Published:Updated:

`தெம்பு இருக்கிற வரை இந்தக் கால் என் மகளுக்காக ஓடிட்டே இருக்கும்!' - தாயெனும் அந்தத் தெய்வம் #WowMom

Mother's day -Representational Image
Mother's day -Representational Image ( Image by Clker-Free-Vector-Images from Pixabay )

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தாய் என்ற கடமையை அன்னையால் தவறவிட முடியாது. கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கடவூரில் வசிப்பவர் மீனாட்சி. ஒரு அன்னையாக அவர் இந்த நொடி வரை போராடி வருவதை அவர் கூறவே கேட்கலாம்.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தாய் என்ற கடமையை அன்னையால் தவறவிட முடியாது. கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கடவூரில் வசிப்பவர் மீனாட்சி. ஒரு அன்னையாக அவர் இந்த நொடி வரை போராடி வருவதை அவர் கூறவே கேட்கலாம்.

``என்னோட அப்பா அம்மா மலைக்குப் போய் விறகு வெட்டி, அதைக் கரியா சுட்டு எரிச்சு அதை மலைக்குக் கீழே கொண்டு வந்து வியாபாரம் பண்ணுவாங்க. அந்தக் கரியை வித்தாதான் எங்க குடும்பத்துக்கே சாப்பாடு. அந்தக் கரி மூட்டையை அடிமாட்டு விலைக்குத்தான் கேட்டு வாங்கிப் போவாங்க. விலை குறைவா வாங்கிட்டுப் போறதோட அதுக்கான பணத்தையும் இன்னைக்குத் தரேன் நாளைக்குத் தரேன்னு இழுத்தடிப்பாங்க. சிலர் 12 நாள் கழிச்சுக்கூட கொடுப்பாங்க. அப்படி கிடைக்கிற காசை எடுத்திட்டு சந்தைக்குப் போய் ஏதாவது வாங்கி வந்து சமைப்பாங்க.

சந்தைக்குப் போய் ஏதாவது வாங்கிட்டு வந்தாலும் அக்கா, அண்ணன், தம்பி, தங்கச்சின்னு எல்லாரும் சாப்பிட்டு முடிச்ச அப்புறம் ஏதாவது மீதி இருந்தாதான் நான் சாப்பிடுவேன்.

மீனாட்சி
மீனாட்சி

ஒரு கட்டத்துல அப்பா, அம்மா இரண்டு பேரும் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. என் அண்ணாதான் என் கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சாரு. என் வீட்டுக்காரர் ஒரு பொட்டு நகை கூட வேண்டாம், நீ மட்டும் வந்தாபோதும்னு என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டாரு. நல்ல மனுஷன்தான். எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தையா பொறந்ததும் அவர் சுபாவம் மாறத் தொடங்கிருச்சு. என்னை அடிச்சு சித்ரவதை செய்வாரு. என் மகளுக்காக அதையும் பொறுத்துட்டு இருந்தேன். மறுபடி இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துச்சு. அப்பவும் வீட்ல அடிதடிதான்.

கொஞ்ச நாளைல கணவரும் இறந்துட்டாரு. இப்படியே இருந்தா சரி வராது. என் பிள்ளைகளையாவது படிக்க வெச்சிடணும்னு எங்க ஊர்ல இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்துல இன்பா சேவா சங்கம்னு ஒரு அமைப்பு இருந்துச்சு. அங்கவுள்ள ஸ்கூல்ல பிள்ளைங்களைச் சேர்த்தேன். அங்க இருக்கும் ஹாஸ்டல்லையே தங்க வெச்சேன். நானும் அங்கேயே கக்கூஸ் கழுவுறது, பாத்திரம் கழுவுறதுன்னு வேலையைப் பார்த்துட்டு இருந்தேன்.

ஒரு வழியா மூத்த பொண்ணு ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டா. பொண்ணு நல்லா படிச்சதால அதே சங்கத்துல அவளை காலேஜுக்கு அனுப்பலாம்னு முடிவு செஞ்சாங்க. எனக்கோ சாப்பாடு போக ஒருநாள் வருமானம் வெறும் பத்து ரூபாய்தான். ஆனாலும் எப்படியாவது என் பொண்ண படிக்க வெச்சிடணும்னு நினைச்சேன். நான் வேலைக்குப் போற வழியில வலையபட்டின்னு ஒரு ஊரு இருக்கு. அந்த ஊர்ல இட்லி வியாபரம் பண்ணி, காலேஜ் ஃபீஸுக்கு பணம் கட்டினேன்.

மீனாட்சி
மீனாட்சி

என் மூத்த பொண்ணு காலேஜ் படிப்பை முடிச்சிட்டா. உடனே அவளுக்கு கல்யாணமும் பண்ணி வெச்சிட்டேன். அந்த நேரத்துல என் இரண்டாவது பொண்ணு பத்தாம் கிளாஸ்தான் படிச்சிட்டு இருந்தா. இவளையும் கரையேத்திட்டா பொறுப்பு முடிஞ்சிருமேன்னு நினைச்சு, என் பிடிவாதத்தால படிப்பை நிறுத்தி கல்யாணம் பண்ணி கொடுத்திட்டேன்.

கட்டிக் கொடுத்ததுக்கு அப்புறம்தான் அவ வீட்டுக்காரர் குடிகாரன்னு தெரிஞ்சுது. தினமும் குடிச்சிட்டு வந்து அவளை போட்டு கொடுமை படுத்தினாரு. சரி, நம்ம பிள்ளையை நாமதான் பார்த்துக்கணும்னு எங்க ஊர்ல நூறுநாள் வேலைத் திட்டத்துல வேலைக்குப் போனேன். எனக்கு சாப்பாட்டுக்கு கஷ்டம் இருந்தாலும், அதையெல்லாம் காட்டாம, சம்பாதிக்கிற காசை இரண்டாவது மகளுக்கு கொடுத்திட்டு வந்தேன்.

விதி எங்களைத் துரத்திட்டே இருந்துச்சுன்னுதான் சொல்லணும். கொஞ்ச வருஷத்துல இரண்டாவது மகளோட வீட்டுக்காரர் ஒரு விபத்துல இறந்துட்டாரு. இரண்டு பெண் குழந்தைகளோட ஆதரவில்லாமல நின்னா என் பொண்ணு. இரண்டு பொண்ணுங்களை கஷ்டப்பட்டு வளர்த்த மாதிரி பேரப்பிள்ளை களையும் வளர்க்கணும்னு மனசுல வைராக்கியம் இருந்துச்சு.

என் பொண்ணு ஒரு ஜவுளிக்கடைக்கு வேலைக்கு அனுப்பினேன். நூறு நாள் வேலைத் திட்டத்துல வர்ற வருமானம் போதுமானதா இல்ல. அதனால என் வீட்டுக்குப் பக்கத்தில உள்ள ஒரு கடையை வாடகைக்கு எடுத்து இட்லி கடை போட்டேன். அதுவும் கொஞ்ச நாள் தான் ஓடுச்சு. அந்தக் கடையோட சொந்தரக்காரர் தனக்கு கடை வேணும்னு கேட்டாரு. அப்பவும் மனசை விட்டுடல, எப்படியாவது நீச்சல் போட்டு தாக்குப் பிடிச்சிடணும்ற எண்ணம் மட்டும்தான் இருந்துச்சு. காட்டு வேலைக்கும், நூறு நாள் வேலைக்கும் போகத் தொடங்குனேன்.

மீனாட்சி
மீனாட்சி
`ஆழ் மனதைக் கேள், அது உன்னை வழிநடத்தும்!' - அன்புக் குழந்தையை ஐ.ஏ.எஸ் ஆக்கிய தாய் #WowMom

அந்த சமயத்துல கொரோனா பிரச்னை வந்துச்சு. இருக்கிற வேலையும் போச்சு. ஒரு வேளை சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டம். ரேஷன் கடையில கிடைச்ச பொருள்களை வெச்சுதான் காலம் தள்ளுனோம். இப்பவும் அதே நிலைமைதான் நீடிக்குது. என்னை மாதிரி நிலைமை என் எதிரிக்குக்கூட வரக்கூடாதுன்னு அடிக்கடி கடவுளை வேண்டிப்பேன்.

ஆனா, ஒரு விஷயம் மட்டும். எத்தனை தடைகள், கஷ்டம் வந்தாலும் என் உடம்புல தெம்பு இருக்கிற வரை மகளுக்காவும் பேத்திகளுக்காகவும் இந்தக் கால் ஓடிக்கிட்டேதான் இருக்கும்" கண்ணில் நீர் துளிக்க நிறைவு செய்தார்.

எவ்வளவு துயரங்கள் வந்தாலும் தன்னலம் நோக்காமல் தன் பிள்ளைகளுக்காக வாழும் உயர்ந்த உள்ளமாக ஜொலிக்கிறார் மீனாட்சி. நீங்கள் உண்மையிலேயே வாவ் மாம்தான்!

- விஷ்ணு பிரியா. செ

அடுத்த கட்டுரைக்கு