்கள்ல காஞ்சனாவை மட்டும் நல்லா தெரியும். காஞ்சனாகிட்ட ஒரு மணி நேரம் போன்ல பேசினா ரெண்டு, மூணு நாளைக்கு என்னோட மனநிலை ஹேப்பியா இருக்கும்’’ என்று நட்பின் அழகைப் பகிர்ந்துகொண்ட ரமணிசந்திரன், தன் கணவரை இழந்த நேரத்தில், காஞ்சனா ஜெயதிலகர் ஆறுதல் சொல்ல வந்த தருணத்தையும் நினைவுகூர்ந்தார்.

``என் கணவர் தவறின பிறகு, ரொம்ப வெறுமையா உணர்ந்தேன். காஞ்சனாவால அப்போ நேர்ல வரமுடியாததால எனக்கு ஓர் ஆறுதல் லெட்டர் எழுதியிருந்தாங்க. அந்த லெட்டர் நடக்க முடியாம தரையில விழுந்து கிடக்கிறவனை கைதூக்கிவிட்ட மாதிரி இருந்துச்சு. அதுக்கப்புறம் மனசு சோர்வா இருக்கிறப்போ எல்லாம் அந்த லெட்டரை எடுத்துப் படிப்பேன். கொரோனா பிரச்னை சரியானதும் காஞ்சனாவைப் பார்க்கக் கொடைக்கானல் போகணும்’’

- தன் நட்பைச் சந்திக்கும் அவாவுடன் பேச்சை முடித்தார் ரமணிசந்திரன்.