Published:Updated:

கடமை ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்... கடவுளின் தேசத்து பேரன்பு டாக்டர் ஷிஃபா!

டாக்டர் ஷிஃபா
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் ஷிஃபா

முகங்கள்

கொரோனா வைரஸ் அனைவரது வாழ்க்கையையும் திருப்பிப் போட்டுவிட்டது. பல வீடுகள் அலுவலகங்களாக மாறிவிட்டன. அலுவலகங்களோ காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன. டி.வி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர்கள், அதே டி.வி முன்பு அமர்ந்து பொழுது போக்கிக்கொண்டிருக்கின்றனர். ஐ.பி.எல் போட்டியில் அனல் தெறிக்க விளையாட வேண்டிய கிரிக்கெட் வீரர்கள், வீடுகளில் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், கொரோனா வைரஸை எதிர்த்து களத்தில் போராடி வரும் மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையில் அது வேறுவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் ஓர் இளம்பெண் மருத்துவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட அப்படியொரு திருப்பம் அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது.

கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது – சுபைதா தம்பதியின் இரண்டாவது மகள் ஷிஃபா. இவர், கண்ணூரில் உள்ள பரியரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் துபாயில் இருக்கும் தொழிலதிபர் அனாஸ் முகமது என்பவருக்கும் 2020 மார்ச் 29 அன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பந்தல் முதல் பந்திவரை அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. திருமணத்துக்காக பரியரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஷிஃபாவுக்கு விடுமுறை ஒப்புதலும் அளித்துவிட்டது. இதனிடையே, கொரோனா வைரஸ் சிறப்புப் பணிக்கான மருத்துவர் குழுவில் ஷிஃபாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. திருமணம் காரணமாக அவருக்கு விலக்கு அளிக்க மருத்துவமனை நிர்வாகம் தயாராக இருந்தது. ஆனால், `கடமைதான் ஃபர்ஸ்ட்' என்று திருமணத்தைத் தள்ளி வைத்துவிட்டார் ஷிஃபா. இதனால், மணக்கோலத்தில் இருக்க வேண்டியவர், பாதுகாப்பு உடை, என்-95 மாஸ்க் சகிதம் இப்போது கொரோனாவை விரட்டியடித்துக் கொண்டிருக்கிறார். ஷிஃபாவைத் தொடர்புகொண்டோம்.

 ஷிஃபா
ஷிஃபா

“அப்பா முகமது தொழிலதிபர். கம்யூனிஸ்ட் கட்சியில் செயல் படுகிறார். அம்மா சுபைதா ஆசிரியர். அக்கா கோழிக்கோட்டில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். டிசம்பர் முதல் வாரத்திலேயே திருமணத்துக்கு முடிவு செய்துவிட்டோம். மாப்பிள்ளை வீட்டாரும் கோழிக் கோடுதான். ஆனால், துபாயில் செட்டிலாகிவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாங்கள் திருமணம் முடிவு செய்திருந்த நேரத்தில், கொரோனா வைரஸ் சீனாவில் மட்டும்தான் இருந்தது. நம் நாட்டுக்கெல்லாம் பாதிப்பு வராது என்று நினைத்து மார்ச் 29 அன்று கோழிக்கோட்டில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தோம். திருமணத்துக்கு மூன்று மாதங்களே இருந்தது என்பதால், பணிகள் வேகமாக நடந்தன. அழைப்பிதழ் அடித்துக்கொடுத்துவிட்டோம். அனைத்து பர்சேஸ்களும் முடிந்துவிட்டன. மாப்பிள்ளை வீட்டாரும் துபாயிலிருந்து கோழிக்கோடு வந்துவிட்டனர்.

மணமகன் 
அனாஸ் முகமது
மணமகன் அனாஸ் முகமது

கேரளாவில் ஜனவரி மாதமே கொரோனா கால் பதித்தாலும், அப்போது பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், மார்ச் முதல் வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. நிறைய பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது. லாக்டவுணும் வந்துவிட்டது. ஒரு டாக்டர் என்ற முறையில் எனது பணி எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்தேன். என்னுடைய திருமணம் எனக்காகக் காத்திருக்கும். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களைக் காத்திருக்க வைக்க முடியாதே...

முதலில் அப்பாவிடம் பேசினேன். அவரும், ‘இந்த நேரத்தில் நீ பணியில் இருப்பதுதான் சரி' என்றார். மாப்பிள்ளை வீட்டிலும் ஒத்துழைப்பு கொடுத்தனர். முக்கியமாக, என் வருங்காலக் கணவர், ‘இந்த நேரத்தில் ரிஸ்க் வேண்டாம். நீ வேலையைப் பார்’ என்று ஊக்கமளித்தார்.

நான் மட்டுமல்ல, என்னுடன் பணியாற்றும் இன்னும் சிலரும் தங்கள் திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளனர். நாங்கள் எங்களது கடமையைத்தான் செய்கிறோம். இதில் பெருமை கொள்வதற்கு ஏதும் இல்லை” என்கிறவரிடம் திருமணத் துக்குச் செய்த ஏற்பாடுகள் குறித்து கேட்டோம்.

“பக்கா மலபார் ஸ்டைலில் திருமணம் நடத்தத் திட்ட மிட்டிருந்தோம். மெஹந்தி நிகழ்ச்சி, சிறப்பான உணவு என்று தடபுடலாகத் திட்டமிட்டிருந்தோம்.

இப்போது லாக்டவுணால் மாப்பிள்ளை வீட்டார் துபாய் செல்ல முடியாமல், கோழிக்கோட்டிலேயே சிக்கிவிட்டனர். இயல்புநிலை திரும்பிய பிறகு நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்ட, அதே ஸ்டைலில் திருமணம் நடத்துவோம். ஆனால், இப்போது அதைப்பற்றிய சிந்தனையே இல்லை. மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருக்கிறது.

இந்த அனுபவமும் நன்றாகத்தான் இருக்கிறது. எங்களது மருத்துவமனையில் இதுவரை 20 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. நீண்ட நேரம் பணி செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் ஒன்றிணைந்து சிறப்பாகப் பணி செய்து கொண்டிருக்கிறோம். கடைகள் ஏதுமில்லை. கேன்டீனில் இருந்து வரும் உணவைத்தான் அனைவரும் சாப்பிடுகிறோம். வாழ்வில் மறக்க முடியாத நாள்கள் இவை” என்று மீண்டும் புன்னகையை உதிர்க்கிறவரிடம் கொரோனா அனுபவம் குறித்து கேள்வி எழுப்பினோம்.

“கேரளாவில்தான் முதலில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பத்தினம்திட்டாவைச் சேர்ந்த 90 வயது தம்பதி இப்போது குணமடைந்துள்ளனர். மக்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கின்றனர். இதனால், பாதிப்பு சற்று குறைந்துள்ளது. அரசாங்கத்தின் உத்தரவுகளைப் பின்பற்றினாலே போதும். பயப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த நிலையிலிருந்து நாம் விரைவில் மீண்டு வருவோம். அதுவரை வீட்டில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள்” என்று மீண்டும் புன்னகைத்து விடை பெறுகிறார்.