Published:Updated:

நல்லவங்களோட ஆசி எங்களை வாழவைக்கும்! - மனநோயிலிருந்து மீண்டு திருமணம் செய்த ஜோடி

வழிகாட்டிகள்

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா லாக்டௌன் காலத்தில் மொபைலுக்கு தாலிகட்டி ஆன் லைன் திருமணம் நடத்தி வைரலானது கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஶ்ரீஜித் - அஞ்சனா ஜோடி.

இந்த திருமணத்தை விஞ்சும் வகையில் மன நோயிலிருந்து மீண்டு, ஹோமில் வசித்த கோழிக்கோட்டைச் சேர்ந்த 49 வயது சுதீஷும், கோட்டயத்தைச் சேர்ந்த 46 வயது சிந்துவும் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள்.

கடந்த 7.6.2020 அன்று கோட்டயம், புத்தூர் மடம் வயோலியில் உள்ள ஶ்ரீகிருஷ்ணர் கோயிலில் வைத்து இவர்கள் திருமணம் முடித்த கையோடு மலப்புறத்தில் தனிக் குடித்தனம் அமர்த்தப்பட்டுள்ளனர். மனநோயால் இளமையில் தொலைத்த திருமண பந்தத்தை இப்போது அனுபவிக்கும் சுதீஷ் - சிந்து தம்பதியினரைச் சந்தித்தோம்.

சுதீஷ், சிந்து
சுதீஷ், சிந்து

“சின்ன வயசுலேயே அப்பா இறந்துட்டாங்க. அம்மாவுக்கு மனநோய் இருந்தது. நான் பத்தாம் கிளாஸ் படிச்சி முடிச்சுட்டு மேற்படிப்புக்காக போன நேரத்துல எனக்கும் சின்னதா மனநோய் பிரச்னை இருந்ததுனால தொடர்ந்து படிக்க முடியல. என்னையும் அம்மாவையும் கோழிக்கோடு மனநல ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. அம்மா ஆஸ் பத்திரியிலேயே இறந்துட்டாங்க. 25 வருஷமா மனநல மருத்துவமனையில இருந்த நான் ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த பானியன் ஹோமுக்கு வந்தேன். தனித்தனி ஹோம்களில் இருக்கிறவங்களுக்கும் சேர்த்து அடிக்கடி நிகழ்ச்சிகள் நடக்கும். அந்த நேரத்திலதான் சிந்துவைப் பார்த்து, பேச வாய்ப்பு கிடைச்சது” எனக்கூறும் சுதீஷ் சிரித்தபடியே சிந்துவைப் பார்த்தார்.

சிந்து புன்முறுவலுடன் பேச தொடங்கினார்... ``சுதீஷ் அறிமுகம் ஆன பிறகு நாங்கள் ரெண்டு பேரும் ஒரே நேரத்தில காதலை வெளிப்படுத்தினோம். நாங்க காதலிச்சது எங்க சொந்தகாரங்களுக்கும் தெரிஞ்சது. யாரும் எதிர்ப்பு சொல்லல. `அவங்களுக்கு விருப்பம்னா கல்யாணம் பண்ணிக்கட்டும்’னு சொன்னாங்க. ஒன்றரை வருஷம் காதலிச்சோம். இப்போ கல்யாணமும் முடிஞ்சிருச்சு.

ஊரில் பராமரிப்பு இல்லாமல் இடிந்து கிடந்த சுதீஷின் வீட்டை சில நல்ல உள்ளங்கள் சீரமைத்து, கடையும் அமைத்துக் கொடுத்துள்ளன. இதிலிருந்துதான் இந்தத் தம்பதியின் வாழ்க்கை தொடங்கவிருக்கிறது.

கல்யாணத்துக்கு சுதீஷுக்குச் சொந்தகாரங்க வந்திருந்தாங்க. லாக் டௌன் காரணமா எங்க வீட்டிலேருந்து யாரும் வர முடியல. கல்யாணம் பண்ணிக்கிட்டதால ஹோம்ல தங்க முடியாதுங்கிறதுனால தனியா வாடகை வீடு எடுத்து எங்களை தங்கவெச்சிருக்கிறாங்க. இன்னும் ரெண்டு மாசத்துல சுதீஷின் சொந்த வீட்டுக்குப் போகப் போறேன். அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு கடை இருக்கு. சுதீஷ் ஹோம்ல இருந்த நேரத்தில கடை நடத்திய அனுபவம் இருக்கிறது. இனி நாங்க கடை நடத்தி பிழைச்சுக்குவோம்” என்றபோது அவர் முகத்தில் நம்பிக்கை ரேகை படர்ந்தது.

சுதீஷ், சிந்து
சுதீஷ், சிந்து

தொடர்ந்து சிந்து தனது குடும்பத்தைப் பற்றி விவரித்தார்... ``நாலு அக்கா, ஓர் அண்ணன், ரெண்டு தங்கச்சின்னு எங்க குடும்பம் ரொம்ப பெருசு. அம்மாவுக்கு மனநோய் இருந்தது. நான் 7-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். எனக்கு 16 வயசு இருக்கும் நேரத்தில் அம்மா குளத்தில் விழுந்து இறந்துட்டாங்க. அதன்பிறகு எனக்கும் மனநோய் ஏற்பட்டுது. கொஞ்சம்நாள் மருந்து சாப்பிட்டேன். அந்த நேரத்துல எனக்குக் கல்யாணம் செய்து வெச்சாங்க. எனக்கு இரண்டு பிள்ளைங்களும் பிறந்தாங்க. அதன்பிறகு மனநோய் அதிகமானதால என் புருஷன், வீட்டில இருந்து வெளியே அனுப்பிட்டார். அப்புறமா ஆஸ்பத்திரியில சிகிச்சையில் இருந்தேன். மனநோய் சரியானதுனால மூணு வருஷங்களுக்கு முன்னாடி பானியன் ஹோமுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. எப்பவாச்சும் என் அண்ணன் இங்குவந்து பார்த்துட்டுப்போவார். ஹோமில் சமையல் செய்வது, ஆபீஸ் வேலை செய்வது எல்லாமே நான்தான். என் வேலையைப் பார்த்து வெளியில வேற வேலைக்கும் அனுப்புவாங்க. அதுல கிடைச்ச பணத்துலதான் கல்யாணத்துக்கு அன்னிக்கு முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடையும் கொடுத்தோம். நல்லவங்களோட ஆசி எங்களை வாழவைக்கும்” என்றார்.

பானியன் தொண்டு நிறுவனம் சார்பில் ரோட்டில் நடந்து திரியும் மனநோயாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க 1993-ம் வருஷம் சென்னையில் `ஹோம் அகேன்’ என்ற மீண்டும் வீடுகளுக்குச் செல்லும் திட்டத்தை தொடங்கப் பட்டுள்ளது. பிறகு, 2017-ம் ஆண்டு கேரள மாநிலம் மலப்புறத்தில் இதே திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இங்கே காப்பகம் ஆரம்பித்த புதிதில் கோட்டயத்தில் உள்ள மரிய சதனம் என்கிற தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து சிந்து வந்து சேர்ந்திருக்கிறார். அதன் பிறகு கோழிக்கோடு மனநல மருத்துவமனை யிலிருந்து சுதீஷ் வந்து சேந்துள்ளார்.

இதைப்பற்றி பேசும் பானியன் அமைப்பின் ஊழியர்கள், ``ரெண்டு பேருமே தனித்தனி ஹோம்ல தங்கியிருந்தாங்க. புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் பண்டிகைகளை, எல்லா ஹோம்ல இருந்தும் ஒண்ணா சேர்ந்து கொண்டாடுவோம். அப்புறம் மாசத்துக்கு ரெண்டு நாள்கள் எல்லாருக்கும் சேர்த்து பயிற்சி கொடுப்பாங்க. அந்த நேரத்துல ஏற்பட்ட பழக்கம் காதலா மாறி கல்யாணம் வரைக்கு வந்திருக்கு” என்றார்கள்.

தி பானியன் தொண்டு நிறுவன கேரள மாநிலத் திட்டத் தலைவர் ஸாலிஹ், ``மனநோயில் இருந்து விடுபட்டவர்களை மீண்டும் வீடுகளில் சேர்க்க தயங்குகிறார்கள். அவர்களின் மறுவாழ்வுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் கேரள மாநிலத்தின் மலப்புறம், கோழிக்கோடு மாவட்டங்களில் இரண்டு வீடுகளில் காப்பகம் தொடங்கப்பட்டது. இப்போது திருச்சூர், பாலக்காடு மாவட்டத்திலும் சேர்த்து 12 வீடுகளில் காப்பகம் நடத்துகிறோம். காப்பகத்தில் இருக்கிறவங்க தனியா கடைக்குப்போய் பொருள்கள் வாங்கிட்டு வர்றது, சமைக்கிறதுடன் தனியாக சினிமாவுக்கும் கோயிலுக்கும் போகிறாங்க. 2018 மார்ச் முதல் இதுவரை மனநல மருத்துவமனை களில் இருந்து 211 பேரை இங்கு வைத்து பராமரித்துள்ளோம். அதில் 99 பேரை சொந்த வீடுகளில் ஏற்றுக்கொண்டார்கள்.

சுதீஷும் சிந்துவும் காதலிப்பது தெரிந்ததும் அடுத்ததாக சட்டப்படியான விஷயங்களை ஆராய்ந்தோம். பின்னர் மருத்துவர்களிடமும் இவர்களின் உடல்நிலை குறித்து ஆலோசித்தோம். அனைத்துத் தரப்பிலும் யோசித்த பிறகே இவர்களுக்குத் திருமணம் நடத்தி வைத்துள்ளோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு