Published:Updated:

இயற்கை வாழ்வு: பறவைகள் நாய்கள் பூனைகள் ஆடு-மாடுகள் முயல்கள் மரங்கள் மற்றும் நான்!

லக்ஷ்மி
பிரீமியம் ஸ்டோரி
News
லக்ஷ்மி

லக்ஷ்மியின் ஆச்சர்யமூட்டும் இயற்கை வாழ்வியல்

“கொரோனா சூழல் பாதுகாப்பு காரணங்களுக் காகப் புது நபர்களை எங்க தோட்டத்துக்குள் அனுமதிக்கிறதில்லை. வீடியோகால் மூலமாவே பேசிடலாமே..!” – அன்பான வேண்டுகோளுடன் உரையாடலைத் தொடங்குகிறார் லக்ஷ்மி. பல ஆயிரம் மரங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி, மாடு, கோழி, நாய்களுடன் தற்சார்பு வாழ்வியலைக் கடைப்பிடித்துவரும் வித்தியாசமான மனுஷி. கிருஷ்ணகிரி மாவட்டம் விசுவாசம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது இவரது வசிப்பிடம். மினி சரணாலயம்போல் காட்சியளிக்கும் தோட்டத்தில் பறவைகள் மற்றும் நாய்களின் கூச்சல் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தோட்டத்தை முழுமையாகச் சுற்றிக்காட்டிவிட்டு ஓரிடத்தில் அமர்ந்து நிதானமாகப் பேசத் தொடங்கினார்.

“விவசாயக் குடும்பம். கணவரின் பணிச்சூழலால் வெவ்வேறு ஊர்கள்ல வசிச்சோம். ஓய்வுக்காலத்தில் இயற்கைச் சூழல்ல வாழ ஆசைப்பட்டோம். சேமிப்புப் பணத்துல 1970-களில் இந்த நிலத்தை வாங்கினோம். வெறும் பாறையா இருந்த நிலத்தைப் படிப்படியா விவசாய நிலமா மாத்தினோம். கணவரின் பெற்றோர் இங்கு முறைப்படி இயற்கை விவசாயம் செய்தாங்க. கடைசியா சென்னையில் வசிச்ச நிலையில், தற்சார்பு வாழ்க்கைக்காகவே 2006-ல் கணவர் விருப்ப ஓய்வு வாங்கினார். பிறகு, இங்கு குடியேறினோம்.

பல பயிர் சாகுபடியுடன், எதிர்கால வருமான தேவைக்குப் பல வகை மரங்களையும் வளர்க்க ஆரம்பிச்சோம். ஆயிரக்கணக்கான புறாக்கள், லவ் பேர்ட்ஸ், நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, எருமை, வான்கோழி, வாத்து, முயல்னு பல்வேறு பிராணிகளையும் கால்நடைகளையும் வளர்த்தோம். இந்த இயற்கைச் சூழல் மகிழ்ச்சியை ஓராண்டுகூட அனுபவிக்கக் கொடுப்பினை இல்லாம மாரடைப்பில் கணவர் இறந்துட்டார்” என்பவரின் விழிகளில் மழை!

இயற்கை வாழ்வு: பறவைகள் நாய்கள் பூனைகள் ஆடு-மாடுகள் முயல்கள் மரங்கள் மற்றும் நான்!

“கணவரின் மறைவு பேரிழப்புன்னாலும், அவரின் விருப்பப்படி தற்சார்பு வாழ்க்கை முறையைத் தொடர முடிவெடுத்தேன். நம்மாழ்வாரின் `வானகம்' பண்ணை உட்பட பல இடங்கள்ல பயிற்சி எடுத்துக் கிட்டேன். ‘கணவர் இன்றி தனியாளா விவசாயம் செய்ய முடியாம நிலத்தை வித்துட்டுப் போயிடுவா’ன்னு பலரும் சொன்னதைப் பொய்யாக்கினேன். நெல், கரும்பு, சிறுதானியங்கள், காய்கறிகள், நிலக்கடலை உட்பட நிறைய பயிர்களைப் பயிரிட்டு வெற்றி கண்டேன். ஒருபிடிகூட ரசாயன உரம் போட்டு மண்ணை மலடாக்காம, முழுமையான இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிச்சேன்.

இந்த நிலையில் சென்னையில் நாய்கள் வளர்ப்பு மையம் ஒண்ணுல சில வருஷம் வேலை செஞ்சேன். நேரமின்மையால் வாரத்துல ரெண்டு நாள்கள்தான் என் தோட்டத்துக்கு வருவேன். முறையா பயிர்களைக் கவனிக்க முடியாததால, படிப்படியா நிலத்தைச் சுத்தி பல வகை மரங்களையும் வளர்க்க ஆரம்பிச்சேன். அமைதியான வாழ்க்கையைத் தொடரும் எண்ணத்துல போன வருஷம் அந்த வேலையிலிருந்து விலகினேன். கடந்த ஒரு வருஷமா மீண்டும் தற்சார்பு வாழ்க்கை முறைதான். இங்குள்ள ஏழு ஏக்கர் நிலத்துக்குள் பண்ணை வீடு இருக்கு. தவிர, சுத்தியுள்ள நிலம் முழுக்க மரங்களாக இருக்கிறதால விவசாயம் செய்ய வாய்ப்பில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்ப 4,000 மரங்களுக்கு மேல் இருக்கும். அதில், பல்வேறு வயதுகளில் 3,000-க்கும் அதிகமான தேக்கு மரங்களுடன், வேம்பு, ரோஸ்வுட், வேங்கை, ஏராளமான பழ வகை மரங்களும் இருக்கு. கணவர் இருந்தப்போ உயிர்வேலியா நட்ட வேம்பு, வேங்கை, ரோஸ்வுட், தேக்கு மரங்களுக்கெல்லாம் 25 வயசுக்கு மேலாகிடுச்சு. வைரம் பாய்ந்த அந்த மரங்கள்தாம் இப்போ எனக்கான பொருளாதார தேவைக்குக் கைகொடுக்குது” நெகிழ்ச்சியாகக் கூறுபவர், தோட்டத்துக்குள் நடந்துகொண்டே பல்வேறு மரங்கள் குறித்தும் விளக்கினார்.

“நாவல், அத்தி, சப்போட்டா, பெரு நெல்லி, கொய்யா, சீத்தா உட்பட நிறைய பழ மரங்கள் பலன் கொடுக்குது. பலவித பறவைகள் இங்க வரும். அவை சாப்பிட்டதுபோகத்தான் வீட்டுத் தேவைக்கு. தவிர, பலா, எலுமிச்சை, மாதுளை உட்பட ஏராளமான மரங்கள் சில வருஷத்துல பலன் கொடுக்க ஆரம்பிச்சுடும். 50 தென்னை மரங்கள் இருக்கு. அஞ்சு சென்ட்ல தக்காளி, வெண்டை, முள்ளங்கி, முருங்கை, அவரைக்காய் உட்பட வீட்டுத் தேவைக்கான ஏராளமான காய்கறிகள் விளையுது. பால், தயிர் தேவைக்கு ரெண்டு பசு மாடுகள் உதவுது. தொடர்ந்து எங்க நிலத்துல விளைவிச்ச நெல்லைத்தான் சாப்பிடறேன். வற்றாத மூணு கிணறுகளால தண்ணீர் போதுமானதா இருக்கு. 90 சதவிகித தேவைகள் தோட்டத்துலயே பூர்த்தியாகுது.

ரெண்டு பிள்ளைகளுக்கும் கல்யாண மாகிடுச்சு. பையன் அமெரிக்காவிலும் பொண்ணு சென்னையிலும் வசிக்கிறாங்க. நிறைய கஷ்டங்கள் மூலம் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லைனு உணர்ந்துதான் இந்த வாழ்க்கை முறையைத் தேர்வு செஞ்சேன். ரத்த அழுத்தம், சர்க்கரை, மூட்டுவலினு எந்தப் பிரச்னையும் இல்லாம 67 வயசுலயும் ஆரோக்கியமா இருக்கேன்” – ஆச்சர்யம் கூட்டுகிறார் லக்ஷ்மி.

“கணவர் இல்லாட்டி ஒரு பெண் இட்லி கடை போட்டுக்கூட பிழைச்சுப்பாங்க. ஆனா, மனைவியைச் சார்ந்தே வாழும் பெரும்பாலான ஆண்கள், வாழ்க்கைத் துணையை இழந்ததும் ரொம்பவே தவிச்சுப்போயிடுறாங்க. யாரா இருந்தாலும் பிறரை முழுமையா சாராம வாழப் பழகணும். குறிப்பா, வயசான காலத்துல நம்ம வீட்டுல சுதந்திரமாகவும் தைரியமாகவும் இருக்கிறதுதான் எல்லா வகையிலும் நல்லது” – மற்றவர்களுக்கும் நம்பிக்கையளிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயற்கை வாழ்வு: பறவைகள் நாய்கள் பூனைகள் ஆடு-மாடுகள் முயல்கள் மரங்கள் மற்றும் நான்!

நாய்களும் என் குழந்தைகளே!

“அடிபட்டு பராமரிப் பில்லாம இருந்த 15 தெரு நாய்களை மீட்டு மருத்துவ சிகிச்சைகள் செஞ்சு வளர்க்கிறேன். தவிர, வீட்டுக்குள் அதிக பரப்பளவுல தனித்தனியே 15 வளர்ப்பு நாய்கள் வளருது. தடுப்பூசி, சாப்பாடு, பராமரிப்புனு எல்லா நாய்களுக்கும் ஒரே கவனிப்புதான்.

30 நாட்டுக்கோழிகள் மூலம் கிடைக்கும் முட்டைகள் பெரும்பாலும் நாய்களின் உணவுக்குத்தான் பயன்படுத்தறேன். மரங்களைப்போலவே, நாய்களும் என் குழந்தைகளே!” என்று சிரிக்கிறார் லக்ஷ்மி.