Published:Updated:

``அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசம்!”

ராஜீ
பிரீமியம் ஸ்டோரி
ராஜீ

சென்னையின் பாசக்காரப் பெண் ஆட்டோ டிரைவர்!

``அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசம்!”

சென்னையின் பாசக்காரப் பெண் ஆட்டோ டிரைவர்!

Published:Updated:
ராஜீ
பிரீமியம் ஸ்டோரி
ராஜீ

லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட் எடுக்கும் துடுக்கான ஆட்டோ டிரைவர்களுக்கு மத்தியில், நைட் ஆனால் - பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இலவச ரைடு அளிக்கும் பாசக்கார ஆட்டோ டிரைவர் அக்காதான் - சென்னையைச் சேர்ந்த ராஜீ. முக்கியமாக அரசுப் பள்ளிக் குழந்தைகள், ராஜீ அக்காவின் ஆட்டோவை எந்த நேரத்தில் பார்த்தாலும்... தமிழக அரசுப் பேருந்து மாதிரி இலவசப் பயணம் செய்து கொள்ளலாம். இப்போதைக்கு சென்னையின் ட்ரெண்டிங் - இந்த ராஜீ அக்காதான்.

அவர் துறுதுறுவென ஆட்டோ ஓட்டும் ஸ்டைலை வைத்து, 34 வயது இருக்கும் என்று நினைத்தேன். ``10 வயசு கம்மியா சொல்றம்மா! எனக்குப் பேரக் குழந்தைங்களே இருக்காங்க!” என்று தனது ஆட்டோவில் வீட்டுக்குக் கூட்டிப் போனார். குட்டிக் குட்டியாகப் பல விருதுகள் குவிந்திருந்தன. ‘ஆட்டோ டிரைவர் வீட்டில் விருதுகளா?’ என் புருவம் உயர்ந்ததைக் கண்டு அவரே பேச ஆரம்பித்தார்.

``என்னோடது காதல் திருமணம். வீட்டில் சம்மதிக்கலை. என் கணவர் கோயம்புத்தூரில் ஆட்டோ ஓட்டிட்டு இருந்தார். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் குறைஞ்ச சம்பளத்துக்கு வேலைக்குப் போய்ட்டு இருந்தேன். பெரிய அளவில் வருமானம் இல்லை. அப்புறம் சென்னைக்கு வந்தோம்.

என் கணவர்கிட்ட கேட்காம எல்எல்ஆர் போட்டுட்டு வந்துட்டேன். மதியம் அங்கே போய் ஆட்டோ ஓட்டிக் காட்டணும். அதனால, அவர்கிட்ட சொல்லி ஆட்டோ ஓட்டக் கத்துக் கொடுக்கச் சொன்னேன். அவரும் கத்துக் கொடுத்தார். ஒரு வைராக்கியத்தில் ஒன்றரை மணி நேரத்தில் ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டேன். அன்னைக்கு இதை நான் தொழிலா பண்ணுவேன்னு நினைக்கவே இல்ல.. ஆனா, இன்னைக்கு இதுதான் எனக்கு எல்லாமும் ஆகிடுச்சு!'’ என்ற ராஜீ அக்காவுக்கு, ஆட்டோ – நண்பனாக மாறி 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன.

``ஆரம்பத்தில் ஆட்டோ ஓட்டும்போது, ரொம்பவே கஷ்டமா இருக்கும். என் கணவர், என் அண்ணன் எல்லாம் உன்னால முடியுமானு கேட்டாங்க. அப்போதெல்லாம் ஆட்டோவில் செல்ஃப் ஸ்டார்ட் கிடையாது. கிக்கர் அடிச்சுத்தான் ஸ்டார்ட் பண்ணணும். கை எல்லாம் காய்ச்சுப் போய்க் கெடக்கும். பிறகு, அதுவே பழகிடுச்சு. ஓட்ட ஆரம்பிச்சதும் 40,000 ரூபாய் வருமானம் வர்ற அளவுக்கெல்லாம் வேலை கிடைச்சது. அந்த ஆபிஸ்ல நாலு சுவத்துக்குள்ள உட்கார்ந்து வேலை பார்த்துக் கிடைக்கிற அறிவைவிட, இங்கே என் அறிவு பல மடங்கு அதிகமாகியிருக்கு. ஆட்டோவில் உட்காரும் ஒவ்வொருத்தர்கிட்ட இருந்தும் ஒவ்வொரு விஷயம் கத்துப்பேன்!” என்றவரிடம், இலவச சவாரி குறித்துக் கேட்கவும், சிரிக்கிறார்.

``அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசம்!”
``அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசம்!”

``எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி பேரக் குழந்தைங்க இருக்காங்க. அவங்க சின்னக் குழந்தையா இருந்தப்ப, அவங்களை நான் பார்த்துக்காம விட்டுட்டேன் என்கிற குற்ற உணர்ச்சி எனக்கு அதிகமாகவே இருக்கு. இன்னைக்கு எத்தனையோ குழந்தைங்களை என் ஆட்டோவில் ஏத்திகிட்டு ஸ்கூல்ல கொண்டு போய் விடுறேன். ஆனா, என் பசங்களை ஒரு நாள்கூட நான் ஸ்கூலில் விட்டதில்லை. அவங்க ரோட்டில் நடந்து வர்றதைப் பார்த்துட்டு ஆட்டோ ஓட்டும் நண்பர்கள் கூட்டிட்டு வந்து விட்டுட்டு போவாங்க. என் பசங்களுக்குப் பண்ணாததை, மற்ற குழந்தைகளுக்குப் பண்ணணும்னு நினைச்சேன். அதனாலதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சவாரியை ஆரம்பிச்சேன். இப்ப நான் வந்து கூட்டிட்டுப் போவேன்னு நிறைய குழந்தைங்க எதிர்பார்த்துக் காத்துட்டு இருக்காங்க!

நைட்டு பத்து மணிக்கு மேல ஆட்டோ ஓட்டும்போது, வயசானவங்களையோ பெண்களையோ பார்த்தா, உடனே ஆட்டோவில் ஏத்திக்குவேன். அதேமாதிரி, என் ஆட்டோவில் முதலுதவி கிட்ல இருந்து நாப்கின் வரைக்கும் வச்சிருப்பேன்!” என்று சொல்லும் ராஜீ அக்கா, உபெர் ஆப்பில் அதிக ரேட்டிங் வாங்கியிருக்கிறார்.

``என் ஆட்டோவில் வர்ற அம்மாக்கள்கிட்ட நான் சொல்றதெல்லாம் இதுதான்! ஐந்து வயசு வரைக்காவது குழந்தைங்ககூட நேரம் செலவழிங்க. ஏன்னா, நான் மிஸ் பண்ணின மாதிரி, யாரும் மிஸ் பண்ணிடக் கூடாது!'’ என்றவருக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் தகும்!

``அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசம்!”
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism