Published:Updated:

சமூக மாற்றத்தை ஏற்படுத்துமா பாலின சமத்துவ சீருடைகள்?

கேரள அரசுப் பள்ளிகளில் புதிய பாலின சமத்துவ சீருடை

சீருடை என்பது ஜாதி, மதம், கலாசாரம், பண்பாடு, பாலின பாகுபாடு இவையெல்லாம் கடந்ததாக இருக்க வேண்டும். அங்கு தான் வேற்றுமை உடையும்.

சமூக மாற்றத்தை ஏற்படுத்துமா பாலின சமத்துவ சீருடைகள்?

சீருடை என்பது ஜாதி, மதம், கலாசாரம், பண்பாடு, பாலின பாகுபாடு இவையெல்லாம் கடந்ததாக இருக்க வேண்டும். அங்கு தான் வேற்றுமை உடையும்.

Published:Updated:
கேரள அரசுப் பள்ளிகளில் புதிய பாலின சமத்துவ சீருடை

சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் பல்வேறு குற்றங்களுக்கு, குழந்தை வளர்ப்பில் ஆண் - பெண் பாகுபாடு காட்டுதல், பாலின சமத்துவமின்மை போன்றவையே மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆண்-பெண் இருவரும் சமம் என்பதை பள்ளிப்ப ருவத்திலேயே மாணவர்களுக்கு பதிய வைக்கும் நோக்கத்துடன், மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவிகளுக்கு ஒரே மாதிரியான பேன்ட் - சட்டை சீருடையை `ஒரே ஸ்வதந்த்திரயம், ஒரே சமீபனம்' என்ற திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கேரளாவில் உள்ள சில பள்ளிகள் அறிமுகம் செய்தன.

கேரள பள்ளிகளில் புதிய சமத்துவ சீருடை
கேரள பள்ளிகளில் புதிய சமத்துவ சீருடை

கேரளாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பாலின சமத்துவ ஆடைகளை சீருடையாக நடைமுறைப்படுத்தலாம் என்ற திட்டத்தை கேரள அரசாங்கம் பரிசீலனை செய்தது. அரசின் இந்தத் திட்டத்திற்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது. இதனையடுத்து ஆகஸ்ட் - 24ம் தேதி, மாநில சட்டமன்றத்தில் கேரள மாநில சட்டமன்ற உறுப்பினர் கே. கே ஷைலஜா தாக்கல் செய்த அறிக்கைக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார். ' பள்ளிகளில் சமத்துவ சீருடை, சமத்துவ இருக்கைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை' என்று கூறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், " தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களின் உணவு, உடைகளைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமை உண்டு. அத்தகைய உரிமையும், சுதந்திரமும் அவசியமானவை. பாலின சமத்துவத்தை உருவாக்குவதே அரசின் நோக்கமாக இருந்ததே தவிர்த்து, பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதிப்பது அரசின் நோக்கமல்ல. ஒவ்வொரு பள்ளியும் அந்தப் பள்ளிக்கான சீருடைகளை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் குழப்பங்கள் இருந்தால், அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து பேசி முடிவெடுக்கலாம். பாலின சமத்துவ சீருடை சார்ந்த எந்த உத்தரவுகளையும் அரசு வெளியிடவில்லை'' என்று கூறினார்.

பாலின சமத்துவம்
பாலின சமத்துவம்

இதனையடுத்து, 'கேரள அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை எதிர்த்து செயல்பட அஞ்சுகிறது. மேலும் தன்னுடைய முடிவுகளிலிருந்து அரசு பின்வாங்குகிறது' போன்ற பல்வேறு தகவல்கள் கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இது குறித்து சமூகச் செயற்பாட்டாளர் கொற்றவையிடம் பேசினோம்.

``ஆடை என்பது நமது வசதிக்கானது. கலாசாரத்தையும், பண்பாட்டையும் ஆடையில் அடைப்பதை நிறுத்த வேண்டும். சுடிதாரை சீருடையாகக் கொண்டுள்ள பல பள்ளிகளில் துப்பட்டாவை சரியாக குத்த வேண்டும் என்பதை விதிமுறையாக்கி, அதை சரிபார்க்கவும், பள்ளி மாணவிகள் அடங்கிய குழுவை உருவாக்கியுள்ளார்கள். எத்தனையோ பள்ளிகளில் ஆண் - பெண் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளக்கூடாது என்பது விதிமுறையாக இருக்கிறது. இவையெல்லாம் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்றே சொல்ல வேண்டும். மாணவ - மாணவியருக்கு ஒரே மாதிரியான பாலின சமத்துவ ஆடையும், இருக்கையும் அறிமுகம் செய்தால் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என்று எண்ணுகிறேன்.

கேரள பள்ளிகளில் புதிய சமத்துவ சீருடை
கேரள பள்ளிகளில் புதிய சமத்துவ சீருடை

சமத்துவ சீருடையை கேரளாவில் உள்ள சில பள்ளிகளில் அறிமுகம் செய்தார்கள். அதனால் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் வெளியாகின. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலத்தில், ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையின மக்களின் கலாசாரத்தை அரசு கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் அரசாங்கம் ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற பார்வையில், " பாலின சமத்துவ ஆடையை நடைமுறைப்படுத்தும் யோசனை அரசுக்கு இல்லை" என்று அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீருடை விஷயத்தில் முழு ஜனநாயக உரிமையை மாணவிகளுக்கும், அவர்கள் நலன் சார்ந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்து, ' பள்ளி சீருடை குறித்த முடிவை பள்ளிகள் தீர்மானிக்கலாம் அல்லது அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் சேர்ந்து தீர்மானிக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்கள்.

பள்ளிக்குழந்தைகளுக்கு பாலின சமத்துவ ஆடை வேண்டாம் என்று, குறிப்பிட்ட மதத்தினர் எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீருடையைப் பொறுத்தவரை இது ஒரு மாற்றத்திற்கான முன்னெடுப்பு என்பதைத் தாண்டி, நம் குழந்தைகளின் வசதி சார்ந்தது. எனவே சாதி, மதம் போன்றவற்றை உடைத்து முற்போக்காக சிந்திக்க வேண்டும். சீருடை என்பது ஜாதி, மதம், கலாசாரம், பண்பாடு, பாலின பாகுபாடு இவையெல்லாம் கடந்ததாக இருக்க வேண்டும். அங்கு தான் வேற்றுமை உடையும்.

மாணவிகளின் சீருடை!
மாணவிகளின் சீருடை!

இது போன்று பாலின சமத்துவ ஆடை, இருக்கை போன்றவையெல்லாம் வரவேற்கத்தக்க மாற்றங்கள்தான். ஆனால் இவையெல்லாம் முழு சமூக மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தி விடாது. சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பு மாற வேண்டும். ஆண், பெண் என பாலின வேறுபாடு பார்ப்பதை பிறப்பிலும், வளர்ப்பிலும் உடைக்க வேண்டும், அதுவே உண்மையான சமூக மாற்றமாக இருக்கும். ஒவ்வொருவரும் முற்போக்காக சிந்தித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் " என்று விரிவாக விளக்கினார் கொற்றவை.