என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

இது ஆரோக்கியம் விளையாடும் வீடு! - இயற்கை வாழ்வியலில் அசத்தும் மஞ்சு

கே.டி.மஞ்சு.
பிரீமியம் ஸ்டோரி
News
கே.டி.மஞ்சு.

#Lifestyle

“நம்ம முன்னோர்கள் ‘உணவே மருந்து’னு சொன்னது சத்தியமான வார்த்தை. அப்படி வாழ்ந்ததாலதான் அவங்கள்ல பலர் 90 வயசு கள்லயும் திடகாத்திரமா இருந்தாங்க.

ஆனா, இப்போ 10 வயசுக் குழந்தைங்க கண்ணாடி போடுதுங்க. 20 வயசுல பலருக்கும் கால்வலி, 25 வயசுலேயே சிலருக்கு ஹார்ட் அட்டாக், 30 வயசுல கேன்சர்னு வருது. எல்லாத்துக்கும் காரணம், தவறான உணவுமுறையும், நஞ்சாகிப்போன உணவுப் பொருள்களும்தான். என் குடும்பத்தை அதிலிருந்து விடுவிக்க கீரை, காய்கறி, பழங்கள், மூலிகைனு என் வீட்டிலேயே வளர்க்கிறேன்’’ என்று உற்சாகமாகப் பேசுகிறார் கே.டி.மஞ்சு.

கே.டி.மஞ்சு.
கே.டி.மஞ்சு.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கணக்குப்பிள்ளைபுதூரைச் சேர்ந்தவர் மஞ்சு. எம்.காம் பட்டதாரி. இவரின் கணவர் செல்லமுத்து, இயற்கை விவசாயம் செய்துவருகிறார். மகள் யோகதானா ஒன்பதாவது படிக்கிறார்.

மஞ்சு தனது வீட்டு சமையலறை, குளியலறையில் வீணாகும் கழிவுநீரை இயற்கை முறையில் சுத்திகரித்து, அந்த நீரைக்கொண்டு ஏழு வகையான கீரைகளை வளர்க்கிறார். ‘ஏழு நாள் ஏழு கீரை’ என்ற அடிப்படையில், ஒவ்வொரு கீரை பாத்திக்கு முன்பும் திங்கள், செவ்வாய் என்று கிழமைகளை எழுதி வைத்திருக்கிறார். மேலும், வீட்டுக்குத் தேவையான காய்கறித் தோட்டம், பழத்தோட்டம், 45 வகையான மூலிகைச் செடிகள் உள்ள மூலிகைத் தோட்டம், மழைநீர் சேகரிப்பு என்று இயற்கை வாழ்வியலுக்குத் தன் குடும்பத்தைப் பழக்கியிருக்கிறார். வீட்டின் முன்பு இருக்கும் இடத்தில் பயிர்செய்துள்ள வெங்காயச் செடிகளுக்கு இடையில் உள்ள களைச்செடிகளை வெட்டிக்கொண்டிருந்த மஞ்சுவிடம், வேலைக்கு இடையில் பேசினோம்.

இது ஆரோக்கியம் விளையாடும் வீடு! - இயற்கை வாழ்வியலில் அசத்தும் மஞ்சு

“திருமணமாகி 16 வருஷம் ஆகுது. கணவர் இயற்கை விவசாயம் செஞ்சதால, எனக்கும் இயற்கை உணவு, இயற்கை சூழல்னு ஆர்வம் வந்துச்சு. கேரள வீடுகள் வடிவமைப்புல இருக்கும் எங்க வீட்டுல, மழைநீர் சிந்தாமல் சிதறாமல் அப்படியே பூமிக்குள் போகும் படி மழைநீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்தி னோம். மிகவும் வறட்சியான இந்த ஊர்ல, எங்க வீட்டைச் சுற்றி மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துச்சு.

அடுத்து, கணவர், மாமியார், மகளுக்கு சத்தான உணவைக் கொடுக்க முடிவு பண்ணி, பத்து வருஷத்துக்கு முன்னாடி, ‘ஏழு நாள் ஏழு கீரை’னு முடிவெடுத்து பயிர் செஞ்சேன். வீட்டு சமையலறை, குளியலறை களில் பயன்படுத்திய கழிவு நீரைக் குழாய் மூலம் எடுத்து வந்து, கல்வாழை, வெட்டிவேர் செடிகள் மூலம் இயற்கை முறையில் சுத்திகரித்து, அந்தத் தண்ணீரை கீரைச் செடிகளுக்குப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். திங்கள் பொன்னாங்கன்னி, செவ்வாய் பசலை, புதன் புதினா, வியாழன் வல்லாரை, வெள்ளி தவசி, சனி மணத்தத்தக்காளி, ஞாயிறு சிவப்புத்தண்டு கீரைனு இந்தக் கீரைகளை குழம்பு, பொரியல், சட்னினு செஞ்சு சமையலறை மணத்தது. கீரைகளை ஆய ஆய, அந்தத் தண்டுகளை வெச்சு மறுபடியும் கீரைகள் வளர ஆரம்பிக்கும். இன்னொரு பக்கம், எங்க குடும்ப ஆரோக்கியமும் உறுதி செய்யப்பட்டது’’ என்பவர், அடுத்ததாகக் காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் என இறங்கியிருக்கிறார்.

‘‘கீரை சமையல் தந்த சந்தோஷத்துல, வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும் இயற்கை முறையில விளைவிக்க ஆரம்பிச்சேன். வீட்டுக்கு மேற்கே 50 சென்ட் இடத்துல கத்திரி, மிளகாய், முருங்கை, தக்காளி, அவரை, கொத்தவரை, புடலை, பாகல், பீர்க்கன், வெண்டை, சுரைக்காய்னு பலவகை காய்கறிகளைப் பயிரிட்டேன். அதோடு, வீட்டின் முன்பு உள்ள இடத்துல வெங்காயத்தைத் தொடர்ச்சியா பயிர்செய்ய ஆரம்பிச்சோம். வீட்டுக்குத் தேவையான சிறு பழத்தோட்டத்தையும் அமைச்சேன். அதுல கொய்யா, மா, நாவல், மாதுளை, எலுமிச்சை, அத்தி, பப்பாளி, முள் சீத்தா, வாட்டர் ஆப்பிள், சப்போட்டா, நெல்லி, சீமை இலந்தைனு பலவகை பழமரங்களை உருவாக்கியிருக்கேன். அந்த மரங்கள் தினமும் ஏதாவது ஒரு பழத்தை எங்க வீட்டு சாப்பாட்டு மேசைக்குக் கொடுத்துடும்’’ என்றவர்,

‘‘வீட்டினருக்கு ஏற்படும் தலைவலி, சளி, காய்ச்சல் போன்ற சிறு பிரச்னைகளை சரிசெய்யவும், இயற்கையா உடம்பில் எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும் ஏதுவா 45 வகையான மூலிகைச் செடிகளை வளர்த்திருக்கேன். தவிர, வீட்டுக்கு முன்பு இட்லிப்பூ, ஆகாயத்தாமரை, 10 தொட்டிகள்ல நாலு விதமான அல்லிகள்னு அழகு செடிகளையும் வளர்க்கிறேன். மருகு, திருநீற்றுப்பச்சலை, தவனம், மாசிப்பத்திரி, கருந்துளசினு வாசனைச் செடிகளையும் வளர்க்கிறேன்’’ என்று அடுக்கும் மஞ்சு, தன் தோட்டங்களுக்கு போர்வெல் தண்ணீரை சொட்டுநீர் பாசனம் முறையில் பாய்ச்சுகிறார். மண்புழு உரம், சாணம், ஆட்டுப்புழுக்கை என்று இயற்கை உரங்களைப் பயன்படுத்துகிறார்.

‘‘கீரைச்செடிகளுக்கு மூணு மாசத்துக்கு ஒரு தடவை, காய்கறித் தோட்டத்துக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை, பழத்தோட்டத் துக்கு ஆறு மாசத்துக்கு ஒருதடவைனு இயற்கை உரமிடுவோம். கணவர் உதவியோடு வீட்டுல நானே காய்கறி, பழச்செடி நாத்துகள் உற்பத்தி பண்ணவும் கத்துக்கிட்டேன். விளையும் பழங்கள், காய்கறிகள், கீரைகளை வீட்டுப் பயன்பாட்டுக்குப் போக விற்பனை செய்றோம். மாசம் ரூ.25,000 வருமானம் கிடைக்குது. இயற்கை வாழ்வியல், சத்தான சாப்பாடு, இயற்கை உணவுனு எங்க வாழ்க்கை இன்பமா போயிட்டு இருக்கு” என்றார் நிறைவுடன்.

பயிர்கள், பூச்சிகள், மருந்துகள்!

“கீ
ரைகளைப் பொறுத்தமட்டில் வண்டு, புழுனு பூச்சித்தாக்குதல் ஏற்படும். அப்போ வேப்ப எண்ணெயைத் தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே பண்ணுவேன். அல்லது வேப்பிலை, எருக்கு, ஆடுதின்னாபாலை, நொச்சி உள்ளிட்ட இலைகளை நசுக்கி, அதை மாட்டு கோமியத்தோடு கலந்து, 10 நாள்கள் ஊறவெச்சு, அந்த இயற்கை பூச்சிவிரட்டியை செடிகள்ல ஸ்பிரே செஞ்சாலும் வண்டு, புழு வராது. மூலிகைத்தோட்டத்து செடிகள்ல பெருசா நோய்த்தாக்குதல் ஏற்படாது. காய்கறித் தோட்ட செடிகள்ல தண்டுப்புழு, காய்ப்புழுனு நோய்த்தாக்குதல் ஏற்படும்போதும், பழ மரங்கள்ல வண்டு, பூச்சிகள் தொல்லைவரும்போதும் கீரை களுக்குப் பயன்படுத்தும் அதே இயற்கை பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்துவேன். தவிர, இரவு நேரத்துல ஏற்படும் பூச்சித் தாக்குதலைத் தடுக்க, சோலார் பூச்சி பொறிகளையும் அங்கங்கே அமைச்சிருக்கேன். 15 நாளைக்கு ஒருமுறை எல்லா இடத்திலும் களை வெட்டுவேன்!” என்கிறார் மஞ்சு.

இது ஆரோக்கியம் விளையாடும் வீடு! - இயற்கை வாழ்வியலில் அசத்தும் மஞ்சு

மூலிகைகளும் பலன்களும்!

ன் தோட்டத்தில் உள்ள மூலிகைகளையும் அவற்றின் பலன்களையும் பகிர்ந்துகொண்டார் மஞ்சு.

ஆதண்டை, கொடிவேரி, முசுமுசுக்கை தூதுவளைனு இவற்றின் இலைகளை வாரத்துல ஒருநாள் ரசம் வெச்சு சாப்பிட்டா நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்.

லெமன் கிராஸ் செடி இலையை டீ போட பயன்படுத்தலாம்.

சர்பகந்தா இலையைச் சாப்பிட்டா நுரையீரல், இதயம் சம்பந்தமான பிரச்னைகள் குறையும்.

அஷ்வகந்தா வேரை காயவெச்சு பொடி பண்ணி, இரவு நேரத்துல சாப்பாட்டுக்குப் பின் சாப்பிட்டா ஆண்களுக்கு உயிரணுக்கள் அதிகரிக்கும்.

சிறுகுறுஞ்சான் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.

பொடுதலை இலையை அரைச்சு தலையில பூசுனா பொடுகுத் தொல்லை நீங்கும்.