Published:Updated:

`என் மீசையைக் கிண்டல் பண்றவங்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன்!’ - கலக்கும் கேரள `மீசைக்காரி’

மீசைக்காரி ஷைஜா
மீசைக்காரி ஷைஜா

`என் மீசையை நான் ரொம்ப நேசிக்கிறேன். எனக்கு என்ன கொடுத்தாலும் என் மீசையை இழக்க, நான் தயாரா இல்ல. யார் கிண்டல் பண்ணினாலும் அதையெல்லாம் நான் பொருட்டாவே எடுத்துக்கிறதில்ல.'

பொதுவாக, மீசை ஆண்களின் கம்பீரம் எனக் கருதப்படுகிறது. விதவிதமான மீசைக்கு ஆசைப்படும் ஆண்கள் உண்டு. மீசை வைத்துக்கொள்ள ஆண்கள் ஆசைகொள்வார்கள். ஆனால், அந்த மீசை பெண்களுக்கு வளர்ந்தால் அவர்களை விநோதமாகப் பார்ப்பார்கள். பெண்களுக்கு மீசை வளர ஹார்மோன் பிரச்னை போன்ற காரணங்களை மருத்துவர்கள் கூறுவார்கள். பெண்கள் லேசாக மீசை வளர்ந்தாலே அதை அகற்றிவிடுவார்கள். மீசை முடியை உரிய நேரத்தில் அகற்றுவதே சில பெண்களுக்கு பெரிய வேலையாக இருக்கும். ஆனால், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் குத்துப்பறம்பு, கோளயாடு பகுதியைச் சேர்ந்த ஷைஜா என்ற பெண் தனக்கு மீசை வளர்ந்ததைப் பெருமையாகக் கருதுகிறார். எல்லா இடங்களிலும் மீசையுடன் வலம் வருகிறார். அது போதாது என்று ``மீசைக்காரி" என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பித்து, அதில் தனது புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து பெருமையடைகிறார் இந்த மீசைக்காரி.

கேரளத்தைச் சேர்ந்த மீசைக்காரி ஷைஜா
கேரளத்தைச் சேர்ந்த மீசைக்காரி ஷைஜா

``பெயர்: மீசைக்காரி

வயது: 33

கணவர்: 1

குழந்தைகள்: 1 (13 வயது)

ஊர்: கண்ணூர்

காதல்: 1 மீசை (ஒரிஜினல்). வேறு என்ன தெரிய வேண்டும்? கேளுங்கள்’’ என ஃபேஸ்புக்கில் பதிவுபோட்டு அதிரடிக்கிறார் மீசைக்காரி ஷைஜா. இதற்கு 'உங்கள் தைரியமான பதிவுக்கு வாழ்த்துகள்' என்பது போன்ற ஆதரவான கமென்டுகளும், கொஞ்சமாக எதிரான பின்னூட்டங்களும் வந்துவிழுகின்றன. ஆதரவு பதிவுக்கு லைக்ஸ்களையும், கிண்டல் பதிவுகளுக்கு பதிலடியும் கொடுத்து வருகிறார் மீசைக்காரி.

``எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், இந்த மீசை அங்கேதான் இருக்கும். எனக்க மூக்குக்கு கீழே மீசை இருந்துவிட்டு போகட்டும். அது இருக்கிறதால எனக்கு எந்த பிரச்னையும் இல்லை" என்பதுதான் மீசைக்காரி ஷைஜாவின் பதிலாக உள்ளது

தனது மீசை குறித்து ஷைஜா கூறுகையில்,``என் இளமை பருவத்துல அரும்பு மீசை மொளச்சது. அப்புறம் அது கொஞ்சம் பெருசா வளந்துச்சு. அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் நான் மீசையை எடுக்கணும்னு நினைச்சதுகூட இல்ல. ஊர்ல எல்லோரும் என்னை மீசைக்காரின்னு கூப்பிட்டாங்க. மீசை இருக்கிறதுனாலதானே அப்பிடி கூப்புடுறாங்கன்னு நான் நினைச்சுகிட்டேன். எனக்கு மீசை இருக்கிறது, பெருமையா இருக்கு. அதனாலதான் நான் மீசைக்காரிங்கிற பெயர்ல ஃபேஸ்புக் பேஜ் ஆரம்பிச்சு, என்னைப் பத்தின முழு விபரங்களையும் பதிவாகப் போட்டேன். என் கணவர் லெக்ஷ்மணன் எனக்கு முழுமையான ஆதரவாக இருக்கிறார். இதுவரை எனக்க மீசைக்கு எதிரா எதையும் அவர் சொன்னதில்லை. என் மகள் அஷ்விகாவும், குடும்பத்தில உள்ள எல்லாரும் எனக்கு சப்போர்ட்டா இருக்காங்க.

மீசைக்காரி ஷைஜா
மீசைக்காரி ஷைஜா

என் மீசையை நான் ரொம்ப நேசிக்கிறேன். எனக்கு என்ன கொடுத்தாலும் என் மீசையை இழக்க நான் தயாரா இல்ல. யாருடைய கிண்டலையும் நான் பொருட்டாவே எடுத்துக்கிறது இல்ல. எனது மீசை மீது எவ்வளவு இஷ்டம்னு விவரிச்சு சொல்ல வார்த்தையே இல்ல. ஸ்கூலுக்கு மகளைக் கொண்டுவிடப் போகும்போதும், திருவிழாக்களுக்கு போறப்பவும் பலரும் பலவிதமா என்னை பார்ப்பாங்க. நான் அதைக் கண்டுக்காம போய்க்கிட்டே இருப்பேன். எனக்கு கர்ப்பப்பை அகற்றும் ஆபரே‌ஷன் நடந்தது. அந்தச் சமயத்துல டாக்டர், 'உங்க மீசையையும் சேர்த்து எடுத்திரவா'ன்னு கிண்டலாக் கேட்டாங்க. `ஆபரேஷன் முடிஞ்சு கண் திறந்து பார்க்கிறப்ப, மீசை இல்லாம இருந்தா தூக்குமாட்டி செத்திருவேன்’னு பதில் சொன்னேன். என் மீசையைக் கிண்டல் பண்ணுறவங்களுக்கு நான் ஒண்ணுமட்டும் சொல்லிக்கிறேன். என் மீசையைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். அது உங்களை எந்த விதத்திலயும் தொந்தரவு செய்யாது. என் மீசை எனக்கு சந்தோசத்தைத் தருது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு