கொரோனா நோய்த்தொற்று, பல மனித இயல்புகளை மாற்றிப் போட்டுக்கொண்டிருக்கிறது. சுய பாதுகாப்பை முன்னிறுத்தும் நோக்கில், சில நேரங்களில் மனிதநேயம் பின்னுக்குப் போய்விடுகிறது. கொரோனாவால் இறந்த உடல்களைக் கையாள்வதிலும் அடக்கம் செய்வதிலும் மக்களும், பணியாளர்களும் காட்டும் தயக்கத்தில் இதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை மருத்துவமனை யிலிருந்து எடுத்துச் சென்று மயானத்தில் தகனம் செய்வதுவரை, எல்லா வேலைகளையும் செய்துவருகிறார் கேரளத்தைச் சேர்ந்த ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஷைனி பிரசாத். அவரை கேரளமே கொண்டாடி வருகிறது.
“ஆரம்பத்தில், ஹோம் க்வாரன்டீனில் இருப் பவர்களைக் கண்காணிப்பதுதான் என் பணியாக இருந்தது. இன்ஸ்டிட்யூஷனல் க்வான்ரன்டீன் சென்டர்களிலும் டியூட்டி இருக்கும்’’ என்று பேச ஆரம்பித்தார் திருவனந்தபுரம் மாநகராட்சியின் ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஷைனி பிரசாத். ‘`கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஆரம்பகாலத்தில், ஆண் அதிகாரிகள் அவற்றைத் தகனம் செய்து வந்தனர். ஒருகட்டத்தில் உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தபோது, நானும் களத்தில் இறங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்.

பொதுவாக, கொரோனாவால் உயிரிழந்தவர் களின் உடலை தாமதிக்காமல் தகனம் செய்ய வேண்டும். ஒருநாள், திருவனந்தபுரம் மாநகராட்சி ஹெல்த் ஸ்டாண்டிங் கமிட்டி சேர்மன் ஐ.பி.பினு சார் என்னிடம், ‘கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் ஒன்று, அட்டெண்ட் செய்ய ஆள் இல்லாமல் இருக்கிறது. நீங்கள் அதை எடுத்துச் சென்று தகனம் செய்ய முடியுமா?’ என்று கேட்டார். இந்தப் பணியில் இதற்கு முன், சொந்தபந்தம் யாருமற்ற இரண்டு உடல்களைத் தகனம் செய்த அனுபவம் இருந்தது. இந்நிலையில், பினு சார் அப்படிக் கேட்டதும், ‘இது புண்ணிய காரியம், நிச்சயம் செய்கிறேன்...’ என்று யோசிக்காமல் சரி சொல்லிவிட்டேன்’’ என்றவர், முதன்முதலில் உடலைத் தகனம் செய்த அனுபவம் பற்றி பகிர்ந்தார்.
“திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை நான்கு அடுக்கு பிளாஸ்டிக் கவரால் பேக் செய்திருப்பார்கள். ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர்களிடம் அவை ஒப்படைக்கப்படும். நான் பிபிஇ (கொரோனா பாதுகாப்புக் கவசம்) அணிந்துகொண்டு சென்று, ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டு உடலைப் பெற்றுக்கொண்டேன். உடலைத் தூக்க நான்கு ஆண் பணியாளர்கள் வந்திருந் தார்கள். திருவனந்தபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் எரிவாயு தகன மேடையான சாந்தி கவாடத்துக்கு எடுத்துச் சென்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇறந்தவரின் பிள்ளைகள் தூரத்தில் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். ‘அப்பாவின் முகத்தைப் பார்க்கணும்’ என்று அழுத மகனுக்கு அனுமதி கிடையாது என்பதால், இறந்தவருக்கு மகன் செய்ய வேண்டிய சடங்குகளை மனதார நான் செய்தேன். அது என் பணியாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை அதைப் புண்ணிய காரியமாக நினைத்துதான் செய்தேன். அதன் பலன் என் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என்றவர், அடுத்தடுத்த தகனங்களில் இன்னும் பல வேலைகளை இறங்கிச் செய்துள்ளார்.

‘`ஒரு சடலத்தை ஆண் பணியாளர்கள் தூக்கத் தடுமாறியபோது, நானும் சேர்ந்து தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றினேன். தகனமேடையில வைப்பதுவரை ஆண் பணியார்களோடு சேர்ந்து இறுதிச்சடங்குக் கான எல்லா வேலையையும் செய்தேன், செய்து வருகிறேன். என்னைப் பார்த்து, என்னுடன் பணிபுரியும் சக பெண் ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் ஏழு பேர், தாங்களும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களைத் தகனம்செய்ய ஒவ்வொருவராக முன்வந்தார்கள். நாங்கள் எட்டு பேரும் இதுவரை 23 உடல்களைத் தகனம் செய்திருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் அவரவர் மத சம்பிரதாயப்படி சடங்குகளைச் செய்கிறோம். மயானத்தில், இறந்தவர் பெயரை மனத்தில் நினைத்து 5 நிமிடங்கள் மௌனமாகப் பிரார்த்திப்போம். பூ போட்டு மரியாதை செலுத்துவோம். கொரோனாவால் உயிரிழந்ததால் முடிந்த அளவு விரைவாக இறுதிச்சடங்குகளை முடித்துவிடுவோம்’’ என்றவர்...
“அரசு பஸ் கண்டக்டராகப் பணிபுரியும் கணவர் ஷாஜியும், மகள்கள் ஆதித்யா, ஐஸ்வர்யாவும், நான் வேலை முடிந்து வீடு திரும்ப இரவு தாமதனாலும், ‘இன்னிக்கு நல்லபடியா இறுதிச்சடங்கு முடிஞ்சதா?’ என்று கேட்க அக்கறையுடன் காத்திருப்பார்கள். இந்தப் பணியால் இப்போது பலருக்கு என் மீது மரியாதை ஏற்பட்டிருக்கிறது. நன்றி சொல்பவர்கள், வாழ்த்து சொல்பவர்கள், ‘கவனமா பணி செய்யணும்’ என்று அக்கறை காட்டுபவர்கள் என, அன்பில் நனைந்துகொண்டிருக்கிறேன். எங்கள் கோவளம் தொகுதி எம்.எல்.ஏ வின்சென்ட் போனில் அழைத்துப் பாராட்டினார். எல்லாவற்றையும்விட, கொரோனா குறித்து பயம், பீதி வேண்டாம், விழிப்புணர்வுதான் தேவை என்பதற்கு உதாரணமாகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’
- பிபிஇ அணிந்து பணிக்குத் தயாராகிறார் ஷைனி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருவனந்தபுரம் ஹெல்த் ஸ்டாண்டிங் கமிட்டி சேர்மன் ஐ.பி.பினுவிடம் பேசினோம். “திருவனந்தபுரம் மாவட்டத்தில் சில இடங்களில், ‘கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களை இங்கு அடக்கம் செய்யக் கூடாது’ எனப் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வுகள் எல்லாம் நடந்தன. இந்த நிலையில், ஷைனியும் அவரைத் தொடர்ந்து ஏழு பெண் ஹெல்த் இன்ஸ்பெக்டர்களும் இந்தச் சேவையில் முன்வரிசையில் நிற்பது, கேரளாவில் முன்மாதிரி நகர்வாகக் கொண்டாடப்படுகிறது’’ என்றவர், மற்ற பெண் ஹெல்த் இன்ஸ்பெக்டர்களையும் பாராட்டினார். அவர்களிடம் பேசினோம்.
ராணி: “இதுபோன்ற விஷயங்களை ஆண்கள் செய்யட்டும் என ஒதுங்கி நிற்கும் மனநிலை இப்போது எங்களிடம் இல்லை. அதற்கு முக்கிய காரணம், எல்லோரும் கொடுத்த தைரியமும் ஆதரவும்!”

ஜிஷா: “இதுவரை இரண்டு உடல்களைத் தகனம் செய்திருக்கிறேன். ‘நீ தைரியமாகப் போயிட்டு வா’ என்று கணவர் பக்கபலமாக இருக்கிறார். தொடர்ந்து இந்தப் பணியில் முன்வரிசையில் நிற்பேன்.’’
சந்தியா: “முதலில் உடல்களை வாங்கும்போது பயம் ஏற்பட்டது. ஆனால், பினு சார் கொடுத்த தைரியம், களத்தில் ஷைனியின் அர்ப்பணிப்பு எல்லாம் எனக்கு உந்துசக்தியாக அமைந்தன!”
சுனிதா: “நான் ஆறு உடல்களைத் தகனம் செய்திருக் கிறேன். மயானத்தில் முதன்முதலில் தகனம் செய்தபோது, தூரத்தில் அவர்களின் உறவினர்கள் கதறுவதைப் பார்க்க சங்கடமாக இருந்தது. பிறகு, அவர்களை ஆற்றுப்படுத்தி, அவர்கள் சார்பாக நான் சடங்குகளைச் செய்ய ஆரம்பித்து விட்டேன்!”
விஷ்ண: “உலகத்தைவிட்டு விடைபெற்றவர்களுக்கு செய்யும் இறுதி மரியாதை, உன்னதமானது. பணியில் சேர்ந்த கொஞ்ச காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு, அனுபவம் கிடைத்திருப்பது நிறைவாக இருக்கிறது!”
அர்ச்சனா: “இந்த மகா மாரியை (கொடிய நோய்த்தொற்றை) ஒழிக்கும் பணியில் நாங்கள் தைரியமாகக் களத்தில் நிற்கிறோம். விரைவில் உலகம் கொரோனாவிலிருந்து விடுபட வேண்டும்!”
மஞ்சு: “நாங்கள் அனைவரும் வீடுகளிலேயே எங்களைத் தனிமைப்படுத்தி வருகிறோம். உணவைத் தட்டில் கொண்டுவந்து தரும் வீட்டினருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்!”