தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

45 நாள்கள்... ஒரு புடவை! - காஞ்சிபுரம் பட்டு வாங்கச் செல்வோர் கவனத்துக்கு...

கீதா
பிரீமியம் ஸ்டோரி
News
கீதா

வசீகரம்

ஒரு பட்டு நெசவாளியின் கதை

மத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவாளர் விருது, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த கீதாவுக்குக் கிடைத்துள்ளது. தேசிய அளவிலான இந்த விருதுக்கு, தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டிருப்பவர் கீதா மட்டுமே. தன் வீட்டில் நெசவுப் பணியில் இருந்த கீதாவைச் சந்தித்தோம்.

“எங்களோடது பாரம்பர்ய நெசவாளர் குடும்பம். நாலாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன்.16 வயசுலேருந்து தறி நெய்யறேன். கல்யாணத்துக்குப் பிறகு என் கணவர் பந்தளராஜன் திருவள்ளுவர் பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் என்னை உறுப்பினரா சேர்த்துவிட்டார். எந்த டிசைன் நெய்யணுமோ, அதை உருவாக்கும் அட்டையை அவங்களே தறியில் பொருத்திக்கொடுப்பாங்க. பட்டு, ஜரிகையையும் கொடுத்திடுவாங்க. நாங்க பெரும்பாலும் `கோர்வை' ரக பட்டுப்புடவைகள்தாம் நெய்யறோம். ஜரிகை இல்லாத புடவைகள் முதல் எட்டு சீர் முந்தானைகொண்ட புடவைகள் வரை நெய்திருக்கோம்.

காலையில பையனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, தறியில உட்கார்ந்தா, சாயங்காலம் ஏழு மணி வரை நெய்வேன். நான் உயரம் குறைவுங்கிறதால, ரெண்டு கையையும் மேலிருந்து இழுத்து, ரெண்டு பக்கமும் ஜரிகையை வாங்கி விடும்போது கைகாலெல்லாம் வலிக்கும்.

கீதா
கீதா

மழைக்காலத்துல ஈரம் அதிகமா இருப்பதால தறி போட முடியாது, கடன் வாங்கித்தான் சமாளிப்போம். இந்த நிலையிலதான், நெசவாளர் சேவை மையத்திலிருந்து உதவி இயக்குநர் சசிகலா மேடம், ‘விருதுக்கு அனுப்ப ஒரு சேலை நெய்ய முடியுமா’ன்னு கேட்டாங்க. பொதுவா ஒரு மாசத்துல நாங்க மூன்று முதல் ஐந்து சேலைவரை நெய்வோம். ஆனா, இந்த ஒரு சேலை நெய்ய மட்டும் ஒன்றரை மாசம் ஆச்சு. என் 18 வருஷ அனுபவத்துல, இப்படி ஒரு புடவையை நான் நெய்ததில்லை. 6,000 ரூபாய் கூலி கொடுத்தாங்க. நெய்யும்போது சங்கத்துலேருந்து வந்து போட்டோ, வீடியோ எடுத்தாங்க. சேலையை நெய்து கொடுத்து 15 மாசங்கள் ஆன நிலையில, எனக்கு விருது கிடைச்சிருக்கு. என் உழைப்பு வீண் போகலை’’ என்கிறார் பரவசத்துடன்.

விருதுக்குத் தேர்வான கீதாவின் புடவை காஞ்சிபுரத்தின் பாரம்பர்ய ரகமான `கோர்வை' முறையில் இருபக்கமும் நெய்யப்பட்டுள்ளது. அதிக வேலைப்பாடுகள் உள்ளதால் நெய்வதற்குக் கடினமான இந்த கோர்வை ரகப் பட்டை, ஒருசிலர் மட்டுமே நெசவு செய்கிறார்கள். காஞ்சிபுரத்தின் பாரம்பர்யத்தைக் குறிக்கும் வகையில் மயில், யாளி, மான் போன்ற வடிவங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

நெசவாளர்களுக்கு அங்கீகாரம்

காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குநர் சசிகலா, “காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் போன்ற மாவட்டங்கள் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தின் கீழ் வருகின்றன. நெசவு தொடர்பான பயிற்சி, திட்டங்கள், கடன் உதவி போன்றவற்றை இந்த அலுவலகத்தின் மூலம் அவர்கள் பெறமுடியும். தேசிய விருதுக்குத் தேர்வாகியிருக்கும் கீதாவுக்கு 1.5 லட்சம் ரூபாய், ஸ்மார்ட்போன் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

45 நாள்கள்... ஒரு புடவை! - காஞ்சிபுரம் பட்டு வாங்கச் செல்வோர் கவனத்துக்கு...

நெசவாளர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் விருதுக்கு விண்ணப்பிக்கத் தயங்குகிறார்கள். விருதுக்கு நெய்யப்படும் புடவை, ஒரு வருடம் கழித்துத்தான் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுவரை காத்திருப்பது தனிநபருக்கு சிரமமான காரியம் என்றாலும், பட்டுக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் நெசவு செய்பவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்” என்கிறார்.

தேசிய விருதுக்கு விண்ணப்பிப்ப தற்கான தகுதிகள் குறித்து நெசவாளர் சேவை மையக் கண்காணிப்பாளர் வரதராஜன், “விருதுக்கு அனுப்பப்படும் புடவையை சம்பந்தப்பட்ட கைத்தறி நெசவாளரே நெய்திருக்க வேண்டும். காஞ்சிபுரம் பகுதி நெசவாளர் என்றால், அப்பகுதியில் நெய்யப்படும் பட்டு ரகத்தைத்தான் கொடுக்க வேண்டும். தேசிய விருது மற்றும் நற்சான்றிதழ் பெறுபவர் என இரண்டு பிரிவாக நெசவாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். சிறந்த நெசவாளர், சீனியர் நெசவாளர்களுக்கான சான்ட் கபீர் விருது, விற்பனை மற்றும் வடிவமைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன” என்கிறார்.

பட்டு வாங்க வருகிறீர்களா?

காஞ்சிபுரத்தில் ஒரு வலம் வந்தோம். 22 பட்டுக் கூட்டுறவுச் சங்க விற்பனை நிலையங்கள், சிறியதும் பெரியதுமாக சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பட்டு ஜவுளி விற்பனைக் கடைகள் இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு 4,000-க்கும் அதிகமான பட்டுப் புடவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் ஐந்து கோடி ரூபாய் அளவுக்குப் பட்டு வியாபாரம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் பகுதியில் சுமார் 30,000 நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். பட்டுக் கூட்டுறவுச் சங்க நெசவாளர்கள், தனியார் பட்டு நெசவாளர்கள், குழுவாகச் சேர்ந்து நெசவு செய்பவர்கள் என இங்கு மூன்று வகையான நெசவாளர்கள் இருக்கிறார்கள். பாவு போடுதல், கஞ்சி போடுதல், நூல் சுற்றுதல் எனத் தனித்தனியாக நெசவுத் தொழில் சார்ந்த வேலைசெய்யும் தொழிலாளர்களும் இதில் அடங்குவார்கள்.

வண்ணங்கள், வடிவமைப்பு (டிசைன்), தொழில்நுட்பம் ஆகியவையே காஞ்சிபுரம் பட்டின் சிறப்பு. கோர்வை, அடை, பெட்னி போன்றவை காஞ்சிபுரம் பட்டின் பாரம்பர்ய ரகங்கள். புடவையை பார்டர், உடல் (பாடி), முந்தானை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். பார்டர் ஒரு நிறத்திலும், உடல் வேறொரு நிறத்திலும் இருப்பதற்காகத் தனியாக நாடாவைப் பயன்படுத்துகிறார்கள். இதைத்தான் `கோர்வைப் பட்டு' என்று சொல்கிறார்கள். இதற்கு வேலைப்பாடுகள் அதிகம். இரண்டு விதமான வார்ப்புகளை (பாவு) இணைத்து நெய்யப்படும் புடவை ரகத்தை ‘பெட்னி’ என்று சொல்கிறார்கள்.

* கோயில்களில் உள்ள யாளி, சக்கரம், மயில், தாமரை, மான்கள், ருத்திராட்சம், யானை உள்ளிட்ட தொன்மையான உருவங்கள் காஞ்சிப் பட்டுப் புடவையில் தவறாமல் இடம்பெறும்.

* ஒரு சேலை சுமார் 5,200 இழைகளைக் கொண்டது. ஒரு புடவையின் நீளம் 5.5 மீட்டர். காஞ்சிபுரம் பட்டில் இரண்டு பட்டு இழைகள் சேர்ந்து ஓர் இழையாக இருக்கும். ஆரணி போன்ற பட்டு ரகங்களில் ஓர் இழைதான் இருக்கும். இதனால்தான் காஞ்சிப்பட்டின் எடை அதிகமாக உள்ளது. விலையும் அதற்கேற்பவே நிர்ணயிக்கப்படும்.

* காஞ்சிபுரம் கோர்வை ரகத்துக்கு புவிசார் குறியீடு இருப்பதால் காஞ்சிபுரத்தைத் தவிர வேறு எங்கும் கோர்வை ரகத்தை உற்பத்தி செய்ய முடியாது.

போலி பட்டு... உஷார்!

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சென்ற நம்மை, வழியிலேயே தடுத்து நிறுத்திய தரகர் ஒருவர், ‘பட்டு வாங்கணுமா சார்... இங்கே விலை அதிகம். நான் குடோனுக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்’ என்றார். என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்ள அவருடன் சென்றோம். அருகில் உள்ள தனியார் கடைக்கு நம்மை அழைத்துச் சென்றார். அங்கு 1,000 ரூபாயிலிருந்தே போலி பட்டுப் புடவைகள் விற்கப்படுகின்றன. மேலும், 24,000 விலையுள்ள புடவையைத் தள்ளுபடி போக 16,000-க்குத் தருவதாக ஆசை வார்த்தை சொன்னார்கள். சமாளித்துவிட்டு வெளியே வந்தால், அந்தத் தரகர் அங்கேயே காத்திருந்து, நம்மை வேறொரு கடைக்கு அழைத்துச் செல்கிறார். இப்படியாக தரகர்கள் பட்டு வாங்க வருபவர்களை விடுவதாக இல்லை. அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘`சுமார் 3,000 தரகர்கள் இங்கே இருக்கிறோம். பட்டு வாங்க வருபவர்களை அழைத்துச் சென்றால் எங்களுக்கு 3 சதவிகிதம் கமிஷன் கிடைக்கும்’' என்றார்.

 பட்டு
பட்டு

மீண்டும் அறிஞர் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சென்றோம்.

“ஒரு பட்டுச் சேலை நெய்வதற்குப் பட்டுநூல், நெய்யும் கூலி, ஜரிகை என எல்லாவற்றையும் சேர்த்து சுமார் 8,000 ரூபாய் வரை செலவாகும். எங்களிடம் 9,000-த்தில் இருந்துதான் பட்டுப்புடவை கிடைக்கும்.

5% ஜி.எஸ்.டி சேர்த்து பணம் செலுத்த வேண்டும். விலையில் 10% தள்ளுபடி உண்டு. 300 ரூபாய் அரசு மானியம் கிடைக்கும். பெரும்பாலும் மணப்பெண்ணுக்குப் புடவை எடுக்கவே வாடிக்கையாளர்கள் எங்களிடம் வருவார்கள். அந்த வகையில் 40,000 முதல் 50,000 ரூபாய் வரை விலையிலான பட்டுப்புடவைகள் அதிகம் விற்பனையாகின்றன. மணப் பெண்ணோடு நாத்தனார் உள்ளிட்ட உறவினர்களுக்கும் குறைந்த விலையில் இங்கேயே பட்டுப்புடவை எடுக்கிறார்கள். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் டிவி விளம்பரங்களைப் பார்த்துவிட்டு அதிக எதிர்பார்ப்புடன் வருகிறார்கள். அந்த மாடல்கள் எல்லாம் விலை மிக அதிகம் என்று தெரியவந்ததும், பின்னர் பாரம்பர்ய பட்டு எடுக்கும் மனநிலைக்குத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். பொதுவாக ஆடி, மார்கழி போன்ற சீசனில் வியாபாரம் மந்தமாக இருக்கும். சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவு பட்டு விற்பனை நடைபெறும்” என்கின்றனர் கூட்டுறவு சங்க ஊழியர்கள்.

காலம் மாறினாலும் மாறாதது காஞ்சிப் பட்டின் வசீகரமே!